“ரோபோப் பூனை” வியாதி: மனிதர்களுக்கு ஆபத்து?

0

 

 

ரேணுகா ராஜசேகரன்
PhD (Chem); PhD (Education); PhD(Admin)
Educator and Professor, USA

நேற்று முன் தினம் வந்த செய்தி: இங்கிலாந்தில், பூனைகள் மர்மமான முறையில் நடக்கின்றன. வால் முறைப்பாய் நீண்டு நிற்க, உடம்பை நீளவாக்கில் இழுத்தபடி, நீட்டிய காதுகளுடன், கண்கள் அகலத் திறந்து இருகண்களும் எதிர்வருவதை விழிப்புடன் உற்று நோக்கியபடி இருக்க, பின்னங்கால்களை முன்னோக்கி இழுத்து வைத்துக் கொண்டு எதன் மீதோ பாய எத்தனிக்கும் தோரணையுடன் பூனைகள் நிற்கலாகின்றன, எச்சரிக்கையாய் நடக்கலாகின்றன.

முதலில் ஒரு பூனை – இரு பூனை என ஆரம்பித்தது இதுவரை 21 பூனைகளாக எண்ணிக்கை இவ்வாறு உயர்ந்திருக்கிறது!

இவ்விதமான பூனை எவ்வாறு தோற்றமளிக்கும் என்பதை இப்படத்தில் காண்க.

படத்திற்கு நன்றி: http://www.catster.com/the-scoop/robotic-cat-disease-has-the-uk-buzzing

எந்திர மனிதனைப் போல் பூனைகள் இவ்வாறுநிற்பதால் – நடந்து செல்வதால் இந்த வியாதிக்கு Robotic Cat Disease எனப் பெயரிட்டிருக்கிறார்கள்.

இது என்ன வியாதி – இது எதனால் ஏற்பட்டிருக்கிறது என்று சரியாக அறிந்து கொள்ள முடியவில்லை. ஆனால், இவ்வாறான ஒரு உடல் நிலை வர வேண்டுமென்றால் மைய நரம்பு மண்டலம் பாதிக்கப் பட்டிருக்க வேண்டும் என்பது அடிப்படைக் காரணம் என்பதால், இவ்வாறான நோயுற்ற சில பூனைகளுக்கு மூளை பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் மூளையில் எவ்விதத் தோற்றும் ஏற்பட்டிருக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இந்த வியாதி ஒரு நாளில் திடீரென ஏற்படவில்லை என்பதாலும், படிப்படியாக வளர்ந்திருக்கிறது என்பதாலும் – இந்நிலை அடுத்து எந்நிலையில் தொடரும் எனபது கவனிக்கப் படவேண்டியதாகும்.

இப்போது தெரிந்துள்ளவரை இந்த ரோபோடிக் வியாதி ஏற்பட்டுள்ள பூனைகள் யாவும் வீட்டிற்கு உள்ளிலும் வெளியிலும் சஞ்சரிப்பன. வீட்டிற்கு வெளியில் சஞ்சரிக்கும் வேளையில் இவை பிடித்துத் தின்னும் எலி போன்ற சிறு மிருகங்களுக்கு ஏற்பட்டுள்ள வியாதி இவைகளுக்குத் தொற்றி இருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் சொல்லுகிறார்கள்.

பூனைகளுக்குக் கடைகளில் வாங்கிப் போடப்படும் பூனை உணவில் உள்ள கோளாறுகள் இவ்வாறான பிரச்சனைகளை ஏற்படுத்தியிருக்கக் கூடும் என்றும் ஒரு சாரார் கூறுகின்றனர். இதிலே முக்கியமாக அவர்கள் கருதுவது என்னவென்றால், பூனைக்கான தயார் நிலை (ready-made) உணவுகள் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக அவற்றில் சேர்க்கப்படும் பூஞ்சணக் கொல்லிகளான இரசாயன மருந்துகள், பூனைகளின் நோய் எதிர்ப்புத் திறனைப் படிப்படியாகக் குறைத்து இவ்வாறன நிலைக்கு இட்டுச் சென்றிருக்கலாம் எனவும் கருதுகின்றனர்.

எது எப்படியாயினும், பூனைகளுக்கு ஏற்பட்டிருக்கிற வியாதி பூனைகள் சம்பந்தப்பட்டது, இதற்கும் மனிதர்களுக்கும் தொடர்பில்லை எனவே பலரும் கருதி வருகின்றனர்.

பூனைகளுக்கு ஏற்பட்டிருக்கிற வியாதியை மனிதர்களுக்குத் தொடர்பற்ற நிகழ்வாக இப்போது பலர் கருதினாலும், இவ்விரண்டும் தொடர்புடையதாக இருக்கக்கூடும் என்று நம்மை சந்தேகிக்கவைக்கிறது வரலாறு காட்டும் சான்று!

என்ன சான்று? 1956 ல் நிகழ்ந்த மினமேட்டா பயங்கரம்!!

அன்று ஜப்பானின் மினமேட்டா வளைகுடாக் கடற்கரையில் பூனைகள் வித்தியாசமாகவும், விபரீதமாகவும் கத்தியபடி, அவலமாகக் குதித்துக் குதித்து, நடனமாடியபடி, கடலுள் குதித்து, தற்கொலை செய்து கொண்டன.

இதை மினமேட்டா மக்கள் கண்ணுற்றனர் – ஆனால் அவர்கள் இதனை ஒரு வேடிக்கையாகவும், விளையாட்டுக் களிப்பாகவும் எடுத்துக்கொண்டனர். பூனைகளுக்கு ஏதோ பைத்தியம் பிடித்துவிட்டது எனக் கடலோரச் சிறுவர்கள் கும்மாளம் போட்டனராம்!! இந்தக் கோலாகலக் களிப்பைப் பத்திரிக்கைகள் பறைசாற்றின.

அடுத்துதான், தொடர் நிகழ்வுகளாக, மனிதர்க்கு ஏற்பட்டக் கொடும் கேடுகள் படிப்படியாக வெளிப்பட்டன. மனிதருக்குக் கேடுகள் வெளிப் பட்டபோது நிலைமை கட்டுக்கு மீறிப் போயிருந்தது!!

மூவாயிரம் பேரை ஒட்டு மொத்தமாய் விழுங்கி, பரம்பரை பரம்பரையாக, மக்களை, முடமாக்கி – பித்தாக்கி இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிற “மினமேட்டா வியாதி” எனப் பெயர்ச் சூட்டப் பெற்றிருக்கிற கொடிய நோய் இன்று ஜப்பான் மக்களின் தொடரும் பிரச்சனையாகும்.

குழந்தைகள் முதல் பெரியவர் வரை எவரையும் விட்டுவைக்காத மினமேட்டா கொடூர வியாதியைப் படத்தில் காண்க:

 

கைக்கடியாரம், தயாரிக்கும் ஒரு வேதித் தொழிற்கூடம், கடலில் சேர்த்தப் பாதரச நஞ்சு தான் மினமேட்டா வியாதியின் மூலக் காரணம். இக்கொடூரத்தை உலகத்திற்கு முதலில் வெளிப்படுத்தியவை பூனைகளே!

மினமேட்டா முழுவிவரம் அறிய செல்லுக: http://www.env.go.jp/en/chemi/hs/minamata2002/

கடலிலிருந்து பிடிக்கப்படுகின்றன மீன்கள் – பூனைகள் ருசிபார்த்தபின்னரே தான், மக்கள் பயன்பாட்டுக்கு இந்த மீன்கள் செல்லுகின்றன என்ற இயற்கையாய் ஏற்படும் ஒரு செயல் தான் மிகப்பெரியதொரு, அறிவியல் உண்மை வெளிவரக் காரணமாயிருந்தது!

அன்று மினமேட்டாவில் இங்கும் அங்குமாக நிகழ்ந்த, தனித்தனி நிகழ்வுளை இணைத்தும் தொகுத்தும், ஆய்வு செய்தபோது, “பாதரச நச்சூட்டல்” என்கிற சித்தாந்தம் உருவானது. உணவுச் சங்கிலியில், ஒவ்வொரு இணைப்பிலும், உயிரிகள் எவ்வாறு தனக்குள் சென்ற நஞ்சைச் செறிவடைய வைக்கின்றன என்பதை அறிவியலாளர்கள் விளக்கினர்.

கடலில் கலந்த பாதரச நஞ்சு, நுண்ணுயிர்களால் வீரிய அங்கக மெர்கூரியலாக, வினைமாற்றம் அடைந்து, உருமாற்றம் பெற்றுக் கடல்வாழ்த் தாவரங்களை அடைகிறது. தொடர்படிவால் ஆங்கே செறிவு அடைகிறது. அத்தாவரங்களை மீன்கள் உண்ணுகின்றன; ஒரு மீன் தொடர்ச்சியாக இத்தாவரங்களை உண்ணுவதால் அவற்றின் உடலிலே தொடர்ச்சியாகப் பாதரச நஞ்சின் அளவு கூடிக்கொண்டே போகிறது; இந்த நச்சு மீன்களை – மீனவர் பிடிக்க, அவர்கள் அவற்றை விற்பனைக்கு அனுப்பும் முன்னரும் – அவற்றை அவர்கள் உண்ணும் – முன்னரும் அம்மீனவர்களோடு வாழ்ந்துவரும் பூனைகளே உண்ணுகின்றன –

பூனைகளின் உடலில் பாதரச நஞ்சு இவ்வாறு தொடர்ந்து செறிவடைகின்றது! இவற்றின் உடலில் தாங்கு திறனுக்கும் கூடுதலாக, நஞ்சு சேர்ந்த நிலையில், பூனைகளின் மைய நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டது. இதனால் தான் பூனைகள் வித்தியாசமாகவும், விபரீதமாகவும் கத்தியபடி, அவலமாகக் குதித்து, நடனமாடி, கடலுள் குதித்து, தற்கொலை செய்து கொண்டன என்கிற முழு உண்மை வெளி வந்தது.

ஆக அன்று, ஜப்பானின் மினமேட்டா வளைகுடாவில் நிகழ்ந்த மினமேட்டா பயங்கரத்தில், முதலில், பாதிப்பைத் தெரிவித்தவை பூனைகளே!!

ஆனால், அன்று முதலில் எவரும் இதனை சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை; மாறாக பூனைக்ளைக் கண்டு எள்ளி நகையாடினர். “நாமும் இந்நச்சு வலை(லி)யில் சிக்கியிருக்கிறோம் என்பதனை அவர்கள் புரிந்து கொள்ளக் கொஞ்சம் காலம் தேவைப்பட்டது.

இன்று இங்கிலாந்தில் ரோபோக்களைப் போல விரைத்து நிற்கிற பூனைகள் இப்புவி மண்டலத்தில் ஏற்பட்டிருக்கிற ஒரு பேரபாயத்தின் அறிகுறியாக இருக்கக்கூடும். இவற்றின் மூளைகளில் தொற்று இல்லை என்பதால் அவற்றிற்கு நச்சூட்டல் ஏற்பட்டிருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது. பூனைகள் நச்சூட்டல் அடைய வேண்டுமென்றால் அவை உண்ணும் எலி, மீன், சிறு பறவைகள் ஆகியனவற்றில் ஏதோ ஒன்றோ, இரண்டோ, அல்லது அனைத்துமோ நச்சூட்டல் அடைந்திருக்கின்ற(து)ன என்பது பொருள் – இவ்வாறு நாம் நமது சிந்தனையைத் தொடர்ந்து செலுத்தினால் – ஏதோ கொடுமையான நச்சூட்டல் சுற்றுச் சூழலில் நிகழ்ந்திருக்கிறது எனக் கொள்ளலாமா?

அருகிலும், தொலைவிலும் நிகழ்ந்து வருகிற, துண்டு நிகழ்வுகளை நாம் இப்போது கவனித்தாக வேண்டும். இவை ஒவ்வொன்றிலும் ஒரு சேதி இருக்கக் கூடும். இவற்றிற்குள்ளே நமக்கு இப்போது புரியாத, ஒரு தொடர்பு இருக்கக் கூடும். பொதுவாக, இயற்கையை உலுக்கும் பேரபாயங்களில், ஏதேனும் ஓர் உயிரினம், அடையாளமாகச் செயல்படும் என்பது நியதி.

எடுத்துக்காட்டாக, நில நடுக்கம் ஏற்படுகிறது என்றால், அது ஏற்படுவதற்குச் சற்று முன்னே. ஆயிரக்கணக்கில், எறும்புகளும், எலிகளும் இடம் விட்டு இடம் பெயரும் என்பது நமக்குத் தெரிந்த விஷயம் தான்!

பூனைகள் பொதுவாகவே மிகவும் புத்திசாலியானவை; மனிதர்களின் மீது மிகுந்த அபிமானம் கொண்டவை – பற்பல மனிதர்களை பூனைகள் ஆபத்திலிருந்து காப்பாற்றி இருக்கிற உண்மைக் கதைகள் உலகெங்கிலும் உள்ளன. எடுத்துக்காட்டாக கீழ்க் காணும் இணைப்புகளைக் காண்க:

(1) நச்சு வாயுக் கசிவை அறிவித்து மக்களைக் காத்த பூனை:

http://today.msnbc.msn.com/id/36434056/ns/today-today_pets_and_animals/t/me-ew-cat-warns-gas-leak-awarded/#.T5LWh6tSQR8

(2) வீட்டில் தீ பரவ இரட்டைக் குழந்தைகளைக் கருவில் சுமந்த கர்ப்பிணியைக் காத்த பூனை:

http://today.msnbc.msn.com/id/36834168/ns/today-today_pets_and_animals/t/pet-saviors-animals-who-saved-human-lives/#.T5LYEKtSQR_

மேசன் கூலி என்பவரின் பொன்மொழி ஒன்று:

மனிதர்களுக்கும் பூனைகளுக்கும் உள்ள சந்தோஷ ஒப்பந்தம் இது: பல மனிதர்களுக்கு மனிதர்களை விடப் பூனையைப் பிடிக்கும். அது போன்றே பல பூனைகளுக்கும், பூனைகளைவிட மனிதர்களையே பிடிக்கும் (A happy arrangement: many people prefer cats to other people, and many cats prefer people to other cats.)

இம்மொழி எத்தனை உண்மை என்பதை நாமறிவோம், செல்லப் பிராணிகளில் அலாதியானது பூனை. நமது இலக்கியத்தில் மட்டுமல்ல, நமது வாழக்கை முறையிலும் கூட நமக்கு அண்மையில் இருந்தபடி, நம்மைத் தொந்திரவு செய்யாது நம்மை அண்டிப் பிழைக்கிற பூனைகள், நமக்கு மிகவும் பரிச்சயமானவை மட்டுமல்ல – நமக்குப் பாதுகாப்புக் காவலர்களாகவும் விளங்குகின்றன. செல்லப் பிராணியாக இல்லாத நிலையிலும் கூட, சிறிதும் பெரிதுமான எத்தனையோ விஷயங்களில் பூனைகளின் தோழமையை, பாதுகாப்பு அரவணைப்பை நாம் உணர்ந்தபடி தான் இருக்கிறோம். பிற நாட்டு மனிதர்களைப் போல நாம் பூனைகளின் சின்னச் சின்னதான விஷயங்களைப் பதிவு செய்வதில்லை என்றாலும் நம் பழமொழிகள் பூனைகள் நம் வாழ்வோடு எத்தனை இணைந்தவை என்பதைக் காட்ட வல்லன.

விறைத்து நின்றபடி எதையோ விழிப்போடும் எச்சரிக்கையோடும் முறைத்துப் பார்க்கும் இங்கிலாந்து ரோபோப் பூனைகள் நமக்குச் சொல்லுகிற சேதி என்ன?

ஏ மனிதா! பேராபத்து ஒன்று வந்து கொண்டிருக்கிறது – என்பதா?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *