இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் ……….. (3)

1

 

சக்திசக்திதாசன்

அன்பினியவர்களே !

இவ்வாரம் இங்கிலாந்தின் எண்ணெய்ச் சட்டியில் என்ன கொதிக்கிறது ?

“லண்டன்” உலகத்தின் நகரங்களிலே கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தலைநகரம். உலகின் பல முன்னனி வங்கிகளின் பொருளாதார பரிமாற்றங்கள் நிகழும் ஓர் பொருளாதார வியாபார ஸ்தலமாக லண்டன் விளங்குகிறது.

இத்தகைய ஒரு முக்கிய நகரின் நகரபிதா (மேயர்) எனும் பதவிக்குரிய முக்கியத்துவம் இங்கிலாந்து நாட்டு மக்களிடையே உணரப்படுகிறதா? கேள்விக்குறியாகவே இருக்கிறது.

1965ம் ஆண்டுவரை லண்டன் மாநகர நிர்வாக சபை (London county council) எனும் பெயரில் இயங்கி வந்த லண்டனுக்கான நிர்வாகத்தைக் கவனிக்கும் சபை 1965ம் ஆண்டு அதிகாரப் பரவலாக்கலைக் கொண்ட விரிவாக்கப்பட்ட லண்டன் நிர்வாக சபை (Greater London Council) எனும் பெயரினைக் கொண்ட அமைப்பாக மாற்றியமைக்கப்பட்டது. இந்நிர்வாகசபையின் அதிகாரத்தின் கீழ் லண்டன் தீயணைக்கும் படை, கழிவகற்றும் துறை, வெள்ளத் தடுப்புத்துறை ஆகியவை அடங்கின. அத்துடன் மற்றைய நகர நிர்வாகசபைகளுடன் இணைந்து வீதிச் சீரமைப்பு, வீட்டு வசதி, நகரத் திட்டமிடுகை ஆகியவற்றின் அதிகாரத்தையும் பங்கிட்டு நடத்தி வந்தது.

இச்சபைக்கு அங்கத்தினர்கள் தேர்தல்கள் மூலம் தெரிவு செய்யப்பட்டு வந்தார்கள். எந்தக் கட்சி அரசாங்கத்திலிருக்கிறதோ அப்போது அரசாங்க எதிர்க்கட்சியாக இருக்கும் கட்சியே இச்சபையில் அதிகாரத்தைக் கைப்பற்றி வருவது வழமையாக இருந்தது. இதற்குக் காரணம் வழக்கமாக அரசிலிருக்கும் அரசியல் கட்சி மக்களிடையே செல்வாக்கு இழப்பது ஒரு பரவலான நிகழ்வாகையால்.

இங்கிலாந்தின் ஒரேயொரு பெண்பிரதமராக இருந்த மார்கிரெட் தாட்சர் (Margret Thatcher) அவர்கள் பிரதமராக இருந்த காலத்தில் இச்சபையின் தலைவராக இருந்தவர் கென் லிவிங்ஸ்டன் (Ken Livingstone) எனப்படுபவர் ஆகும்.

இவர் லேபர் கட்சியைச் சார்ந்தவர். இடதிசாரிக் கொள்கையைக் கொண்டவர். இவர் வலதுசாரக் கொள்கையுடைய கன்சர்வேடிவ் அரசாங்கத்தின் பிரதமராக இருந்த மார்கிரெட் தாட்சர் அவர்களின் பல கொள்கைகளுக்கு முரணாக பல திட்டங்களை லண்டன் நிர்வாகசபைக்கூடாக வகுத்தார்.

இது அப்போதைய பிரதமரான மார்கிரெட் தாட்சருக்கும், அவர் சார்ந்த கன்சர்வேடிவ் கட்சிக்கும் பலத்த எரிச்சலை உண்டு பண்ணியது.அவர்களின் பதிவிக் காலத்திலேயே இச்சபையைக் கலைப்பதற்கு அரசியல் சட்டத்தைத் திருத்தி அமைத்து 1986ம் ஆண்டு இச்சபையைக் கலைத்தார்கள்.பின்பு 1997ம் ஆண்டு டோனி பிளேயர் பிரதமரானதும், லண்டன் போன்ற பெரிய கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நகருக்கு அதிகாரமிக்க ஓர் சபை அவசியம் என பிரஸ்தாபிக்கப்பட்டு தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும் ஒரு சபைக்கு மேயராக தெரிவு செய்யப்படுபவர் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொள்வார் என அறிவித்தார்கள்.

இதுவே இங்கிலாந்தில் நேரடியாகத் தேர்தல் தெரிவு செய்யப்பட்ட முதலாவது மேயராகும். அதன் பிரகாரம் லண்டனுக்கென ஒரு மேயரையும் அவர் கீழியங்கும் ஒரு நிர்வாக சபையும் 2000ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. இம்மேயரின் பதவிக்காலம் நான்கு வருடங்களாகும்.முதலாவது மேயராக கென் லிவிங்ஸ்டன் தெரிவு செய்யப்பட்டார். லேபர் கட்சியின் சார்பாக தேர்தலில் போட்டியிடும் நபராக இவர் தெரிவு செய்யப்படாமையால் இவர் சுயாதீன வேட்பாளராக போட்டியிட்டு லேபர், கன்சர்வேடிவ் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களை ஜெயித்தார்.பின்பு நான்கு வருடங்களின் பின்னர் 2004ம் ஆண்டு லேபர் கட்சியின் சார்பில் போட்டியிட்டு மீண்டும் கென் லிவிங்ஸ்டன் தெரிவு செய்யப்பட்டார்.அதைத் தொடர்ந்து நான்கு வருடங்களில் 2008ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அப்போதைய அரசாட்சி செய்த லேபர் கட்சி செல்வாக்கிழந்தமையால் கென் லிவிங்ஸ்டன் தோல்வியுற்று கன்சர்வேடிவ் கட்சி சார்பில் போட்டியிட்ட பொரிஸ் ஜான்சன் (Boris Johnston) வெற்றியீட்டினார்.

காற்றோடு மீண்டும் ஒரு நான்கு வருடங்கள் பறந்தோடி விட்டன. லண்டன் மேயருக்கான தேர்தல் எம்முன்னே வந்து நிற்கிறது.

மே மாதம் 3ம் திகதி நடைபெறும் இத்தேர்தலில் மீண்டும் லேபர் கட்சியின் சார்பில் கென் லிவிங்ஸ்டன், கன்சர்வேடிவ் கட்சியின் சார்பில் பொரிஸ் ஜான்சன், லிபரல் டெமகிரட்ஸ் சார்பில் பிரையன் படொக் (Brian Paddock) ஆகியோரும் இவை தவிர உதிரிக் கட்சிகள் சார்பில் சிலரும் போட்டியிடுகிறார்கள்.

இத்தேர்தல் பிரசாரங்கள் சூடாக நடந்து கொண்டிருக்கின்றன.

இத்தேர்தல் ஒரு விசித்திரமான சூழலில் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. என்ன என்கிறீர்களா?

இங்கிலாந்தின் அரசாங்கம் முதன்முறையாக ஒரு கூட்டரசாங்கம் அமைத்துள்ளது. அதாவது கன்சர்வேடிவ் கட்சியுடன் லிபரல் டெமகிரட்ஸ் கட்சியினர் இணைந்து நடத்தும் அரசே தற்போது அதிகாரத்தில் உள்ளது.

நடைபெறும் இந்த மேயர் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சியினருக்கெதிராக அவர்களோடு அரசு அரியணையில் அமர்ந்திருக்கும் லிபரல் டெமகிரட்ஸ் கட்சி தனது வேட்பாளரை நிறுத்தியுள்ளது.

அரசின் கொள்கைகளின் வழி தற்போதைய பொருளாதார நெருக்கடி சூழலினால் பல நிதிக் கட்டுப்பாட்டுத் திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவையனைத்தும் சாதாரண் மக்களின் வாழ்வாதாரத்தை தாக்கும் வல்லமை கொண்டவை.

தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் அரசின் பல கொள்கைகள் பலமாக விவாதிக்கப்படுகின்றன அரசின் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு அளித்த லிபரல் டெமகிரட்ஸ் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் தமது கட்சி பங்களிக்கும் அரசின் கொள்கைகள் சிலவற்றை மறுதலித்துப் பேச வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்து தொலைக்காட்சி அலைவரிசைகளில் பிரதானமான பி.பி.சி நடத்திய அரசியல் கருத்தரங்கு ஒன்றை பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டியது. அந்நிகழ்ச்சித் தொகுப்பாளர் லிபரல் டெமகிரட்ஸ் வேட்பாளரிடம் கேள்விக்கணைகளைச் சரமாரியாகத் தொடுத்தார்.

அனைத்துக் கேள்விகளும் ஒரு முக்கிய மையப்புள்ளியையே நோக்கிச் சென்றது. தற்போதைய அரசாங்கத்தின் அந்நடவடிக்கைகளை வகுப்பதில் உங்கள் கட்சிக்கும் பங்கிருக்கையில் எவ்வாறு நீங்கள் அக்கொள்கைகளை மறுதலிக்கும் வகையில் பிரசாரம் செய்கிறீர்கள் ?

இத்தகைய பிரசாரங்களில் எத்தனை விகிதம் உண்மை இருக்கிறது, இதில் எத்தனை விகிதமானவற்றை உங்களால் நடைமுறைப்படுத்த முடியும்?

இத்தகைய கேள்விகளை எதிர்நோக்கிய அவ்வேட்பாளருக்கு முன்னால் இருந்த பதில் ஒன்றே ஒன்றுதான். அதாவது இந்த லண்டன் மேயர் தேர்தலை தேசிய அரசாங்கத்துடன் ஒப்பிடாதீர்கள் ஏனெனில் லண்டன் என்னும் இம்மாநகரின் பிரச்சனைகள் தனியாக அலசப்பட வேண்டியவை. தேசிய அளவில் எமது அரசாங்கத்திற்கு இருக்கும் செல்வாக்கின்மை தற்போதைய பொருளாதார நெருக்கடி நிமித்தம் எழுந்தது அதைக் காரணம் காட்டி எம்மைத் தாக்குவது பொருத்தமாகாது என்பதுவே அது.

அதே சமயம் லேபர் கட்சியின் வேட்பாளர் கென் லிவிங்ஸ்டன் மிகவும் வித்தியாசமான வாதங்களை முன்வைக்கிறார். லண்டன் மாநகரப் போக்குவரத்துக் கட்டணம் 7% ஆல் உயர்த்தப்பட்டது. தான் பதவிக்கு வந்ததும் இக்கட்டணத்தை குறைப்பேன் என்று சூளுரைத்துள்ளார்.

லண்டன் மாநகர போலிஸ் படையினருக்கு லண்டன் மேயரே பொறுப்பாகவுள்ளார். தான் பதவிக்கு வந்ததும் போலிஸ் படையினரின் எண்ணிக்கையை உயர்த்துவேன் என்றும், தனது கட்டுப்பாட்டுக்குக் கீழுள்ள நகரசபைகளில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மக்களோடு இயங்குவதற்காக இரண்டு போலிஸ் உத்தியோகத்தர்களை நியமிப்பேன் என்றும் கூறியுள்ளார்.

மற்றும் வீட்டமைப்பு, பிள்ளைகள் பராமரிப்பு, மின், வாயு கட்டணக்கள் இவையனைத்திலும் சாதாரண மக்களுக்கு உதவுவேன் என்று உறுதியளித்துள்ளார்.

மற்றொரு பக்கத்தில் கன்சர்வேடிவ் கட்சியின் வேட்பாளரும், தற்போதைய மேயருமான மொரிஸ் ஜான்சன் தனது உறுதி மொழிகளில்,இருக்கின்ற போலிஸ் உத்தியோகத்தர்களை மிகவும் நுணுக்கமான முறையில் உபயோகிப்பதன் மூலம் அவர்களது சேவையின் தரத்தை உயர்த்துவேன் என்கிறார்.

அநாவசியமான செலவுகளைக் கட்டுப்படுத்தி தமது கையிருப்பை தேவையானவைற்றில் மட்டுமே செலவு செய்வதன் மூலம் மக்களின் வரிப்பணத்தை மீதப்படுத்துவேன் என்கிறார்

லண்டன் மாநகரில் அதிகரித்து வரும் கத்திக்குத்துச் சம்பவங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவேன் என்கிறார். லண்டன் மேயரின் கட்டுப்பாட்டில் இருக்கும் நகரங்களில் பாதுகாப்பைப் பலப்படுத்தி மக்களைன் மனதில் நிம்மதியைத் தோற்றுவிப்பேன் என்கிறார்.ஆக மொத்தம் மிகவும் தாராளமாக அனைத்து வேட்பாளர்களும் வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றனர்.

ஆனால் உண்மை நிலை என்ன ?

நாடு பொருளாதாரச் சிக்கலில் இருந்து மீள்வதற்காகத் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.அரசாங்க உத்தியோகத்தர்கள் சம்பள உயர்வின்றி கட்டுப்படுத்தப் பட்டுள்ளார்கள்.அனைத்து அரசுதரப்புச் சேவைகளும் அவைகளுக்கு வழங்கப்பட்ட நிதி குறைக்கப்பட்ட நிலையில் பல சேவைகளைக் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள்.

இளைஞர், யுவதிகள் மத்தியில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. நாட்டின் பலபாகங்களிலும் குற்றச்செயல்கள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.இவற்றின் அடிப்படையில் இன்றைய மக்களின் அத்தியாவசிய தேவை என்ன? உள்ளதை உள்ளபடி சொல்லி மக்களை மாயச் சிந்தைக்குள் தள்ளாத நேர்மையான் அரசியல்வாதிகள் எம்மிடையே தோன்றுவது அவசியம்.

லண்டன் போன்ற முக்கியமான நகரத்தின் மேயரைத் தெரிவு செய்வதில் மக்கள் அனைவரும் தமது ஈடுபாட்டைக் காட்ட வேண்டியது அவசியம்.அன்றைய லண்டனுக்கும் இன்றைய லண்டனுக்கும் உள்ள முக்கியமான வேறுபாடு என்ன? இன்றைய லண்டன் வெள்ளை இனத்தவர் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு நகரமல்ல.

பல இனத்தவர், பல மதத்தவர், பல நிறத்தவர் இணைந்து வாழும் ஒரு கலப்புச் சமுதாயம். இத்தகைய ஒரு சமுதாயத்தின் ஜனநாயக தேரோட்டம் சீராக ஓட வேண்டுமானால் அனைவரும் பாகுபாடு காட்டாது தேர்தல் எனும் அர்சியல் நிகழ்வில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

இராமன் ஆண்டாலென்ன !இராவணன் ஆண்டாலென்ன ! எனும் மனப்பான்மை முற்றாக மாற வேண்டும். இத்தகைய மாற்றத்திற்கு உள்ளாக வேண்டியவர்களில் புலம்பெயர் தமிழர்களும் அடங்குகிறார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

படத்திற்கு நன்றி :

http://beautifulplacestovisit.com/cities/london-england/

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் ……….. (3)

  1. ஒரே நாளில், திரு.சக்தி தாசனுக்கு இரு மடல்கள். நான் இந்த கூத்து எல்லாவற்றையும் பார்த்து வருகிறேன். நீங்கள் மிகவும் கோர்வையாக அமைத்து எல்லா விஷ்யங்கள்ஐயும் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி. இந்த கென் லிவிங்க்ஸ்டன் தாட்சர் மாமியை பாடாய் படுத்தி விட்டார். எனக்கு பரம திருப்தி. போரிஸ் ஜான்சனை பற்றி பெரிசா சொல்வதற்கு ஒன்றுமில்லை, வதந்தியை தவிர. ஒரு விதத்தில் பார்க்கப்போனால், கென் லிவிங்க்ஸ்டன் அதிகப்பிரசங்கி. ஆனால், அதுவும் வேண்டியிருக்கிறது. சென்னை மேயர்கள் வந்து போனதைப் பார்த்தால், அழுகை வருகிறது. ரொம்ப நாட்கள் முன்னால், எஸ். கிருஷ்ணமூர்த்தி என்ற கம்யூனிஸ்ட் மேயர் இருந்தார். எளிமை, நாணயம்.இன்னம்பூரான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *