திவாகர்

‘உழைப்பின் வாரா உறுதிகள் உண்டோ?’

இந்த வார வல்லமையாளராக உடனடியாக அறிவிப்பதற்கு இந்த ஒரு வார்த்தை என்னை ஒரேயடியாக மாற்றிவிட்டது. உழைப்பு உழைப்பு கடும் உழைப்பு இதன் மறுபெயர்தாம் மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்கள்.

தேவாரம் எனும் தளத்தினை உருவாக்கி பன்னிரெண்டு திருமுறைகளையும் அந்த தளத்தில் பதித்து அதற்கான பொருள். கூடுதல் விளக்கம் கோயில் வரலாறு பதிக வரலாறு போன்றவைகளை பதிவேற்றி இன்று இந்த தளம் உலகெங்கிலும் உள்ள ஆயிரக்க்கணக்கான பக்தர்களுக்கு மிகச் சிறந்த ஆன்மீகப் பணியை செய்து கொண்டிருக்கும் கண்கொள்ளாக் காட்சியை நாம் கண்டு கொண்டிருக்க வகை செய்தவர்.

இந்த தளத்தில் உள்ள ஒரு சிறு தேடல் பொறி – தட்டச்சுத் தேடல் பொறி மிகச் சிறந்த முறையில் ஆய்வாளர்களுக்கும் அறிஞர்களுக்கும் உதவுகிறது. அதைக் குறித்துதான் இந்த வாரம் வல்லமைக் குழுவில் ஒரு பதிவிட்டிருந்தார் திரு சச்சி அவர்கள். இதோ அந்தப் பதிவு உங்கள் மறுபார்வைக்காக:

“6.1.12 அன்று, தட்டச்சுத் தேடலில் உயிர்மெய் எழுத்துகளைத் தட்டச்சிடுவது எப்படி எனப் பேரா. இரமாதேவி அவர்கள் கேட்டார்கள். விளக்கம் கொடுத்தோம்.

11.2.12 அன்று திரு. அருச்சுனமணி, திரு. இளங்கோ மற்றும் அவர்கள் சார்ந்த உலக சைவப் பேரவையினரின் அயரா உழைப்பாலும் பெருமுயற்சியாலும் இல்லப்புதர் ஆண்கள் பாடசாலையில் நடைபெற்ற தேவாரம் தளம் அறிமுக விழாவில், பெருங்கூட்டத்தின் நடுவே, இதே சிக்கல் இருப்பதை அங்கு வந்து உரையாற்றிய தேவாரத் தள அன்பர்கள் சிலர் சுட்டிக் காட்டினார்கள்.

தட்டச்சுத் தேடல் பலகைக்கு அருகே உயிர்மெய் எழுத்துத் தட்டச்சிடும் வழிகாட்டி அமைத்துத் தருகிறேன் என அவர்களிடம் அன்று கூறியிருந்தேன். எனக்கு உதவும் நிகழியாரிடம் (programmer) உதவக் கேட்டிருந்தேன். சென்னையில் இருந்தவர் சிங்கப்பூருக்கு மாற்றலானார். வேறு நிகழியார்களைத் தேடினேன். இதற்கிடையில் PHP வகுப்புக்குப் போகத் தொடங்கினேன். நிகழிமுறை கற்கத் தொடங்கினேன்.

ஒரே ஒரு வரி, ஒரு படம் இவை இரண்டும் இருந்தால் நீங்கள் கேட்ட மாற்றம் அந்தப் பலகையில் வரும் என்பதைக் கண்டறியக் கடந்த 2 நாள்களாகக் கணிணி முன் அமரந்து துளாவி, மாற்று வழிகளையெல்லாம் உசாவினேன்.

03.05.12இன்று காலை 0400 மணிக்கே கணிணி முன் வந்தேன். எனக்கு வாய்த்தது. நிகழி நிரலில் ஒரே ஒரு வரி, இணைக்க ஒரு படம் இவை இரண்டும் உதவின. நீங்கள் கேட்ட மாற்றம் தட்டச்சுத் தேடல் பலகையில்.” — http://www.thevaaram.org/thirumurai_1/advancedkeyboard.php
பார்க்க, பயன்படுத்துக. மேலும் மாற்றம் தேவை எனில் சொல்க.

தேவார தளத்தில் பயன் பெறுவோர் வசதிக்காக இப்படி எத்தனையோ தொழில்நுட்பங்களை புகுத்தி வரும் திரு சச்சி அவர்கள் இதற்காக தாமே சென்று அத்தகைய தொழில்நுட்பத்தை கற்று வந்ததும், அதற்கான வகுப்புகளுக்குச் சென்றதும் மூலமாக இளைய தலைமுறைக்கு மிகப்பெரிய பாடத்தைச் சொல்லாமலே சொல்லி வருகிறார். உழைப்பின் பெருமையை ஊரறியப் புகுத்தி வருகிறார்.

இவருடைய தந்தை காலண்டர் என்ற சொல்லுக்குப் பதிலாக நாட்காட்டி என்ற தூய தமிழ்ச் சொல்லை அறிமுகம் செய்த பெருமையைப் பெற, மகனோ கணினித் தமிழின் வளத்தைப் பெருக்கும் பல தமிழ்ச் சொற்களை உருவாக்கியவராக உள்ளார்.இவரின் தமிழ்ப்பணிக்குத் தமிழகத்தில் பல பரிசில்கள் கிட்டியதும் அல்லாமல் தில்லித் தமிழச் சங்கமும் பரிசில் வழங்கி மதிப்பளித்தது. 

இறைவனையே ‘நள்ளிரவில் நட்டம் பயின்றாடும் நாதனே’ என்பார் மாணிக்க வாசகர். ஆம் இறைவன் நாட்டியத்தைத் தானே பயின்றுதான் மெல்ல மெல்ல முழுத் திறனையும் காட்டி ஆடி நம்மையும் ஆட்டுவிக்கிறான். சச்சி அவர்கள் பயில்வது கூட நமக்காகத்தானே.. அவர் கடின உழைப்பு அனைத்தும் நமக்கு எளிய முறையில் பயன்பாட்டுக்கு வருகிறது என்ற உண்மை தெரிய வரும்போதுதான் சச்சி அவர்களின் கடின உழைப்பின் பலன் பற்பலமடங்குப் பெரிதாகத் தெரியவரும்..

சென்றவார வல்லமையாளர்‘ என்று திரு சச்சி அவர்களை நாம் பெருமைப் படுத்தும்போது ஒரு சிறு எண்ணம் கூடவே தோன்றியதையும் என்னால் ஒதுக்க முடிவதில்லை. ஏறத்தாழ ஐம்பது நாடுகளுக்கு மேல் சென்றவர். சென்ற இடத்திலெல்லாம் திருமுறைக்கு பலம் சேர்த்தவர். மக்கள் பேசுகின்ற அத்தனை மொழிகளிலும் திருமுறை மொழி மாற்றம் செய்யப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கோடு செயல்பட்டு பெரும் வெற்றி கண்டு வரும் இந்த சாதனையாளருக்கு ‘சென்ற வார வல்லமையாளர்’ என்ற விருது மிகச் சாதாரணமானது போலத் தோன்றியது.

அதே சமயத்தில் வல்லமையை சபரியாக நினைத்துப் பார்த்தேன். ஸ்ரீராமனுக்காகக் காத்திருந்து சுவை பார்த்த பழத்தைக் கொடுத்ததும் அன்பிலே உருகிய இராமபிரான் அந்தக் கனியை ஏற்றுக்கொண்டதையும் நினைத்துப் பார்த்தேன். அளப்பரிய கண்ணனுக்கு உண்மையான தோழனாக இருந்தாலும் அவல நிலையில் இருந்ததால் ‘அவல்’ கொடுத்து சந்தோஷப்பட்ட குசேலனை நினைத்துப் பார்த்தேன். ஏழைக்கேற்ற எள்ளுருண்டைதான் இது, எனினும் எங்கள் அன்பு எனும் எள் கொண்டு உருவாக்கிய இனிப்புப் பண்டம் இது. திரு சச்சியை சென்றவார வல்லமையாளர் என்று அறிவிப்பதனால் அந்த பெருமை முழுவதும் வல்லமைக்கு மட்டுமே என்று தெரிந்திருந்தாலும் அந்த உழைப்பின் உருவத்துக்கு இந்த விருது வழங்கிய வாய்ப்பு அடியேனுக்கு அமைந்தமைக்கு இறைவனுக்கு நன்றி கூறுகிறேன்.

 

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “சென்றவார வல்லமையாளர்

  1. சிறப்பான தேர்வு. சச்சி ஐயா, 70 வயதில் PHP வகுப்புக்குச் சென்று பாடம் கற்று, தமது தளத்தில் அதைச் செயல்படுத்திக் காட்டியுள்ளார். கடந்த வாரம் நான் சென்னையில் அவர் இல்லத்துக்குச் சென்ற போது, என் எதிரில் தேவாரம் தளத்தில் இந்தப் படத்தை இணைத்துக்கொண்டிருந்தார். இது கடினம், தன்னால் இயலாது என ஒதுங்காமல், எதையும் துணிந்து கற்று, தன் ஆற்றலை நிறுவி வருகிறார். அதிகாலை எழுந்ததில் இருந்து, துயில்வது வரை தமக்கு என்று எதையும் சிந்தியாமல், உலகிற்காகவே உழைக்கும் இந்த உத்தமருக்கு வல்லமையாளர் விருது, மிகப் பொருத்தமே. சச்சி ஐயாவுக்கு வாழ்த்துகள்.

  2. சச்சி ஐயாவின் பன்முகத் திறமைகள் ஆச்சரிப்படுத்தக் கூடியவை. அவருடைய எளிமையும், சேவைகளும் பலருக்கும் முன்னுதாரணமாக இருக்கக்கூடியவை. பணிவான வணக்கங்கள் ஐயா.

    அன்புடன்
    பவள சங்கரி.

  3. Great Selection … Iyya’s work should continue for many years to come……….i sincerely pray for it…

Leave a Reply to Subramanian

Your email address will not be published. Required fields are marked *