பவள சங்கரி

வாழ்வியல் வண்ணங்கள் (1)

சுட்டும் விழி

பெண்களை, குத்துவிளக்கு, குலவிளக்கு என்று கொண்டாடுவது பெரும்பாலும் நம் தமிழர் மரபு. அம்மரபு வழி பண்பாடு பெண்களுக்கென்று ஒரு எல்லைக்கோட்டையும் நிர்ணயித்து வைத்துள்ளது. அந்த எல்லைக்கோட்டினுள் வாழ்த் தெரிந்த பெண்மகள், தம் சுய விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடாமல் ஒரு தவ வாழ்க்கையை மேற்கொண்டு காலத்தை கடத்தி வந்த காலங்கள், பெண்களின் வாழ்க்கைக்குப் பாதுகாப்பு என்பது உறுதியான ஒன்றாக இருந்தது. பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம், கல்வியறிவு, என முன்னேற்றமடைய ஆரம்பித்தவுடன், இந்த பாதுகாப்பு பண்பாட்டு எல்லை சுருங்கி, சுதந்திரம் என்ற ஒன்று கட்டவிழ்த்து விட்டது போன்ற நிலையை ஏற்படுத்துவதன் விளைவாக பல பிரச்சனைகளையும் எதிர்கொள்கிறார்கள். சில நேரங்களில் காற்றில் ஆடும் தீபமாக வாழ்க்கை அச்சமூட்டுகிறது. சில காலங்களில் அது நிலைபெற்று நின்றுவிடும் என்ற நம்பிக்கை இருந்தாலும், இந்த இடைப்பட்ட கால ஊசலாட்டம் ஏற்படுத்தும் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வு வேண்டும்.

நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும், தன்னம்பிக்கையும், சலியாத உழைப்பும் கொண்டு சமுதாயத்தில் பல்வேறு சாதனைகள் புரிந்து கொண்டு, பலவேறு துறைகளிலும், பலருக்கும் முன்னோடியாகவும், இருக்கக் கூடியவராகவும் உள்ள இக்காலகட்டத்திலும், சுயவிழிப்புணர்வு இன்மையாலும், தேவையில்லாத அச்சம், அசாத்திய துணிச்சல், தவறான முடிவெடுத்தல், அளவிற்கதிகமான தன்னம்பிக்கை, கோழைத்தனமான முடிவு என இப்படி பல்வேறு வழிகளில் தங்கள் வாழ்க்கைக்கு தாங்களே பகையாளி ஆனவர்களும் உண்டு. அந்த வகையில் இக்கட்டுரைத்தொடர் பல உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்டு, இன்றைய பெண்களின் நிலையை அலசப்போகிற ஒரு நிதர்சனம். இதில் சுழலப் போகும் தீபங்கள் நீங்கள் அறிந்தவர்களாகவோ, உங்களுக்கு மிகவும் நெருங்கியவர்களாகவோ இருக்கலாம்….. தத்தளிக்கும் தீபங்கள் சில அணைந்து விட்டாலும், எப்படி வாழக்கூடாது என்பதற்கு முன்னுதாரணமாக இருப்பதன் முகமாக வாழப்போகிறவர்கள். இக்கட்டுரைகளில் ஊரும், பெயரும் மாற்றப்பட்டுள்ளது. யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்பட்டதும் அல்ல. சில நிதர்சனங்கள் சரியான முறையில் புரிந்து கொள்ளப்படல் வேண்டும் என்ற ஆதங்கத்தில் மட்டுமே எழுதப்படுகிறது.

தீபம் (1)

தணலில் வெந்த தாய்மை…..

பெரும்பாலான குடும்பங்களில் நம் குழந்தைகளின் திருமண வாழ்க்கையையும், மற்ற முக்கியமான எதிர்கால முடிவுகளை எடுப்பதிலும் ஜோசியம், ஜாதகம் என்பது பெரும்பங்கு வகிக்கிறது. பல நேரங்களில் தலையெழுத்தையே மாற்றக்கூடிய வல்லமை பெற்றது. அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும் அல்லவா….?

சந்திரிகா, நல்ல பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் பிறந்து, தெய்வ நம்பிக்கையும், பெரியோரிடம் பயபக்தியும் கொண்டு, அவ்ர்தம் சொற்களை வேதவாக்காக எண்ணி வாழக்கூடிய சராசரி இந்தியப்பெண். சுயவிருப்பு, வெறுப்பு என்பதற்கெல்லாம் இடம் இருந்ததில்லை இது போன்ற சூழலில் வளரும் பெண்களுக்கு. பெரியவர்கள் சொல்வதை கண்மூடி கேட்டுக் கொண்டு போக வேண்டியதுதான் ஒரேவழி. மாற்றுவழி என்ற உபாயமே வழங்கப்படுவதில்லை. படிப்பில் நல்ல சூட்டிப்பான பெண் அவள். பள்ளியிறுதித் தேர்வில் பள்ளியிலேயே இரண்டாவது மாணவியாக தேர்ச்சி பெற்றவள். மேற்படிப்பு படித்து மருத்துவராக வேண்டும் என்று பல கற்பனைகள் கொண்டிருந்தவள். தன் விருப்பம் எப்படியும் நிறைவேறும் என்ற கனவும் கொண்டு வாழ்பவள்.

ஆனால் நடந்ததோ வேறு. உறவு வகையில் நல்ல வரன் வரவும், ஜாதகத்தில் சில தோஷங்கள் பெயரைச் சொல்லி, அதற்குத் தோதான வரன் அமைவது சிரமம், அதனால் எல்லாம் கூடிவந்து இப்படி ஒரு வரன் வரும்போது தவிர்க்கக் கூடாது என்ற மூத்தோரின் சொல்கேட்டு வேறு வழியின்றி, கனவுகளைப் புதைத்துவிட்டு மங்கல நாணை மனமுவந்து ஏற்றுக் கொண்டவள். அதற்குப் பிறகு வாழ்க்கை தெளிந்த நீரோடையாகத்தான் போய்க்கொண்டிருந்தது, இரண்டாவது குழந்தை பிறக்கும் வரை. நல்ல வசதியான குடும்பம். பரம்பரையாக நெசவுத் தொழில் செய்பவர்கள். தற்காலமுறையில் நவீனப்படுத்த்ப்பட்ட இயந்திரங்களுடன், கடின உழைப்பும் சேர நன்கு கொடிகட்டி பறந்து கொண்டிருந்தனர்.

காலச்சக்கரம் எப்போதும் ஒரே மாதிரி சுழலுவதில்லையே. நூல் விலை ஏற்றம் பணியாட்கள் பிரச்சனை என வியாபாரத்தில் புயல் அடிக்க ஆரம்பிக்க, காரணங்கள் அலசப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, ஜோசியம், ஜாதகம் என்று பார்க்க ஆரம்பித்தார்கள். அப்போதுதான், சந்திரிகா இரண்டாவது குழந்தை உண்டாகியிருந்தாள். வீட்டு நிலை அவள் உடல்நிலையையும் பாதித்தது. மிகப் பொறுமையான குணமும், அமைதியான சுபாவமும் கொண்டவளான அவள் அனைத்தையும் பொறுத்துக் கொண்டுதான் இருந்தாள். ஆனால் அந்தப் பொறுமையின் எல்லையைச் சோதிப்பதாகவே சம்பவங்கள் நடந்தது.

எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில், அனைத்து விதமான பரிகாரங்களும் செய்யத் தயாராகிவிட்டனர். அந்த இடத்தில்தான் சந்திரிகாவின் விதி விளையாட ஆரம்பித்தது. குடும்ப ஜோசியர் குலதெயவ வழிபாடு, அன்னதானம் என ஏற்றுக்கொள்ளக்கூடிய அனைத்துப் பரிகாரங்களையும் சொன்னவர், இறுதியாக ஒரு குண்டை தூக்கிப் போட்டுவிட்டார். ஆம், சந்திரிகாவின் வயிற்றில் கரு உருவான நேரம் சரியில்லையாம்.! அதுவும் ஒரு காரணமாம் வியாபாரம் நொடித்துப்போவதற்கு. அவ்வளவுதான் குடும்பமே சேர்ந்து முட்டாள்தனமாக ஒரு முடிவெடுத்துள்ளார்கள். சந்திரிகாவின் வயிற்றில் வளரும் கருவை அழித்துவிடுவது என்று. அவள் அழுது ஆர்ப்பாட்டம் செய்தும் கணவனின் கட்டாயத்தால், வேறு வழியின்றி மருத்துவமனை சென்றவள், அங்கு மருத்துவர், குழந்தை நன்கு வளர்ந்துவிட்டதால் கருவை அழிக்க முடியாது என்று சொல்லி, வயிற்றில் பாலை வார்த்ததால், வேறு வழியின்றி, வீடு திரும்பினர்.

நாட்கள் பிரச்சனைகளுடன் சேர்ந்தே நகர்ந்து கொண்டிருந்தது. வியாபாரத்தில் ஒரு பிரச்சனை முளைவிட ஆரம்பிக்கும்போதே அதன் வேரை சரியாக அறிந்து அதனைக் களையாவிட்டால், அது விடவிருட்சமாக வளரத்தானே செய்யும்? அதனைக் களையும் முயற்சியை சரியாகக் கடைப்பிடிக்காமல், தேவையற்ற மற்ற விசயங்களில் கவனம் செலுத்தி, மேலும் பிரச்சனையை வளர்த்துக்கொண்டவர்கள், சந்திரிகாவின் வயிற்றில் வளரும் குழந்தையின் மீதே அதிருப்தியை வெளிப்படுத்திக் கொண்டேயிருந்ததால் அவள் மனதிலும், உளைச்சல் அதிகமாக ஆரம்பித்தது. விளைவு அவள் உடல் நலமும் பாதிக்கப்பட்டது. பிரசவ நேரம் நெருங்க, நெருங்க, குடும்பத்தில், குழந்தை பிறந்தவுடன் அதை என்ன செய்வது என்று யோசிக்கும் அளவிற்கு போனது, தாயினால் தாங்க முடியாத வேதனையாகிப் போனது.

பிரசவ வேதனையை பல்லைக் கடித்துக்கொண்டு தாங்கிக் கொண்ட அந்தத் தாய்க்கு, பெற்ற குழந்தையை அனாதை ஆசிரமத்தில் விட்டுவிடலாம் என்று இறுதியாக எடுத்த முடிவில் உடன்பட முடியாத வேதனையில் கதிகலங்கிப் போனாள். எவ்வளவோ வாதாடிப் பார்த்தும் குடும்பத்தில் அனைவரும் ஒன்றுபோல குழந்தையை இழப்பதிலேயே குறியாய் இருக்க, செய்வதறியாது, மன வேதனையில் புழுவாய்த் துடித்தவள், பிறந்தவீடே அடைக்க்லம் என்று அடிக்கடி அங்கு சென்று தங்கவும் ஆரம்பித்திருக்கிறாள். அங்கேயும் அவளுக்குப் பிரச்சனை உறவினர் வழியாக வந்துள்ளது. பெண் கணவன் வீட்டில் ஒழுங்காகப் பிழைக்காமல் தாய் வீட்டில் வந்து அடிக்கடி தங்க ஆரம்பித்தால் சில பெற்றவர்கள் வழக்கமாகச் செய்யும் தவறு, அப்பெண்ணின் மனநிலையைப் பற்றிக்கூட அறிந்து கொள்ள முயலாமல், எப்படியும் அவளை சமாதானப்படுத்தி கணவன் வீட்டில் கொண்டு விட்டுவிடுவது….. அதற்கு, திருமணம் ஆகாத அடுத்த பெண்ணைக் காரணம் காட்டி அவள் வாழ்க்கை கெட்டுவிடும் என்று பயமுறுத்தி கட்டாயப்படுத்தி அனுப்பி விட்டார்கள்.

பிரச்சனை அதிகமாக, புகுந்த வீட்டிலோ குழந்தையை எங்காவது தொலைத்துவிட்டு வந்தால்தான் ஆச்சு என்று கட்டாயப்படுத்தவும், பிறந்த வீட்டிலோ, கணவனும், மாமனார், மாமியாரும் என்ன சொல்கிறார்களோ அதன்படி கேட்டுத்தான் நடக்க வேண்டும் என்று உறுதியாகச் சொல்லி அனுப்பிவிட்டதாலோ, இருதலைக்கொள்ளி எறும்பாக போக்கிடம் தெரியாமல், ஒரு வயதே ஆன, பெண் குழந்தையை, இழக்கவும் முடியாமல் அத்தாய் பட்டவேதனை சொல்லில் அடங்காது. பொருளாதாரச் சுதந்திரமும் இல்லாமல், தனியாக வெளியே சென்று குழந்தைகளைக் காப்பாற்றும் துணிச்சலும் இல்லாமல், பெற்றக் குழந்தையை பிரித்து வைக்கக் கட்டாயப்படுத்தும் கொடுமையைச் செய்யும் புகுந்த வீட்டாரைத் தட்டிக் கேட்கும் தைரியமும் இல்லாமல், ஒரு பெண் எடுக்கக் கூடிய அடுத்த முடிவு என்னவாக இருக்க முடியும்?

ஆம், அதேதான், தன் இறப்பு மட்டுமே இதற்கான ஒரே தீர்வு என்று முடிவெடுத்தவள், தன் குழந்தைகளும் இவர்களிடம் சிக்கித் தவிக்கக் கூடாது என்ற கோழைத்தனமான முடிவையும் சேர்ந்தே எடுத்து விட்டாள். மூன்று வயதான மூத்த மகனையும், ஒரு வயதான இளைய மகளையும் தம் படுக்கையறையினுள் கூட்டிச்சென்று, எண்ணவும் அச்சம் ஏற்படுத்தும் செயலைச் செய்துவிட்டாள். மண்ணெண்ணையை ஊற்றிக் கொளுத்தி விட்டாள். மூன்று உயிர்களும் கருகி சாம்பலாகிவிட்டன. இதற்கு யார் காரணம், மூடநம்பிக்கைகள் என்றாலும்,

பாதகஞ் செய்பவரைக் கணடால்-நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா!-அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!
துன்பம் நெருங்கி வந்த போதும்-நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா!
திடங்கொண்டு போராடு பாப்பா!

என்று முழங்கினானே பாரதி, அத்துணிச்சலை ஊட்டி வளர்க்காத பெற்றோரின் குற்றமா அன்றி,

துன்பம் தீர்வது பெண்மையி னாலடா!
சூரப் பிள்ளைகள் தாயென் றும் போற்றுவோம்.
வலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா!
மானஞ் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள்
கலிய ழிப்பது பெண்க ளறமடா!
கைகள் கோர்த்துக் களிப்பதுநின் றாடுவோம்.!

என்று கணவனை வழிநடத்திச் செல்லும் வனமையையும் வளர்த்திக் கொள்ளாதது அவளுடைய குற்றமா? சிந்திக்க வேண்டும் நண்பர்களே. பெண் குழந்தைகளை கட்டுப்பாடுகள் வைத்து வளர்க்க வேண்டியது அவர்களுடைய பாதுகாப்பிற்காக மட்டுமே என்று வாதிடும் பெற்றோராக இருந்தாலும், அவளுக்கு தற்காப்பு என்ற தாரக மந்திரத்தையும், வாழ்க்கையில் எத்தகைய பிரச்சனைகள் வந்தாலும், கோழைத்தனமான முடிவு எடுக்காமல், எதிர்த்து நின்று சமாளிக்கும் வல்லமையையும் ஊட்டி வளர்க்க வேண்டாமா?

ஒரு பெண் குழந்தை பிறந்தவுடன், பெற்றோரின் பொறுப்புகள் அதிகமாவதை உணரும் நாம், தங்கத்தையும், வெள்ளியையும் சேர்க்க ஆரம்பிக்கிறோம். அவளுடைய சுயவலிமையை மேம்படுத்திக் கொள்ளும் கலையைக் கற்பிக்கத் தவறுகிறோம். திருமணம் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஒரு பகுதி மட்டுமே. அதற்கு அவள் தன்னை முழுவதுமாக தயார்படுத்திக் கொள்ளவேண்டும். அதற்கு அவளுக்குத் தேவையான கல்வியறிவை ஊட்டவேண்டும். சுயவிழிப்புணர்வை ஏற்படுத்தி வாழ்க்கையில் நேர்படும் பிரச்சனைகளை எதிர்த்து நின்று சமாளிக்கும் சக்தி கொடுப்பதும் அக்கல்வியறிவு மட்டுமாகத்தானே இருக்க முடியும். அக்கல்வியறிவை எப்பாடுபட்டேனும் அளிக்க வேண்டும் என்பதில் உறுதி கொள்ள வேண்டும். அது மட்டுமே இது போன்றதொரு பிரச்சனைகள் வராமல் தடுக்கக்கூடிய காப்பாக அமைய முடியும் அல்லவா.

”தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.”
என்னும் ஐயனின் வாக்கைக் காக்கும் பெண்மகளாக வாழும் வாய்ப்பை வளப்படுத்துவோம்!

தயவுசெய்து உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

தொடரும்.

படங்களுக்கு நன்றி:

http://ssubbanna.sulekha.com/albums/bydate/2009-09-20/slideshow/281605.htm

http://trade.indiamart.com/details.mp?offer=2095133988

 

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “காற்றில் ஆடும் தீபங்கள்

  1. தோழி! நல்லதொரு பணி செய்தீர்கள!

    விவரமாய் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தீர்கள் பெண்கள் கட்டாயமாய் வாழந்தே ஆக வேண்டியதாய் இருக்கிற இருட்டு வாழ்க்கையை – குருட்டு வாழ்க்கையை!

    திருமணம் செய்து கொடுத்து விட்டால் – அங்கேயே எல்லாவற்றையும் முடித்துக்கொள்ள வேண்டும் – பிறந்த வீட்டிற்கு எந்தப் பிரச்சினையும் வரக்கூடாது என்று நினைக்கிறபிறந்த வீட்டார் இன்றைக்கும் இருக்கிறார்கள் என்பது உண்மையே! உண்மையே!

    கூடப்பிறந்த சகோதரர்களும் அவர்களுக்கு வாய்க்கின்ற மனைவிமார்களும் செய்கின்ற நாட்டாமை ஒருபக்கமென்றால் – இதிலே பிறந்த வீட்டுத்தாய் கூட ஒத்து ஊதுகின்ற கொடுமைகள் நடக்கின்றன!

    நீங்கள் கல்வியைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இதிலே எனக்கு கருத்து வேறு பாடு உண்டு.

    படித்த பெண்கள் தான் இவ்வாறான தொல்லைகளுக்கு அதிகம் ஆளாகிறார்கள்.

    பெண்களுக்கான வாழ்க்கைக் கல்வியைச் சொல்லித் தர இங்கே எவரும் முனைவதில்லை!
    ஒவ்வோவொரு பல்கலைக் கழகத்திலும் Department of Women Studies  என்று தனித் துறையே இருக்கிறது இங்கு பெண்களுக்கான தனித்திறன்களை வளர்க்க ஒரு கல்வி பாடத்தயையும், செம்மார்ந்த பயிற்சியையும் வழங்க வேண்டும்.

    பெண்களுக்கென்றே தனிப் பல்கலைக் கழகங்களும் கூட உள்ளன . இவர்கள் ஏட்டுச் சுரைக்காய்க் கல்வியை விடுத்து சமூகக் களத்தில், குடும்பமெனும் நிறுவனத்தில் – ஒரு பெண் சந்திக்க வேண்டிய பிரச்சினைகளுக்கு – அவள் தீர்வு காணத் தக்க – வழி பாட்டு முறைகளை Case Study  வாயிலாக – போதிக்க வேண்டும்.

    அதுபோன்றே வேலை செய்யும் இடங்களில் பெண்களுக்கு வேண்டிய திறன் தொகுப்பை (Skill Set) அவர்களுக்கு வழங்க வேண்டும்.

    பணி செய்யும் இடத்திலே பாலியல் தொடர்பான பிரச்சனைகளைப் பெண்கள் சந்தித்தபடி இருக்கிறார்கள் – புகழ் பெற்ற விசாகா தீர்ப்புக்குப் பிறகு – பெயரளவில் – பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகளைக் கவனிக்க ஒரு கமிட்டி அலுவலகங்களில் உருவக்கப்பட்டிருக்கிறதே தவிர , அங்கு எதுவும் சரிவர நடப்பதில்லை.

    நாம், முன்னோடியான ஒரு பெண்மணியை முதல்வராகக் கொண்டுள்ளோம். இது ஒரு பெரும் பாக்கியம். தயவு செய்து – இவ்வாறான விசயங்களை அவரது கவனத்துக்குக் கொண்டு செல்லுங்கள். பெண்கள் பிரச்சினைகள் அதி முக்கியமானவை. அவர் மனது வைத்தால் இதற்கு சில ஆக்க பூர்வமான சில விடிவு முறைகள பிறக்கும்.

    உண்மை என்னவென்றால் தயார் நிலை இல்லாமலேயே பெண்கள் சமுதாயத்திற்குள் தள்ளப்பட்டிருக்கிறார்கள் – இன்று மக்கள் தொகையில் இளம் வயதுப் பெண்களின் விழுக்காட்டுத் தொகையையும் எண்ணிப் பாருங்கள்!

    தயவு செய்து இதை இதனோடு நிறுத்தி விடாமல், மேற்கொண்டு உரிய பணிகளைத் தொடருவோம்.

  2. அன்பின் தோழி ரேணுகா,

    சரியான புரிதலுக்கு நன்றி. மிக ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை முன் வைத்துள்ளீர்கள். வெறும் ஏட்டுக்கல்வி வேலைக்காகாது என்ற தங்கள் கருத்து முற்றிலும் ஏற்றுக் கொள்ளக்கூடியது.. ஊதுகிற சங்கை நாம் ஊதிக்கொண்டே இருந்தால் கட்டாயம் ஒருநாள் சம்பந்தப்பட்டவர்கள் காதில் விழும் அல்லவா….. முயற்சி செய்வோம். தங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றி ரேணுகா…. பல பிரச்சனைக்ளை அலசுவோம்… இன்னும் நிறைய இருக்கிறதே… இணைந்து கொள்ளுங்கள் அவசியம்…

    அன்புடன்

    பவள சங்கரி.

  3. .பயனுள்ள கட்டுரை.
    எங்கே கிடைக்கும் பகுத்தறிவு கல்வி.?
    பாடத்திட்டத்தில் கிடைக்குமா? தற்கொலை அதுவும் நெருப்பில் தற்கொலை அதுவும் வளர்ந்த மகனை நெருப்பிலிட எப்படி மனம் வந்தது. அத்ற்கு கருவையே அழித்திருக்கலாம் எனத்தோன்றுகிறது.
    மனம்தான் அடிப்படை.அதைத்தான் வளர்க்கவேண்டும். அதுதான் வளரவேண்டும்.
    பணம் இப்படித்தான் செய்யும்.
    தெய்வத்தை வழிபடும் குடும்பத்தில் கரு அழிப்பு பரிந்துரைக்கப்படுகிறது.எங்கேயாவது பெரியார் பெண்களுக்கு எதிராக பேசியிருக்கிறாரா? தெய்வத்தை வழிபடுகிறவர்கள்தான் பெண்களை எப்போதும் குற்றவாளிகளாக்குகிறார்கள். இந்த விழிப்புணர்வு பெண்களுக்குவேண்டும்.
    பகுத்தறிவுவாதிகளால் பெண்களுக்கு எந்தக்கேடும் இல்லை.
    இதைப்புரிந்து அவ்வழியில் செல்ல் தங்களை தயார்செய்துகொள்ளவேண்டும்.
    போராடவேண்டும்.. தற்கொலை கூடாது.
    தொடரட்டும் இதுபோன்ற கட்டுரைகள். சுட்டுத்திருத்தட்டும் வடிகட்டிய மூடர்களை. வாழ்த்துகள்

  4. கலங்க வைக்கும் நிகழ்வு. சிந்திக்கத் தூண்டும் கட்டுரை. ‘இதுதான் காரணம்’ என்று வரையறுத்துச் சொல்வது கடினம்தான். முறையாகக் கல்வி கற்காதவர்கள் கூட தன்னம்பிக்கையுடன் வாழ்வை எதிர்கொள்கிறார்கள். இந்தப் பெண்தான் ஓரளவு படித்திருக்கிறாரே. உலக அனுபவம், அனுபவ அறிவு, வெளி உலகின் exposure – இவை தான் முக்கியம் என்று தோன்றுகிறது. வெளி உலகில் என்ன நடக்கிறது, என்ன மாதிரி வாய்ப்புகள் இருக்கின்றன, பெண்ணால் தனியாக வாழ முடியும், என்பது போன்ற எந்த விஷயமும் தெரியாமல் போவதாலும், துயரத்தைப் பகிர்ந்து கொள்ள யாரும் இல்லாமல் போவதாலும், அப்படியே இருந்த போதிலும், குடும்பத்தையும், சமுதாயத்தையும் எதிர்த்துக் கொண்டு வாழ தைரியமில்லாமல் போவதாலும் இந்த சம்பவங்கள் நிகழ்கின்றன. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும், அதிலும் பெண்ணென்றால் அதீதப் பொறுமை வேண்டும் என்பது ஊட்டி ஊட்டி வளர்க்கப்படுகிறது. ஆனால் அதனுடைய எல்லை மட்டும் வரையறுக்கப்படல்லை.

  5. சந்திரிகாவின் மரணம் மிகவும் பரிதாபமானது. தன்னுடன் தனது இரு பிள்ளைகளையும் கொண்டுசென்றது கொடூரமானது! இதற்கு யார் காரணம் என்பதை நாம் வலைபோட்டு தேடவேண்டியதில்லை.
    நம் மக்களிடையே இன்னும் நிலவிவரும் மூடத்தனமே எனலாம். நெசவு தொழிலில் ஈடுபட்டு பொருள் ஈட்டிய அந்த செல்வந்தர்களுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதும் அதற்கான காரணத்தைக் கண்டறியாமல் முட்டாள்தனமாக ஜாதகத்தையும் , ஜோசியத்தையும் நாடியது என்? இதில் இருந்து என்ன தெரிகிறது? நாம் இன்னும் மூட பழக்க வழக்கங்களில் இருந்து விடுபடவில்லை என்பதே அந்த உண்மை.
    எவ்வளவுதான் படித்துப் பட்டம் பெற்றாலும் இன்னும் மூடர்களாகவேதான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!
    இந்தியாவில்தான் இத்தகைய மூட நம்பிக்கைகள் மலிந்து காணப்படுகின்றன! இந்தியாவில்தான் போலிச் சாமியார்களும் புற்றீசல் போன்று பெருகியுள்ளனர்! மூட நம்பிக்கைகளை மக்கள் நம்பும்வரை இதுபோன்று ஜோசியத்தையும் ஜாதகத்தையும் மக்கள் நம்பி ஏமாந்து கொண்டுதான் இருப்பார்கள்.
    ஜாதகம் தான் இங்கு சந்திரிகாவின் படிப்புக்கு தடை போட்டது,. ஜாதகம்தான் அவளை அந்த இளம் வயதிலேயே ஒருவனுக்கு மனைவியாகியது. அதே ஜாதகம்தான் அவளின் உயிருக்கும் அவளது இரு பிள்ளைகளின் உயிருக்கும் உலைவைத்தது! வயிற்றில் உண்டான கருவுக்கும் நெசவுத் தொழிலுக்கும் என்ன தொடர்பு என யாராவது பகுத்தறிவைப் பயன்படுத்தினார்கள்?
    இதிலிருந்து ஒன்று தேற்றனத் தெரிகின்றது. நமது கல்வி முறைக்கும் பகுத்தறிவு வளர்ச்சிக்கும் இம்மியும் தொடர்பில்லை! இது மிகவும் பரிதாபமானது! , ……டாக்டர் ஜி. ஜான்சன்.

  6. அன்பின் திரு டாக்டர் ஜான்சன்,

    வணக்கம். இந்த ஜோசியம், ஜாதகம் என்ற கூற்றை நம்பி தம் வாழ்க்கையைத் தொலைத்த, தொலைத்துக் கொண்டிருக்கும் பலரைக் காண முடிகிறது. மெத்தப் படித்த மேதாவிகளும்கூட இதில் அடக்கம். கல்வியறிவிற்கும் இதற்கும் என்ன சம்பந்தம், ஜோசியமும் அறிவியல்தான் என்று வாதிடுபவர்களையும் காண முடிகிறது. இந்தியாவில், குறிப்பாக தென் மாநிலங்களில் பலருடைய கல்வி மற்றும் திருமண வாழக்கையை நிர்ணயிப்பதே இந்த சில கட்டங்கள்தான். இறுதியில் விதியின் மீது பழியைப் போடுவதும் உண்டு! தங்கள் வாசிப்பிற்கும், ஆழ்ந்த கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி.

    அன்புடன்
    பவள சங்கரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *