குலைந்து வரும் அமெரிக்கக் குடும்பம்

0

முனைவர் நாகேஸ்வரி அண்ணாமலை
Nageswari_Annamalaiஜனவரி மாதம் 8ஆம் தேதி அரிஸோனா (Arizona)  மாநிலத்திலுள்ள டுக்ஸான் (Tucson) என்னும் ஊரில் அந்தத் தொகுதியின் அமெரிக்கக் காங்கிரஸின் கீழவை அங்கத்தினர் கேப்ரியல் கிஃப்பர்ட் (Gabrielle Giffords) தன் தொகுதி மக்களோடு கலந்துரையாடுவதற்காக அங்குள்ள மாலுக்கு முன்னால் நின்றுகொண்டிருந்தார். அப்போது ஜேரட் லாஃப்னர் (Jared Laughner) என்னும் 22 வயதானவன் – பல சமயங்களில் முறையில்லாமல்  நடந்துகொண்டதற்காகக் கல்லூரியிலிருந்து விலக்கப்பட்டவன் – அவரை மிக அருகில் நின்று சுட்டதோடு அவருக்கு அருகில் நின்றுகொண்டிருந்த அவர் உதவியாளர் உட்பட பலரைச் சரமாரியாகச் சுட்டதால் ஆறு பேர் உயிரிழந்தனர். 19 பேர் படுகாயம் அடைந்தனர்.

கேப்ரியல் மூளையில் அடிபட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார். இறந்தவர்களில் மத்திய நீதிபதியும் ஒருவர். தினமும் தேவாலயத்திற்குச் சென்று, அங்கு நடக்கும் ஆராதனையில் கலந்துகொள்ளும் இவர், அன்று காங்கிரஸ் அங்கத்தினரின் கூட்டத்திற்கு வந்து தன் தொகுதி அங்கத்தினர் என்ன சொல்கிறார் என்று கேட்க வந்தாராம். அப்படி வந்த இடத்தில், அவர் கேப்ரியலின் பக்கத்தில் நின்றதால் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் லாஃப்னரின் குண்டிற்கு இரையாகியிருக்கிறார். 2001ஆம் ஆண்டு அமெரிக்க வணிக இடமாகிய இரட்டைக் கோபுரம் தாக்கப்பட்ட அன்று பிறந்த கிரிஸ்டினா என்னும் பெண்ணும் இறந்தவர்களுள் அடக்கம். சிறுமியாக இருந்தாலும், அரசியலில் அதிக ஆர்வம் இருந்ததாலும், பின்னால் அரசியல்வாதியாக வேண்டும் என்ற ஆசை இருந்ததாலும், இவளும் காங்கிரஸ் அங்கத்தினரைப் பார்க்க வந்திருக்கிறாள். அமெரிக்கக் குழந்தைகளின் அரசியல் ஆசைக்கும் துடிப்பிற்கும் பிரதிநிதியாகத் திகழ்ந்த இவளின் இழப்பு, ஜனநாயகம் என்ற கருத்துக்குப் பேரடியாகக் கருதப்படுகிறது.

இந்தச் சம்பவம் நடந்ததிலிருந்து சிறிய பத்திரிகைகளிலிருந்து பெரிய பத்திரிக்கைகள் வரை, சென்ற நான்கு நாட்களாக இது சம்பந்தப்பட்ட விஷயங்களைத்தான் முக்கிய செய்திகளாக வெளியிட்டு வருகின்றன. பத்திரிகைகளில் மட்டுமல்ல, மற்ற எல்லா ஊடகங்களும் இதைப் பற்றித்தான் பேசி வருகின்றன. பத்திரிகையில் பத்தி எழுதுபவர்களும் விமர்சகர்களும் தங்கள் தங்கள் அரசியல் கொள்கைகளின் அடிப்படையில் இந்தச் சோக நிகழ்ச்சிக்குக் காரணத்தை அலசுகிறார்கள்; அதை வியாக்கியானம் செய்கிறார்கள்.

நோபல் பரிசு பெற்ற, இடதுசாரிப் பொருளாதார நிபுணர் பால் க்ருக்மன் பழமைவாதிகள் அடங்கிய குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் தாறுமாறாக ஒபாமா அரசைக் குறை கூறுவதும், அரசு வரி வசூலிப்பதின் மூலம் மக்களின் சுதந்திரத்தில் தலையிடுகிறது, அரசியல் சாசனத்தில் வரி விதிப்பது பற்றி ஒன்றுமே கூறப்படவில்லை என்றும் கூறி அரசே மக்களின் எதிரி என்பதுபோல் சித்தரிப்பதும்தான் லாஃப்னர் போன்றவர்களுக்கு அரசின் மேலும் காங்கிரஸ் அங்கத்தினர்கள் மேலும் வெறுப்பு ஏற்பட்டு, காங்கிரஸ் அங்கத்தினர்களைக் கொல்லும் அளவிற்குப் போய்விடுகிறார்கள் என்று குடியரசுக் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகள் மீது குற்றம் சுமத்தியிருக்கிறார்.

பத்திரிகையில் பத்தி எழுதும் இன்னொருவர், அமெரிக்க ஆயுதங்கள் தயாரிப்பவர்களையும், அவர்கள் தயாரிக்கும் துப்பாக்கிகளைப் பதினெட்டு வயதிற்கு மேல் இருப்பவர்கள் யாரும் எளிதாக வாங்கலாம் என்ற அமெரிக்கச் சட்டத்தையும் வெகுவாகச் சாடியிருக்கிறார். துப்பாக்கிகளில் ஒரே சமயத்தில் இடைவெளியின்றி இருபது முறை சுடக் கூடிய சக்தி வாய்ந்த துப்பாக்கிகளை விற்பதற்கு 1994-2004 வரை தடை இருந்தது. அந்தத் தடையை மீண்டும் நீட்டிப்பதற்குப் பதிலாக அப்படியே அரசு விட்டுவிட்டது. அதனால் இப்போது அந்த மாதிரித் துப்பாக்கிகளை யாரும் எளிதாக வாங்கலாம். லாஃப்னர் மாலில் பலரைச் சுடுவதற்கு உபயோகப்படுத்திய துப்பாக்கி அந்த வகையைச் சேர்ந்ததாகும். இதந்த வகைத் துப்பாக்கி இவன் கைக்குக் கிடைக்காமல் இருந்திருந்தால் இவன் இத்தனை பேரைச் சுட்டிருக்க முடியாது, பலருடைய உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும் என்பது இவருடைய வாதம்.

பல நாடுகளுக்கும் சென்றுவரும் ஒரு பத்தியாளர், யேமனைத் (Yemen) தவிர மற்ற எந்த நாட்டிலும் துப்பாக்கிகள் சாதாரண மக்களுக்கு எளிதில் கிடைக்கும் வாய்ப்பு இல்லை என்கிறார். வீடுகளில் துப்பாக்கிகள் இருப்பது அமெரிக்காவில் சகஜமாக இருப்பதால் (அமெரிக்காவில்100 பேருக்கு 85 பேரிடம் கைத்துப்பாக்கிகள் இருக்கின்றனவாம்.) எதிர்பாராத விபத்துகள், தற்கொலைகள், கொலைகள் எளிதாக ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன என்றும் மற்ற வளர்ந்த நாடுகளை விட அமெரிக்காவில் துப்பாக்கி விபத்துகளால் குழந்தைகள் இறப்பது 11 மடங்கு அதிகம் என்கிறார்.

இந்த விபத்து பற்றிய செய்தி வெளிவந்ததும் காங்கிரஸ் உறுப்பினர்களில் இருவர், இனி தாங்கள் எப்போதுமே வலிமை வாய்ந்த கைத்துப்பாகி ஒன்றை தங்களோடு எடுத்துச் செல்லப் போவதாகக் கூறியிருக்கிறார்கள். ஏற்கனவே துப்பாக்கியை மறைத்து வைத்துக்கொண்டு திரியும் ஒரு அங்கத்தினர் தான் செய்துவரும் செயல் எவ்வளவு நல்ல காரியம் என்று பீற்றிக்கொண்டிருக்கிறார். இதுவரை இம்மாதிரி விபத்துகள் ஏற்பட்ட போது எப்படி துப்பாக்கி வன்முறைகளைத் தடுப்பது என்று யோசிக்க ஆரம்பித்த காங்கிரஸ், இப்போது இந்த விபத்திற்குப் பிறகு கூடிய போது அதன் விளைவுகளைப் பற்றி யோசிக்காமல், அங்கத்தினர்கள் “துப்பாக்கிகளின் மூலமே துப்பாக்கிகளிலிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்  என்று நினைப்பது நல்ல முன்னேற்றம்தான்” என்று நையாண்டி செய்கிறார் இன்னொரு பத்தியாளர். தங்களையும் தங்கள் தொகுதி மக்களையும் காப்பதற்கு முதல்படி துப்பாக்கி தயாரிப்பாளர்களுடைய அரசியல் தரகர்களின் செல்வாக்கிலிருந்து இந்தக் காங்கிரஸ் அங்கத்தினர்கள் விடுபடுவதுதான் என்கிறது நியுயார்க் டைம்ஸ் பத்திரிகை. அவ்வப்போது அமெரிக்க அரசு துப்பாக்கித் தடைச் சட்டங்களைக் கொண்டுவர முயலும் போதெல்லாம் இந்தத் தரகர்கள் தங்கள் செல்வாக்கை உபயோகித்து அந்தச் சட்டங்கள் வராமல் பார்த்துக்கொள்கிறார்கள்.

இன்னொரு வகை விமர்சகர்கள், அமெரிக்க அரசியல்வாதிகள், அதிலும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள், எதிர்க் கட்சி அங்கத்தினர்களைக் கடுமையாக விமர்சிக்கும்போது உபயோகப்படுத்தும் உணர்ச்சியைத் தூண்டும் வசனங்கள் இந்த வன்முறை நிகழ்ச்சிகளுக்குக் காரணமாக அமைந்திருக்கலாம்; துப்பாக்கிகள் சரளமாகச் சந்தையில் கிடைப்பது ஒரு காரணமாக இருக்கலாம் என்று ஒப்புக்கொண்டாலும், இம்மாதிரி வன்முறை நிகழ்ச்சிகளில் ஈடுபடுபவர்கள், தனிமையில் வாடுபவர்கள், மனநிலை சீர்கெட்டவர்கள், இவர்களை சீக்கிரமே அடையாளம் கண்டு இவர்களுக்குத் தகுந்த சிகிச்சை கொடுத்து இவர்களைக் குணப்படுத்த வேண்டும் என்கிறார்கள்.

அமெரிக்க அரசியல் விமர்சகர்களும் பண்டிதர்களும் இம்மாதிரியான வன்முறை நிகழ்ச்சிகளுக்கு மேலே குறிப்பிட்ட பல காரணங்களைக் கூறினாலும், தனிமையில் வாடுவதால் மனநோயால் தாக்கப்பட்டு இப்படிப்பட்ட மனிதர்கள் உருவாவதற்குரிய காரணங்களை ஆராயக் காணோம்.

சமூகம் தனது தூண்களில் ஒன்றாகக் கருதும் குடும்பம் என்ற ஒரு சிறந்த அமைப்பை அமெரிக்கா இழந்து வருகிறது. தனிமனித சுதந்திரத்தை அளவிற்கு மேல் கொண்டுபோய்விட்டது. ஒரு தாய் தனக்காக வாழ வேண்டும்தான். ஆனால் தன் குழந்தைகளுக்கு – வளர்ந்த குழந்தைகளுக்கும் சேர்த்துத்தான் – சமைப்பதில் எவ்வளவு சந்தோஷம் அடைகிறாள் என்பதை எல்லாம் இந்தத் தாய்மார்ளை மறக்கச் செய்துவிட்டது. பதனப்படுத்தப்பட்ட உணவுகள் எக்கச்சக்கமாகக் கடைகளில் கிடைப்பது இதற்கு ஒரு முக்கிய காரணம். இந்தியாவில் காலை உணவு தயாரிக்க ஒரு மணி நேரம் ஆகுமென்றால் ‘அப்படியா’ என்று வாயைப் பிளக்கிறார்கள்.  இங்கு காலை உணவு என்பதெல்லாம் வெறும் காப்பி மட்டும்தான் அல்லது பாலில் கலந்து சாப்பிடும், கடைகளில் சாப்பிடத் தயாராகவுள்ள சீரியல் என்னும் உணவு வகைதான்.

குடும்ப அங்கத்தினர்களுக்கு ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பதிலும் மற்றவர்களுக்காகத் தியாகம் செய்வதிலும் கிடைக்கும் இன்பத்தை அமெரிக்கச் சமூகம் முழுவதுமாக மறந்துவிட்டது. இது பின்பற்றும் முதலாளித்துவ பொருளாதாரத்தில் பணம் பண்ணுவதுதான் வாழ்க்கையின் வெற்றியாகக் கருதப்படுகிறது. சந்தையில் ஏகப்பட்ட சாமான்கள். அவற்றை வாங்க வேண்டுமென்றால் நிறையப் பணம் வேண்டும். பணம் சம்பாதிக்கக் கணவனும் மனைவியும் வேலைக்குப் போக வேண்டும். குழந்தைகளோடு நேரம் செலவழிக்க, இவர்களுக்கு நேரம் இல்லை. சிறு குழந்தைகளாக இருக்கும்போது காப்பகங்களில் விட்டுவிடுகிறார்கள். கொஞ்சம் பெரியவர்களானதும் பல விளையாட்டுச் சாதனங்கள் வாங்கிக் கொடுக்கிறார்கள். என்னதான் விளையாட்டுச் சாமான்கள் இருந்தாலும் பெற்றோர்களின் அண்மை இல்லாததால் இந்தக் குழந்தைகளுக்குத் தனிமை ஏற்பட்டுவிடுகிறது.

எல்லோரிடமும் எதையோ இழந்துவிடுவோமோ என்ற அவசரம். நின்று நிதானமாகப் பேசுவதற்கு அவகாசம் இல்லை. குடும்பம் என்ற கட்டுக்குள் தங்களை இருத்திக்கொள்ள இப்போது பல அமெரிக்கர்கள் விரும்புவதில்லை. பாலுறவு வேண்டும்; ஆனால் குடும்பம் வேண்டாம் என்று பலர் நினைப்பதால் அமெரிக்காவில் பிறக்கும் பத்துக் குழந்தைகளில் நான்கு குழந்தைகள் திருமணமாகாத தம்பதிகளுக்குப் பிறக்கின்றன. எங்கு பார்த்தாலும் தனித் தாய்மார்கள் (single mothers).

அமெரிக்காவில் எக்கச்சக்கமாக மனவியல் ஆய்வாளர்கள், மனநல மருத்துவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் யாருக்கும் குடும்பம் என்ற சமூக அமைப்பைக் கட்டிக் காக்க வேண்டும், அதற்கு மறுவாழ்வு கொடுக்க வேண்டும் என்று ஏன் தோன்றவில்லை?  நீடித்து நிற்கும் குடும்பம் என்ற  சமூக அமைப்புதான் மனிதனை மிருகங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது என்ற உண்மையை அமெரிக்கா என்று உணரப் போகிறது?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *