தமிழகப் பெண்களின் சாதனைப் பரல்கள் (6)

0

 

தி.சுபாஷிணி

நாகம்மையார் (1885 -1933)

சேலத்தில் பிறந்த இவர், 1898இல் தம் உறவுக்காரரான ஈ.வெ.ராமசாமி நாயக்கரை மணந்து தம் வாழ்வினைப் பயனுள்ளதாக்கிக் கொண்டார்.

தம் கணவரின் முயற்சியால், அவரது பகுத்தறிவு இயக்கத்தில் இணைந்ததால் 1926 இல் முதன் முதலில் ஒத்துழையாமை இயக்கத்தில் பெரியாருடன் தானும் கலந்து கொண்டதால், தமிழ்நாடு முழுவதும் இவர் அறியப்பட்டார். அது முதல் அவரது ஆடை கதராடையானது.

1921இல் ஈரோட்டில் கள்ளுக்கடை மறியலில் கலந்துகொண்டார். அப்போது பெரியாரை அரசு கைது செய்தது. உடனே நாகம்மையாரும் பெரியாரின் தங்கையான கண்ணம்மாவும் போராட்டத்தை நடத்தினர். இதன் மூலம் காந்தியின் நன்மதிப்பையும், இந்தியாவின் கவனத்தையும் இவர் பெற்றார்.

1924இல் வைக்கம் போராட்டத்தில் பெரியார் கைதான பிறகு, அப்போராட்டத்திற்கு நாகம்மையார் தலைமையேற்று நடத்தினார். அங்குள்ள பெண்களைத் திரட்டி, தீண்டாமைக்கு எதிர்க்குரல் கொடுத்தார். இதன் விளைவாகத் தாழ்த்தப்பட்டோர், வீதிகளில் நடக்கும் உரிமை பெற்றனர். இதுவே வெற்றி பெற்ற முதல் சத்தியாக்கிரகம்.

அன்றைய சூழ்நிலையில், அவ்வளவு எளிதாகச் சுயமரியாதைக் கருத்துக்களை மக்களிடையே எடுத்துச் சென்றுவிட முடியாது. ஆகையால் நாகம்மையார் இயக்கத்திற்காகப் பெண்களைத் திரட்டுவதில் முழு உழைப்பையும் செலவிட்டார். 1925இல் குடியரசுப் பத்திரிக்கையின் பதிப்பாசிரியரானார். சுயமரியாதைத் திருமணம், கலப்புத்திருமணம், விதவைத்திருமணம் ஆகியவற்றிற்கு ஆதரவளித்து அவர்களுக்குப் பாதுகாவலராக இருந்து, குடும்பம் நடத்த உதவி செய்தார்.

பெரியார் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டபோது இவரது கட்சிப் பணிகளைச் சிறப்பாகக் கவனித்துக் கொண்டார். அம்மையார் அவர்கள் கட்சித் தொண்டர்களைத் தம் சொந்தப் பிள்ளைகளாய்க் கவனித்து வந்தார்.

‘நாகம்மாள் உயிர் வாழ்ந்ததும் வாழ ஆசைப்பட்டதும் எனக்காகவே ஒழிய தனக்காக அல்ல” என்று ஈ.வெ.ரா. பெரியார் கூறும் அளவிற்குத் தம் வாழ்வினைச் சிறப்பாக வாழ்ந்துவிட்டுச் சென்றவர் நாகம்மையார்.

படத்திற்கு நன்றி:

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=14193:2011-03-31-05-58-20&catid=25:tamilnadu&Itemid=137

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *