அவ்வை மகள்

“ஏம்மா ஒங்க அம்மா இருக்காங்களாம்மா?” கேட்டபடியே வருவார்.

“இருக்காங்க, வாங்க உக்காருங்க” என்று எங்களில் எவரேனும் ஒருவர் சொல்வோம்.

செருப்பைக் கழற்றி விட்டு, வாசற்படியில் தலைகுனிந்து உள்ளே வந்து- முற்றத்தின் விளிம்பில் பதித்திருக்கிற உரலின் மீது உஸ் என்று பெருமூச்சு விட்டபடி அமர்ந்து கொள்ளுவார். “பாப்பா ஒரு தட்டு எடுத்தாமா” என்பார். பழம், பூ, இனிப்பு, காரம்.

அம்மா அதற்குள் ஸ்ட்ராங்காய்ச் சர்க்கரைத் தூக்கலாக ஒரு காபி போட்டு வைத்திருப்பாள். முந்தானையால் முகத்தை அழுத்தித் துடைத்துக் கொண்டு, அடுக்களை வாசற்படிப் பிறையில் வைக்கப்பட்டிருக்கும் மங்கிய கண்ணாடியில், வெகு சிரத்தையாகக் குங்குமத்தைச் சரி பண்ணிக்கொண்டு, அவள் சமையலறை வாசற்படியைத் தாண்டவும், எங்களில் எவரேனும் ஒருவர், ஓடிச்சென்று காபியை வாங்கிவந்து அவரிடம் தர, அதற்குள் அம்மா கூடத்தின் கம்பத்தில் சாய்ந்தபடி வந்து நிற்பாள்.

“என்ன நல்லாயிருக்கீங்களா?” அம்மா கேட்க “நீ எப்படிம்மா இருக்கே” என அவர் கேட்க அதற்குள் என் பாட்டிக்கு எப்படியோ மூக்கு வியர்த்து விடும், எந்த மூலையிலிருந்தோ வெடுக்கென ஓடி வருவாள்.

“யாரது? அல்லாக்கு மாதிரி இல்ல?”

“ஆமாமா! நாதான்!”

பாட்டியும் அவரும் ஏதேதோ பேசுவார்கள்! இரண்டு தலைமுறைக் குடும்பத்தொடர்பு! மாத்தூரிலிருந்து வருபவர்-அம்மாவிற்கும் அதுதான் பூர்வீகம்.

அம்மாவிற்குத் திருமணமான பின் சில வருடங்களிலேயே என் சித்தி, மாமா இருவருக்கும் திருமணமாகிவிட-தாத்தாவும் இறந்து விட அவ்வூரை விட்டுப் பாட்டியும் இடம் பெயர்ந்து விட்டாள்! அப்பாவின் போக்கும் குணமும் அறிந்தவளாதலால்-எத்தனையோ இடர்ப்பாடுகளுக்கு இடையிலும் எங்களுடன் இருப்பவள்!

அவர் “அல்லாக்கு”-ஆலாசயனாதன் என்ற ஊரிலுள்ள ஈசனின் பெயர் மருவி அல்லாக்கு என்று மாறி நிற்கின்றது-தன்னை அலாக்காகத் தூக்கிப் போட்டுப் பிடிக்க வேண்டும் என்று அடம் பிடிப்பாராம் சிறு குழந்தையாக இருந்தபோது-பாட்டி சொல்லியிருக்கிறாள்!

குழந்தைகளோடு குழந்தைகளாகப் பாட்டியின் வீட்டிலேயே ஒரு வட்டிலில் உண்டு-அங்கேயே உறங்கி விழித்து-பள்ளிக்கு வீட்டுக் குழந்தைகளுடன் ஒன்றாகச் சென்று வந்தவர் என்று தெரியும்! அம்மாவும் அவரும் கிளாஸ்மேட் வேறு!

பத்து வயது வரை அவருடைய வீட்டில் அவர் இருந்ததை விட எங்கள் அம்மா வீட்டில் தான் அவர் அதிகமாய் இருப்பாராம்!

அம்மாவை எட்டாம் வகுப்புக்கு மேல் பள்ளிக்கு அனுப்பவில்லை! அத்தை மகன், அதாவது எங்கள் அப்பாவுக்கு ஏற்கனவே முடிவு செய்தாகி விட்டது! நான் பிறந்த போது அம்மாவுக்குப் பதினைந்து வயது தான்! ஏதேதோ பழக்கங்கள் அப்பாவுக்கு! அம்மாவும் நாங்களும் பாவம் பாவம் பரிதாபம்!

அவரைப் பிறர் விரும்ப அவரிடம் ஏதும் இல்லை. ஆண் என்கிற ஒரே தகுதியால் எல்லாம் நடந்தது!

எங்களைத் தேடி-எங்களைக் காண அத்திப் பூத்தாற்போல் போல் வரும் நபர் இவர் ஒருவரே! அதுவும் அப்பா இருக்கும் நேரத்தில் வந்து விட்டால் உள்ளே நுழையக்கூட மாட்டார்-வாசல் திண்ணையில் உட்காருவதுபோல் பாவனை பண்ணி விட்டு ஒரு செம்பு தண்ணி வாங்கிக் குடித்து விட்டுக் கிளம்பி விடுவார்!

“வீட்டுக்குள் வா” என்று கூட அழைக்கத் தெரியாத-விரும்பாத அப்பா! அப்பப்பா!! இத்தனைக்கும் மாத்தூரில் ஒரே பள்ளியில் படித்திருப்பவர்கள்-ஒரே ஊரில் வாழ்ந்திருப்பவர்கள்-நூறு கிலோமீட்டர் பிரயாணம் செய்து வந்து நம்மைப் பார்க்க வந்திருக்கிறானே என்று கூட எண்ண மாட்டார்!

இப்படி என்றோ ஒருநாள் அவர் உள்ளே வந்து அமர்ந்து பாட்டியிடம் பேசிக்கொண்டிருக்க-அம்மா அமைதியாய்க் கூடத்துக் கம்பத்தில் சாய்ந்து நின்றபடியே இருப்பாள். அவருடன் அவள் பேசிப் பார்த்ததில்லை. அவர் நுழையும்போது, “என்ன, நல்லாயிருக்கீங்களா?” சன்னமான அந்த ஒரே ஒரு கேள்வி-அதைத் தாண்டி அவள் ஒரு வார்த்தைப் பேசியதில்லை. அந்தக் கூடத்துக் கம்பத்தையும் அவள் தாண்டியதில்லை!

ஆனால் அவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருப்பதை நான் பார்த்திருக்கிறேன். அவர் வரும் போதெல்லாம் அம்மாவின் முகம் வெகு பிரகாசமாக மாறுவதையும் நான் கவனித்திருக்கிறேன். புறப்படுவதற்கு முன்னால் எழுந்து நின்றபடி பாட்டியிடம் பேசிக்கொண்டே என் அம்மா நிற்கும் திசையில் திரும்பி அம்மாவை ஒரு முறை முழுமையாய்ப் பார்ப்பார். அந்த நேரங்களிலெல்லாம் கண்ணில் ஏதோ தூசி விழுந்தவளைப் போல அம்மா கண்ணை லாவகமாகத் துடைப்பதைப் பார்த்திருக்கிறேன்.

அவர் வந்து சென்ற பின்பு ஒரு பத்து நாட்களாவது அம்மா பாட்டியிடம் அவரைப் பற்றித் தாழ்வான குரலில் ஏதோ பேசிக் கொண்டிருப்பாள். அப்போது அவள் காட்டியிருக்கிற உற்சாகத்தையும், அவள் முகத்திலே ஏற்பட்ட பூரிப்பையும் என்னால் மறக்கவே முடியாது.

கட்டை விறகும், கரிக்கந்தையுமாக வீடே கதியென அவளது வாழ்க்கை. உழைப்பு என்றால் ஓயாத உழைப்பு, வறுமைக்கு வாக்குப்பட்டு, உரிமைகளை உலையில் போட்டு, உபயோகமில்லாத புருஷனுடன் வாழ்ந்த அவளது மவுன யுத்தத்தில், அவள் காட்டிய நம்பிக்கை ஊற்று எங்கே இருந்து வந்தது என நான் வியந்திருக்கிறேன்.

எப்போதோ கூடப்படித்த அந்தப் பால்ய சிநேகிதன் எப்போதோ ஒருமுறை வந்து மௌனமாய்ப் பார்த்து விட்டுப் போகிற அந்த நேசம்; பீர்பாலின் கதையில் குளிர் நீரில் இறங்கியவன் பார்த்த தொலைதூர விளக்கைப்போல.

அன்று எனக்குப் புரியாதது, இன்று எனக்குப் புரிகிறது காதலின் வலிமை!!

 

படத்திற்கு நன்றி:http://www.123rf.com/photo_6225437_closeup-of-a-smiling-mature-man-with-a-woman-in-background.html

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “அம்மாவின் தோழன்

  1. கதை மனதின் ஆழத்தினை ஊடுருவிச் செல்கின்றது. மீ நுண்ணிய உணர்வுகளை ஊடுருவி இன்னொரு பரிமாணத்தினை பிரதிபலிக்கின்றது. வாழ்த்துகள்

Leave a Reply to ரிஷி ரவீந்திரன்

Your email address will not be published. Required fields are marked *