முகில் தினகரன்

அழுக்குப் பிண்டமாய்
அங்கம் காட்டிச் சிரிக்கும்
தெருவோரப் பைத்தியக்காரி……
 
ஆளே இல்லாச் சதுக்கத்தில்
ஆவேசமாய்க் கத்திக் கொண்டிருக்கும்
அரைவேக்காட்டு அரசியல்வாதி…..
 
விழத் துடிக்கும் நகராட்சிப் பள்ளியின்
சிறுநீர்  கரைத்த மேற்குச் சுவர் ;….
 
அடுத்த மாநில லாரிக்காரனிடம்
அதிகாரத் தூண்டில் போட்டு
கரன்சி மீன் பிடிக்கும் டிராபிக் கான்ஸ்டபிள்…..
 
பைபாஸ் ரோட்டின் பள்ளச்சரிவில்
படுக்கை வியாபாரத்திற்குப் பல்லிளிக்கும்
மூன்று மாதக் குழந்தையின் தாய்….
 
கஞ்சா மயக்கத்தில் கிதார்  இசைத்து
கனவுக் குதிரையில் பறக்கும்
கவர்மெண்ட் ஆபீசரின் கடைசி மகன்….
 
சுவரொட்டி நடிகையை விழி நாக்கால் சுவைத்து
மனக்குறியில் புணரும் டீன்ஏஜ் திராவிடன்….

மார்ச்சுவரிப் பிணத்தை வெளியில் அனுப்ப
மாமூல் வசூலிக்கும்
அரசு மருத்துவமனைச் சிப்பந்தி….
 
யார்தான்  கண்டு கொள்வது?
 
உணர்வுச் சூறாவளி
நரம்பு மண்டலத்தை நசுக்க
சிலிர்த்துக் கிளம்பினேன்…
 
‘ஏங்க சின்னவனுக்கு வயத்தால போகிறது
டாக்டர்  கிட்டப் போகணும்”
– இல்லாள்
 
‘அடேய் உங்கப்பனுக்கு
அடுத்த வாரம் தெவசம் மறந்துடாத”
– ஈன்றவள்
 
‘பொண்ணு பொறந்தா
ரெண்டு பவுன்ல சங்கிலி போட்டுடு”
பிள்ளைப் பேற்றுக்கு வந்திருந்த தங்கை
 
‘ரிடையர்  ஆகப் போறீராமே?”
பக்கத்து வீட்டுக்காரனின் குரூர குசலம்
 
மீண்டுமொரு நத்தையாய் கூட்டில் சுருங்கி
யதார்த்தத்தின் யதார்த்தத்தில் சிக்கி
சராசரியில் சராசரியாய்ச் சரிந்து
அனிச்சையாய் சாப்பாட்டுக் கூடையை
அள்ளிக் கொண்டு
அடுத்த பஸ்ஸைப் பிடிக்க ஓடினேன்
ஆபீஸூக்கு நேரமாச்சு!!!!

படத்திற்கு நன்றி
 
 http://www.123rf.com/photo_8462871_vintage-scene-of-an-old-man-working-in-an-antique-office.html 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *