பாஸ்கரபாரதி

புதிய பாரதம் உதயமாயிற்று. பார்க்கெலாம் திலகமாய் பாரதம் உயர்ந்தாயிற்று. காமன்வெல்த் அமைப்பு, அணிசேரா நாடுகளின் கூட்டமைப்பு, ஐக்கிய நாடுகள் சபை என்று சர்வதேச அரங்குகளில் இந்தியாவின் குரல் ஓங்கி ஒலிக்கிற போதெல்லாம் நெஞ்சம் இறுமாப்பு கொள்கிறது. இந்தியாவின் கருத்து என்னவாக இருக்கும் என்று உலக நாடுகள் கூர்மையாய் உற்று நோக்கும் போதெல்லாம் உள்ளுக்குள் ஓர் ஆனந்தப் பெருமிதம் பெருக்கெடுத்து ஓடுகிறது. உலகின் உச்சியை நாம் எட்டிப் பிடிக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை. முந்திக் கொண்டிருக்கிறோம்; இடையறாது முன்னேறிக் கொண்டிருக்கிறோம்.

இது எப்படி சாத்தியமாயிற்று?

வெறும் வாய்ச்சொல் வீரராய் மட்டுமே நாம் இருந்து விடவில்லை.

மூளையை முதலீடு செய்தோம். உழைப்பை அள்ளியள்ளித் தந்தோம். பல துறைகளில் நாம் முத்திரை பதித்தோம்.

விண்ணியல், கணிணியியல், மருத்துவம், அணுசக்தித் துறை, விவசாயம், தொலைத் தொடர்பு என்று ஒவ்வொரு துறையிலும் அசகாய சாதனைகள் புரிந்த வண்ணம் இருக்கிறோம்.இது எங்கனம் சாத்தியமாயிற்று?

கட்டறுத்த காளையாய், கடல் பிறந்த காற்றாய்ப் பயணித்திருக்கிறோம். நம் தலைவர்கள், அறிஞர்கள், கல்விமான்கள், கவிஞர்கள், கலைஞர்கள்.. அத்தனை பேருமே நம் சமுதாயத்தை உறங்க விடாமல் உசுப்பேற்றியபடியே இருந்தார்கள். ‘எழு, விழி, போராடு’ என்று தம் வீர வசனத்தால் விழிப்புணர்வு ஊட்டிக் கொண்டேதான் இருந்தார்கள். அதன் விளைவுதான்.. இன்று நம் பீடு நடை!

அந்நியர் ஆட்சியை அகற்றுவதும் வீர சுதந்திரம் பெற்று மகிழ்வதும் மட்டுமே நம் கனவாக இருந்ததில்லை. சுதந்திர இந்தியாவின் முன் இருந்த இமாலயப் பணிகளை நம் முன்னோர், பெரியோர் தொடர்ந்து நினைவூட்டிக் கொண்டே யிருந்தனர். பொருளாதார ரீதியாக நம் தேசம் வலுப்பெற வேண்டும் என்பதில் யாருக்கும் இருவேறு கருத்து இருந்ததில்லை. நாட்டில் தொழில் வளம் பெருக வேண்டும்; அதன் மூலம் தேசம் பொருளாதாரத் தன்னிறைவு பெற வேண்டும் என்பதே அவர்களின் எண்ணமாகவும் செயலாகவும் இருந்தது. இதற்கான குறைந்தபட்ச செயல்திட்டமாக மகாகவியின் இப்பாடலைக் கொள்ளலாம்.

ஆன்மீகமும் அரசியலும் மட்டுமல்ல, தனிமனித உயர்வுக்கும் தரமான சிந்தனைகளை வகுத்துத் தந்த மகாகவி பாரதி, ஒட்டுமொத்த சமுதாய முன்னேற்றத்துக்கான ஆக்க பூர்வமான செயல்திட்டத்தையும் பாடலாய்ப் புனைந்து காட்டுகிறார். ‘பார் மிசை காப்பவர் நீரே’ என்று நமக்கு, வையத் தலைமைக்கான வழிகாட்டும் நம் விழி திறக்கும் பாரதியின் பாடல் இதோ…

தொழில்

இரும்பைக் காய்ச்சி உருக்கிடு வீரே!
யந்தி ரங்கள் வகுத்திடு வீரே!
கரும்பைச் சாறு பிழிந்திடு வீரே
கடலில் மூழ்கிநன் முத்தெடுப் பீரே!
அரும்பும் வேர்வை உதிர்த்துப் புவிமேல்
ஆயி ரந்தொழில் செய்திடு வீரே!
பெரும்பு கழ்நுமக் கேயிசைக் கின்றேன்
பிரம தேவன் கலையிங்கு நீரே!

மண்ணெ டுத்துக் குடங்கள்செய் வீரே!
மரத்தை வெட்டி மனைசெய்கு வீரே!
உண்ணக் காய்கனி தந்திடு வீரே!
உழுது நன்செய்ப் பயிரிடு வீரே!
எண்ணெய் பால்நெய் கொணர்ந்திடு வீரே!
இழையை நூற்றுநல் லாடைசெய் வீரே!
விண்ணி னின்றெமை வானவர் காப்பார்!
மேவிப் பார்மிசைக் காப்பவர் நீரே!

பாட்டும் செய்யுளும் கோத்திடு வீரே!
பரத நாட்டியக் கூத்திடு வீரே!
காட்டும் வையப் பொருள் களின் உண்மை
கண்டு சாத்திரம் சேர்த்துட வீரே!
நாட்டி லேயறம் கூட்டிவைப் பீரே!
நாடும் இன்பங்கள் ஊட்டி வைப்பீரே!
தேட்ட மின்றி விழியெதிர் காணும்
தெய்வ மாக விளங்குவிர் நீரே!

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

படத்திற்கு நன்றி:

http://rssairam.blogspot.in/2012/03/54.html

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *