அவ்வை மகள்

செரியாத கல்வியின் சுமைகள்

கற்பவரின் “அறிவு” என்கிற ஒன்றை நமக்கு வசதியான வகையில் பார்த்தபடி அதனின் நமக்கு வசதியான ஒரு சில பரிமாணங்களை மட்டுமே கவனித்து அப்பரிமாணங்களை, நமக்கு வசதியான வகையில் அளவீடு செய்து அந்த அளவீட்டின் அடிப்படையில் கற்பவர்களை மதிப்பீடு செய்கிறோம்.

எண்களுக்கு ஏற்ற மதிப்பீடு என்பதுதான் மதிப்பெண்களின் வேலை மதிப்பெண்கள் தருவதன் வேலை. ஆனால் நடைமுறையிலோ மதிப்பீடு என்கிறது மதிப்பு என்பதாக மாறிப் போய் விட்டது. பெற்றிருக்கிற மார்க்குகளை வைத்து மட்டுமே மாணாக்கர்கள் மவுசு பெறுகிறார்கள்.

ஒரு மாணவர்/மாணவி நூற்றுக்கு நூறு வாங்கி விட்டால் அவரைத் தலைக்கு மேல் வைத்துக் கூத்தாடுவதும் நூறிலிருந்து குறைகின்ற பட்சத்தில், அம்மாணவருக்குக் காட்டும் முக்கியத்துவத்தை மதிப்பைப் படிப்படியாகக் குறைத்துக் கொள்ளுவதுமாக நம் கல்வி வழக்கு நிலவி வருகிறது.

நூறுக்கு நூறு என்பதை இங்கு என்னவாகக் கொள்ளுகிறார்கள் என்றால் நூறுக்கு நூறு வாங்கும் மாணவர்கள் அறிவுத் தெளிவு உடையவர்கள்! என்பதே!

நூற்றுக்கு நூறு என்பது ஒரு மாணவரின் அறிவை,அறிவுத்தெளிவை அளவீடு செய்வதாகக் கொண்டால், நூற்றுக்கு நூறு வாங்குபவர் உண்மையிலேயே அறிவாளியா? நூற்றுக்கு நூறு வாங்காத மாணவர் அறிவிலியா? என்கிற இரு வினாக்கள் எழுகின்றன. சரி, முதல் வினாவை எடுத்துக் கொள்வோம்!

உண்மையிலேயே நம் மதிப்பீட்டின்படி நூற்றுக்கு நூறு வாங்குபவர்கள் அறிவாளிகள், அறிவு நிரம்பப் பெற்றவர்கள் என்று நாம் வைத்துக் கொள்வோம். இவ்வாறு வைத்துக் கொண்டால், அவர்கள் தமது அறிவுத்திறனை வெளிப்படுத்துபவர்களாக, குறைந்த பட்சம் தாம் பெற்றுள்ள “தமது அறிவை”ப் பயன்படுத்துபவர்களாக அவர்கள் இருக்க வேண்டும் சரிதானே?

தமது அறிவுத் திறத்தால், நூற்றுக்கு நூறு வாங்கி கல்வி நிறுவனங்களை விட்டு வெளியேறுபவர்கள், தமது அறிவுத் திறத்தால் இவ்வ்வையத்தை பாலித்திடும் நபர்களாக விளங்க வேண்டும்,இது ஒரு சரியான எதிர்ப்பார்ப்புதானே?

பொன் முடிப்புக்களும், தங்க மெடலும், ரொக்கப் பரிசுகளுமாக நாம் அள்ளி அள்ளி வழங்கிக் கூத்தாடிக் கவுரவித்து வழியனுப்பி வைத்த நூறுக்கு நூறுகள் இந்த உலகத்தின் இயங்கு சக்தியாகப் பரிமளிக்க வேண்டும் உண்மைதானே?

அறிவுத்தெளிவுடன் இவர்கள் கல்விக்கூடங்களை விட்டு வெளியேறியது உண்மையென்றால், இவர்கள் யாவரும் தொழில் முனைவர்களாக, பொறியியல் வல்லுனர்களாக, விஞ்ஞானிகளாக, சட்ட வல்லுனர்களாக, தன வணிகர்களாக, கவிஞர்களாக, எழுத்தாளர்களாக, மருத்துவ வல்லுனர்களாக, வித்வான்களாக, கலைஞர்களாக, அரசியல் தலைவர்களாக, கணித மேதைகளாக, மாலுமிகளாக, காவலர்களாக, இராணுவத்தளபதிகளாக, அரசு ஆலோசகர்களாக, இச்சமுதாயத்தில் பவனி வர வேண்டும். முன்னேர்களாகப் பிறர் யாவரையும் இவர்கள் வழி நடாத்திச் செல்ல வேண்டுமல்லவா? பாதுகாப்பு அரண் போல் அமைந்து அறிவுத்திறன் குறைந்த அனைத்துப் பேரையும் இவர்கள் அரவணைத்தும், பராமரித்தும், தட்டிக் கொடுத்து வளர்த்து ஆதரிக்க வேண்டுமல்லவா?

ஆனால், விஞ்ஞானிகள், சட்டவல்லுனர்கள், தன வணிகர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், மருத்துவர்கள், வித்வான்கள், கலைஞர்கள், என நாம் மேலே பட்டியலிட்டிருக்கிற “திறமிகுச் சான்றோர்கள்” இருக்கிறார்களே அவர்களுக்குள் தேடிப் பார்த்தால் நூற்றுக்கு நூறு எடுத்தவர்கள் இல்லையே. ஐயகோ! தெய்வாதீனமாக எவரோ ஒரு நூற்றுக்கு நூறு இவர்களுக்குள்ளே லட்சத்தில் ஒருவராக மட்டுமே இருக்கிறாரே! அவ்வளவு தானே! மற்ற நூற்றுக்கு நூறுகளெல்லாம் எங்கே?

நூற்றுக்கு நூறுகள் எங்கே என நாம் தேடிப்போனால், ஐயகோ! ஐயகோ! உண்மை வலிக்கிறதே!!

கல்விக் கூட நூற்றுக்கு நூறுகள் மிகப்பெரும்பாலும் அரசுத்துறை குமாஸ்தாக்கள்! அரசு சார்துறைப் பணியாளர்கள்!! அறிவியல், பொறியியல் படித்து விட்டும் கூட, இவர்கள் வங்கியா, தபால் ஆபீசா,ரெயில்வேயா எனப் பார்த்து ஜாக்கிரதையாக, பாதுகாப்பான நிரந்தரப் பணி தேடி, “செட்டில்” ஆக மட்டுமே அதிக நாட்டம் காட்டுகிறார்கள்!!

இது ஏன் என நீங்கள் பதைப்புடன் கேட்கிறீர்கள். இவ்வாறான நிலை ஏன் எனக் கேட்டால், நூற்றுக்கு நூறுகளில் மிகப் பெரும்பாலோர் எச்சரிக்கைப் பேர்வழிகள், ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள், சவால்களைக் கண்டு ஒதுங்குபவர்கள்! எதனிலும் சுயமாய் மூளையையும் பொருளையும், முதலீடு செய்ய விழையாதவர்கள், ஒரு அமைப்பின் சாதகமானக் கூறுகளை எவ்வாறு பயன் படுத்திக் கொள்ளுவது என்பது மட்டுமே இவர்களது மனோபாவமாக இருக்கும்!என்பதே!

இந்த மனோபாவத்தினால் தாம் படிக்கும் போது,அங்குள்ள நூற்றுக்கு நூறு என்கிற ஒரே ஒரு “ஒற்றை” சாதகத்தை அப்படியே கபக்கெனப் பிடித்துக் கொள்ளுகிறார்கள். அதுவும் இந்த சாதகம் அத்தனை சுலபமானது! நூற்றுக்கு நூறு வாங்க பிரத்யேகமான தயாரிப்புக்கள் தேவையில்லை,மூளையைக் கசக்கிப் பிழியத் தேவை இல்லை. நோட்டுப் புத்தகத்தில் இருப்பதை நெட்டுரு செய்து, அச்சசல் அப்படியே விழுங்கி எடுத்துக் கொண்டு போய் விடைத் தாளில் கக்கி விட்டால் போதும்!!

மாற்றி யோசிக்கும் தேவையும், புதிய சிந்தனைகளும், கல்விக்கூடங்களிலே நூற்றுக்கு நூறு பெறத் தேவை இல்லை என்றாகிப் போனதால், உருவேற்றி உமிழ்வதை ஒரே ஒரு ஆயுதமாக, பலமாக இவர்கள் கொள்ளுவது கண்கூடு!

போதாக்குறைக்குக் கூடுதலாகச் சிறுவயதில் அவர்கள் பெற்றோர் எடுத்த பிரயத்தினத்தின் விளைவாக வந்த கையெழுத்தும் நன்கு ஒத்தாசை செய்கிறது. சுளைச் சுளையாய் வந்து விடுகிறது மதிப்பெண்!

இதைவிட வேறென்ன வேண்டும் சுய வாழ்வை செம்மைப் படுத்திக்கொள்ள?. ரிஸ்க் எடுக்காத பாதுகாப்பான பாட்டை! இவர்கள் முன்னேறுவதில் ஏது தடை? படிக்கும் போது இருந்த அதே மனப்போக்கு அவர்கள் பணிதேடும் பாங்கினிலே!

‘ராமன் ஆண்டால் நமக்கென்ன, இராவணன் ஆண்டால் நமக்கென்ன?. மாதம் பிறந்தால் சுளையாய்ச் சம்பளம் வந்து விட வேண்டும்’ என்று அன்று படிக்கும் போது, சுளையான மதிப்பெண்ணுக்குக் குறி வைத்தவர்கள் இன்று சுளையான சம்பளத்திற்குக் குறி வைக்கிறார்கள். இக்காரணத்தால், அரசுப் பணிகள் மட்டுமே இவர்கள் கண் முன் அணி வகுத்து நிற்கின்றன! அவற்றில் எப்படியோ சர்வ ஜாக்கிரதையாக நுழைந்து விடுகிறார்கள்! இப்பணிகளுக்காக நடத்தப்படும் தேர்வுகளும் கூட, உருப்போடும் மனப்பாடத்திறனை மட்டுமே கோருகின்றன என்பதால் இவர்களுக்கு இங்கு நுழைவதிலும் பிரச்சினைகள் இல்லை!

சித்தாந்தங்களைப் புரிந்து கொள்ளும் திறனும், மாற்றி யோசிக்கும் திறனும் அரசு சார் வேலைகளுக்குத் தேவையில்லை என்பதால், காலம் காலமாக மாறப் போவதில்லை என்பதானதான அரசு விதிகளை, ஆணைகளை, உருவேற்றி உமிழ்வது சுலபமென்பதாலும், அந்தக் கலையைக் கல்விக்கூடங்களிலே ஏற்கனவே இவர்கள் கற்றுத் தேர்ந்து வந்திருக்கின்றனர் என்பதாலும், அரசு சார், அமைச்சு சார்ப் பணிகள் இவர்களுக்கு ஒரே இலக்காகின்றன. இலாக்கா விட்டு இலாக்கா எங்கு நீங்கள் சென்றாலும் நூற்றுக்கு நூறுகள் அங்கு புகலிடமாகப் புகுந்து கொண்டிருப்பதைப் பார்க்க முடியும்.

அமைச்சுப் பணிகளைத் தவிர மற்ற பணிகளில், மனப்பாடம் செய்து, உருவேற்றி உருவேற்றி நூற்றுக்கு நூறு அடைவது எடுபடாதென்பதும், பிற பொறுப்புசார் பணிகளின் நடைமுறை இயக்கங்களுக்கு இவர்களது புத்தி சாதுர்யமற்ற போக்கு ஒத்துப் போகாதென்பதும் இவர்களுக்குச் சத்தியமாய்த் தெரியும்!

தமது அணுகுமுறை, அரசுத் துறையற்ற பிற பயன்பாட்டுத் துறை எதற்கும் உதவாதென்பதும் அறிந்தவர்கள் அவர்கள்.அதனால் மட்டுமே அவர்கள் அரசுக் கோப்புகளுக்குள்ளே பவ்யமாய்ப் புதைந்து கொள்ளுகிறார்கள்!

அதுமட்டுமல்ல தான் உட்கார்ந்துள்ள பதவியில் இருக்கை நிரந்தரமானதாக வேண்டும் அதற்கு எந்தவிதமான குந்தகமும் வந்து விடக் கூடாது எனப் பதவி, பதவி உயர்வு, அதிகார வசதி, பாதுகாப்பு உணர்வு, இவற்றைத் தக்க வைத்துக் கொள்ள ஆவன அனைத்தையும் அவர்கள் செய்து கொண்டிருப்பார்கள்.

பார்க்கப் போனால், அரசு விதிகளில் மக்களுக்கும் மக்களது வாழ்க்கைப் பயன்பாட்டுக்குமான சகாயமான பலப்பல சாத்தியக் கூறுகள் உள்ளன எனினும் அந்த சசகாயங்கள் யாவும் வெளிப்படாமலும், வெளிப்படுத்தப் படாமலும் போகின்றன. இதன் காரணம் இங்கு, விதிகளில், ஆணைகளில் உள்ள, சிறப்புப் பரிணாமங்களை, சிறப்புப் பரிமாணங்களைக் காணவும், கண்டுபிடிக்கவும் ஆளில்லை. அரசு ஆணைகளில் பொதிந்து கிடக்கின்ற மனித சகாய அமைப்புக்களைக் கொஞ்சம் வித்தியாசமாக நின்று பார்த்தால் மட்டுமே தெரியும் என்பதான அரசு விதிகளின், ஷரத்துக்களின் சூட்சுமங்களை உணர்ந்து கொள்ளும் சிறப்பு மனிதர்கள் இங்கே இருப்பதில்லை, அப்படியே அவற்றைக் கண்டு கொண்டாலும் கூட, அவ்விதமான அற்புத வசதி வாய்ப்புக்களை, வெளிப்படையாகக் காட்டி, அவற்றால், மக்கள் பயன்படுமாறு பரவலாக்கம் செய்யும் முந்துணர்வும், கடப்பாட்டு நேயமும் இங்குள்ளவர்களிடம் இருப்பதில்லை.

கூடுதலாக ஒரு வேலை கூடச் செய்து விடக் கூடாது, மாலையில் டயத்திற்கு வீட்டில் இருக்க வேண்டும்,காலையில் கால தாமதமாக மட்டுமே வீட்டிலிருந்து கிளம்புதல் வேண்டும், சொந்த வேலைகள் யாவற்றையும் அலுவலக நேரத்திலேயே முடித்துக் கொள்ள வேண்டும், அலுவலகத்தில், ஓடி வேலை செய்யாமல் ஓ.டி.போட்டு மட்டுமே வேலை செய்ய வேண்டும் என நூறுக்கு நூறு கணக்கு போட்டு வாழும் அரசுப் பணியாளர்கள், மக்கள் சகாய சாதனங்களான,விதிகளை, ஆணைகளை, மக்களுக்கு எதிரான முட்டுக் கட்டைகளாக உருமாற்றம் செய்து விடுகிறார்கள். இவர்களால் இந்தச் சமுதாயம் பெறும் இலாபம் என்ன?

மேலும் பேசுவோம்..

 

படத்திற்கு நன்றி:http://imgal.ru/132

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “செரியாத கல்வியின் சுமை..! (8)

  1. மேலும் பேசவேண்டிய சமாச்சாரம் தான். சிந்தனையை கிளரும் இந்த கட்டுரையின் சில கருத்துக்களுடன் ‘நூற்றுக்கு நூறு’  & ;நூற்றுக்கு மூன்று’ வாங்கியவன் என்ற வகையில் எனக்கு உடன்பாடு இல்லை. என்னுடைய முதல் பரிமாணம்: விடைத்தாளை குறிப்புகளுடன் மாணவரிடம் திருப்பிக்கொடுக்கவேண்டும். மேல் நாடுகளில், இது அமலில் இருக்கிறது. சென்னை பல்கலைக்கழகம் ஒன்றில் இதை சொன்னேன். மூக்கில் விரல் வைத்தார்கள். ஆனால், செய்ய தயாரில்லை.அடுத்து: ஒரு யதார்த்த உண்மை: பொன் முடிப்புக்களும், தங்க மெடலும், ரொக்கப் பரிசுகளுமாக நாம் அள்ளி அள்ளி வழங்கிக் கூத்தாடிக் கவுரவித்து வழியனுப்பி வைத்த நூறுக்கு நூறுகள், பெரும்பாலும் வெளுத்து வாங்குகிறார்கள். பலரை பரீக்ஷித்த என் அனுபவம், இது.அடுத்து: “திறமிகுச் சான்றோர்கள்” இருக்கிறார்களே அவர்களுக்குள் தேடிப் பார்த்தால் நூற்றுக்கு நூறு எடுத்தவர்கள் இல்லையே” என்பதும் உண்மை. 21-25 வயதில் அனுபவப்பாடங்கள் விரைவில் வந்தடைவதால்.அடுத்து: ‘கல்விக் கூட நூற்றுக்கு நூறுகள் மிகப்பெரும்பாலும் அரசுத்துறை குமாஸ்தாக்கள்.’ இதனுடைய புள்ளி விவரம் என்னிடம் இல்லை. ஆனால், குடும்ப சூழ்நிலை தான் மார்க்கர். பெற்றோர்கள் நினைத்தால், நலம் பயக்கும். ‘படிப்பு தான் முக்கியம்’ என்பது என் சிறுவயதில் பிராமண லக்ஷணம். அடுத்து: ‘நூற்றுக்கு நூறுகளில் மிகப் பெரும்பாலோர் எச்சரிக்கைப் பேர்வழிகள், ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள்…’: பாயிண்ட் மேட் & அன்மேட்!  You have to factor strategy, tactics, risk-taking, luck and chaos factor into account.ஈற்றடி: இந்த காலத்து அலங்கோலங்களை கணக்கில் எடுக்காவிடினும், பரிக்ஷை எழுதுவது ஒரு கலை; சுளையாக மார்க் வாங்க உதவும் கலை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *