பேராசிரியர் ந.தெய்வசுந்தரத்தின் இரு மடல்கள்

4

deivasundaramசென்னைப் பல்கலைக்கழக மொழியியல் ஆய்வுப் பிரிவின் இயக்குநராகவும் தமிழ் மொழித் துறையின் தலைவராகவும் பணியாற்றி, ஓய்வுபெற்ற பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் அவர்களின் இரு மடல்கள் இங்கே:

============================================

மடல் 1:

அன்புள்ள வல்லமை ஆசிரியர் அவர்களுக்கு,

பேரா. இ. அண்ணாமலை அவர்கள் ‘வல்லமை‘யில் எழுதியுள்ள கட்டுரையைப் படித்தேன். இரண்டு முக்கிய வினாக்களுக்கு அக்கட்டுரையில் விடை தெளிவாக இல்லை.

1. சமஸ்கிருதத்தை எழுதுவதற்குக் கிரந்தம் தேவை என்ற அடிப்படையில்தான் யூனிகோட் அமைப்புக்கு மூன்று பரிந்துரைகளும் அளிக்கப்பட்டுள்ளன. அவ்வாறு இருக்கும்போது, சமஸ்கிருதத்தில் இல்லாத ஒலிகளுக்கும் ஒலியன்களுக்கும் எழுத்துகள் கொடுக்கப்படுவது மொழியியல் அடிப்படையில் சரியா? அதுவும் தமிழில் உள்ள ஒலியன்களை, எழுத்துகளைச் சேர்ப்பது சரியா? (பொதுவாக, மொழிகளின் வரிவடிவங்களை ஆய்வு செய்யும்போது, ஒலியன் அடிப்படையிலும் அசை அடிப்படையிலும்தான் எழுத்துகள் அமைகின்றன என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.)

2. இந்திய நடுவண் அரசின் மடல் ஒன்றில் அனைத்து இந்திய மொழிகளையும் எழுத்துப் பெயர்ப்பிற்குக் கிரந்தம் பயன்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதே. இது மொழியியல் ஏகாதிபத்தியம் இல்லையா?

கிரந்தத்திற்கு யூனிகோடில் இடம் கொடுக்க வேண்டாம் என்று உத்தமம் கூறவில்லை. சமஸ்கிருதத்தில் இல்லாத, அதை எழுதுவதற்குப் பயன்படும் கிரந்தத்தில் இல்லாத எழுத்துகளை அளிக்க வேண்டுவதன் அடிப்படை என்ன?

தமிழ் எழுத்து முறையானது, ஒரு ஒலியனுக்கு எழுத்து, ஒரு அசைக்கு எழுத்து என்று தெளிவாக உள்ளது. அவ்வாறு இருக்கும்போது, தமிழில் இல்லாத பிற மொழிகளின் ஒலிகளைத் தமிழில் எழுத தமிழ் நெடுங்கணக்கைச் சீர்குலைக்க வேண்டாம் என்பதே தமிழர்களின் கருத்து.

தமிழ் வளர்ச்சிக்கு அவ்வாறு செய்யவேண்டும் என்பது தேவையில்லை. தமிழுக்கே உரிய அமைப்பை அடிப்படையாகக் கொண்டு, தமிழை வளர்க்க – அறிவியல் துறை, கணினியியல் துறை உட்பட – செய்யவேண்டிய பணிகள் ஏராளம் உள்ளன. கிரந்தத்தில் தமிழ் எழுத்துகளைச் சேர்ப்பது மூலமோ அல்லது தமிழில் கிரந்தத்தைச் சேர்ப்பதன் மூலமாகவோ தமிழ் வளரும் என்பதில் உண்மையில்லை.

மேலும் மொழிப் பிரச்சினை என்பது ஒரு இனத்தின் பிரச்சினையும் ஆகும். ஒரு இனம் தன் இனத்தின் அடையாளமான தன் மொழியின் தனித்தன்மையைப் பாதுகாக்கக் குரல் கொடுப்பது தவறானது அல்ல.

பிராமிக்கும் தற்போது 128 இடங்களை யூனிகோட் ஒதுக்கியுள்ளது. அதை யாரும் எதிர்க்கவில்லையே.

அன்புடன்
ந. தெய்வ சுந்தரம்

=======================================================

மடல் 2:

அன்புள்ள வல்லமை ஆசிரியருக்கு,

வல்லமையில் பேரா. இ. அண்ணாமலை அவர்கள் எழுதியுள்ள கட்டுரை பற்றிய எனது இரண்டாவது மடல் இது.

வல்லமையில் பேரா. இ. அண்ணாமலை அவர்களின் கட்டுரையில் சில தெளிவான விளக்கங்கள் இல்லை என்பதே என் மடலின் அடிப்படை. தஞ்சையில் நடைபெற்ற தமிழ்க் காப்புக் கூட்டத்தில் நான் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினேன். பேராசிரியருக்கு அங்கு விவாதிக்கப்பட செய்திகள் பற்றி முழு விவரங்கள் கிடைத்திருக்காது என நினைக்கிறேன்.

ஒரு மொழிக்கு ஆபத்து என்று சிலர் எண்ணும்போது, மிக வேகமாகத் தங்கள் கருத்துகளைத் தெரிவிப்பது இயல்பு.

அதனாலேயே அவர்களது உணர்வுக்குப் பின்னால் உள்ள உண்மை, பொய்யாகிவிடாது. உத்தமத்தில் உள்ள நண்பர்கள், பிற தமிழ் ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் அனைவரும் தமிழுக்கு உருவாக்கப்பட இருக்கிற ஆபத்தை உணர்ந்துதான், தங்கள் கருத்துகளை முன்வைத்துக்கொண்டிருக்கிறார்கள். அடிப்படையோடுதான் வாதங்களை முன்வைத்துக்கொண்டிருக்கிறார்கள். யாரும் கிரந்தத்திற்கு யூனிகோடில் இடம் அளிக்க வேண்டாம் என்று கூறவில்லை. கிரந்தத்தில் ஏற்கனவே உள்ள எழுத்துகளுக்கு, சமஸ்கிருதத்தை அதில் எழுத விரும்புவர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப, இடம் அளியுங்கள் என்றுதான் கூறுகிறார்கள். அதில் இல்லாத எழுத்துகளுக்கு, தமிழில் உள்ள எழுத்துகளுக்கு, கிரந்தத்தில் இடம் கொடுத்தால், சமஸ்கிருதச் சொற்களின் வரவு தமிழில் அதிகரித்துவிடும் என்ற அச்சமும் இருக்கிறது. அச்சத்தில் நியாயமும் இருக்கிறது.

இந்திய நடுவண் அரசின் மடல் பற்றிய செய்தி, பேராசிரியருக்குக் கிடைத்திருக்குமா என்பது தெரியவில்லை. இந்திய மொழிகளுக்குப் பொது எழுத்து முறையாகக் கிரந்த எழுத்து முறையைக் கொண்டுவரும் நோக்கம் அதில் தெளிவாக இருக்கிறது. அவ்வாறு இருக்கும்போது, மொழி ஏகாதிபத்தியத்தால் தமிழுக்கு ஆபத்து ஏற்படலாம் என்று தெரியும்போது, அதற்கு எதிராகக் குரல் ஒலிக்கத்தான் செய்யும். மொழி ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதற்கு அறிஞர்களின் ஆய்வுகள், கருத்துகள் மட்டும் போதாது. மக்களின் பரந்துபட்ட இயக்கமும் சில வேளைகளில் தேவைப்படும்.

1965ஆம் ஆண்டு இந்தி, நாடு முழுவதும் ஒரே ஆட்சி மொழியாக ஆக்கப்படும் என்ற அரசியல் சட்டப் பிரிவின் அமலாக்கத்தைத் தடுத்த நிறுத்தத் தமிழ் மக்களின் ஒன்றுபட்ட போராட்டமே அடிப்படையாக அமைந்தது. அப்போது மொழி ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய மக்கள், ‘இந்தி ஆதிக்கம் ஒழிக’ என்பதற்குப் பதிலாக ‘ இந்தி ஒழிக’ என்றே ஒலித்தார்கள். அதற்காக அவர்கள் இந்தியை அதைப் பேசும் மக்களிடமிருந்து ஒழித்துக் கட்ட விரும்பினார்கள் என்று பொருள் இல்லை. தங்கள் மீது ஆதிக்கம் கூடாது, தமிழ் மீது ஆதிக்கம் கூடாது என்பதுதான் அவர்களின் உண்மையான நோக்கம்.

அதுபோல, இன்றும் கிரந்தத்தின் ஆதிக்கம் வந்துவிடலாம் என்ற அச்சத்தில் ஆய்வாளர்களோடு, இன உணர்வாளர்களும் இணைந்து போராடும்போது, ‘தமிழ்நாட்டில் கிரந்தமே வேண்டாம், சமஸ்கிருதமே வேண்டாம்’ என்ற குரல் ஒலிக்கலாம். அதை வெறும் எழுத்தளவில் எடுத்துக்கொள்ளாமல், அதற்குப் பின்னால் உள்ள உணர்வை மட்டும் எடுத்துக்கொண்டு விவாதிப்பதே நல்லது.

தமிழ்நாட்டில் சமஸ்கிருதத்தைப் பயன்படுத்த விரும்புவார்கள், அதற்குக் கிரந்தத்தைப் பயன்படுத்த விரும்புவார்கள், அதைப் பயன்டுத்துவதை யாரும் தடுக்க முடியாது. ஆனால் தமிழுக்குப் பாதிப்பு இல்லாமல் அவர்கள் பயன்படுத்த வேண்டும். அந்த அடிப்படையில்தான் யூனிகோடில் கிரந்தத்தில் இல்லாத புதிய 7 எழுத்துகளை – தமிழ் எழுத்துகளை – இணைக்க வேண்டாம் என்று குரல் எழுப்புகிறோம்.

பேரா. இ. அண்ணாமலை அவர்கள், இந்திய நடுவண் அரசின் மடல் பற்றிச் சற்று சிந்தித்துப் பார்த்தால் நல்லது. அதே வேளையில் அவரது சில கருத்துகளுக்காக அவரைத் தேவையின்றி சிலர் விமர்சனம் செய்யவும் வேண்டாம். அவர் சிறந்த தமிழ் அறிஞர். தமிழுக்கு எதிராகப் பேச வேண்டும், எழுத வேண்டும் என்பதற்கு அவருக்கு எவ்வித அவசியமும் கிடையாது. நமது நோக்கம், நமது நிலைப்பாடு ஆகியவற்றின் முழு விவரம் அவருக்குக் கிடைத்தால், நிச்சயமாக அவர் நமது கருத்தை ஏற்றுக்கொள்வார். அடிப்படை இல்லாமல் பேசும் முனைவர் நா. கணேசனைச் சிலர்  பேரா. இ. அண்ணாமலை அவர்களோடு ஒப்பிடுவது சரியல்ல.

அன்புடன்
ந. தெய்வ சுந்தரம்

=======================================================

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “பேராசிரியர் ந.தெய்வசுந்தரத்தின் இரு மடல்கள்

  1. “அனைத்து இந்திய மொழிகளையும் எழுத்துப் பெயர்ப்பிற்குக் கிரந்தம் பயன்படுத்த வேண்டும்” என எப்படி மத்திய அரசு கூற முடியும்? “இந்திய மொழிகளுக்குப் பொது எழுத்து முறையாகக் கிரந்த எழுத்து முறையைக் கொண்டுவரும் நோக்கம் அதில் தெளிவாக இருக்கிறது” எனத் தெய்வசுந்தரம் நம்புகிறார்.. அது மத்திய அரசின் எண்ணம் என, தெய்வசுந்தரம் அதற்கு ஆதாரம் தருவாரா?

    கிரந்தம் ஒரு பாரம்பரிய எழுத்துமுறை, இப்பொழுதும் பயனாகிறது என்ற அடிப்படையில்தான் அதன் யூனிகோட் ஏற்றம் சிபாரிசு செய்யப்படுகிறது. கிரந்தத்தில் தமிழ் எழுத்துகளைச் சேர்ப்பதால், தமிழுக்கு லாபம் என்பது யார் வாதமும் இல்லை.

    என்னதான் மரபிலக்கியம் சொன்னாலும், ஒரே வார்த்தையைப் பலர் ஒரே விதமாக பலுக்குவது இல்லை. ப, க, ச, த போன்ற எழுத்துகளில் பெரும் குழப்பம் உள்ளது. உதாரணமாக செல்வம் என்ற வார்த்தையை பலர் ‘selvam’ என்று பலுக்குகின்றனர். இதைத் தீர்க்க, இன்னும் சில எழுத்துகளை – நீட்சித் தமிழாக – சேர்ப்பதில் தவறு இல்லை.

    தெய்வசுந்தரத்தின் எண்ணங்களை “……………. என்பதே தமிழர்களின் கருத்து” என்று ஏற்றுக்கொள்ள முடியாது.

    – விஜயராகவன்

  2. இரண்டு கடிதச் செய்திகளையம் படித்தேன். செய்தியைத் தெளிவாகவும் நயமாகவும் கூறியுள்ளீர்கள். இப்பொழுதைய யூனிகோடு பிரச்சனைப் பற்றி நான் மேலும் தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது. இது பற்றித் தெரிந்துகொள்ளத் தகவலோ, தளமோ இருப்பின் குறிப்பிடவும்.

Leave a Reply to duraiarasan,k

Your email address will not be published. Required fields are marked *