உளவியல் சார்ந்த ஓர் உடலியங்கியல் (Psychophysiology) பார்வை

டாக்டர் .மு. செம்மல் மணவை முஸ்தபா
MBBS, DLO, ,M.Sc,M.Phil, M.D , Ph.D (III yr) ,M A Philosophy (I yr)
உளவியல் சார்ந்த உடலியங்கியல் ஆய்வாளர்
உதவி பேராசிரியர்,
ஸ்ரீ இராமச்சந்திரா பல்கழைக்கழகம்
சென்னை

மொழியும் மூளையும் ஒன்றாகப் பரிணமித்த அற்புதங்கள், மனிதனை மற்ற உயிரினங்களுடன் போட்டியிட்டு வெல்லத் துணைபுரிந்த உயிரியலின் அடிப்படைகள்.

உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியின் உச்சத்தில் மனித இனம் உள்ளது, பல உயிரினங்களுக்கும் தத்தம் இனத்தினுள் தம் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளும் திறன் உண்டு. இருப்பினும் பல நூறு மொழிகளை உருவாக்கி, அவற்றிற்கு இலக்கணம் படைத்ததன் வாயிலாக மொழியின் உச்ச நிலையினை மனித இனத்தால் மட்டுமே அடைய முடிந்தது. உயிரியலைப் பொருத்தமட்டில் அனைத்து உயிரியல் தத்துவங்களையும் முழுமையாக உணரவேண்டுமெனில் பரிணாம வளர்ச்சிக் கொள்கையின் துணையோடுதான் பார்க்க வேண்டும், மொழியின் தோற்றத்தையும், வளர்ச்சியையும் அறிவதென்பது மனித மூளையினை அறிந்து உணரும் ஒரு பயணத்தின் மற்றொரு பகுதியேயாகும். அடிப்படையில் பரிணாம வளர்ச்சியானது ஓர் அடுக்கு மாடிக் கட்டிடம் போன்றதன்று ஒரே அமைப்பில் வளர்வதற்கு; அது கிளைகளையுடைய செடியைப் போன்றது, வெவ்வேறு திசைகளில் அதனால் வளர முடியும், பரவ முடியும். அதன் அடிப்படையில் மனித மொழியாக இருப்பினும், மனித மூளையாக இருப்பினும் காலம் செல்லச் செல்ல அது பெரிதாகவும், சிக்கலானதாகவும் இருக்க வேண்டும் என்னும் அவசியம் இல்லை; காலம் செல்லச் செல்ல மொழிகள் பல்வேறுவகையான மாற்றங்கள் அடைவதை நம்மால் காண முடியும்.

தமிழ் என்னும் ஒரு மொழியினைப் பார்க்கும் பொழுதே வள்ளுவர் காலத்தையும், பாரதியின் காலத்தையும், இன்றைய நிலையையும், நாளைய நிலையையும் ஒப்பிடுகையில் எழுதும் முறையிலும் நடையிலும் ஏன் உணர்விலும் கூட மாற்றங்கள் இருப்பதை நம்மால் காணமுடிகிறது.

மனித மொழிக்கு அடிப்படை வேர்களாக இலக்கணங்கள் உள்ளன, இலக்கணங்களுக்கு வடிவம் கொடுக்க சட்ட திட்டங்கள் உள்ளன, இதனை உருவாக்கியதன் மூலம் மனித மூளையினால் குறிப்பிட்ட அளவிலான சொற்களை வைத்து அளவில்லாத மொழி ஆக்கங்களை உருவாக்க முடிகிறது. நுணுக்கமாக கூறின், மனித மூளையினால் மட்டுமே இது சாத்தியமாகி உள்ளது. மற்ற உயிரினங்கள் கடந்த சில லட்சம் ஆண்டுகளாக பரிணாம வளர்ச்சி பாதையில் மெல்ல நகர்ந்த பொழுதும் மனிதரைப் போன்று தமக்கென ஒரு மொழியை ஏன் அவை பெறவில்லை? என்ற கேள்வியினை முன்வைக்கும் பொழுது , ஓர் உண்மை நமக்கு வெளிப்படுகிறது.

மற்ற உயிரினங்கள் மொழியினை பயன்படுத்துவதற்கும் மனித இனம் மொழியினை பயன்படுத்துவதற்கும் வெவ்வேறு காரணங்கள் உள்ளன , மேலும் மற்ற உயிரினங்களின் மூளை மனிதரின் மூளையைப் போன்றது அன்று; உயர்ந்த அளவினில் மொழியை எதிர்கொள்ள மனித மூளையால் மட்டுமே முடிகிறது. உறுதியான இலக்கியம் உள்ள மொழி, அதிகமான வேர்ச்சொற்களை பெறும்; அதன் விளைவாக காலத்திற்கு ஏற்ப அதிகமான புதியச் சொற்களை அதனால் உருவாக்கி காலத்தை கடந்து பயணிக்க முடியும். மிக அதிகமான வேர்ச்சொற்களை உடைய, சுமார் இருபது நூற்றாண்டுகளுக்கு முன்பே இலக்கியச் சட்டங்களைப் (தொல்காப்பியம்) பெற்ற உன்னத மொழி தமிழாகும். மொழிக்கு இலக்கணம் மிக முக்கியம் , இலக்கணம் தனது சட்டங்களின் மூலம் மொழியை உறுதியாக்கும். தெளிவான வேர்ச்சொற்கள் உறுதியான மொழியை உருவாக்கும், வேர்ச்சொற்கள் அதிகம் இருப்பின் மொழியின் வளர்ச்சி சிறப்பானதாக இருக்கும். மனிதர்களின் மூளையானது மொழியினைக் கையாளும் பாணியை நாம் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும், மொழி ஏன் தோன்றியது என ஆராயும் பொழுது நமக்குத் தெரியவரும் செய்திகள் யாதெனில், மனித இனம் குழுக்களாக உருவாகி நகர்ந்த பொழுது குழுக்களின் வேட்டையாடும் திறன் அதிகரித்தது. குழுக்களை நெறிப்படுத்த, வேட்டையை வெற்றிகரமாக உருவாக்க, ஆயுதங்களைப் பற்றிய செய்திகளைப் பரிமாறிக்கொள்ள ஒரு முறை தேவைப்பட்டது, அங்குதான் மொழியின் தோற்றம் ஏற்பட்டது. மொழி மனித இனத்திற்கு மிகுந்த நன்மைகளை அளித்தது; பாதுகாப்பை அதிகரித்தது, சிந்தனை செய்யும் திறனைப் பெருக்குவதற்கும் துணை புரிந்தது.

சிந்தனையில் எழும் எண்ணங்களை தெளிவாக வெளிப்படுத்தவும், மற்றவர்களின் எண்ணங்களை அறிந்துணரவும் பலவாறு பயன்பட்ட மொழியைச் செழுமையாக்க வேண்டிய ஒருவகையான கட்டாயம் மனித மூளைக்கு ஏற்பட்டது – எல்லா உயிரினங்களிலும் மிகவும் சிறந்ததான மனித மூளை முழுமையான மொழி வளர்ச்சியினை ஊக்குவித்தது.

மொழி ஒரு கருவி – அக்கருவியால் பயன் இல்லாத பொழுது………! ?

பொதுவாகப் பார்க்கும் பொழுது, ஒரு யதார்த்தமான உண்மை நம்மை எதிர்நோக்கி உள்ளதை நாம் முதலில் உணர வேண்டும். விதிவிலக்காக உள்ளவர்களை விலக்கி வைத்துவிட்டுப் பார்க்கும் பொழுது , ஒரு பயனை மையப்படுத்தி மொழியினை மனித மூளை எதிர்நோக்கி பரிணமித்த காரணத்தால், தாய் மொழியானது தனது பயன்பாட்டை எதிர்பார்த்த அளவினில் பூர்த்தி செய்யாத பொழுது, பயன் தரும் வேற்று மொழியை ஏற்றுக் கற்று மேலும் அம்மொழியில் ஞானம் பெற மூளை முயல்கிறது, அம்முயர்ச்சியில் வெற்றியும் பெறுகிறது . இவ்வாறு வாழ்க்கையை நகற்றுபவர்களை கண்டிப்பவர்களை கண்டுகொள்ளாமல் செல்பவர்களும் நம்முள் இருந்து தாய் மொழி ஆர்வலர்களை முள்ளாக வருத்தி நம்மிடையே வளமாக இருக்கத்தான் செய்கின்றனர், இனியும் இருப்பார்கள். படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை எத்தனை பேருக்கு கிடைக்கிறது ? வேலையில் சேர்ந்து அதற்கு ஏற்ப படிப்பவர்கள் ஏராளம்.

மொழியானது, சுமார் நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பேச்சு வழக்கினில் தோன்றியிருக்க வேண்டும், மூளையின் வளர்ச்சியும், மூளையின் செழுமையும் கைகோர்த்து நகர்ந்தன என்பதை நாம் மனத்தில் கொள்ள வேண்டும். மொழியின் பரிணாம வளர்ச்சியின் மாற்றங்கள் மூளையின் அமைப்பினில் பதிந்துள்ளன. மனித மூளையின் வெவ்வேறு பகுதிகள் பல்வேறு வகையான செயல்பாடுகளை செய்யவல்லதாக அமைந்துள்ளன.

மொழி சார்ந்த செயல்பாடுகளுடன் தொடர்புடைய பகுதிகள் மனித மூளையின் இடது பக்கத்தில் உள்ளன. மேலும் அவை நன்கு வளர்ச்சியடைந்த பகுதிகளாக இருப்பது சிறப்புடையதாகும். ஓர் உயிரினத்தின் மொழியினை மற்ற உயிரினத்தால் எளிதில் புரிந்துகொள்ள முடியாது, மனித மூளையின் சிறப்புமிகு தன்மைக்கு ஏற்ப மனிதர்கள் பயன்படுத்தும் மொழியும் வளம் மிகுந்ததாக அமைந்துள்ளது. பொதுவாக எதிரிகளை / நேர இருக்கும் பல்வேறு வகையான ஆபத்துக்களைப் பற்றிய செய்திகளை மற்ற உறுப்பினர்களுக்கு உணர்த்தவும், தங்களுக்குரிய பகுதிகளை வரையறை செய்யவும் மட்டுமே மற்ற உயிரினங்கள் மொழியைப் பெரும்பாலும் பயன்படுத்துகின்றன.

மனித மூளை மொழியிடம் எதிர்பார்க்கும் உதவிகள் பல்வேறாக உள்ளன. ஒரே வகையான அதிர்வுகளைப் பல நிலைகளில் வெளிப்படுத்துவதன் மூலம் பலதரப்பட்ட செய்திகளையும் மற்ற உயிரினங்களால் தமக்குள் பகிர்ந்துகொள்ள முடிகிறது; ஆனால் அவற்றால் எட்ட முடியாத மிக உயர்ந்த ஒரு நிலையில் மனிதர்களால் மொழியைப் பயன்படுத்த முடியும் என்பது மானுட இனத்தின் சிறப்பு.

மனித வாழ்க்கை அமைப்பை மாற்றியமைத்தது – மொழி

மொழி மனித இனத்திற்கே உரியது; மனித இனம் குழுக்களாகவும் கூட்டங்களாகவும் வாழ அது வழிவகை செய்தது. இந்த சவுகரியம் மனித இனத்தின் பரிணாமத்தில் பெறும் பங்கு வகித்தது; செய்திகளைப் பகிர்ந்து கொள்ளும் திறன், செய்திகளை வளர்க்கத் துணை புரிந்தது.

மொழியின் அமைப்பிற்கும் செயல்படும் முறைக்கும் மனிதர்களின் மரபணுவிற்கும் (Genome) அதன் அமைப்பிற்கும் செயல்படும் முறைக்கும் சிலவகையான ஒற்றுமைகள் உண்டு. எண்ணக்கூடிய அளவினில் உள்ள அடிப்படை பொருள்களில் இருந்து எண்ணிலடங்காத பொருள்களை உருவாக்கும் முறைமை இயற்கையிடம் உண்டு, சொற்களுக்கும், வர்ணங்களுக்கும், இசைக்கும், உயிரணுவில் உள்ள புரதங்களுக்கும் இந்த அடிப்படை உண்டு.

உருமலர்ச்சி கொள்கையை அறிவியல் அரங்கில் நிறுவியவர் ஐயா சார்லஸ் டார்வின் அவர்கள், தனது ஆய்வுகளின் அடிப்படையில் அவர் கூறிய கருத்தை நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டும் “ஆரம்ப காலம் முதல் இன்று வரை, இன்னும் உலகம் உள்ளவரை ஒரு வகையான போராட்டம் பல இடங்களில் நடந்துகொண்டே இருக்கும், உயிரினங்களுக்கு இடையே, மொழிகளுக்கு இடையே, மொழியில் உள்ள வார்த்தைகளுக்கு இடையே அப்போராட்டம் தொடர்ந்துகொண்டே இருக்கும்” என்பது அவரது வாதமாக இருந்தது.

நவீன ஆய்விகளின் மூலம் உளவியல் சார்ந்த உடலியங்கியல் துறை (Psychophysiology) ஆய்வாளர்கள் “மூளையின் பல்வேறு பகுதிகளுக்கு இடையேயும் கூட இந்த போராட்டம் தொடர்ந்துகொண்டே உள்ளது” என்று கண்டறிந்துள்ளனர். தோற்றம், அழிவு, சூழலுக்கேற்ப மருவும் தன்மை, ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு நகரும் தன்மை, காலத்திற்கு ஏற்ப மாறும் தன்மை ஆகிய அனைத்தும் மொழிகளுக்கும் உயிரினங்களுக்கும் உண்டு.

 உலக சரித்திரத்தைக் காணுகையில் ஓர் உண்மை நமக்குத் தெரியவருகிறது, ஆரம்பகாலம் முதலே மொழி ஆளுகையில் சிறந்து விளங்கியவர்கள் மற்ற மனிதர்களின் மீது அதிக ஆளுமை உடையவர்களாக இருந்துள்ளனர், மேலும் அவர்களால் சமூகத்தில் சிறந்து விளங்கவும் முடிகிறது, முன்னேற்றம் பெற துணை புரிவதால் மொழி சார்ந்த செயல்பாடுகளைக் கவனிப்பதில் மூளை அதிகக் கவனம் செலுத்துவதாக உள்ளது. மனிதர்களின் மரபணுவை ஆராயும் பொழுது , பயன்தராத நிலையில் உள்ள மரபணுவின் கூறுகளை அகற்றிவிட மனித உடல் தயங்குவதில்லை என அறிய முடிகிறது , இப்பயிற்சியை மொழிகளிலும் செயல்படுத்த இயற்கை தயங்குவதில்லை.

வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றிபெறத் துணை புரியும் மொழிகளையும், மொழியில் உள்ள சொற்களையும், மூளையின் பகுதிகளையும், மரபணுவின் பகுதிகளையும் இருத்திக்கொண்டு, பயனற்றவைகளைக் குறைக்கவோ, அகற்றவோ மனித இனம் தயங்குவதில்லை, இது அறிவியல்.

மொழியின் வளர்ச்சி மனிதர்களின் சமூக வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியது. மொழியின் வருகையால் குழுக்களாக வாழும் திறன், கட்டுக்கோப்புடன் வாழும் நிலைப்பாடு, திட்டமிடுதல், திட்டங்களை பகிர்தல், திட்டங்களை செயல்படுத்துதல், போன்ற மூளையின் அனைத்து செயல்பாடுகளையும் சாத்தியப்படுத்தி மனித இனம் மற்ற முதல் நிலை உயிரினங்களைவிட (Primates) வேகமாகவும் தனித்தன்மையுடனும் செயல்பட மொழி வழி வகை செய்தது.

மொழித்திறன் பெற்ற மூளையினால் பலவேறு திறன்களையும் சிறப்பாகப் பெற முடிந்தது என்னும் செய்தியினை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மனித உடல் அமைப்பை மாற்றியமைத்தது – மொழி

விபத்து, பலவகையான நரம்பியல் சார்ந்த நோய்கள் இவை காரணமாக மூளையில் ஏற்படும் மாற்றங்கள், அதனால் மொழித்திறனில் ஏற்படும் குறைபாடுகள் போன்றவற்றை ஆராய்கையில், அதிநவீன நோய்க்குறியான அறுதியீட்டு முறைகள் (Diagnostic Techniques) வாயிலாக மூளைக்கும் மொழிக்கும் இடையேயான தொடர்பு அண்மைக் காலத்தில் தெளிவாகத் தெரியவந்துள்ளது.

மனிதன் பரிணாம வளர்ச்சி அடைந்த பொழுது அவனது தாடைப் பகுதி (Jaw) விரிவடைந்தது; இது நாக்கின் செயல்பாடுகளை அதிகரிக்கத் துணை புரிந்தது. உணவிற்கு ஒன்று, சுவாசத்திற்கு ஒன்று என இரண்டு குழாய் அமைப்பு பொதுவாக பாலூட்டிகளுக்கு (Mammals) உள்ளது, ஆனால் மனித இனத்தின் தாடைப் பகுதியில் சில சிறப்பான மாற்றங்கள் ஏற்பட்ட காரணத்தால் சரளமாகப் பேசும் திறனை மனிதர்களுக்கு இயற்கை கொடுத்துள்ளது, இவ்வகையான அமைப்பின் காரணமாக உண்ணும் உணவானது வாய்ப் பகுதியில் இருந்து உணவுக்குழாய் வழியாகச் செல்ல முடியும்; சுவாசப் பாதை வழியாகவும் செல்லும் முடியும், சுவாசப் பாதை வழியாக உணவு செல்கையில் பெரும் அபாயம் (Risk for Aspiration) உள்ளது, இருப்பினும் பேசும் திறனை (Speech Capability) பரிசளித்ததால் இவ்வகையான அமைப்பை இயற்கைத் தேர்வின் (Natural Selection) துணைகொண்டு மனிதர்கள் தக்க வைத்துக்கொண்டனர்.

 நுரையீரல்களிடையே காற்று செல்லும்பொழுது நாளங்கள் (Vocal Cords) அதிர்வுருவதால் ஒலி உண்டாகிறது, மற்ற முதல் நிலை உயிரினங்களை ஒப்பிடுகையில் மனிதர்களின் முதுகெலும்பின் அமைப்பு மாறுபட்டுள்ளது, இது குரல்வளையின் செயல்திறனையும், நாத இதழ்களின் செயல்பாட்டையும் மேம்படுத்தியுள்ளது.

 குரலை உண்டாக்கும் குருத்தெலும்பு சார்ந்த கட்டமைப்பைக் குரல்வளை (Larynx) என்று அழைப்பர்; குரல் வளைக்கும், மூச்சுக் குழாய்க்கும் இடையே மூன்றாவது முதல் ஆறாவது கழுத்து முள்ளெலும்பு நிலையில் இது அமைந்துள்ளது, இதில் மூச்சுக்குழாயின் மேல் முனையைச் சுற்றிலும் தனித்தனிக் கூறுகளால் இணைக்கப்பட்ட ஏராளமான குருத்தெலும்புகள் அமைந்துள்ளன. ஏனைய முதல் நிலை உயிரினங்களோடு ஒப்பிடுகையில் இக்குரல் வளையானது மனிதர்களுக்குச் சற்றுத் தாழ்வாக உள்ளதை நாம் கவனிக்க வேண்டும்.

மொழியின் தோற்றத்தால் மனிதஇனத்தின் உருவ அமைப்பு மாறியுள்ளதை நாம் இதன் மூலம் அறியமுடியும்.

மனித மூளையின் அமைப்பை மாற்றியமைத்தது – மொழி

சென்ற நூற்றாண்டின் சிறந்த நரம்பியல் வல்லுநர்கள், மூளையின் சில குறிப்பிட்ட பகுதிகள் மட்டுமே மொழி ஆற்றலுடன் தொடர்புள்ளவை என நம்பினர்; ஆனால் அதி நவீன உளவியல் சார்ந்த உடலியங்கியல் ஆய்வுகளின் மூலம், மூளையின் பல்வேறு பகுதிகளில் மொழி சார்ந்த திறன்கள் கவனிக்கப்படுவதைக் கண்டு வியந்துள்ளனர். மனிதர்களின் பேச்சுத் திறன் அவர்களது மூளைக்கும் குரல்வளைப் பகுதிக்கும் இடையே உள்ள செயல் தொடர்புகளை ;மாற்றியமைத்துள்ளது, மற்ற முதல் நிலை உயிரினங்களை (Primates) ஒப்பிடுகையில் மனிதர்களின் பெருமூளையில் உள்ள பிரொண்டல் கார்டெக்ஸ் (Frontal Cortex) மற்றும் டெம்போரல் கார்டெக்ஸ் (Temporal Cortex) ஆகிய பகுதிகள் பெரிய அளவு கொண்டதாகவும், சிறப்பான ஒருங்கிணைந்த செயல்படும் தன்மை உடையதாகவும் உள்ளன.

மொழி சார்ந்த செயல்பாடுகளில் மூளையின் இப்பகுதி தொடர்புடையது என்பது குறிப்பிடத்தக்கது. புரோக்கா மையப்பகுதி (Brocas Area) என்பது பெருமூளையின் பிளவின் தொடக்கத்தில் அமைந்துள்ளது, வெர்நிக்கே பரப்பு (Wernickes Area) என்பது பெருமூளையின் இடது அரைக்கோள மேல்போட்டு மடல் மற்றும் அதற்கு அடுத்துள்ள பக்கமடல் பகுதிகளில் அமைந்துள்ளது.

மூளையில், பார்வை சார்ந்த செயல்பாடுகளோடு தொடர்புடைய பகுதியின் பரப்பளவு பார்வையிழந்த ஆனால் கேட்கும் திறன் உடையவர்களுக்குச் சிறியதாகவும், அவர்களின் செவித்திறன் அதிகமாகவும் இருப்பதை அதிநவீன நரம்பியல் ஆய்வுகள் கண்டுபிடித்துள்ளன; மூளையின் பகுதிகளின் பரப்பளவு நிலையானது என்னும் வாதம் இன்று ஆதாரங்களுடன் மறுக்கப்பட்டு விட்டது.

 மூளையின் மேலுள்ள சாம்பல் நிறப் பகுதியினை, மூளை மேலுறை (Cerebral Cortex) என்று அழைப்பர். இப்பகுதியானது மற்ற முதல் நிலை உயிரினங்களை (primates) ஒப்பிடுகையில் மனிதர்களுக்கு மிகப் பெரிய அளவுடையதாக உள்ளது, மொழி சார்ந்த செயல்பாடுகள் இந்த மேலுறையின் சில குறிப்பிட்ட பகுதிகளில் நடைபெறுவதை நரம்பியல் வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர். மற்ற முதல் நிலை உயிரினங்களை ஒப்பிடுகையில் மொழியை ஊடகமாகக்கொண்ட தகவல் பரிமாற்றம் மட்டுமில்லாமல், கை – கால்களைப் பயன்படுத்தும் திறனிலும் மனிதர்கள் சிறந்து விளங்குகின்றனர்.

 நரம்பியல் ஆய்வுகள், மூளையின் சில குறிப்பிட்ட பகுதிகள் இச்செயல் திறன்களுடன் தொடர்புடையவை எனத் தெளிவாக உணர்த்துகின்றன; அப்பகுதிகள்கூட மொழித் திறனுடன் தொடர்புடையவையே என அதிநவீன அறிவியல் கண்டறிந்துள்ளது. மொழியை வெளிப்படுத்தும்பொழுது கைகளை அசைத்து உணர்வினை இன்னும் தெளிவாக மனிதர்களால் வெளிப்படுத்த முடிவதை நாம் நன்கு அறிவோம்.

 கைகளை அசைத்துப் பேசும் மனிதர்கள் சொல்ல முற்படும் கருத்துக்களை நம்மால் நன்றாக உணர முடியும், முதல் முறையாக மொழி தெரியாத ஒரு பிராந்தியத்திற்குச் சென்றபொழுது எப்படி உங்களுக்கு வேண்டிய முகவரியை அறிந்துகொண்டீர்கள் என ஒரு முறை நினைத்துப்பாருங்கள்.

மனித மொழியின் அமைப்பை வடிவமைத்து – மூளை

மூளையின் திறன் அதிகரித்ததால் மொழியை மூளை பெற்றது என்பதைவிட, மொழியைப் பெற்றதால் மூளையின் திறன் அதிகரித்தது என்பது சரியான வாதமாகும். மொழித்திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் எனும் அவசியத்தால் மனிதர்களின் மூளையானது மொழி சார்ந்த செயல்பாடுகளிலும், மொழி சார்ந்த பகுதிகளிலும் அதிக வளர்ச்சியை அடைந்துள்ளது.

ஒரு மொழியில் இருந்துதான் எல்லா மொழிகளும் பரிணமித்து இருக்கவேண்டும், ஒரே ஓர் உயிரினத்தில் இருந்து மற்ற எல்லா உயிரினங்களும் பரிணமித்தது போன்று. வள்ளுவரின் முதல் குறளை இங்கு நினைவில் கொள்க.

மொழியின் அடிப்படைக் கூறுகளில் ஒரு தொடர்பு உள்ளது. மரபணு மூலம் உயிரினங்களுக்கு மொழித்திறன் வாழையடி வாழையாக கிடைத்தவண்ணம் உள்ளது. மூளையானது அதீத சக்திகளைக் கொண்ட உறுப்பாகும், சுலபமாக தாய் மொழியில் புலமை பெறவும் மனித மூளையால் முடியும், தேவை ஏற்படின் புதிய மொழியைக் கற்று அதில் புலமை பெறவும் மனித மூளையால் முடியும்.

மற்ற முதல் நிலை உயிரினங்களை (primates) ஒப்பிடுகையில் மனிதர்களின் மூளை அதிகத் திறனுள்ளதாக இருப்பினும் மனிதர்கள் பயன்படுத்தும் சுமார் நூற்றைம்பது சொற்கள் வரையில் புரிந்துகொள்ளச் சில குறிப்பிட்ட முதல் நிலை உயிரினங்களால் முடியும்.

மொழி தோன்றிய ஆரம்ப காலங்களில், புரிந்துகொள்ளும் திறனில் நிறையக் குழப்பங்கள் இருந்திருக்க வேண்டும், அவற்றை எதிர்கொள்ள மேலும் அதிக எழுத்துக்களை உருவாக்குவதை விட எழுத்துக்களை இணைத்துச் சொற்களாக அமைத்து மனித மூளை திறம்பட மொழியைக் கையாண்டுள்ளது அதன் சிறப்பான செயல்திறன்.

மிகுதியான பயன்பாட்டில் இருக்கும் எழுத்துக்களும் சொற்களும், மற்ற எழுத்துக்களையும் சொற்களையும் காலப்போக்கில் ஒதுக்கின; மொழியானது குழுக்களை உறுதியாக்க உதவியதால், குழுக்கள் வளர வளர மொழியைக் கையாளும் திறனையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயச் சூழலை மூளை எதிர்கொண்டது; தனக்குக் கொடுக்கப்பட்ட பணியினை மூளை வெற்றிகரமாக செய்தும் உள்ளது, இயற்கைத் தேர்வின் சக்திகளையே முறியடிக்கும் சக்தியை மனித மூளை மொழியிடம் இருந்து பெற்றுள்ளது என்பது வியத்தகு உண்மை.

முடிவாக….

இது வரை நாம் பார்த்த செய்திகள் ஒன்றை நமக்குத் தெளிவாக உணர்த்துகின்றன; மொழி ஒரு கருவி, கருவியைச் சிறந்ததாக உருவாக்க வேண்டியது இன்று வாழும் தமிழர்களின் கடமை.

வெறுமனே அரைத்த மாவையே அரைத்துக்கொண்டிருந்தால் முடிவில் கிடைக்கும் மாவை உண்பதற்கு இனிவரும் காலங்களில் யாரும் இருக்க மாட்டார்கள். அரைக்க அரைக்க மாவு பக்குவப்படும்; இருப்பினும் சற்று புளித்தும் போகும்.

அறிவியல் அறிஞர் என்பது வேறு, தமிழ் அறிஞர் என்பது வேறு, அறிவியலைத் தமிழில் சிந்திக்கும் தமிழ் அறிஞர் என்பது வேறு – இவ்வேறுபாடுகளைப் புரிந்துகொள்ள வேண்டும்; ** கருத்தின் வேறு பகுதிவரை சென்று மாற்றப்படவேண்டிய கூறுகள் இவை.** இவர்கள் அனைவருக்கும் தமிழின் வளர்ச்சியில் பொறுப்பு உண்டு; கடமை உண்டு.

தமிழைக் காலத்தின் முன்னே தாழ்த்திக்காட்ட யாருக்கும் உரிமை இல்லை அவர்கள் தமிழர்களாகவே இருப்பினும், அறிவியல் தமிழ் வளர வேண்டியது காலத்தின் தேவை. காலத்திற்கு வேண்டியதை செய்து, காலத்தை வென்று வாழ அறிவியலுக்கு நன்கு தெரியும், உலகின் முதல் மொழியாம் தமிழுக்கும் அது புரியும்.
_________________________XXXXXXX _________________

குறிப்பு: அறிவியல் தமிழ் சார்ந்த சிந்தனைகளை மாணவரிடையே விரிவுபடுத்த வேண்டும், தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட எல்லா மாணவர்களுக்கும் அறிவியல் செய்திகளை உருவாக்கத் துணைபுரிய வேண்டும் எனும் நோக்கத்தின் அடிப்படையில் அறிவியல் தமிழ் மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. அறிவியல் தமிழ் சார்ந்த சிந்தனையில் ஆர்வமுடையவர்கள் , பத்தாம் வகுப்பு மாணவர்கள் முதல் , பொறியியல் / மருத்துவம் பயிலும் மாணவர்கள் வரை அனைவரும் பயன்பெறவேண்டும் என்பதே இந்த இயக்கத்தின் குறிக்கோள். மாணவர்கள் அறிவியல் மாநாடுகளில் பங்கேற்குமளவு மேடைப்பேச்சுத் திறனையும், அறிவியலை விளக்கும் திறனையும், அறிவியல் நூல்கள் எழுதும் திறனையும் பெற அறிவியல் தமிழில் பயிற்சிபெற வேண்டும். இம்முயற்சிக்கு அறிவியல் தமிழ் மன்றம் எல்லாவிதங்களிலும் உறுதுணையாக இருக்கும்.

மேலும் விபரங்களுக்கு தொடர்புகொள்ள –

scientifictamiluniversity@gmail.com – www.ariviyaltamilmandram.org

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on ““மொழியும் மனித மூளையும்”

  1. தமிழில் அறிவியலை பரப்ப விரும்புவதாக கூறும் இந்த கட்டுரையின் குறிப்பை வரவேற்று, சில கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறேன்.பட்டியலிடப்பட்ட கட்டுரை ஆசிரியரின் விருதுகளை பற்றியும், அவர் தலைமை தாங்கும் 17 பிரிவுகளை பற்றியும், அவற்றின் இலக்குகளை பற்றியும், அவற்றின் பணி, சாதனைகளை பற்றியும் தெளிவான அறிமுகம் உதவும்;அறிவியல் பரப்ப சான்றுகளையும், உசாத்துணைகளையும், மேல்கல்வித்துறைகள் மேல்நாடுகளில், தயங்காமல், கூறுவது போல், பதிவு செய்வது இன்றியமையாத கடமை. அந்த வழிபாட்டை பின்பற்றுவது, நலம் பயக்கும்.கட்டுரையில் கூறப்பட்ட ‘மொழியும் மூளையும் ஒன்றாகப் பரிணமித்த அற்புதங்கள்’, ‘வேட்டையை வெற்றிகரமாக உருவாக்க, ஆயுதங்களைப் பற்றிய செய்திகளைப் பரிமாறிக்கொள்ள ஒரு முறை தேவைப்பட்டது, அங்குதான் மொழியின் தோற்றம் ஏற்பட்டது.’,’மொழியானது, சுமார் நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பேச்சு வழக்கினில் தோன்றியிருக்க வேண்டும்’, ‘மூளையின் வளர்ச்சியும், மூளையின் செழுமையும் கைகோர்த்து நகர்ந்தன’, ‘மொழியின் பரிணாம வளர்ச்சியின் மாற்றங்கள் மூளையின் அமைப்பினில் பதிந்துள்ளன.’, ‘மனித மூளையின் வெவ்வேறு பகுதிகள் பல்வேறு வகையான செயல்பாடுகளை செய்யவல்லதாக அமைந்துள்ளன.’ போன்ற பொதுப்படையான அபிப்ராயங்களுக்கு துணை போகும், அறிவியல் சார்ந்த சான்றுகளும், ஆதாரங்களும் எமக்கு கிடைக்கவில்லை. அவற்றை ஒருமித்து வழங்கினால் தான், தமிழில் அறிவியலை பரப்ப விரும்புவதாக கூறும் இந்த கட்டுரை தன் இலக்கை அடைய இயலும் என்பது என் தாழ்மையான கருத்து.நன்றி ,வணக்கம்,இன்னம்பூரான்  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *