சொர்க்கத்தில் ஒரு முள் (அத்தியாயம்-2)

0

ஸ்ரீஜா வெங்கடேஷ்

வழக்கமாக அலுவலகத்திலிருந்து சோர்ந்து திரும்பும் சிவனேசன் அன்று மிகவும் மகிழ்ச்சியாகக் கையில் ஸ்வீட்டுடன் வந்தான். எதிரே வந்த மனைவியின் கன்னத்தில் முத்தமிட்டான். அதைச் சற்றும் எதிர்பார்க்காத மங்கை “என்னங்க! இதென்ன புதுசாக் கல்யாணம் ஆனா மாதிரி” என்றவள் அவன் கையிலிருந்த இனிப்புப் பெட்டியைப் பார்த்து விட்டு “என்னங்க இன்னிக்கு என்ன ஸ்பெஷல்? எதுக்கு ஸ்வீட் வாங்கிட்டு வந்துருக்கீங்க?” என்றாள். “சொல்றேன்” என்றவன் “ஆமா! குழந்தைங்க, ப்ரியா எல்லாரும் எங்கே?” என்றான். “ப்ரியா ரூம்ல படிச்சிட்டு இருக்கா. குழந்தைங்க டியூஷன் போயிருக்காங்க. என்ன விஷயம் சொல்லுங்களேன்” என்றாள் கெஞ்சும் குரலில்.

அறையின் நடுவிற்குச் சென்றவன் “அன்புக்குரிய மனைவியே, இனி உன் கணவன் வெறும் மேனேஜர் இல்லை. இப்போ நான் ஜெனரல் மேனேஜர். இப்போ வாங்கற சம்பளம் போல இரண்டு மடங்கு வரப் போவுது. என்னோட திறமையையும் நேர்மையையும் பாராட்டி எங்க முதலாளி எனக்கு இந்தப் புரமோஷன் குடுத்திருக்கார்” என்றான் நாடகப் பாணியில்.

கண்களில் சந்தோஷம் மின்ன “என்னங்க நெஜமாவா சொல்றீங்க? அப்பா! எப்படியோ கடவுள் கண்ணைத் தொறந்துட்டார். நம்ம கஷ்டம் எல்லாம் தீர்ந்தது, இனிமே கொஞ்சம் தாராளமா செலவு பண்ணலாம் …” என்று அடுக்கிக் கொண்டே போனவள் மூச்சு முட்ட நிறுத்தினாள். கவலையோடு அவள் பக்கத்தில் வந்த சிவனேசன் “நீ ஏம்மா உணர்ச்சி வசப் படறே? பாரு மூச்சு முட்டுது. கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக்க. பணம் வந்ததும் முதல்ல உன்னை ஒரு நல்ல டாக்டர் கிட்டக் காட்டணும். மத்ததெல்லாம் அப்புறம் தான்” என்றான்.

அதற்குள் சற்றுச் சரியாகி விட்டது. குழந்தைகளும் வரவே அந்தச் சந்தோஷ சமாசாரம் அவர்களிடமும் ப்ரியாவிடமும் தெரிவிக்கப் பட்டது. அந்தச் சிறு குடும்பத்தில் சந்தோஷ நதி கரை புரண்டு ஓடியது.

பணம் வந்ததும் ஆளாளுக்கு இது வேண்டும், அது வேண்டும் என்று பட்டியல் போட்டனர். நித்திலாக் குட்டி கூட தனக்கு ஒரு பேசும் பொம்மை ஒன்று வேண்டும் என்றது. எல்லோருடைய கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக வாக்களித்தான் சிவனேசன்.

ஆயிற்று, சிவனேசனும் ஜெனரல் மேனஜராகப் பொறுப்பேற்று மூன்று மாதங்கள் ஓடி விட்டன. ஒவ்வொரு மாதமும் ஒரு கணிசமான தொகை சேமிக்க முடிந்தது. அது தவிர மங்கை ப்ரியாவின் பெயரிலும், நித்திலாவின் பெயரிலும் நகைச் சீட்டுப் போட்டாள். அனைவரும் சேர்ந்து ஏக மனதாகத் தீர்மானம் நிறைவேற்றி கொஞ்சம் பெரிய வீடாகப் பார்த்து குடி போக வேண்டும் என்று முடிவு செய்தனர். அதன்படி ஒரு தரகரிடம் சொல்லி வைத்திருந்தனர்.

அன்று அந்தத் தரகர் ஒரு வீட்டைக் கொண்டு காட்டினார். தனி வீடு. மாடி இல்லை. கொஞ்சம் தோட்டம் போட இடமும் இருந்தது. மொத்தம் 5 அறைகள். குழந்தைகளுக்கு ஒன்று, ப்ரியாவுக்கு ஒன்று, இவர்களுக்கு ஒன்று என்று பிரித்துக் கொண்டாலும் விருந்தினர் தங்க இரண்டு அறைகள் மீதமிருந்தன. நல்ல பெரிய சமையற்கட்டு. குட்டியாகப் பூஜை அறை வேறு என்று வீடு மிகவும் பாந்தமாக இருந்தது. வீட்டின் சொந்தக்காரர்கள் வெளிநாட்டில் இருப்பதால் ஓனர் தொந்தரவும் கிடையாது. ஆனால் என்ன மாதம் தவறாமல் வாடகை கொடுத்து விட வேண்டும், அதை வாங்கிப் போக வீட்டுச் சொந்தக்காரரின் மாமனார் டாணென்று ஒண்ணாந்தேதி வந்து விடுவார். சிவநேசன் அதற்கு ஒப்புக் கொண்டான்.

அதன் பிறகு வேலைகள் மளமளவென்று நடந்தன. வீட்டின் சொந்தக்காரர் தன் செலவில் வெள்ளை அடித்துத் தருவதாக ஒப்புக் கொண்டு, அதன் படியே செய்து கொடுத்தார். பழைய வீட்டு ஓனரிடம் சொல்லி அட்வான்ஸ் பணம் திரும்ப வாங்கியாயிற்று. பழைய வீட்டின் சாமான்களை எல்லாம் ஒதுங்க வைத்தாயிற்று.

ஒரு நல்ல நாள் பார்த்து அந்த வீட்டிற்குக் குடி வந்தார்கள். பூஜை அறையில் பிள்ளையார் படத்தை முதலில் மாட்டினார்கள். ஒரு மினி டெம்போவில் சாமான்களும் வந்து இறங்கின. அன்று முழுவதும் அவற்றை அந்தந்த இடத்தில் வைக்கும் வேலை இருந்ததால் ஹோட்டலில் சாப்பிட்டார்கள். எல்லோரும் உதவ மங்கை அந்த வீட்டை ஒரே நாளில் புழங்கத் தக்கதாய் மாற்றி விட்டாள்.

அடுத்து வந்த ஞாயிற்றுக் கிழமையில் வீட்டிலிருந்து பிரியாணியும், சிக்கனும் செய்து எடுத்துக் கொண்டு மாமல்லபுரம் போனார்கள். ஒரு ஞாயிறு கடற்கரை, ஒரு ஞாயிறு குவீன்ஸ் லாண்ட், மற்றொரு ஞாயிறு திருப்போரூர் முருகன் கோயில் என்று சந்தோஷமாகச் சுற்றினார்கள்.

அக்கம் பக்கத்தவர் கொஞ்சம் கொஞ்சமாகப் பரிச்சயம் ஆனார்கள்.

ஒரு நாள் பக்கத்து வீட்டம்மா மங்கையிடம் பேசிக்கொண்டிருந்தபோது “இந்த வீடு ராசியே இல்லாத வீடுங்க. அதனாலதான் யாரும் இதுல நெறய நாள் தங்கறதே கெடையாது” என்றாள். சுருக்கென்றது மங்கைக்கு. “ஏன் நாங்க இங்க வந்து 3 மாசம் ஆகுதே? நாங்க நல்லாத்தானே இருக்கோம்” என்றாள். “அது தாங்க இந்த வீட்டோட தன்மையே. குடி வந்த முதல் ஆறு மாசம் அந்தக் குடும்பத்தை நல்லாத் தூக்கி விடும். ஆனா அதுக்கப்புறம் தான் ரொம்பப் போட்டுப் புரட்டியெடுக்கும்” என்றாள்.

மங்கை இந்த விஷயத்தைச் சிவனேசனிடம் கூறினாள். அதற்கு அவன் “அவங்களுக்கு வேற வேலை இல்லே. சும்மா எதையாவது கிளப்பி விடுவாங்க. இதெல்லாம் சுத்த மூட நம்பிக்கை. ஒனக்குக் கடவுள் நம்பிக்கை இருக்குல்லே? எல்லாப் பாரத்தையும் அவர் மேல போட்டுட்டு நீ நிம்மதியா இரு. கண்டதையும் யோசிச்சு மனசைக் கெடுத்துக்காதே” என்றான். மங்கை அப்போதைக்குச் சமாதானம் ஆனாலும் அவள் மனதில் பக்கத்து வீட்டம்மா சொன்ன வார்த்தைகள் ஊவா முள்ளாய் உறுத்தத் தொடங்கியது.

(தொடரும்)

படத்திற்கு நன்றி:http://www.istockphoto.com/stock-photo-14947779-middle-aged-couple-with-their-son-moving-to-new-house.php

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *