சங்க கால சோழநாட்டு அரச புலவர்கள்

1

 

ப.செந்தில்குமாரி

தமிழ்மொழியின்கண் உள்ள மிகப் பழமையான நூல் தொகுதி சங்க இலக்கியம். இது சொற்செறிவும் பொருட்செறிவும் நிறைந்த கவிதைக் களஞ்சியம். பண்டைத் தமிழர் தம் காதல், வீரம், கொடை, நட்பு ஆகிய பெரும் பண்புகளை எடுத்துக்காட்டும் கருத்துக் கருவூலமாக இது திகழ்கிறது. இத்தகைய சிறப்புகளைப் பெற்ற சங்க நூல்களைப் பாடிய புலவர்கள் பற்பல காலத்தவராகவும், மரபினராகவும், தொழிலினராகவும் விளங்கியுள்ளனர். புலவர்கள் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற நோக்கிலேயே வாழ்ந்து, குறுகிய மனமின்றிப் பரந்த உள்ளத்தோடு முப்பெரும் நாடுகளுக்கும் சென்று மூவேந்தர்களையும் பாடி மகிழ்ந்துள்ளனர். இத்தகைய புலவர்களை, சங்ககால வேந்தர்களும் நன்கு மதித்து, அவர்களின் புலமைத் திறத்தினைப் பாராட்டி, பொன், பொருள், உடை, உணவு போன்றவற்றை வழங்கி, தமிழ்மொழியை வளர்த்துள்ளனர்.

இம்மன்னர்களை உயிரென மதித்து மக்கள் வாழ்ந்தமையைச் சங்க இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன. மக்களிடையே மன்னவன் ‘இறை’ என்று அழைக்கப்பட்டான். முறையான ஆட்சியைச் செய்த மன்னவர்கள், மக்களுக்கும், புலவர்களுக்கும், நல்ல பாதுகாவலராய் விளங்கியதோடு மட்டுமல்லாமல் தங்கள் புலமைத் திறத்தால் பாடும் இயல்பினராகவும் வாழ்ந்துள்ளனர். அவ்வகையில் மூன்று நாடுகளையும் சேர்ந்த சங்க அரசப் புலவர்கள் காணப்படுகின்றனர். அவர்களில் சிறப்பு மிக்க நல்லாட்சியை நடத்தி, நாட்டை வளப்படுத்திய சோழர்களில் பாவலராக விளங்கிய அரசப் புலவர்களையும், அவர்தம் பாடல்களின் வழி வெளிப்படுத்திய சிந்தனைகளையும் வெளிக் கொணர்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

சோழ நாட்டின் பெருமை சங்க காலச் சோழநாடு கிழக்குக் கடல், மேற்குக் கோட்டைக்கரை, வடக்கு ஏணாடு, தெற்கு வெள்ளாறு ஆகிய எல்லைகளைக் கொண்டு இருபத்து நான்கு காதம் விரிந்து சங்க காலத்தில் புகழ்மிக்கதாய் விளங்கியுள்ளது. சங்க இலக்கியத்துள் சோழ நாடு ‘தண்சோழநாடு’ ‘சோழநல்நாடு’ ‘நெடுஞ்சோழநாடு’ என்றெல்லாம் சிற்ப்பிக்கப் பெறுகிறது. பிற்காலத்தில் எழுந்த சோழ மண்டல சதகம் சோழநாட்டின் பெருமையினை,

“எந்த நதியைப் புகழ்ந்தாலும்
இது காவேரிக்கு இணையென்பார்
எந்த அரசைப் புகழ்ந்தாலும்
இவனே சோழற்கு இணையென்பார்
எந்த நாட்டைப் புகழ்ந்தாலும்
இதுவே சோணாடு என இயம்ப
வந்த விசிட்டம் ஓங்கியது
வளம் சேர் சோழ மண்டலமே” 1
என்று குறிப்பிடுகின்றது.

அரசப் புலவர்களின் பண்புகள்:

சங்க காலத்தில் தமிழரசர்களும் அறிவு நிறைந்த புலவர் பெருமக்களாய் உலகம் போற்ற நாட்டை ஆண்டனர். கல்வியின் பெருமை உணர்ந்த அவர்கள் அதனைப் போற்றி வளர்த்தனர். பொருளின் சிறப்புணர்ந்து அதை நல்வழியில் ஈட்டி அறவழியில் செலவழிக்க வேண்டும் என்பதை உணர்ந்திருந்தனர். மானம் அழிந்த பின் வாழ்வதை இழிவாகக் கருதி அரசாட்சி நடத்தினர். சுருங்கக் கூறின் எல்லாப் பண்புகளிலும் தலைசிறந்தவராய் விளங்கியுள்ளமையை அறிய முடிகிறது. இத்தகைய பண்புகளைப் பெற்ற அரசர்கள் பாடல் புனைந்து பாவலராயும் விளங்கினார்கள்.

சோழ அரசப் புலவர்கள் ‘சோழ வளநாடு சோறுடைத்து’ என்ற பெருமைக்குரிய சோழநாட்டை ஆட்சி செய்த சங்க காலச் சோழ மன்னர்களில் கோப்பெருஞ்சோழன், சோழன் குளமுற்றத்து துஞ்சிய கிள்ளிவளவன், சோழன் நலங்கிள்ளி, சோழன் நல்லுருத்திரன், மாவளத்தான், வீரைவெளியன் தித்தன் ஆகிய அறுவரும் அரசப் புலவர்களாக காணப்படுகின்றனர்.

கோப்பெருஞ்சோழன்:

உறையூரைத் தலைநகராகக் கொண்டு உலகோர் போற்ற நாடாண்ட சோழ அரசர்களுள் கோப்பெருஞ்சோழனும் ஒருவன். நட்பின் இலக்கணத்திற்குச் சிகரமாக விளங்கிய இவன் பிசிராந்தையார், பொத்தியார் ஆகிய இருவருக்கும் உயிர் நண்பன். இவன் தன்பிள்ளைகள் இருவரோடு கருத்து வேறுபாடு தோன்ற பகைமை ஏற்பட்டுப் போர்செய்ய முற்படும்பொழுது புல்லாற்றூர் எயிற்றியனாரால் சமாதானம் செய்யப்பட்டான். இவ்வரசன் செய்யுள் இயற்றுவதில் வல்லவன். இவன் பாடியதாக ஏழு பாடல்கள் கிடைக்கின்றன. (குறுந்.20,53,129,147,
புறம். 214,215,216)

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சி தான்
நட்பாம் கிழமை தரும்.”

என்னும் குறளுக்கு இலக்கணமாய் விளங்கிய கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்த பொழுது பிசிராந்தையாருக்கு இடம் ஒதுக்கி வைக்கக் கூறினான். அப்பொழுது பிசிராந்தையார் வாரார் என்று கூறிய சான்றோரிடம் பிசிர் என்ற ஊரில் வாழும் என் நண்பன் என் உயிரைப் பாதுகாப்பவன் அவன் என்னிடத்து செல்வம் உள்ள காலத்து வராமல் இருப்பினும், எனக்குத் துன்பம் வந்த காலத்து வராமல் இருக்கமாட்டான் என்று நட்பின் ஆழத்தை

“செல்வக் காலை நிற்பஅல்லற் காலை நில்லலன் மன்னே”

என்ற புறப்பாடல் விளக்குகின்றது. மேலும் அவன் தன் பெயரைக் கூறும் பொழுது என் பெயர் பேதைமை கொண்ட சோழன் என்று என் பெயரையே தன் பெயராகக் கூறும் நெருங்கிய அன்புரிமை கொண்டவன் என்பதை,

“தன்பெயர் கிளக்கும் காலை, ‘என் பெயர்பேதைச் சோழன்’ என்றும்,
சிறந்த காதற்கிழமையும் உடையன”

என்று பிசிராந்தையாரைப் பாராட்டுகிறான். இத்துடன் இவன் தம் பாடல்வழி, நல்வினை செய்வதற்கு நெஞ்சத் துணிவு வேண்டும். உயர்ந்த குறிக்கோளில் மனதைச் செலுத்துவது நல்லது. நல்வினை செய்தால் வானுலக வாழ்க்கைக் கிட்டும் என்று மனித வாழ்க்கைக்குத் தேவையான அறச்சிந்தனைகளையும் எடுத்துரைத்துள்ளான்.

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்

கிள்ளி வளவன் புலவர் போற்றும் புகழ்மிக்கோனாவான். ஆலத்தூர் கிழார், ஆடுதுறை மாசாத்தனார், ஆவூர் மூலங்கிழார் முதலிய பத்துப் புலவர்கள் இவனின் பண்பு நலன்கள் குறித்துப் பாடியுள்ளனர். ‘பொன்மலை சார்ந்த காகமும் பொன்னிறம் பெறும்’ என்னும் தொடருக்கேற்ப பதின்மர் போற்ற அவரிடையே வாழ்ந்த கிள்ளி வளவனும் ஒரு புலவராய் விளங்கியுள்ளான். அவன் பாடியது புறம் 173 மட்டுமேயாகும். வள்ளல் ஒருவனை அவனைப் போன்ற பிறிதோர் பெருவள்ளல் பாராட்டுவதே உண்மைச் சிறப்பாம். அத்தகைய பெருஞ்சிறப்புடைய சிறுகிழான் பண்ணனின் கொடைத்திறனைப் பெருங்கொடை வள்ளலாகிய கிள்ளிவளவன் பாராட்டுவதனை

“பசிப்பிணி மருத்துவன் இல்லம்
அணித்தோ? சேய்த்தோ? கூறுமின் எமக்கே”

என்று பாடியுள்ளதை நோக்கும் பொழுது தன்னை ஒத்தவனை தன்னினும் மிக்கோனைப் பாராட்ட வேண்டும் என்னும் சிந்தனையைத் தூண்டுகிறது.

சோழன் நலங்கிள்ளி புகாரைத் தலைநகராகக் கொண்டு சோணாடு ஆண்ட அரசர்களுள் சிறந்தோன் நலங்கிள்ளி எனும் நல்லோன் ஆவான். இவனை ஆலத்தூர்கிழார் உறையூர் முதுகண்ணன் சாத்தனார், கோவூர் கிழார் ஆகிய மூவரும் பாராட்டியுள்ளனர். இவன் பகைவரை அஞ்சாது வெல்லும் ஆற்றல் உடையவன். இரப்போர்க்கு எவற்றையும் வரையாது கொடுக்கும் வள்ளல் என்று அவனுடைய குணநலன்களைப் புலவர்கள் பாடிய பாடல்கள் தெரிவிக்கின்றன. இம்மன்னன் பாடியது இரண்டு பாடல்கள் (புறம்73, 75) மட்டுமேயாகும். இவன் தம்பாடலில் அரசுரிமையைப் பெரும் போர்க்கண்டு கலங்காத பேருள்ளம் உடையவனே பெறவேண்டும். அரச குடியின்கண் பிறந்த முன்னோர் பெறக்கூடாது என்பதனை,

“மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப்
பால்தர வந்த பழ விறல் தாயம்
எய்தினமாயின் எய்தினம் சிறப்பு எனக்
குடிபுரவு இரக்கும் கூரில் ஆண்மைச்
சிறியோன் பெறின், அது சிறந்தன்று மன்னே
மண்டமர்ப் பரிக்கும் மதனுடை நோன்தாள்
விழுமியோன் பெறுகுவாயின்”

என்ற பாடல் வரிகள் விளக்கும்.

சோழன் நல்லுருத்திரன்:

இச்சோழனின் பெயர் ‘நல்லுத்தரன்’, ‘நல்லுருத்திரன்’, ‘உருத்திரன்’ என பிரதிகளில் வேறுபட்டுள்ளதை அறியமுடிகிறது. இவன் கலித்தொகையில் முல்லைக் கலியையும், புறத்தில் 190-வது பாடலையும் பாடியுள்ளான். ‘முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்’ என்னும் தொடருக்கேற்ப முயற்சிடையவனே வாழ்வில் வெற்றி பெறுவான் என்பதைத் தம் பாடலில் வலியுறுத்தியுள்ளான். எலி போன்று முயற்சி இல்லாதவரிடம் நட்புக் கூடாது, புலிபோன்று முயற்சி கொண்டவரிடம் நட்புக் கொள்ள வேண்டும் என்று கூறுவதனை,

புலி பசித்தன்ன மெலிவில் உள்ளத்து
உரனுடையாளர் கேண்மையொடு
இயைந்த வைகல் உளவாகியரோ”7
என்னும் புறப்பாடல் விளக்கும்.

மாவளத்தான்

புலவர் போற்றும் பெருமகனாய் விளங்கிய நலங்கிள்ளியின் தம்பி மாவளத்தானும் ஒரு புலவன். புலவர்களோடு கலந்து பழகும் பண்பு உடையவன். இவன் குறுந்தொகையில் 348-வது பாடலைப் பாடியுள்ளான்.

வீரை வெளியன் தித்தன்:

சங்க காலத்தில் உறையூரிலிருந்து ஆட்சி புரிந்த சோழவேந்தருள் முதல்வனாகக் கருதத்தக்கவன் தித்தன் ஆவான். இவன் அகப்பாடல் மற்றும் புறப்பாடல்களில் பேசப்படுகிறான். போர்வன்மை, கைவண்மைகளோடு சிறப்பு வாய்ந்தவனாகக் காணப்படுகிறான். இம்மன்னன் ஆட்சி புரிந்த உறந்தை நகரத்தின் சிறப்பை,

“மாவண் தித்தன் வெண்ணெல் வேலி
உறந்தையன்ன வுரை சால்”

என்று புறப்பாடல் விளக்குகின்றது. இவன் பாடியது அகம்–188வது பாடலாகும். இவன் மழையைப் போன்ற கொடை நலம் உடையவன் என்பதை,
“மழைவளம் தரூஉம் மாவண்தித்தன்” என்று அகநானூற்றுத் தொடர் விளக்கும்.

சங்ககால சோழஅரசர்கள், நல்லாட்சி செய்ததோடு நல்ல புலமை வாய்ந்தவராகவும் காணப்பட்டுள்ளனர். அவர்தம் பாடல்கள் வழி சமுதாயத்திற்குத் தேவையான உயரிய அறக்கருத்துக்களை எடுத்துக் கூறியுள்ளதை நோக்கும் பொழுது அத்தகு கருத்துக்கள் இக்கால மனித வாழ்வியலுக்கு நல்ல அடிப்படை ஆதாரமாக விளங்குவதை உய்த்துணர முடிகிறது.

பயன்பட்ட ஆதாரங்கள்;
1. சோழ மண்டல சதகம், ப.8
2. திருக்குறள், 782
3. புறம், 215 : 8-9
4. மேலது. 216 : 8-10
5. மேலது. 173 : 11-12
6. மேலது. 75 : 1 – 7
7. மேலது. 190 : 10- 12
8. மேலது. 352 : 9 -10
9. அகம். 6 : 4.

ப.செந்தில்குமாரி
முனைவர் பட்ட ஆய்வாளர்,
அரசினர் கலைக் கல்லூரி (தன்னாட்சி)
கும்பகோணம்

 படத்திற்கு நன்றி :

http://www.thinakaran.lk/vaaramanjari/2009/08/02/?fn=k0908021

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “சங்க கால சோழநாட்டு அரச புலவர்கள்

  1. அரச புலவர்கள் பற்றிய புத்தகங்கள் சார்ந்த தகவல் தரவும் plzz

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *