வீடு வாங்கும் போது சரி பார்க்க வேண்டிய விஷயங்கள்

4

 

 

கேள்வி: சொந்தமாய் ஒரு வீடு, அதாவது காலி மனை அல்லது பிளாட் (Flat ) வாங்கும் போது சரி பார்க்க வேண்டிய விஷயங்கள் என்ன?
ராமச்சந்திரன் – சென்னை.

பதில்:

ஒவ்வொரு மனிதனுக்கும் தனக்கென்று ஒரு இடம் வேண்டும் என்ற ஆசை நிச்சயம் உண்டு. பெண் ஆசையை விட மோசமானது மண் ஆசை என்பார்கள். ஒரு முறை தான் குடியிருக்க இடம் வாங்கினால், அத்துடன் நிறுத்தாது மீண்டும் மீண்டும் வீடோ நிலமோ வாங்குவது தான் அன்று முதல் இன்று வரை நடைமுறையில் உள்ள விஷயம்.

அதிலும் குறிப்பாய் கணினி வாசிக்கும் நீங்கள் எல்லாம் நிறைய நிலம் வாங்க துவங்கிய பின் தான் நில விலை நிறையவே ஏறி போனது என்கிற குற்றச்சாட்டு உண்டு. அது ஒரு புறம் இருக்கட்டும். சொத்து வாங்கும் போது சரி பார்க்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்கிற கேள்விக்கு வருவோம் .. இதோ ஒரு செக் லிஸ்ட் :

1. குறைந்தது முப்பது வருடங்கள் வில்லங்க Certificate பார்க்க வேண்டும். இந்த முப்பது வருடங்களில் சொத்து யாரிடமிருந்து யாருக்கு மாறியது; மாறிய போது சரியான வாரிசு தாரர்களுக்கோ, உயில் எழுதிய நபருக்கோ சென்றது போன்ற விபரங்கள் ஆய்ந்து அறியப்பட வேண்டும்.

2. வில்லங்கப் பத்திரம் மட்டுமல்லாது மூலப் பத்திரங்களின் ஒரிஜினல் சரி பார்ப்பதன் மூலமே மேலே சொன்ன “சொத்து சரியாக கை மாறியதா ” என்பதை முழுதாக அறிய முடியும்.

3. கட்டப்பட்ட வீடு எனில், அந்த பில்டிங் கட்டுவதற்கான அங்கீகாரம் பெறப்பட்டதா.. கட்டிடம் இல்லாத காலி மனை (ப்ளாட்) எனில், அங்கு மனை போட CMDA அல்லது DTCP அங்கீகாரம் உள்ளதா என சரிபார்க்க வேண்டும். இந்த அங்கீகாரம் இருந்தால் தான் அதை ” அப்ரூவ்டு மனை” என சொல்ல முடியும். அப்போது தான் அந்த மனை வாங்க வங்கிகள் கடன் தரும். (அங்கீகாரம் பெறாத மனைக்கு சிட்டிபேங்க் போன்ற சில வங்கிகள் கடன் தருகின்றன. ஆயினும் அந்த கடன்கள் தனி நபரின் மதிப்பை வைத்துதான் தரப்படுகின்றன. அவர்கள் சமூகத்தில் நல்ல நிலையில் உள்ளனர். பணம் தராமல் ஏமாற்ற மாட்டார் என்கிற எண்ணத்தில் தான் வங்கிகள் தருகின்றன. அதே நிலத்துக்கு சாதாரண ஆள் கடன் கேட்டால், அதே வங்கி தராது போகலாம்!)

4. நீங்கள் வாங்க எண்ணும் இடத்துக்கான நில வரி அல்லது வீட்டு வரி கடந்த வருடங்களில் கட்டப்பட்டுள்ளதா என்பதை பார்க்க வேண்டும். இதனை பார்ப்பதற்கு இரு காரணங்கள். ஒன்று யார் பெயரில் வீட்டு வரி கட்டப்பட்டுள்ளதோ அவர்தான் வீட்டு ஓனர் என்பது அதன் மூலம் தெரிய வரும். அடுத்தது கடந்த சில வருடங்களில் அவர் வரி கட்டாவிடில், சொத்து உங்கள் கைக்கு வந்த பின் அந்த வரிகளை நீங்கள் கட்ட நேரிடலாம். முக்கியமாக சொத்தின் ஓனர்ஷிப்பை உறுதி செய்ய இந்த வரி ரசீதுகள் அவசியம். சிட்டா, அடங்கல் போன்றவையும் கூட வரி ரசீதுகள் தான். அவைகளையும் சரி பார்த்தல் அவசியம்.

5. சொத்தை விற்க பொது அதிகாரம் தரப்பட்டிருந்தால், அந்த பத்திரமும் அது தான் இறுதியான பத்திரமா என்றும் சரி பார்க்கப்பட வேண்டும். (பொது அதிகார பத்திரம் பற்றி தனியே விரிவாய் பார்க்கலாம்)

6. சற்றே பெரிய காலி இடம் எனில் அந்த இடத்தில் பார்க் உள்ளிட்ட இடங்களுக்கு இடம் விடப்பட்டுள்ளதா என்று பார்க்க வேண்டும். மேலும் பார்க்குக்கு ஒதுக்கிய இடத்தை உங்களுக்கு விற்க முயல்கின்றனரா என்றும் சரி பார்த்தல் அவசியம்.

7. இடத்துக்கான கைடு லைன் வேல்யூ என்ன என்பதைப் பார்த்து அதன் அடிப்படையில் (சொத்து விலையில் 7 %) ஸ்டாம்ப் பேப்பர் வாங்க வேண்டும். இப்படி ஸ்டாம்ப் பேப்பர் வாங்குவது அரசுக்கான வருமானம்.

8. சொத்தை இன்னும் சில மாதங்கள் கழித்து தான் உங்கள் பெயரில் ரிஜிஸ்தர் செய்ய போகிறீர்கள், தற்போது அட்வான்ஸ் தான் தருகிறீர்கள் என்றால், எத்தனை நாளுக்குள் ரிஜிஸ்தர் செய்ய வேண்டும், பணம் எப்போது தரப்படும், முதலில் தரும் அட்வான்ஸ் எவ்வளவு என்பவை குறிப்பிட்டு ஒரு அக்ரிமென்ட் போட்டுக்கொள்ளுதல் நல்லது. மிக எச்சரிக்கையான சிலர் இந்த அக்ரிமென்ட்டையும் பத்திர அலுவலகத்தில் ரிஜிஸ்தர் செய்து விடுவார்கள்.. அப்போது தான் அதற்கு ஒரு பைண்டிங் போர்ஸ் வரும் என்பதால்

9. நிலத்துக்கான பட்டா வாங்கப்பட்டுள்ளதா என்று பார்க்க வேண்டும். பட்டாவும் நிலத்தின் உரிமையை நிர்ணயிக்கும் தாக்கீது தான்.

10. இவை அனைத்தும் சரி பார்ப்பதன் முக்கிய நோக்கம் நிலத்தின் உரிமையாளர் யார் என்று பார்த்து அவர் தான் உங்களுக்கு விற்கிறாரா, அதை விற்க அவருக்கு உரிமை உள்ளதா என நிர்ணயிக்கத்தான்.உரிமையாளர் தான் உங்களுக்கு விற்கிறாரா என அனைத்து விதத்திலும் உறுதி செய்த பின் தான் அந்த இடம் வாங்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும்

இதுவரை படித்ததில் ஒரு விஷயம் உங்களுக்கு புரிந்திருக்கும். இது மிக டெக்னிகல் ஆன விஷயம். இத்தனை விஷயங்களைச் சாதாரண மக்களால் படித்து புரிந்து கொள்ள முடியாது. சொத்து விஷயங்களை டீல் செய்யும் வழக்கறிஞராகப் பார்த்து அவரிடம் இந்த விஷயங்களைச் சரி பார்த்த பிறகே நிலம் வாங்க முடிவெடுப்பது நல்லது.

பல லட்சங்கள் செலவு செய்து ஒரு சொத்து வாங்கும் போது சில ஆயிரம் வழக்கறிஞருக்குச் செலவு செய்து அதில் வில்லங்கம் இருக்கிறதா எனப் பார்த்து விடுவது நிம்மதியாக இருக்க உதவும்!

படத்திற்கு நன்றி :

http://www.designevolutions.com/photogallery.html

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “வீடு வாங்கும் போது சரி பார்க்க வேண்டிய விஷயங்கள்

  1. ஒரு முறை தான் குடியிருக்க இடம் வாங்கினால், அத்துடன் நிறுத்தாது மீண்டும் மீண்டும் வீடோ நிலமோ வாங்குவது, மண்ணாசையினால் மட்டுமில்லை. சிறந்த முதலீட்டு வழி என்பதாலும் தானே.

    எனினும் மிக அவசியமான குறிப்புகள். தொடர்ந்து எழுதுங்கள்.

  2. நல்ல குறிப்புகள் மோகன். மிகவும் பயனுள்ளவையும் கூட.

    வல்லமையில் உங்கள் கேள்வி பதில் வருவது குறித்து மகிழ்ச்சி.

  3. உயர் திரு அவர்களுக்கு வணக்கம் .எனக்கென்று சென்னையில் அரை கிரௌண்ட் காலி மனை உள்ளது .அணைத்து ஆவணங்கள் சரியாக உள்ளது .என் மகளின் திருமண தேவைக்காகவும்,மகனின் கல்விக்காகவும் விற்க முடிவு செய்துள்ளேன்.என்னிடம் மனை வாங்குபவர் இடம் மேற்கொள்ள வேண்டிய வழி முறைகள் என்ன ? முழு விவரம் தேவை தோழரே .

Leave a Reply to வெங்கட்

Your email address will not be published. Required fields are marked *