நான் அறிந்த சிலம்பு – பகுதி 15

0

மலர் சபா

புகார்க்காண்டம் – 3. அரங்கேற்று காதை

குழலாசிரியன்
இசைநூல் சொல்லிய முறையதன்படி
சித்திரப் புணர்ப்பு வஞ்சனைப்புணர்ப்பு
இவ்விரு கூறுகள் அறிந்தே இசைப்பவன்.
இசையாசிரியன் அவனுக்கு நிகராய்
அறிவுத்திறம் வாய்த்தவன்.
ஏற்றம் இறக்கம் இருவகையுடனே
வர்த்தனைகள் நால்வகையாலே
பண்ணின் மொத்த வகைகள்
மயக்கமின்றி இசைக்க வல்லோன்.
தம்முள் இழைந்திடும்
கூட்டிய இசையாம்
குரல் நரம்பும் இளி நரம்பும்
துல்லியமாய்க் கேட்டுணர்ந்து
தம் இசைநூல் அறிவாலே
இணை நரம்புகளின் வரவும் உணர்ந்து
இசைக்கவல்ல தொழில் வல்லாளன்.
சிறப்பாய்ப் பொருந்திய
பண்ணதனைச் சரியாய் அமைத்து
முழவின் இருகண் நெறிகளுடன்
தாள இயல்புகளின் திறமுமறிந்து
தண்ணுமையாளன் தன்னுடனும்
தக்கவாறு பொருந்தி இசைப்பவன்.
இசையின் இயல்பறிந்து
இசையாசிரியன் பாடுகையில்
இளிநரம்பை முதலாவதாக
யாழின்கண் நிரல்படவைத்து
பண்ணில் வரும் சுரங்கள்
குறைவுபடாது வளர்த்து
பண்ணுக்குரிய சுரங்கள் தவிர
வேற்றுச் சுரங்களின் கலப்பேதுமின்றி
அவற்றோடு ஒற்றியிருந்து,
இன்புற இயக்கி
இசையின் பண்ணிலக்கணத்துடன்
பொருந்திட வைத்துக்
குழலது இசைக்கும் திறமையாளன்.

வாரப்பாடல்களின் இசை
சரிவர நிரம்பச்செய்து
அளவுற அழகுற இசைப்பவன்.

இசைத்திடும் கணமதனில்
வாரப்படலின் இடைத்தோன்றும்
சொல் இசை பொருள் ஒழுங்குகள்
(வாய்ப்பாடல் இசைப்பது போலவே)
இசை எழுத்துருக் கொண்டாற்போல
இயைந்து இசைத்திட
சொற்களின் நீர்மைகள்
சற்றுக்கூடச் சிதைந்திடாமல்
எழுத்து எழுத்தாய்
வழுவின்றி இசைக்கும்
குழலோன் தன்னொடும்..

குறிப்பு::

வர்த்தனை- ஏழிசையைப் படிப்படியாக ஏற்றி இசைத்தல்
நால்வகை வர்த்தனை – ஆயப்பாலை, சதுரப்பாலை, வட்டப்பாலை, திரிகோணப்பாலை
ஏற்றம் இறக்கம் – ஆரோகணம் அவரோகணம்
பண்ணின் வகைகள் – நூற்று மூன்று வகைகள்
குரல் இளி – சட்சம் பஞ்சமம்
முழவின் இருகண் – இடக்கண், வலக்கண்
நிரல் – வரிசை,ஒப்பு
பண்ணிலக்கணம் – பதினோரு வகை

அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் 56-60:

http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram6.html

வரிகள் 61-69:
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram7.html

படத்துக்கு நன்றி:
http://www.beadparadise.com/oberlin_bead_store/ETHJ3003_silver_tuareg_anklet_heavy_solid.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *