மலர் சபாவின் ஓர் அறிமுகத்துடன் நான் அறிந்த சிலம்பு (உரை பெறும் கட்டுரை) – பகுதி 11

0

அன்பு நண்பர்களே,

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம் நம் தமிழன்னையை அலங்கரிக்கும் ஆபரணங்களில் ஒன்றாகும். சிலம்பின் காரணமாக விளைந்த கதையாதலால் சிலப்பதிகாரம் என்று பெயர்க்காரணம் கொண்டது. அக்காலத்தில் எல்லாக் காப்பியங்களும் அரசனையோ ஆண்டவனையோ பாட்டுடைத் தலைவனாகக் கொண்டிருக்க, சிலப்பதிகாரம் மட்டும் மனிதனாகிய கோவலனைத் தலைவனாக வரித்துக் கொண்டது. ஆகவே இது குடிமக்கள் காப்பியம் என்றும் வழங்கப் படுகிறது. சாதாரணப் பெண்ணொருத்தி அரசனையே கேள்வி கேட்கும் துணிவு கொண்டிருந்ததுவும், தான் தவறிழைத்ததை அறிந்ததும் மன்னன் உயிர் துறந்ததுவும் இதன் சிறப்புகள்.

இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழால் ஆன இக்காப்பியத்தை இயற்றியவர் இளங்கோவடிகளாவார். இன்பியலும் துன்பியலும் கலந்த இக்காப்பியத்தை வாசிக்குந்தோறும் நாமும் கண்ணகியாகிறோம், கோவலனாகிறோம், மாதவியுமாகிறோம். வாசிக்குந்தோறும் அது ஏற்படுத்தும் அதிர்வுகள் பலப்பல. இத்தகைய சிறப்பு பெற்ற, தான் வாசித்து இன்புற்ற சிலப்பதிகாரத்தைத் தெள்ளு தமிழில், எளிய நடையில் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் மலர் சபா.

நம் வல்லமை வாசகர்களுக்குத் தன் படைப்புகள் மூலம் ஏற்கனவே அறிமுகமான மலர் சபா மதுரையைச் சேர்ந்தவர். ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப்பட்டம், ஆய்வியல் நிறைஞர் பட்டம், கல்வியியலில் முதுகலைப்பட்டம் போன்ற பட்டங்கள் பெற்ற நிறை கல்வியாளர். மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளராக இருந்தவர் தற்போது ரியாத், சவுதி அரேபியாவில் வசிக்கிறார். பஹ்ரைன், ரியாத் மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றிய அனுபவமும் கொண்டவர்.

சிலப்பதிகாரத்தை எளிய நடையில் எழுத வேண்டுமென்ற வேட்கை எப்படித் தோன்றியது என்பதை அவர் வார்த்தைகளிலேயே காண்போம்.

சிலப்பதிகாரம் என்ற மாபெரும் படைப்பு, பெரும்பாலானோர்க்கு ஒரு தவிர்க்க முடியாத பாதிப்பை உருவாக்கி நிற்பது உண்மை. அத்தகைய பாதிப்பு என்னுள்ளும் இருக்கிறது.சிலம்பின் கதை நம் வாழ்வியல் இலக்கணத்தின் படிமங்கள் பலவற்றைத் தொகுத்துச் சொல்கிறது என்றதொரு எண்ணம் எனக்குண்டு. அங்கொன்றும் இங்கொன்றுமாய்ப் பல பாடல்கள் பள்ளிப் பருவம் தொட்டுப் படித்த போதும், முழுமையாக இதனைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு எப்போதும் இருந்து வந்தது. இப்போது படிக்கவும் தொடங்கி விட்டேன். எனக்குப் புரிந்ததை என் மனதில் பதிந்ததை வலையில் பதியும் ஆர்வம் வந்தது. இணையம் மூலம் பல செய்திகள் கிடைக்கப் பெற்றன. மேலும் மதுரையில் புத்தகக் கண்காட்சியில் எனக்குக் கிடைத்த ப. சரவணன் அவர்களின் ‘சிலப்பதிகாரம்’ என்னும் எளிய உரையும் இம்முயற்சியில் எனக்கு மிகவும் துணையாக நிற்கிறது.

இதோ தொடங்கி விட்டேன். முக்கிய செய்திகள் மட்டும் தொகுக்கும் நோக்கம் காரணமாய் வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தையான விளக்கமாய் இல்லாமல் ஒரு தொகுப்பாய் மட்டுமே இருக்குமென்று நினைக்கிறேன். என்றாலும் விடுபட்ட முக்கியக் குறிப்புகளை அவ்வப்போது விளக்கவும்முற்பட்டுள்ளேன்.

முதல் பகுதி தொடங்கி பத்தாம் பகுதி வரைக்கும் அவரது வலைத்தளத்தில் பகிர்ந்து வந்த சிலப்பதிகாரத்தின் தொடரும் பகுதிகளை வல்லமையில் மேற் கொண்டு தொடர்ந்து வழங்க இருக்கிறார். அவரது தளத்தில் பகிர்ந்தவை இதோ..

http://www.pettagam.blogspot.in/2009/07/1.html

http://www.pettagam.blogspot.in/2009/07/2.html

http://www.pettagam.blogspot.in/2009/07/3.html

http://www.pettagam.blogspot.in/2009/08/4.html

http://www.pettagam.blogspot.in/2010/03/5.html

http://www.pettagam.blogspot.in/2010/06/6.html

http://www.pettagam.blogspot.in/2010/10/7.html

http://www.pettagam.blogspot.in/2010/11/8.html

http://www.pettagam.blogspot.in/2011/04/9.html

http://www.pettagam.blogspot.in/2011/07/2.html

பதினொன்றாம் பகுதி இதோ தொடர்கிறது. மலர் கொணர்ந்திருக்கும் தமிழ்த்தேன் பருக அனைவரும் வாரீர்..

அன்புடன்,

அமைதிச்சாரல்(சாந்தி மாரியப்பன்)

துணை ஆசிரியர்

நான் அறிந்த சிலம்பு (உரை பெறும் கட்டுரை) – பகுதி 11

கருமையடர்ந்த
பெரிய தோகை வாய்த்த
நீல நிற மயிலும்
நின்
அழகிய சாயலுக்கு
அஞ்சித் தோற்றுக்
குளிர் காடு தேடித்தான்
ஓடி ஒளிந்ததுவே!

நல் நெற்றியாளே!
நன்னடை பயிலும்
அன்னப் பறவையது
நின்
மென்னடைக்கு
அஞ்சித் தோற்று
நன்னீர் சூழ்
வயற்காடு தன்னில்
அடர்ந்து செறிந்த
மலர்க்கூட்டம் நடுவே
மறைந்துதான் கொண்டதுவே!

இச்சின்னஞ்சிறு
பச்சைப்பசுங்களியோ
இரக்கத்துக்குரியது.

குழலிசை யாழிசையோடு
அமிழ்தமும் குழைந்து இழைகின்ற
நின் மழலை மொழிக்கு
வருந்திச் சோர்ந்ததுவே!

எனினும்
மடநடை மாதே,
நின்
மலர்வாய் மழலை
கற்றுத் தேர்ந்திட
நின்
மலர்க்கரம்
நீங்காது தங்கி
நினைப் பிரியாமல் பொருந்தியதுவே!

நறுமலர்கள்
நறுங்கூந்தலில் சூடிய
நறுமலர்ப் பெண்ணே!

மாசற்ற மாற்றற்ற
இயற்கை தந்த
இனிய அழகே
நினக்கு
நல்லதொரு அணியாய்
வாய்த்திருக்க..

கோவலன் தந்த
மாங்கல்ய மங்கல அணி
மேலும் அழகு சேர்த்திருக்க..

நின்னை
ஒப்பனையில் மேலும்
அழகூட்ட நினைப்பவர்
இன்னும் பல
அணிகலன்கள் அணிவித்ததால்
ஆனதொரு பயன்தான் என்ன?!

பல்வகைத் தோற்றம் கொண்டு
பொலிகின்ற நின்
கருங்கூந்தல் அதனுக்குச்
சில மலர்கள் மட்டும் சூட்டிச்
சிங்காரிப்பதை விடுத்துப்
பல மலர்கள் கூடி அணிசெய்யும்
ஒளிவீசும் மாலை
தேடிச் சூட முயன்றனரே!
அம்மாலையோடு
அவர்க்குள்ள உறவுதான் என்ன?!

அகிற்புகையின்
நறுமணமொன்றே போதும்
நின்

கூந்தலை மணமாக்க
என்றிருக்க
வாசனையூட்ட வேண்டிக்
கத்தூரிக் குழம்பு கொணர்ந்தவரின்
உள்நோக்கம்தான் என்ன?!

அழகுத்திரு மார்புகளுக்கு
அணியது சேர்த்திடச்
சந்தனக் குழம்பினால்
தீட்டிய கோலங்களே
போதுமென்றானபின்
முத்து வடம் கொணர்ந்தவர்க்கு
அதனுடனுள்ள உறவுதான் என்ன?!

மதி முகத்தில்
முத்து முத்தாய்
வியர்வையது அரும்பிடவும்,
அணிகலனின் கனம் தாங்காது
துவண்டு நலியும்
நின் சிற்றிடை வருந்திடவும்,
மென்மேலும்
மென்மைப் பெண்மீது
அணிகலன் பூட்டுகின்றனரே.
இவருக்கு என்னதான் நேர்ந்திட்டது?!

 

53 முதல் 72 வரையிலான சிலம்பின் பாடல் வரிகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. பாடல் வரிகளை இங்கே காணலாம்.

 

படத்திற்கு நன்றி:http://www.tamilvu.org/courses/degree/a041/a0411/html/a04114l1.htm

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *