சீதாம்மா

காதல் காட்சியில் சுவையான பகுதியில் உங்களை நிறுத்திவிட்டு வந்துவிட்டேன் அக்காட்சியைக் கொஞ்சம் நினைத்துப் பார்ப்போம்

உன் வயது என்ன?
27
அய்யோ நீ ஏன் லேட்டா செத்தே?
ஏய் என்ன கேட்கறே?
நீ உன் அம்மா வயத்துலே உருவானதையும் கணக்குலே சேத்தா 28 வருஷம். அதாவது நீ போன ஜென்மத்துலே செத்தது 28 வருஷத்துக்கு முன்னாலே நான் செத்தது 73 வருஷத்துக்கு முன்னாலே உன் வயசைத் திருப்பிப் போட்டா என் வயசு. அதாவது 72. அப்போ நீ லேட்டாதானே செத்துப் போயிருக்கே. நான் பாட்டி ஆய்ட்டேன்டா
“அய்யோ” என்று மட்டும் எழுதிவிட்டு ஓடிவிட்டான்

இவன் கெட்டவனா? நிச்சயம் கெட்டவன் இல்லை. பெண்ணின் பெயரைப் பார்க்கவும் ஓர் உந்துதல் உளறிவிட்டான். இரண்டு நாட்கள் கழித்து அவன் மீண்டும் வந்து “ சாரி மேடம் “ என்றான். “சரிதான்பா “ என்றேன்
“கோபம் வல்லியா “ என்றும் கேட்டான்
“இல்லை. உன் அசட்டுத்தனம் பார்த்து சிரித்தேன். இனிமே ஒரு பொண்ணு பெயரைப் பார்த்தவுடன் உளற மாட்டே “ என்றேன் அதுமுதல் அவனும் என் குழந்தைகளீல் ஒருவனான்.

காளைப் ப்ருவத்தில் பெண்ணைப் பார்க்கும் பொழுது அவனையும் மீறி உணர்வுகள் தோன்றி அவனை அலைகழிக்கும். விட்டு விலகுபவர்களும் உண்டு. அசட்டுத்தனமாக மாட்டிக் கொள்கின்றவர்களும் உண்டு

இன்னொரு சம்பவம்

எனக்குக் கணினி கற்றுக் கொடுத்தவர்கள். எங்கள் வீட்டு காம்பவுண்டுக்குள் இருந்த ஓர் மாடியில் குடியிருந்தவர்கள். கீழக்கரையில் பொறியியல் படித்த முஸ்லீம் மாணவர்கள்.. என் மகன் அவர்களிடம் தான் பொறுப்பை ஒப்படைத்தான். அவர்களும் கூடி வந்து இந்தக் கிழவிக்குக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தனர். கற்பதற்கு ஆர்வம் பெற, வேகம் கூட முதலில் அரட்டை உலகம் போகும் படி சொன்னார்கள். என் வயது 19 என்று கூறச் சொன்னார்கள். கணினி வாழ்க்கையே பொய்யில் தொடங்கியது. என் வயதைச் சொன்னால் ஒரு பயலும் பேச வரமாட்டர்களாம். இரண்டு நாட்கள் அருகில் இருந்து என்னை ஆட்டிப் படைத்தார்கள். அவர்களில் ராஜாகான் நிறைய கதைகள் படிப்பவன். ( இப்பொழுது சாருகேசி என்று வலைப் பூவில் வலம் வருகின்றன். அண்ணாச்சிக்குப் பிரியமான தம்பி ) அவன்தான் எனக்கு அதிகமாக ஊக்கமளித்தவன். பொய்யுரைக்க மனம் தயங்கிய பொழுது அவன் சொன்னது

“பாட்டி, நீங்கள் ஒரு எழுத்தாளர். கணினியில் ஓர் புதிய பாத்திரம் படைத்து அனுப்புவதாக நினைத்துக் கொள்ளூங்கள். இன்றைய இளைய சமுதாயம் பார்க்க அந்த வேஷம் போடுவதில் தப்பில்லை”

என் பேத்தியின் நண்பர்கள் அவர்கள். கற்பனையை வளர்க்காதீர்கள். என் பேத்திக்கு அப்பொழுது வயது மூன்று. அவள் என்னைப் பாட்டி என்று கூப்பிட்டதால் இவர்களுக்கும் நான் பாட்டியானேன். இரண்டு நாட்கள் பொய் நீடித்தது. மூன்றாம் நாள் இவர்கள் வர நேரமாயிற்று. எனவே என் தொலைபேசி எண் கேட்கவும் கொடுத்துவிட்டேன். ராஜா வந்தவுடன் கத்தினான்.
பாருங்க, பையன்கள் கூட்டம் வீட்டு வாசலுக்கு வரப் போகிறது என்றான்
வரட்டுமே. வந்தால் என் பேத்தி வெளியே போயிருக்கிறாள்னு சொல்லுவேன். எத்தனை நாள் வந்து ஏமாறுவாங்க
மாடிவீட்டு பசங்க அப்படியே மலைத்துப் போனார்கள்.

“விளங்ச பாட்டி” இது அவர்கள் எனக்கு கொடுத்த பட்டம். அரட்டையின் மூலம் 27 இளைஞர்கள் நண்பர்களாயினர். மாடிவீட்டையும் சேர்த்தால் மொத்தம் 32 ஆனார்கள். மாதந்தோறும் கலந்துரையாடல் கூட்டம் நட்த்தினேம். எனக்கு உதவி செய்தவர் புனிதவதி இளங்கோவன்
தொடக்கத்திலேயே ஒரு தகவல் கூறிவிடுகின்றேன். எடுத்துக்காட்டாக நான் கூறும் சம்பவங்கள் அனைத்தும் உண்மைச் சம்பவங்கள். ஆனால் பெயர்கள் மாற்றி எழுதியுள்ளேன். நமக்கு வேண்டியது ஊர் வம்பல்ல. உதாரணங்கள் மட்டுமே.
இந்தக் குழுவைச் சேர்ந்தவன் கோபால். ஒரு நாள் கூட்டத்திற்குத் தாமதமாக வந்தான். அவன் முகம் சோர்ந்து போயிருந்தது. நண்பர்கள் என்னடா என்று கேட்கவும். தயங்காமல் கோபத்தில் திட்ட ஆரம்பித்தான்.
இந்த பொம்புள்ளங்களை நம்பக் கூடாது. வரச் சொல்லிட்டு வரல்லே.
அரட்டை உலகத்தில் கோபாலுக்கு ஒருத்தியின் நட்பு கிடைத்திருகின்றது. ஒரு மாதமாக அரட்டை. ஆனால் போட்டோக்கள் பரிமாற்றம் இல்லை. அவள் விலாசமும் தெரியாது. இவன் அவளைப் பார்க்க விரும்புவதாகச் சொல்லியிருக்கின்றான்.. மாம்பலம் சிவா விஷ்னு ஆலயத்திற்கு நீலக் கலர் சட்டை அணிந்து வரச் சொல்லியிருக்கின்றாள் இவனும் ஆவலுடன் போயிருக்கின்றான். கோயில் நடை சாத்தும் வரை காத்திருந்துவிட்டு இங்கே வந்திருக்கின்றான். பார்க்க முடியாத ஏமாற்றத்தில் கத்தினான். கூட்டம் முடிந்து ஏற்கனவே பலர் போய்விட்டனர். மீதி இருந்தவர்கள் அவனுக்கு ஆறுதல் கூறினர். பின்னர் நான் பேச ஆரம்பித்தேன்

கோபால், இதுவரை நீங்கள் இருவரும் சந்தித்ததில்லை. வாழ்க்கைக்குக் காதல் வசனம் மட்டும் போதாது. கல்யாணம் வரைக்கும் போக வேண்டுமென்றால் பல கோணத்தில் பார்க்கணும். உனக்கு அவசரம். அவளுக்கு முதலில் உன்னை நேரில் பார்த்து பொருத்தமானவனா என்று சிந்தனை செய்து முடிவு எடுக்க நினைத்திருகின்றாள்.. அவள் வந்திருப்பாள். பார்த்தபின்னும் முடிவு எடுக்க முடியாமல் குழம்பியிருக்கலாம். அதனால் பேசாமல், முன்னால் வராமல் போயிருக்க வேண்டும்.

காதலிக்கல்லேன்னா என்னை ஏன் வரச் சொல்லனும்.
நீ காதல்னு நினைச்சிருபே. முதல்லே சாதாரணமாகப் பேச ஆரம்பித்திருப்பாள். பேச்சு சீரியசாகப் போகவும் பார்த்து முடிவு எடுக்க நினைத்திருக்கலாம். வெறும் அரட்டை காதல்னு முடிவுக்கு வரக் கூடாது. அவள் கெட்டிக்கார பொண்ணாக இருக்கணும்.
அதைச் சொல்லித் தொலைத்திருக்கலாமே
உனக்கு அவசரம். வாழ்க்கைனு நினைக்கவும் அவளுக்கு எச்சரிக்கை. நாளைக்குப் பேச வரலாம். அவள் கிட்டேயே கேளு
மறுநாள் அரட்டை தொடர்ந்தது. மீண்டும் கோயிலில் சந்திக்கலாம் என்று முடிவெடுத்துள்ளனர். அதற்கேற்ப கோபால் சென்றிருக்கின்றான. .நேரம் செல்லச் செல்ல ஆவல் ஆத்திரமாக மாறியது. அன்றும் அவளைக் காண முடியவில்லை. கோபத்துடன் நேராக என் வீட்டிற்கு வந்தான். இரவு நேரமாகிவிட்டது. என்னிடம் கத்திவிட்டுப் போனான். அதற்கடுத்த நாள் மாலையில் சீக்கிரமே வீட்டிற்கு வந்தான். அவள் அரட்டைக்கு வரவில்லையாம். நான் அந்தப் பெண்ணின் மன நிலை புரிந்து கொண்டேன்.

அவனை உட்கார வைத்துப் பேசினேன். சுலபமாக அவன் சமாதனம் ஆகவில்லை. கோபம் தணியாமல் வெளியேறினான். ஒரு வாரம் இதே நிலை நீடித்தது. அவன் வருவது குறைந்த்து. பின்னர் வரவேயில்லை. சில மாதங்களுக்குப் பிறகு கிடைத்த செய்தியின் படி அவன் ஹாங்காங் சென்றுவிட்டான். அவள் மேலுள்ள கோபத்தில் என்னைப் பார்க்க வரவில்லை. நான் அமெரிக்கா சென்றபின் கேள்விப்பட்டதில் அவன் சீனப் பெண் ஒருத்தியைத் திருமணம் செய்து கொண்டுவிட்டான் என்பதே. சென்னைக்காதல் ஹாங்காங் சென்று சீனப் பெண்ணுடன் முடிந்தது. பரவாயில்லை. குரங்கைவிட வேகமாக, தூரமாகக் இந்த காதல் குதித்து ஓடிவிட்டது. அவசரக் காதல்.!

சில நாட்கள் பரிவுடன் பேசினாலும் அதைக் காதல் என நினைத்து தொண்டாடுபவர்களும் ஒரு வகை. வாழ்க்கை, குடும்பம் என்றவுடன் பெண் சிந்தித்துச் செயல்பட நினைகின்றாளே அதுவே பாராட்டுதற்குரியது. எல்லாப் பெண்களும் அப்படி எச்சரிகையுடன் இருக்கின்றார்களா?

அவனுக்குக் காதலும் அவசரம். ஒன்று போனால் இன்னொன்றைப் பிடிப்பதுவும் அவசரம். எல்லாம் அவசரத்தில் முடிக்கவிரும்புகின்ற வகை. இப்படி அவசரப்பட்டு வாழ்க்கை அமைத்துக் கொண்டால் அந்த வாழ்க்கையாவது நிலைக்குமா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்

இன்னொரு அனுபவம் தொலைபேசியின் மூலம் எட்டிப்பார்த்த்து

நள்ளிரவு. தொலைபேசியை எடுத்துப் பேசினேன். பேசியது குமார். அவனும் கோபத்தில் கத்தினான்
பெண்கள் ஒழிக. பெண்கள் ஒழிக
குமார், ஏன் கோபம்
கோபம் வராதா? எனக்கு இன்னிக்குப் பிறந்த நாள். வாழ்த்து சொன்னீங்களா
உனக்கு பிறந்த நாள்னு எனக்குத் தெரியாதே.
பொய். நீங்க பொம்புள்ளங்க எல்லாரும் பொய் பேசறவங்க. . பெண்கள் ஒழிக
குமார் நிதானத்தில் இல்லைனு புரிந்தது. அவன் சத்தம் போடட்டும் என்று ஹும் என்று மட்டும் சொன்னேன் அவன் திடீரென்று ஓ ன்னு அழ ஆரம்பித்தான்.
அவ என்னை விட்டுட்டுப் போய்ட்டா. அமெரிக்கா போய்ட்டா புதுசா ஒருத்தனைக் கட்டிக்கிட்டு போய்ட்டா. பாவி என்னோட நாலு வருஷம் குடும்பமே நடத்தினா. இப்படிப் போக எப்படி மனசு வந்தது

சம்பவத்தின் சுருக்கம் இதுதான். குமார் பொறியியலில் கணினி பட்ட்தாரி. அவன் லட்சியம் அமெரிக்கா செல்ல வேண்டுமென்பது. ஒரு காலத்தில் கணினி கற்ற மாணவர்கள் அனைவரின் கனவும் அதுவாக இருந்தது.
அவனுடைய வகுப்புத் தோழி லதா. முதலில் சாதாரணமாக தொடங்கிய நட்பு, பின்னர் வீட்டுக்குப்போகும் நேரம் தவிர மற்ற எல்லா நேரங்களிலும் உடன் இருந்தனர். காதலாகி, பின்னர் கணவன் மனைவி போல் உறவுடன் நெருங்கிப் பழக ஆரம்பித்தனர். அவளுக்கும் அமெரிக்கா போக வேண்டுமென்று ஆசை. குமார் பெரிய இடத்துப் பையன் .. எனவே லதா பல காரணங்களை மனத்தில் வைத்துப் பழகியிருக்க வேண்டும். குமார் அப்படி எதையும் நினைக்காமல் அவளை அவளுக்காகவே நேசித்திருக்கின்றான். அப்படிச் சொல்கின்றான். படித்து முடித்தும் வேலை கிடைக்கவில்லை. அமெரிக்கா ஆசையும் நிறைவேறவில்லை. அப்படி காத்திருந்தலில் ஒரு வருடம் பறந்தோடிவிட்டது

ஒரு நாள் கையில் பத்திரிகை ஒன்றினை எடுத்துக் கொண்டுவந்தாள் லதா. அது அவள் திருமணப் பத்திரிக்கை. முன்னதாக அவள் அவனிடம் எதுவும் சொல்லவில்லை. திடீரென்று பத்திரிக்கையைப் பார்க்கவும் அவன் மனம் உடைந்து போனான்.அவனால் எதுவும் பேசமுடியமல் கண்ணீர் மல்கும் கண்களுடன் அவளைப் பார்த்திருக்கின்றான். அவள் சொன்னது

குமார், என்னை மன்னித்துவிடு. எனக்கு உன் மீது இப்பொழுதும் பிரியம்தான். ஆனால் உன்னைவிட அமெரிக்கா செல்லவேண்டுமென்ற ஆசைதான் அதிகம். காத்திருந்தேன். உனக்கு அமெரிக்கா வேலை கிடைக்கவில்லை. எப்பொழுது கிடைக்குமென்றும் தெரியாது. கிடைக்காமலும் போகலாம். இந்த மாப்பிள்ளை ஏற்கனவே அமெரிக்காவில் வேலை பார்க்கின்றார். இவரைக் கல்யாணம் செய்துக்கறதுதான் புத்திசாலித்தனமாகத் தோன்றியது காதல்பற்றி பேசலாம். பழகலாம். நினைத்து கனவு காணலாம். ஆனால் வசதியான வாழ்க்கைக்கு காதல் மட்டும் போதாது. என்னை எப்படி நினைத்தாலும் சரி. உனக்கும் ஒருத்தி கிடைப்பாள். இதுதான் வாழ்க்கை.. இதுதான் யதார்த்தம். நீ அமெரிக்கா வரும் பொழுது பார்க்கலாம். உன்னிடம் சொல்லாமல் மண மேடையில் உட்கார மனம் இடம் கொடுக்கவில்லை. வாழ்க்கையைப் புரிந்து கொள்.

பேசிவிட்டு பத்திரிக்கையை அவன் மடியில் வைத்துவிட்டுப் போய்விட்டாள். அப்பொழுது அவன் கல்லாகி உட்கார்ந்திருக்கின்றான். அதன்பின்தான் அழ ஆரம்பித்திருக்கின்றான். காதலில் தோற்றதை நினைத்து அழுவதா? காசுக்கும் ஆசைக்கும் காதல் பலியாகிவிட்டதை நினைத்து அழுவதா? நான்கு ஆண்டுகள் ஒருத்தியின் பின்னால் அலைந்தது அர்த்தமில்லாமல் போனதற்கு அழுவதா? இலக்கியம், கதைகள் புகழும் காதல் பொய்யா? எவ்வளவு சுலபமாகச் சொல்லி விட்டுப் போய்விட்டாள். அவனால் இந்த இழப்பைத் தாங்க முடியவில்லை. குடித்தான். அப்பொழுதும் நினைவு மழுங்கவில்லை. மேலும் குடித்தான். முடியவில்லை. அழுதுகொண்டே குடித்தான். செத்துப் போனால்தான் நினைவுகளூம் அழியும் என்று நினைக்க ஆரம்பித்தான்.
இத்தனை மனப் போராட்டத்திற்கிடையில் என் நினைவு வந்ததே , அது என் மனித நேயத்திற்குக் கிடைத்த பெருமை.
அவனைப் புலம்பவிட்டேன். முடிந்தால் ஓர் ஆட்டோ எடுத்துக் கொண்டு என் வீட்டிற்கு வரச் சொன்னேன். மறுநாள் வருவதாகக் கூறினான். அதுவரை குடிக்கக் கூடாதென்றேன். சாக வேண்டும் என்றான். இன்று சாவதை மறுநாள் ஒத்திப் போடு. அப்புறம் சாகலாம் என்றேன். குழந்தையைப்போல் சரி என்றான். போனை வைத்துவிட்டான்.

தற்கொலை என்பது உணர்ச்சிகளின் உந்துதலில் உடனே நிகழ்வது.. நேரத்தைக் கொஞ்சம் ஒத்திப் போட்டாலும் மன நிலை மாறிவிடும்.
மறுநாள் மாலையில்தான் வந்தான். அவன் வரும்வரை என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. வந்த பொழுது சோர்வாக இருந்தான். ஈரத்துண்டு எடுத்து வந்து முகத்தைத் துடைத்தேன். என்னைப் பார்க்கவும் என்னைப் பிடித்துக் கொண்டு ஓவென்று அழுதான். அழட்டும் என்று மவுனம் காத்தேன். அவனை இம்சைப்படுத்திக் கொண்டிருக்கும் ஏமாற்றத்திற்கு ஓர் வடிகால் தேவை. இந்த அம்மா கிடைத்தேன். சிறிது நேரத்தில் சமாதானம் ஆனான். வீட்டில் இருப்பதைச் சாப்பிடக் கொடுத்தேன். சாப்பிட்டான். தூங்கச் சொன்னேன். சோபாவில் படுத்துவிட்டான். அப்படியே தூங்கவும் ஆரம்பித்தான்.
இனி அவன் மீண்டுவிடுவான். வெறும் எழுத்தில், பேச்சில் மட்டும் இருந்துவிடமாட்டேன். என்னால் முடிந்த அளவு செயலால் சீர்திருத்தப் பார்ப்பேன். ஆமாம், நான் செயல் மறத்தி. என்னால் யாரையும் வெறுக்க முடியாது. நான் கோபக்காரி. திட்டுவேன். சண்டை போடுவேன். அவர்கள் துன்பப்படும் பொழுது அன்பால் அரவணைப்பேன். நான் பணியாற்றிய துறையில் என் கோபத்தைப் பொறுத்துக் கொண்ட்தற்குக் காரணாம் என் அன்பு அவர்களுக்குக் கவசமாக இருந்தது. ஒரு மனிதன் ஓய்வு பெற்றுவிட்டால் அவனுக்கு மரியாதை கிடைக்காது. இப்பொழுதும் பலர் என்னை நினைப்பதற்குக் காரணம் என் உழைப்பும் , அன்பும் காரணம்.

அன்பு செலுத்துவதில் மனிதன் ஏன் கஞ்சத்தனமாக இருக்கின்றான். . மனித நேயம் மகத்தானது. கடவுளைக் கூடக் கும்பிட வேண்டாம். அவன் படைத்த உயிர்களிடம் அன்பு காட்டி, முடிந்த உதவிகளைச் செய்வதே இறைவனுக்கு நாம் செய்யும் பூஜையும் ஆராதனையும்.

குமாருக்கு நம்பிக்கையூட்டினேன். எக்காரியமும் நிறைவேறும்வரை இடையில் முயற்சியை நிறுத்திவிடக்கூடாது. ஒரு கடமையைச் செய்ய நினைத்தால் அது பூரணமாக செய்தல் வேண்டும். இன்று அரசும் சரி, மனிதனும் சரி எக்காரியத்திலும் முதலில் காட்டும் அக்கறை பின்னால் தொடர்ந்து கண்கணிப்பதில்லை ( no follow up )
குமார் நம்பிக்கையுடன் அமெரிக்கா செல்ல முயன்றான். அவனுக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்தது. அவன் அமெரிக்கா வந்த பொழுது நானும் அங்குதான் இருந்தேன். வந்தவுடன் மெயில் அனுப்பினான். என் தொலைபேசி எண் வாங்கிக் கொண்டான். அடிக்கடி பேசுவான். அவனுக்குத் திருமணம் ஆயிற்று. பெற்றோர் பார்த்த பெண். எல்லாவிபரங்களும் உடனுக்குடன் தெரிவிப்பான். அவன் மனைவியுடன் எடுத்துக் கொண்ட படம் அனுப்பினான். அழகான மனைவி. இல்லறம் நல்லறமாக நடந்து ஓர் குழந்தையும் பிறந்தது. குழந்தை படத்தையும் எனக்கு அனுப்பினான். இப்பொழுதும் எங்களுக்குள் தொடர்பு இருக்கின்றது.
அன்று தொலை பேசியில் கூப்பிட்டு திட்டிய பொழுது எதற்கு வம்பு என்று கோபித்துக் கொண்டு போனை வைத்திருந்தால் குமார் செத்திருப்பான். இன்று குடும்பத்துடன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றான். கடவுளூக்கு இச்செயல் உகந்ததா இல்லையா? நம்மில் எத்தனை பேர்கள் சிறிதளாவாவது உதவி செய்கின்றோம். அவர்களுக்கு ஆறுதல் வார்த்தைகள் சொல்லிவிட்டோம் என்போம். கொஞ்சம் காசு கொடுத்து சமாதானம் செய்து கொள்வோம். அதுதான் பிரசனைகளை அணுகும் முறையா? கோயிலுக்குச் செல்வதைக் காட்டிலும் ஓரளாவது மக்களின் புனர் வாழ்விற்கு ஆவன செய்ய வேண்டியது உயர்வானது என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

ஓர் நள்ளிரவில் இன்னொரு பிரச்சனை என் வீட்டு வாசல்கதவைத் தட்டியது. பதினைந்து நாட்களில் அமெரிக்கா புறப்பட வேண்டிய நேரத்தில் அதை நிறுத்தக் கூடிய சக்தி வாய்ந்த பிரச்சனை அது. ஒர் உயிரின் பிரச்சனை. அடுத்து பார்க்கலாம்.

தொடரும்

படங்களுக்கு நன்றி :

http://www.123rf.com/photo_10615167_a-couple-by-sunset-on-a-pier-holding-romanticly-each-others-hands.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *