பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 38

1

 

 

கேள்வி : பாரம்பரியம் என்பது சரியா அல்லது பாரம்பரீயம் என்பது சரியா?

 

பதில் : சொல்லெழுத்தை (spelling) பயிலுதல் எழுத்தறிவு (literacy) பெறுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பேசுவது போலவே எந்த மொழியும் எழுதுவதில்லை. அதனால் எழுத்தறிவில் சொல்லெழுத்தைப் பயிலுவதற்கு அதிகக் கவனம் தரப்படுகிறது. எந்த மொழியிலும் சொல்லின் உச்சரிப்பு மாறும் வேகத்தில் சொல்லின் எழுத்து வடிவம் மாறுவதில்லை. தமிழைப் பொறுத்தவரை பேச்சில் உச்சரிப்பு மிகவும் மாறியிருக்கிறது. ஆனால் சொல்லெழுத்து மாறியது மற்ற மொழிகளில் மாறியதை விட மிகவும் குறைவு. சங்ககாலக் குரீஇ என்னும் சொல் பிற்காலத்தில் குருவி என்று ஆனது போல் ஒரு சில எடுத்துக்காட்டுகளே உண்டு.

இப்போது இணையதளங்களில் தமிழ்மொழி பற்றிய கேள்விகளில் சொல்லெழுத்துப் பற்றிய கேள்விகள் மிகுதியாக உள்ளன. பேச்சு மொழியை ஒட்டிச் சொல்லெழுத்தில் மாற்றம் வருவதைக் கண்டு வரும் குழப்பமும் அச்சமும் இந்தக் கேள்விகளில் தென்படுகின்றன. ஒரு சொல்லுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துக்கூட்டு இருக்கும்- போது எது சரி என்னும் கேள்வி எழுகிறது. ஒன்றுக்கு மேல் இருப்பது தவறு என்னும் கருத்தின் அடிப்படையில் இந்தக் கேள்வி எழுகிறது. ஆனால் சில சொற்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட சொல்லெழுத்துகள் இருப்பதை மறந்துவிடக் கூடாது. ஐயர் – அய்யர், புடைவை –புடவை, சொல் – சொல்லு (சொல்கிறான் / சொல்லுகிறான்), கருப்பு – கறுப்பு, பதற்றம் – பதட்டம், பவளம் – பவழம், சார்த்து – சாத்து – சாற்று என்பவை இதற்குச் சில எடுத்துக்காட்டுகள்.

வேறுபாடு இருக்கும்போது, அதாவது புதிய வரவு இருக்கும்போது, ஒரு சொல்லெழுத்தை மட்டுமே தேர்ந்தெடுக்க விரும்பினால் அதற்கு என்ன அடிப்படை என்பது முக்கியமான கேள்வி. பழைய இலக்கிய வழக்கு சிலருக்கு அடிப்படை. கறுப்பிற்கு இலக்கியப் பழமை இல்லை என்றால் அந்த எழுத்தாக்கம் தவறு என்று சொல்லும் இந்த அடிப்படை. எந்த ஒரு மாற்றத்தையும் ஒரு இலக்கிய ஆசிரியன் முதலில் ஏற்றுப் பயன்படுத்துகிறான். பிறகு மற்றவர்களும் எழுத்தில் பயன்படுத்த, அது சரியான வழக்கு ஆகிறது. இன்றைய எழுத்தாளர்கள், இதழாசிரியர்கள் ஆகியோர் வழங்கும் புதிய சொல்லெழுத்தை மட்டும் தவறென்று தள்ளுவதை எப்படி நியாயப்படுத்த முடியும்?

சொல்லின் வேரிலிருந்து விலகாத தன்மை இன்னொரு அடிப்படை. இதன்படி, பதறு என்னும் வினையிலிருந்து பிறந்த பதற்றம் என்னும் சொல்லெழுத்தே சரியென்று கொள்ளப்படும். கரிய, கரும் போன்ற ஒரே வேரிலிருந்து பிறந்த சொற்களோடு தொடர்பு இருப்பதால் கருப்பு என்பதே சரி என்று இந்த அடிப்படை முடிவு செய்யும். இந்த அடிப்படை மொழி வளர்ச்சியை மறுத்து, மொழியை அதன் மூலத் தோற்றத்திற்குக் கொண்டுசெல்ல வைக்கிறது. பேத்தி, சித்தப்பா, சித்தி, காக்கைவலிப்பு முதலான சொல்லெழுத்துகள் தவறு; அவை முறையே பேர்த்தி, சிற்றப்பா, சிற்றி, கால்கை வலிப்பு என்று இருக்க வேண்டும் என்று சொல்லும் நிலைக்கு இது நம்மைத் தள்ளிவிடும். வேரிலிருந்து விரிவதுதானே வளர்ச்சி.

பெரும்பான்மையோர் வழக்கு என்பது மற்றொரு அடிப்படை. பெரும்பான்மையோர் செய்தால் தவறு சரியாகிவிடுமா என்பது இதற்கு எதிர்க் கேள்வி. முன்னே சொன்ன இரண்டு அடிப்படைகளாலேயே இரண்டில் ஒரு சொல்லெழுத்து தவறு என்று அனுமானிக்கப்பட்டு இந்தக் கேள்வி எழுப்பப்படுகிறது. இந்த அடிப்படைகளின் குறைகளை ஏற்கனவே பார்த்தோம். பெரும்பான்மையோர் செய்வது அறியாமையால் என்பது இன்னொரு அனுமானம். மொழியின் தன்மையைச் சமூகத்தில் அறிவுள்ள சிலரே நிர்ணயிக்க வேண்டும் என்பது இதன் உட்கருத்து. விக்கிபீடியா காலத்தில் மதிப்பிழந்துவிட்ட கருத்து இது.

பெரும்பான்மையோர் வழக்கு என்றால் பெருவழக்கு. சொல்லின் பொருளின் மாற்றத்தில் பெருவழக்கை ஒப்புக்கொள்கிறோம். நாற்றம் என்ற சொல்லின் பொருள் நல்ல வாசனையை விட்டு, கெட்ட வாசனையை இப்போது குறிப்பதைத் தவறு என்று யாரும் சொல்வதில்லை. இது சொல்லெழுத்து மாற்றத்துக்கும் பொருந்தும். பெருவழக்கு என்றால் பலருக்குத் தடையில்லாத வழக்கு என்று பொருள். காலையில் காபி குடிப்பது ஒரு உதாரணம். பெருவழக்கில் மேலே சொன்னபடி, ஒரே சொல்லுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட சொல்லெழுத்தும் இருக்கக் கூடும்.

பெருவழக்கை கணிக்கும் முறை முக்கியம். இது வெறும் எண்ணிக்கையால் தீர்மானிக்கும் ஒன்றல்ல. அச்சிதழ்களையும் மின்னிதழ்களையும் தேடுகருவியால் அலசி ஒரு சொல்வடிவத்தின் பயன்பாட்டு எண்ணை நிர்ணயிப்பது அல்ல இது. சொல்லின் பயிற்சிப் பரப்பு முக்கியம். சொல்லைக் கணக்கிடுவதில் இரண்டு வகையான எண்ணிக்கை முறைகள் உண்டு. ஒன்று சொல் எங்கு வந்தாலும் குருட்டடியாக எண்ணுவது; மற்றொன்று பிரதிகளை (texts) பாகுபடுத்தி, சொல் அதிகப்படியான பிரதி வகைகளில் வருவதை எண்ணுவது. அதாவது, ஆய்விதழ்க் கட்டுரையிலிருந்து வலையில் பதிவுசெய்யும் வம்பளப்பு வரை பல்வேறு இடங்களில் வருவதை எண்ணுவது. இந்த எண்ணிக்கையில் அதிகமாக உள்ள சொல்லெழுத்தே பெருவழக்கு.

க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியில் சொற்களின் வடிவம், பலதரப்பட்ட எழுத்துக்களைக் கொண்ட தரவுவங்கியில் பெருவழக்காக உள்ள சொல் வடிவம் முதன்மையான பதிவாகத் தரப்பட்டு, சிறுவழக்காக உள்ள மாற்று வடிவத்தின்கீழ் பெருவழக்கு வடிவத்தைக் ‘காண்க’ என்று நெறிப்படுத்தப்பட்டிருக்கும். சிறுவழக்கு மிகக் குறைவான எண்ணிக்கையில் இருந்தால், ‘அருகிவரும் வடிவம்’ என்று அடையாளம் காட்டப்பட்டிருக்கும்.

பாரம்பரியம் – பாரம்பரீயம் போன்று தேசியம் – தேசீயம், மார்க்சியம் – மார்க்சீயம், நாகரிகம் – நாகரீகம் முதலிய சொற்களிலும் இணைச் சொல்லெழுத்து உண்டு. இவற்றில் முதலில் உள்ள சொல்லெழுத்தே பெருவழக்கு என்று எண்ணுகிறேன். இதன்படியே பள்ளி ஆசிரியர்களும், இதழாசிரியர்களும் நெடிலுள்ள மாற்று வடிவத்தைத் திருத்துவார்கள். அப்படியும் மாற்று வடிவம் ஒரு தலைமுறையைத் தொடர்ந்து பெருவழக்காக இருந்தால் அதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். முதல் வடிவம் மறையாமல் தொடர்ந்து வழக்கில் இருக்கலாம்.

மாற்று வடிவங்களைச் சொல்லின் இலக்கண வடிவங்களிலும் பார்க்கலாம். ஓடுகிறான் – ஓடுகின்றன, ஓடியது – ஓடிற்று, மரத்துக்கு – மரத்திற்கு, வந்ததால் – வந்ததனால், படிக்கிற – படிக்கும் முதலியவை சில எடுத்துக்காட்டுகள்.

தமிழின் நெகிழ்வுகளைக் கோணல்களாகப் பார்க்காமல் இருப்பது தமிழுக்கு நல்லது.

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 38

  1. அண்ணாமலை சொல்கிறார் “மொழியின் தன்மையைச் சமூகத்தில் அறிவுள்ள சிலரே நிர்ணயிக்க வேண்டும் என்பது இதன் உட்கருத்து. விக்கிபீடியா காலத்தில் மதிப்பிழந்துவிட்ட கருத்து இது.”

    இது தமிழை, தமிழ் விக்கிபீடியாவை பொருத்தவரை ஒரு நப்பாசை. எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தில் எப்படி தனித்தமிழ் தலிபானியம் தமிழ் விகியை எப்படி அழித்துக் கொண்டுள்ளது என்பதை 2009 லேயே கவத்திற்க்கு கொண்டு வந்துவிட்டேன்

    http://www.jeyamohan.in/?p=4249 . தமிழ் விகிபீடியாவில் ஒரு தனித்தமிழ் தலிபானிய குழு கைப்பற்றி தான் தோன்றித்தனமாக கோலாச்சுகிறது.

    வன்பாக்கம் விஜயராகவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *