கவிநயா

சின்ன வயதிலிருந்தே நடனமென்றால் பிடிக்கும் எனக்கு. பள்ளி விழாக்களில் கண்டிப்பாகக் கலந்து கொள்வேன். கல்லூரியில் அவ்வளவாக வாய்ப்பில்லை. தொலைக் காட்சி வந்த பிறகு பரத நாட்டிய நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்ப்பேன். இப்படித்தான் தொடங்கியது என்னுடைய நாட்டியக் காதல். ஆனால் நடன நிகழ்ச்சி எதுவும் நேரில் பார்த்ததில்லை, பரதம் கற்றுக் கொள்வேன் என்று கனவிலும் நினைத்ததும் இல்லை.

அமெரிக்கா வந்த பிறகுதான் நடனத்தை நேரில் பார்க்கும் வாய்ப்பே கிடைத்தது. நான் பார்த்த முதல் நடன நிகழ்ச்சி ஒரு பரதக் கலைஞரும், ஒரு குச்சுப்புடிக் கலைஞரும் இணைந்து நடத்தியது. எங்கள் ஊர் கோவிலுக்கு நிதி திரட்டுவதற்காக அந்த நிகழ்ச்சியை அமைத்திருந்தார்கள். அது 1999 –வது வருடம். “பட்டிக்காட்டான் மிட்டாய்க் கடையைப் பார்த்தது போல” என்பார்களே, அதைப் போலத்தான் அந்த நிகழ்ச்சியை திறந்த வாய் மூடாமல் பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் பரதம் ஆடியவர் என் தோழி, திருமதி. உமா செட்டி. அப்போதுதான் அவருடைய இரண்டாவது மகனுக்கு ஒரு வயதாகி இருந்தது. அவர் குடும்பம் சமீபமாகத்தான் எங்கள் ஊருக்கு வந்திருந்தது. அவருடைய நாட்டியமும், முக பாவங்களும், என்னை மிகவும் கவர்ந்து விட்டிருந்தன.
அதே வருடத்தில்தான் உமா நடன வகுப்புகள் ஆரம்பித்தார். நானும் கற்றுக் கொள்ள வருகிறேன் என்று கேட்ட போது உடனே சரியென்று சொல்லி விட்டார். சில நடன ஆசிரியைகள் சிறுமிகளுக்கு மட்டுமே சொல்லித் தருவேன் என்று கண்டிப்பாக இருக்கும் போது, இவர் உடனே சரியென்றதில் மிக்க மகிழ்ச்சி எனக்கு.

அவருடைய முதல் நடன வகுப்பில் இரண்டு 7 வயது சிறுமிகள் மட்டுமே இருந்தார்கள். இரண்டாவது வகுப்பில் இருந்துதான் நானும் சேர்ந்து கொண்டேன். இரண்டு அமெரிக்கப் பெண்மணிகள் ஆரம்பத்தில் சில நாட்கள் வந்து கொண்டிருந்தார்கள், சிறிது காலத்திற்குப் பிறகு நின்று விட்டார்கள்.

தற்போது “Apsaras Arts Dance group” என்ற பெயரில் நடத்தப்படும் எங்கள் நடனப் பள்ளி இப்படித்தான் ஆரம்பிக்கப்பட்டது. இப்படி விரல் விட்டு எண்ணக் கூடிய மாணவிகளோடு 2000-ல் ஆரம்பிக்கப்பட்ட பள்ளியில் இப்போது கிட்டத்தட்ட 120 மாணவிகள் நடனம் பயின்று வருகிறார்கள். அவர்களில் சில குடும்பத் தலைவிகளும் அடக்கம். வருடா வருடம் இந்த எண்ணிக்கை கூடிக் கொண்டேதான் போகிறது. என்னையும் சேர்த்து மூன்று பேர், ஆசிரியைகளாகவும் இருக்கிறோம். இது வரை ஒன்பது பேர் அரங்கேற்றம் முடித்திருக்கிறோம். இரண்டு பேர் இந்த ஜூனில் அரங்கேற்றம் செய்யத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

அரங்கேற்றுத்துடன் நடனப் பயணம் முடிந்து விட்டது என்ற தவறான புரிதலில் பெரும்பாலானோர் இருக்கின்ற இந்தக் காலத்தில், எங்கள் பள்ளியில் அரங்கேற்றம் முடித்த அத்தனை பேருமே ஏதாவது ஒரு வகையில் நடனத்தைத் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறோம் என்பதுதான் இதில் உள்ள சிறப்பு. இதை வலியுறுத்தும் வண்ணமாகவே அரங்கேற்றம் முடித்தவர்களுக்கென்றே தனியாக வகுப்பு நடத்தி வருகிறார். கல்லூரிப் படிப்புக்கென வெளியூர் சென்று விட்ட மாணவிகளும் கூட கோடைக் காலத்தில் வகுப்புகளுக்கு வந்து விடுவார்கள். இதற்குக் காரணம், உமாவுடைய பரதக் கலையின் மீதுள்ள காதல் எங்களையும் தொற்றிக் கொண்டதுதான், என்று சொன்னால் மிகையாகாது.

அந்த வகையில், சென்ற டிசம்பர் மாதம் தேவி பாடல்களாக எடுத்து ஒரு நடன நிகழ்ச்சி அளிக்க வேண்டுமென்ற எனது நெடு நாளைய விருப்பம் அன்னை பராசக்தியின் அருளால் பல வேறு பிரபலமான பாடல்களுக்கு நடனம் ஆடுவது மூலமாக, குறிப்பாக ‘வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்’, ‘நீ இரங்காயெனில் புகழேது?’, ‘அயிகிரி நந்தினி’, ‘ஸ்ரீசக்ர இராஜசிம்ஹாசனேச்வரி’, போன்ற பிரபலமான பாடல்களுக்கு நடனம் ஆடுவது மூலம் நிறைவேறியது! என் விருப்பம் நிறைவேற மிகவும் உதவியாக இருந்த, என்னுடைய நடன குருவான உமா அவர்களுக்கு இந்த சமயத்தில் மீண்டும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

உமா செட்டி, சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்தவர். அவரது குருவான ஸ்ரீமதி நீலா சத்தியலிங்கத்திடம், 8 வயதில் பரதம் கற்றுக் கொள்ளத் தொடங்கி, 13 வயதில் அரங்கேற்றம் செய்தார். இந்தியா, சிங்கப்பூர், மலேஷியா, ஹாங்காங், ஆஸ்திரேலியா, அமெரிக்கா என்று பல நாடுகளிலும் நிகழ்ச்சிகள் அளித்திருக்கிறார்.

சுனாமி, மயன்மார் புயல் பாதிப்பின் போது, கோவிலுக்கு, இப்படி, பல நிதி திரட்டும் பணிகளிலும் பங்கு பெற்று நடனம் ஆடியிருக்கிறார். எங்கள் ஊர் கோவிலில் வெகு காலத்திற்கு முருகன் சந்நிதி இல்லாமல் இருந்தது. அதற்கு நிதி திரட்டுவதற்கென உள்ளூர் நடனமணிகளையும், மாணவிகளையும் வைத்து 2007-லிலும், 2009-லும், நடன நிகழ்ச்சிகள் நடத்தினார்.

உமா, வெறும் நடனக் கலைஞர் மட்டும் அல்ல; அவர் ஒரு MBA மற்றும் CPA பட்டதாரி; எல்லாவற்றையும் விட முக்கியமாக மிக நல்ல குடும்பத் தலைவி. அமெரிக்காவிலேயே மிகச் சிறந்த பள்ளி என்று சொல்லப்படும் பள்ளிகளில் இடம் பெற்றிருக்கும் அவர் பிள்ளைகளே அவருடைய ஈடுபாட்டிற்கும் உழைப்பிற்கும் சான்று. இத்தனைக்கும் நடுவில் நடனத்தில் அவருக்குள்ள தீராத ஆர்வமும் ஈடுபாடும் மிகவும் போற்றுதலுக்குரியது. அவருடைய கணவரும் அவருக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்.

இங்கே இருக்கிற அமெரிக்க மக்களுக்கு மட்டுமின்றி, இந்தியர்களுக்குமே கூட பரதத்தைப் பற்றியும், அதன் அழகைப் பற்றியும் மிகப் பரவலான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியவர், உமா. இங்கு நடைபெறும் நிகழ்ச்சிகள் அனைத்திலும் எங்கள் பள்ளிக் குழந்தைகளின் நடனம் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சென்று பரதத்தைப் பற்றியும், இந்து மதத்தோடு அதற்கு உள்ள தொடர்பைப் பற்றியும் விளக்குவது போன்றதான பாடங்களையும் பயிற்றுவித்து வருகிறார். இங்குள்ள கல்லூரிகளில் பன்னாட்டு கலைகள், மதங்கள் சம்பந்தமாகப் படிப்பவர்கள் இவரை மீண்டும் மீண்டும் தங்கள் கல்லூரிக்கு அழைத்து பேசச் சொல்லுவதே அவருடைய திறமையைப் பறை சாற்றும் உரைகல்.

உமா சொல்லித் தருவது நடனம் மட்டும் அல்ல. பெரியவர்களிடம் மரியாதை, நன்னடத்தை, ஒழுக்கம், கட்டுப்பாடு, மேடைப் பேச்சு, தன்னம்பிக்கை, நிர்வாகத் திறமை, இப்படி எல்லாமே அவரிடமிருந்து கற்றுக் கொள்ளலாம்.

2009-ல் அவருடைய குரு ஸ்ரீமதி. நீலா சத்தியலிங்கம் அவர்கள், அவருடைய மாணவிகளை வைத்து ஒரு நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதில் பங்கேற்பதற்கு நம்முடைய உமாவும் சென்றிருந்தார். அப்போது, மிகப் பெரிய இன்ப அதிர்ச்சியாக, உமாவிற்கு, மதிப்பிற்குரிய “பரதக் கலை மணி” விருது, அவருடைய குருவால் வழங்கப்பட்டது!

அன்று தொடங்கி இன்று வரையில் ஆடற் கலையில் மட்டுமின்றி, அதைக் கற்றுக் கொடுப்பதிலும் ஆர்வம் குறையாமல் இருக்கும் உமாவைப் போன்ற குருவைப் பெற்றதில் எங்களுக்கெல்லாம் மிகவும் பெருமை, மகிழ்ச்சி. அத்துடன் மட்டுமல்லாது, நினைத்தால் பெட்டி படுக்கையோடு ஊர் ஊராக மாறித் திரிய வேண்டிய இன்றைய கால கட்டத்தில், நாங்கள் எல்லோரும் உமாவுடன், எங்கள் நடனப் பள்ளியுடன், இத்தனை காலம் ஒரே ஊரிலேயே இருக்கும்படி அமைந்திருப்பதே இறையருளால்தான் என்று எனக்கு அடிக்கடி தோன்றும்.

எங்கள் உமா, இன்று போல் என்றும் பரதக் கலைக்கான தன் சேவையைத் தொடர வேண்டுமாய் இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

 

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “மகளிர் வாரம் – சப்தமில்லாமல் ஒரு சாதனை!

  1. நல்ல குரு வழிகாட்டியாக அமைய பூர்வஜென்மத்தில் புண்ணியம் செய்து இருக்க வேண்டும். உங்களுடைய குருவின் சிறப்பு தங்களின் விவரிப்பில் அழகாக புரிகிறது. தகுதி வாய்ந்த குருவுக்கும் அவரின் தன்மையான சீடர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!

  2. தக்குடுவை இங்கே பார்த்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி 🙂 வாழ்த்துகளுக்கு நன்றி தம்பீ.

  3. குருவைப் பற்றி ஆத்மார்த்தமான பகிர்வு கவிநயா. அவரைப் பற்றி மட்டுமின்றி தங்களைப் பற்றியும் நிறைய தெரிந்து கொள்ள முடிந்தது:)! இருவருக்கும் என் வாழ்த்துகள்!

  4. உங்களுக்கு ஏற்கனவே என்னைப் பற்றி நல்லா தெரியுமே 🙂 வாசித்தமைக்கு நன்றி ராமலக்ஷ்மி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *