திவாகர் – நாடகம் (5)

சென்றவாரம் இங்கு (விசாகப்பட்டினத்தில்) ஒரு திருமண வரவேற்பு விழா.. எங்கள் நாடகங்களில் நாயகியாய் நடித்திருந்த ஸ்ரீவித்யாவுக்குதான் திருமணம். சென்று வாழ்த்தி விட்டு வந்தேன். (இவர்தான் என் ப்ளேய்ஸ்க்கெல்லாம் டைரக்டர், ’ஹி டாட் மீ டேமில் (he taught me tamil)’ என்று தன் கணவரிடம் என்னை அறிமுகப்படுத்திய கதையைப் பிறகு பார்ப்போம்).

பொதுவாக விஜயவாடாவில் நாடகம் நடிக்க பெண் கதாபாத்திரங்களுக்காக எத்தனை சிரமப்பட்டோம் என்பதை ஏற்கனவே எழுதி இருந்தேன் இல்லையா.. ஆனால் விசாகப்பட்டினத்தில் ஏறக்குறைய பத்துக்கும் மேற்பட்ட நாடகங்கள் போட்டாயிற்று. சில நாடகங்களில் நான்கு பெண் கதாபாத்திரங்கள் கூட உண்டு. பெண் பாத்திரங்களில் நடிப்பதில் எங்கள் ஊர் பெண்மணிகள் (கண்ணின் மணிகள்) எவ்வித தயக்கமும் காட்டாமல் நடித்தனர் என்பதோடு அவர்கள் திறமையைப் பார்க்கவேண்டுமே.. மெய்யாகவே அசந்து போய்ப் பார்த்த காட்சிகள் பல உண்டு. பெண்களுக்கு சந்தர்ப்பம் கொடுத்தால் அவர்களை விட திறமைசாலிகள் கிடைப்பது அரிதுதான்.

தேவா இல்லாமல் எழுதப்பட்ட எனது முதல் முழுநீள நகைச்சுவை நாடகமான ’சிங்கப்பூர் சிங்காரி’யில் மூன்று பெண் கதாபாத்திரங்கள். 1994 இல் முதன் முதலாகப் போட்டாலும் அடிக்கடி போடப்பட்டு கடைசியில் 2009 ஆம் ஆண்டு கூட இன்னொரு ரிலீஸ் செய்தாயிற்று. அதே போல காதல் கடிதம், அச்சமில்லை அச்சமில்லை, மாப்பிள்ளையே உன் விலை என்ன போன்ற நாடகங்களும் ஒன்றுக்குப் பலமுறை மேல் மேடையைக் கண்டனதான். ப்ரொஃபஷனல் அமைப்புகள் போல் அல்லாமல் அமெச்சூர் நாடகங்களில் ஒரு தடவை போட்டால் மறுமுறை அவர்கள் போடமாட்டார்கள் (பொதுவாக). என் நாடகங்களில் வழக்கமாக மனோகரன்தான் கதாநாயகன் அல்லது முக்கியமான பாத்திரதாரி, ஆனால் நாயகிகளும் பெண் பாத்திரங்களும் நிறைய பேர் விதவிதமாக செய்திருக்கிறார்கள்.

என் நாடகங்களில் எந்த நாடகம் பிடித்தது என்று மனோகரனைக் கேட்டால் அவர் கண்ணை மூடிக்கொண்டு சொல்வது ’சிங்கப்பூர் சிங்காரி’. மனோகரனை அந்த நாடகத்தில் அவர் நடித்த அந்த வேடத்தில் பார்த்துவிட்டு அவருக்கு ரசிகர்கள் ஆனவர்கள் இங்கு ஏராளமானோர் உண்டு.

தாயானவளுக்கு பல மகன்கள் இருந்தாலும் எல்லோருமே அன்புப் பிள்ளைகள் என்றாலும் ஓரிருவர் மீது கொஞ்சம் செல்லம் கூடுதலாகவே காட்டுவாள். அதைப் போல எனக்கும் கூட என் நாடகங்களில் ‘அச்சமில்லை, அச்சமில்லை’ யும் ‘காதல் கடிதம்’ என்பதும்தான் செல்லமான நாடகங்கள்.

மகாகவி பாரதியார் ஒருவேளை இந்த கால கட்டத்திலே அதுவும் இந்தத் தமிழ்த் தரணியில் வந்தாரென்றால் அவருக்கு இன்றைய தமிழகம் எத்தகைய உணர்வைத் தந்திருக்கும் என்ற கருத்தையும் இங்குள்ள மாற்றத்தையும் இன்றைய கலாசாரத்தையும் அவர் கண்டபின் அவரது நிலை என்னவாக இருக்கும் என்பதையும் சொல்வதே ’அச்சமில்லை அச்சமில்லை’ என்ற நாடகத்தின் சாராம்சம். எல்லாம் சரி, பாரதியாரை மறுபடியும் இந்த பூமிக்குக் கொண்டு வருவது எப்படி?

இதற்காக 1921 ஆம் ஆண்டின் டிசம்பர் 11ஆம் நாள் காட்சியை வடிவமைத்திருந்தேன். மகாகவி பாரதியார் இக உலகில் கண்மூடி பூத உடலைத் துறந்து மேல் உலகம் சென்றபின் பராசக்தியிடம் கோபமாக கேட்கிறார். ‘இன்னமும் நான் செய்ய வேண்டிய எத்தனையோ வேலைகள் பூமியில் மீதமிருக்க அவசரப்பட்டு என்னை ஏன் அழைத்துக் கொண்டாய்’ என்று கேட்டவுடன் தாய் பராசக்தி அவரை சாந்தப்படுத்துகிறாள். ’நீ காரணப் பிறவியாய் பூமியில் இதுவரை செய்ததன் பலன்கள் பிற்காலத்தில் மிகப்பெரிய ஆளுமையை உருவாக்கும்’, என்கிறாள். ஆனாலும் பாரதியின் பிடிவாதம் நீடிக்கிறது. அதனால் பாரதியை சமாதானப்படுத்த அவருக்கு ஒரு வரம் அளிக்கிறாள். ‘யார் பாரதியை மூன்று மணிநேரத்துக்கு மேல் அவன் பெயரையே விடாமல் உச்சரிக்கிறார்களோ, அவர் கண்களுக்கு நீ காட்சி தந்து, அவர் மூலம் உன் தமிழ் உலகை பவனி வருவாய்’ என்றதும் முகம் மலர்ந்த பாரதி அத் தருணத்துக்காக காலம் காலமாய் காத்திருக்கிறார். காலம் போய்க்கொண்டே இருக்கிறது..

இப்படித்தான் ஒரு நாள், நம் சிங்காரச் சென்னையிலே, சென்னைக் கடற்கரைக் குப்பம் ஒன்றிலே வசித்துவரும் நம் மன்னார் ஒரு இரவு முழுவதும் பாரதி, பாரதி என்று சொல்லிக்கொண்டே தூங்கிக்கொண்டிருக்க, அடுத்த நாள் அதிகாலையிலேயே நம் பாரதி ‘சடக்’கென அவன் முன்னால் மகிழ்ச்சியுடன் தோன்றி அவனை எழுப்பி நன்றி சொல்கிறார்.

பாரதி: ஆஹா.. நன்றி தோழா!.. இத்தனை ஆண்டுகள் கழித்தும் என்னை ஞாபகம் வைத்துக் கொண்டு என்னை அழைக்க வேண்டும் என்று உனக்குத் தோன்றியதே.. ஆஹா.. அற்புதம்.. அற்புதம்!!

மன்னார்: யோவ்.. யார்யா நீ.. சும்மா சினிமா கோர்ட் குமாஸ்தா கணக்கா வேசம் கட்டிக்கினு வந்து என்னிய காலீலே எளுப்பி டிஸ்டேர்ப் பண்ணறே?

பாரதி: தம்பி.. என்னை யாரென்று தெரியவில்லையா..

மன்னார்: இல்லபா.. தெரீலே.. ஆளை வுடு.. அட்ரஸ் மாறிகினு வந்துட்டே.. இல்லே அப்பால வந்து பாரு.. நான் தூங்கணும்..

பாரதி: என்ன தம்பி இது? நீதானே என்னை இரவு முழுவது பாரதி பாரதி என்று கூப்பிட்டுக் கொண்டிருந்தாயே.. அந்த மகாகவி சுப்பிரமணிய பாரதி நானேதானப்பா.. என்னடா இது, இந்த பரந்த தமிழ் பேசும் உலகில் என்னை இப்படி யாரும் இதுநாள் வரை அழைக்கவில்லையே என்ற நிலையில் நீயாவது அழைத்தாயே என்று ஆசையுடன் ஓடி வந்தால் இப்படிச் சொல்கிறாயே..

மன்னார்: இன்னாது.. நான் உன்னிய ராவு பூரா கூப்ட்டிகினே இருந்தேனா?.. அதெப்படி.. இரு. இரு.. ஹாங்.. அது வேற ஒண்ணும் இல்ல நைனா.. நேத்து ராத்திரி ஒரு சிவாஜி சினிமாபா.. தங்கச்சுரங்கம்’னு பேரு.. அதுல நம்ம ஹீரோயினு பாரதி இல்லே.. பாரதி, அது சும்மா ஜிகு ஜிகுன்னு டிரஸ்ஸைப் போட்டுகினு சும்மா குலுங்கிக் குலுங்கி குஷாலா ஆடிச்சா,, அப்படியே மனசை டச் பண்ணிடுச்சு.. அதான் ராத்திரி பூரா பாரதி பாரதின்னு முனகியிருப்பேன்.. அட! அத்த கேட்டுக்கினா நீ வந்துகினே?.. உன்னிய போட்டோவுலதான் பாத்துக்கீறேன்பா. அப்போ அந்த மீசைக்கார பாரதி நீதானா?.. ஐய்யோ.. கொஞ்சம் இரு.. இன்னாது.. ராத்திரி பூரா பாரதி பாரதின்னு முனகினேனா.. அய்யய்யோ.. இத்த என் முனீமா கேட்டுருக்குமோ..

பாரதி: கேட்டிருக்கலாம். அது சரி, முனீமா யார்? எனக்கு கண்ணம்மா, செல்லம்மா என்றெல்லாம் தெரியும்.. முனீமா கேள்விப்படாத பெயராக இருக்கிறதே..

மன்னார்: ஐய்யே.. முனியம்மா.. முனியம்மாள் நு பேரு. நான் செல்லமா முனீமா ந்னுதான் கூப்பிடுவேன்..

(முனியம்மா வருகிறாள்)

முனியம்மா: இன்னாயா.. ராவு பூரா பாரதி பாரதின்னு பினாத்திக்கினு கிடந்தே.. இப்போ தனியா ஏதோ பினாத்தறே? இன்னா விஷயம்? உனக்கு இன்னா ஆச்சு..

மன்னார்: அய்யே.. முனீமா.. தோ பாரு.. அந்த பாரதி வந்திருக்காரு.. கொஞ்சம் மருவாதியா பேசுமே..

முனியம்மா: எங்கேயா.. பாரதி பாரதிங்கறே.. இங்கே யாருமே இல்லியேய்யா..

மன்னார்: அட.. இன்னாமே இத்தோ எதிர்ல சும்மா கோர்ட் குமாஸ்தா கணக்குல கோட்டும் தலைப்பாவுமா இருக்காரு.. பாரதிமே.. மகாகவி சுப்ரமணிய பாரதி.. அட போட்டொவுல் பாத்திருப்பியேமே..

முனியம்மா: ஐய்யயோ.. யாருமே இங்கே ஆளே இல்லியேயா.. உனக்கு இன்னாவோ ஆயிடுச்சு.. இரு இரு மங்காத்தா அக்காட்ட சொல்லி வேப்பில அடிக்கச் சொல்றேன்..

பாரதி: மன்னார் தம்பி! நான் உன் கணகளுக்கு மட்டுமே தென்படுவேன்.. மற்றவர் கண்களுக்கு தெரியமாட்டேன். இது எனக்கு என் அன்னை பராசக்தி அளித்த வரம்.. உன் கண்ணம்மா க்ண்களுக்குத் தெரியமாட்டேன்..

மன்னார்: ஐய்யே.. சார், இது பேரு முனீம்மா.. கண்ணம்மா இல்லே.. கண்ணம்மா பககத்து வீட்டு மங்காத்தாக்கா பொண்ணு..

சரி, இப்படி பாரதி பூமிக்கு வந்துவிடுகிறார். நம் மன்னாருடன் அவருக்குப் பிடித்த விஷயங்களுக்காக ஊர் சுற்றிப் பார்க்கிறார். தனக்கு மிகவும் பிடித்த விஷயங்களான பெண் விடுதலை, தேசீயம், தமிழ் மொழி, அரசியல், மக்களின் இன்றைய சுயநலப்போக்கு இவைகளின் இன்றைய சூழ்நிலைகளை அறிந்து வேதனைப்படுகிறார். ஆனால் கடைசியில் ஒரு குழந்தையுடன் எதேச்சையாக பேசும்போது அந்தக் குழந்தைக்கு யாரைக் கண்டாலும் பயமில்லை என்று மன்னாரிடம் சொல்வதைக் கேட்டு மன்னார் மூலம் அதன் காரணத்தை கேட்கிறார்.

குழந்தை: நேத்து எங்க கணக்கு ட்யூஷன் டீச்சர் ஒரு பாட்டு சொல்லிக்கொடுத்தாங்க!

பாரதி: ஏன்.. படிக்கும் பள்ளியில் இதையெல்லாம் சொல்லிக் கொடுப்பதில்லையா?

மன்னார்: ஐய்ய, இன்னா நீ.. பள்ளிக்கூடத்துல பாடமே சரியா சொல்லிக் கொடுக்கறதுல்ல… இதுல பாட்டு வேறயா.. அப்பால, இதுங்க இன்னாதான் பள்ளிக்கூடத்துக்குப் போய் படிச்சாலும் ட்யூசன் சாயங்காலமா போய்த்தான் ஆவணும்.. அது கம்பல்சரி பாரதி.

பாரதி: அப்போ காலை எழுந்தவுடன் படிப்பு, நல்ல கனிவு கொடுக்கும் ஒரு பாட்டு, மாலை வந்ததும் விளையாட்டு இவையெல்லாம் பாப்பா பாட்டில் எழுதினேனே.. அப்படியெல்லாம் இப்போது நடப்பதில்லையா.. கல்வியிலுமா இப்படி?

மன்னார்: அட போ சார்.. நீ ஏதோ சும்மாச்சுக்கும் விளையாட்டுக்கு எழுதி வெச்சுருப்பே.. இந்த விளையாட்டெல்லாம் நாங்க டி.வில பாக்கறம்ல.. அவ்வளோதான். இந்த பாப்பா சொல்றதைக் கேளு, இப்போல்லாம் ட்யூசன் டீச்சர்தான் எல்லா பாடமும் பாட்டும் சொல்லித் தர்ராங்க.. ஹக்காங்..

குழந்தை: மன்னார் மாமா! நீ யார்கிட்ட பேசறே?

மன்னார்: அத்த விடு கண்ணூ.. உங்க ட்யூசன் டீச்சர் அப்படி இன்னாதான் பாட்டு சொல்லிக்கொட்தாங்கன்னு சொல்லும்மா..

குழந்தை: அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே , உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே’ ந்னு சொல்லிட்டு, நான் எதுக்கும் பயப்படக்கூடாதுன்னு பாரதியார் சொல்லி இருக்காருன்னு சொன்னாங்க.. இப்ப சொல்லு.. நான் எதுக்கு பயப்படனும்? (மறுபடியும் பாடுகிறது குழந்தை) ஒளி படைத்த கண்ணினாய் வா வா.. உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா..

மன்னார்: (கையில் குழந்தையைத் தூக்கிக்கொண்டு) அட சோக்காக்கீது.. இந்தப் பாட்டு யார் எளுதினது..

குழந்தை: இந்த மன்னார் மாமா மண்டு.. (என மன்னார் மண்டையில் ஒரு சின்ன குட்டு குட்டுகிறது) இந்த பாட்டும் பாரதியார் பாட்டுதான்!!

பாரதிக்கு கண்ணில் மின்னொளி. இந்தக் குழந்தைகள்தானே வருங்கால பாரதம்.. இப்படிப்பட்ட குழந்தைகள் வருங்காலத்தில் வளரும்போது நல்ல பாரதத்தை உருவாக்காமலா இருப்பார்கள்.. என்ற நம்பிக்கையுடன் வானுலகம் திரும்பிச் செல்வதாகக் கதை முடியும்.

பாரதியாராக நடித்தவர் நண்பர் சிவராமன். அட்டகாசமாக தமிழில் பேசுவார். மனோகர் மன்னாராக சென்னை பாஷையில் சூப்பராகப் பேசி நடித்தார். பராசக்தியாக பிரியா ராம்குமார் (இவரை சகலகலாவல்லி என அழைப்பதுண்டு) முனியம்மாவாக ஜெயந்தி, புதுமைப்பெண் சட்டங்கள் பேசும் வக்கீல் பெண்ணாக இக்கட்டுரையில் முதலில் பார்த்த ஸ்ரீவித்யா, எல்லோரும் நன்றாகவே நடித்துக் கலக்கினார்கள். ஒருமுறை, அமைச்சராக இருந்த மறைந்த தமிழ்க்குடிமகன் இங்கு வந்தபோது அவருக்கும் இந்த நாடகத்தை மேடையேற்றிக் காட்டினோம்.

நாடகங்கள் மூலம் நல்லதொரு கருத்தைச் சொல்ல வேண்டுமென்பதில் எனக்கு அதிக உடன்பாடு உண்டு. துணுக்குத் தோரணங்கள் வேண்டுமானால் அந்த நேரத்துக்கு மனதை விட்டு சிரிக்க உதவும் என்றாலும் சமூகத்துக்குத் தேவையான கருத்துகள் மிகவும் ஆழமாகப் பதிய நாடகங்கள் உதவவேண்டும். நானும் துணுக்குத் தோரணங்கள் கட்டியதுண்டு என்றாலும் பின்னாளில் என்னுடைய நாடகங்களில் விவாகபந்தத்தின் அடிப்படை அன்பையும், திருமணத்துக்குப் பின் காட்டப்படும் காதலையும், சமூகத்தின் இன்றைய அவலங்களையும் புகுத்தி நகைச்சுவையாக எடுத்துச் சொல்வதில் அதிக அக்கறை காட்டினேன். இப்படி விவாகத்தின் பின் காட்டப்படும் காதல் பற்றிய ஒரு நாடகம்தான் காதல் கடிதம்.. இதைப் பற்றியும் சிறிது பார்ப்போம்.

(படத்தில் நானும் மனோகரனும் – சிங்கப்பூர் சிங்காரி’யில்)

தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

13 thoughts on “அச்சமில்லை அச்சமில்லை

  1. “நாடகங்கள் மூலம் நல்லதொரு கருத்தைச் சொல்ல வேண்டுமென்பதில் எனக்கு அதிக உடன்பாடு உண்டு. துணுக்குத் தோரணங்கள் வேண்டுமானால் அந்த நேரத்துக்கு மனதை விட்டு சிரிக்க உதவும் என்றாலும் சமூகத்துக்குத் தேவையான கருத்துகள் மிகவும் ஆழமாகப் பதிய நாடகங்கள் உதவவேண்டும்.”

    திரு திவாகர் அவர்களே நானும் அப்படிப்பட்ட கருத்தை உடையவன்தான்

    14 நாடகங்கள் எழுதி இயக்கினேன்

    ஒவ்வொரு நாடகமும் நிச்சயமாக விழிப்புணர்வை ஏறபடுத்தும் நாடகங்களே

    தங்களைப் போன்ற நல்ல கருத்துடைய நண்பர்கள் நாமெல்லோரும் ஒன்றாகச் சேர்ந்தால் ஒரு நல்ல நாடகம் போடலாம் .

    பாரதியார் மீண்டும் பூலோகத்துக்கு வந்து படும் பாட்டை ரசித்தேன் நல்ல கற்பனை

    அன்புடன்

    தமிழ்த்தேனீ

  2. கட்டுரையில் பாரதியார் படம் ஒன்றினயும் இணைத்திருக்கலாம். திருவளளுவர் கற்பனையில் உருவாக்கப்பட்டபடம். ஆனால் அசல் பாரதியார் படம் இருக்கும் பொழுது கற்பனைப் பாரதியாரை ஏன் உருவாக்க வேண்டும்? இதனால்தான் தாங்கள் பாரதியார் படத்தை இடம் பெறச் செய்யவில்லை போலும்.எஸ்.எம்.எஸ். எம்டனில் சுதந்திரப் போராட்ட வீரன் தீரன் செண்பகராமன் பிள்ளையை அவதூறு செய்துவிட்டு, பாரதியை மட்டும் போற்றிப் புகழ்வது ஏன்? செண்பகராமன் குறித்து உஙளுக்குத் தெரிந்த தகவல்களை மட்டுமேனும் எங்களுக்குச் சொல்லுங்கள்.

  3. உலகமே நாடக மேடை. நாடகம் உலகின் பிரதிபலிப்பு. கனவு கற்பனையின் உருவகம். நகைச்சுவை, கூடோடி வரும் நளின நடை. இதெல்லாம் வேணுமானால் ‘அச்சமில்லை அச்சமில்லை’ பார்க்க ஓடோடி வாங்கோ.
    திவாகர்! ஸுப்பர்.

  4. Bharathi vanthaara.. Aahaha. Kannadhasan paattu ‘Kadavul Orunal ulagaik kaana thaniye vanthaaraam’ andha paattu maathiri avar ethavadhu padinara? Interesting subject. Nadagame Ulagam. Nadakkattum indha nadagam.

  5. Divakar sir…..

    Visakhapatnam kanmanigal romba thiramai saaligal endru neengal ennaiththan pugazhgireergal endru enakku nandrai therium. Irundhalum enakku romba adakka (???) sobhavam (romba shy type)????!  Romba romba thanks sir

    IDHU EPPADI IRUKKU? hihihi

  6. எஸ்.எம்.எஸ். எம்டனில் சுதந்திரப் போராட்ட வீரன் தீரன் செண்பகராமன் பிள்ளையை அவதூறு செய்துவிட்டு, பாரதியை மட்டும் போற்றிப் புகழ்வது ஏன்? //

    ஹிஹிஹிஹி, நல்லா இருக்கு. 

    அது சரி இந்த ஶ்ரீவித்யா தான் கோடை மழை வித்யாவா?? இப்போத் தான் கல்யாணமாச்சா?  புதுச் செய்தி! 

    பாரதி நல்லவேளையா கொஞ்சமானும் ஆறுதலோடு போகும்படி உங்க நாடகத்தை உங்களால் முடிக்க முடிஞ்சது.  ஆனால் இப்போதைய நிலையை பாரதி பார்த்திருந்தால்! :((((((  தலை சுத்தும் அவருக்கு. 

    தொடருங்கள் அடுத்த அனுபவத்துக்குக் காத்திருக்கோம். 

  7. pin nokki pakkareppo eppidi nenga vandha pathai engallukku paravasama erukku………..nice to hear from our visakai diwakar………..vazhga tamil kalai mandram vizag. we are gifted to be associated with you sir

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *