அவ்வை மகள்

பைண்டர் எனும் எளிய ஏற்பாடு
ஒரு ஆண்டுக் (year-long course) கல்வியாக குழந்தைகள் ஒவ்வொரு பாடத்தையும் படிக்கிற காரணத்தால், நிறைய நோட்டுப் புத்தகங்கள் தேவைப்படுகின்றன, அது மட்டுமல்லாது, நாம் ஏற்கனவே பார்த்தது போல, வீட்டுப் பாடம், கிளாஸ் நோட்ஸ், இத்யாதிகளுக்காக நிறைய நோட்டுப் புத்தகங்கள் கோரப்படுகின்றன எனவும் பார்த்தோம்.

இவற்றைக் குழந்தைகள் ஒவ்வொரு நாளும் வீட்டிலிருந்து பள்ளிக்கும், பள்ளியிலிருந்து வீட்டிற்கும் சுமக்க வேண்டியிருக்கிறது. சுமக்கும் பாரம் குழந்தைகளுக்கு மட்டுமல்ல. வீடு தொடங்கி பள்ளி வரையிலான இடையில் உள்ள ஒட்டு மொத்தச் சமுதாயத்திற்குமே என்பதையும் பார்த்தோம்.

இது தொடர்பாக மேலும் பேசும் முன், நோட்டுப் புத்தகங்கள் பயன்படுத்தப்படுவது ஏன் என்கிற வினாவை எழுப்புவோம்.

நோட்டுப் புத்தகம் என்பது கல்வியில் கற்கிற பாடங்களைப் பதிவு செய்யவும், பின்னர் தேவைப்படும்போது எடுத்து மீள்பார்வை பார்த்துப் பயன்படுத்தவும் சேமிக்கிற ஒரு ஆவணமாகும்.

இவ்வாறான ஒரு ஆவணத்தை ஏற்படுத்திக்கொடுக்க நோட்டுப் புத்தகங்களால்தான் முடியும் என்கிற பழக்கத்தினால் தான் இத்தனை மூட்டை சேர்கிறது, குழந்தைகளின் பள்ளிப்பையில்!

அது மட்டுமல்லாது ஒரு ஆண்டிற்குரிய அனைத்து நோட்டுப் புத்தகங்களையும் ஆண்டு முதலிலேயே ஒட்டு மொத்தமாய் வாங்கச்சொல்லித் திணித்து, பெற்றோரையும் குழந்தைகளையும் பள்ளிகள் மிக தாராளமாகவே பாரம் சுமக்க வைக்கின்றன! (இது ஒரு வணிகத் தந்திரம்- இது பற்றிப் பிறிதொரு சமயம் பேசுவோம்).

படிக்கின்ற விஷயங்களைப் பதிவு செய்து வைத்துக் கொள்ள நோட்டுப் புத்தகங்களே தேவை எனப் பள்ளிகள் அடம் பிடிப்பதால், நோட்டுப் புத்தகங்களுக்கான “டிமாண்ட்” அதிகரிக்க, நோட்டுப் புத்தகங்களின் விலை கிடுகிடுவென உயர்ந்ததோடு மட்டுமல்லாது, தரக்குறைவான தாள்களிலே தயாரிக்கப்பட்டு, அல்பத்தனமாகப் பைண்ட் செய்யப்பட்டு சந்தையில் நோட்டுப் புத்தகங்கள் கொட்டப் படலாயின. இவற்றைக் கட்டாயம் வாங்கியே ஆகவேண்டிய நிலைக்கு பெற்றோர்களும் மாணாக்கர்களும் தள்ளப்பட்டனர். வாராவாரம் ஏன் நாள்தோறும் கூட, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் நோட்டுப்புத்தகத்தில் பிய்ந்து வரும் தாட்களை ஒட்டிச் சரிசெய்து அனுப்ப வேண்டியிருக்கிறது!

பெற்றோரோ அல்லது மாணவரோ நோட்டுப் புத்தகத்தை ஒட்டி, தைத்து ஒழுங்கு செய்ய முடியவில்லையெனில் ஆசிரியரிடம் நிறைய வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டியதுதான், அல்லது வகுப்பை விட்டு வெளியேற்றப் பட்ட நிலையில் நிற்க வேண்டியதுதான்.

பல இல்லங்களில் என்ன ஆகிறது என்றால், குழந்தைகளின் நோட்டுப்புத்தகத்தின் தரக்குறைவான தன்மையை உணராதவர்களாகப் பெற்றோர்கள் இருக்கிறார்கள். பிய்ந்து போகிற நோட்டுப்புத்தகத்திற்குத் தம் குழந்தைகளே காரணம் என்று நினைத்துக் கொண்டு, பள்ளியில் ஆசிரியர் தண்டித்தது போதாதென்று, தாமும் தர்ம அடி தருவார்கள்! நோட்டுப் புத்தகத்தின் தரக்குறைவான நிலையால் அங்கு ஒரு யுத்தம் நிகழ்ந்து முடிந்திருக்கும்!!

இந்நிலையில், கரிசனம் நிறைந்த பெற்றோர்கள், கொஞ்சம் தரமான நோட்டுப் புத்தகங்களை வாங்கலாமே என நினைத்தால், கொஞ்சம் தேவலாம் எனும்படியான நோட்டுப்புத்தகத்தின் விலை, மட்டமான, பொதுரக நோட்டுப்புத்தகத்தின் விலையின் இரு மடங்குக்கும் கூடுதலான விலை!

இத்தனை விலை கொடுத்து, எத்தனைப் பெற்றோர்களால் நல்ல நோட்டுப் புத்தகங்களை வாங்க முடியும்?

இத்தகையதான சூழலிலே தான் ஒவ்வொரு நாளும் பள்ளிக் குழந்தைகள் இருதலைக் கொள்ளி எறும்புகளாகப் பரிதவித்தபடி, நோட்டுப் புத்தகத்தின் பாரம் – பாவம் இரண்டையும் சுமந்தபடி பள்ளிக்குச் சென்று வருகிறார்கள்.

இது மட்டுமா? நம் குழந்தைகள் நோட்டுப்புத்தகத்தைத் தொலைத்து விட்டாலோ, அல்லது மழையில் நனைந்து போனதால் நோட்டுப் புத்தகம் பாழ்பட்டு அதில் எழுதியவை கலைந்து, அழிந்து போனாலோ, குழந்தை புது நோட்டுப்புத்தகத்தில் அனைத்தையும் மீண்டும் எழுதி “சப்மிட்” செய்ய வேண்டும் என்று ஆசிரியர்கள், ஆசிரியைகள் வற்புறுத்துகிறார்கள் –இதைச் செய்யவில்லையெனில் குழந்தைகள் தண்டிக்கப் படுவது உண்மை.

பார்க்கப் போனால் நோட்டுப் புத்தகங்களை வைத்துக் கல்வியில் – கற்பித்தலில் – கற்றலில் – ஏகப்பட்டப் பிரச்சனைகள், ஊழல்கள் எழுந்தபடி இருக்கின்றன.

இவ்வாறானதான நோட்டுப்புத்தகப் பிரச்சனைகள் தீர்ந்தாலொழிய மாணாக்கர்கள் கற்றலிலும் ஆசிரியர்கள் கற்பித்தலிலும் முழுமையாக ஈடுபட முடியாது.

இந்த அடிப்படையில் தான் சென்ற இதழில், நோட்டுப் புத்தகப் பிரச்சனை தீரப் புதுவழிகளை யோசிக்கச் சொன்னேன்.
நாம் சிந்திக்கக் கூடிய புது வழி, கல்வி சம்பந்தப்பட்ட அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும், அனைவரது சிரமங்களையும், குறைத்து அவர்களது வழிமுறைகளை இலகுவாக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும் என்பது அடிப்படை.

இவ்வாறான புது வழி கண்டுபிடிக்கும்போது நாம் கவனத்தில் கொள்ள வேண்டியவை யாவை என்பதை நாம் தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும். அவையாவன:

(1) நோட்டுப் புத்தகங்கள் வசதிக் குறைவை ஏற்படுத்துகின்றன.

(2) நோட்டுப் புத்தகங்கள் சுமையை உண்டாக்குகின்றன

(3) நோட்டுப் புத்தகங்கள் தாட்களாலேயே ஆனவை.

ஆக, சுமை ஏற்படுத்தாத, தாட்களாலேயே, ஆன ஆவண ஆதாரங்களை நாம் நமது குழந்தைகளுக்கு ஏற்படுத்தித் தர வேண்டும்.

இதனைச் செய்ய அதிக மூலதனமும் தேவைப்படக் கூடாது என்பதும், எல்லா மாணாக்கர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் இது எளிதாக இருக்க வேண்டும் என்பதும் முக்கியம்.

இவ்வாறு நம் சிந்தனையைச் செலவிட்டோமேயானால் ஒரு வழி புலப்படுகிறது:

ஒரு பைண்டர் (ஃபைல்போல்டர்) கொண்டு ஒரு குழந்தையின் அன்றாட நோட்டுப் புத்தகத் தேவையை நாம் சமாளித்து விட முடியும்! குழந்தை படிக்கும் வகுப்பு எதுவாகினும் இம்முறை சரி வரும் என்பது குறிப்பிடத் தக்கது.

ஒரு பைண்டரில் section dividers எனப்படும் பகுதித் தடுப்பான்களைக் கொண்டு எத்தனைப் பாகங்கள் வேண்டுமோ அத்தனைப் பாகங்களை ஏற்படுத்திக்கொண்டு, ஒவ்வொரு தடுப்பானிலும், அது எந்தப் பகுதி என்பதனை லேபல் செய்து விட வேண்டும் (படம் காண்க).

பைண்டரில் பகுதிகளை இவ்வாறு தயார் செய்து விட்டால், அடுத்ததாக, ஒவ்வொரு பகுதிக்கும் தேவையான தாட்களைக் கோர்த்து விட வேண்டியதுதான்.

அறிவியல் பாடங்களுக்கு ஒரு பக்கம் கோடு போட்ட மறு பக்கம் கோடு போடாத தாட்கள், கணிதத்திற்கு மார்ஜின் மற்றும் வொர்க் அவுட் ஏரியா உள்ள தாட்கள் மற்றும் கிராப் தாட்கள், ஜியாமெட்ரி வரைய வெள்ளைத் தாட்கள், மற்ற பாடங்களுக்கு இரு பக்கமும் கோடு போட்ட தாட்கள் என, தாட்களைக் கோர்த்து விட்டால், ஒரு முழுமையான ஒற்றைப் பல்திரள் நோட்டுப் புத்தகம் தயார்! (தேவைப்பட்டவாறு கோடுகள், மார்ஜின் வரைந்து ஜெராக்ஸ் எடுத்துக்கூட தாட்களை நாமே தயாரித்துக் கொள்ளலாம்!)

வீட்டில் ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு பிரதான பைண்டர் வைத்துக் கொள்ள வேண்டும்; வாரத்திற்கொரு முறை, இந்த ஸ்கூல் பைண்டரிலிருந்து, தாட்களை, பாடம் வாரியாக, வீட்டிலுள்ள பிரதான பைண்டருக்கு, மாற்றி விட வேண்டும். எந்த சப்ஜெக்டிலாவது தொடர் நிலையில் பாடம் இருக்குமேயானால், அந்தச் சில தாட்களை மட்டும், வீட்டு பைண்டருக்கு மாற்றாமல் இருக்கலாம்.

இவ்வாறு பைண்டர்க்ளுக்கு முதலீடு செய்வது ஒரு முறை தான், பெரும்பாலான பைண்டர்கள் வெகு காலம் உழைக்கும், பல ஆண்டுகள் வரும். இதனால், அதே பைண்டர்களை, அடுத்தடுத்த ஆண்டுகளுக்கு மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியும்.

ஒவ்வொரு சப்ஜெக்ட் பைண்டரிலும், ஒவ்வொரு பாடத்திற்கும் (every lesson), ஒரு தனி பிளாஸ்டிக் பையை (sheet protectors) இணைத்து அந்தப் பைக்குள் அதற்குரிய தாட்களை, ஸ்டேப்பிள் செய்து வைத்து விட்டால் டெஸ்ட் அல்லது பரிட்சை வரும் சமயங்களில், ஒவ்வொரு பாடமாக எடுத்துப் படித்து, மீள்பார்வை செய்ய வசதியாக இருக்கும்.

ஒவ்வொரு சப்ஜெக்டுக்கான வீட்டிலுள்ள பிரதான பைண்டரிலும், வீட்டுப் பாடத்துக்கென ஒரு பகுதி (section) இருக்க வேண்டும், டீச்சரிடம் சமர்ப்பித்து, அவரால் திருத்தப்பட்டு. திரும்பவும் வாங்கிக்கொள்ளப் பட்ட வீட்டுப் பாடங்களை, இந்தப் பகுதியில் மாணவர் சேர்க்க வேண்டும். இது போன்றே ஒவ்வொரு சப்ஜெக்டுக்கான பைண்டரிலும், டெஸ்டுகளுக்கான ஒரு பகுதியும், பரிட்சைகளுக்கான ஒரு பகுதியும் இருக்க வேண்டும். டெஸ்டுகள் மற்றும், தேர்வுகளின் கேள்வித் தாட்களும், திருத்தப்பட்ட விடைத் தாட்களும் இங்கு சேமிக்கப் படவேண்டும்.

ஒரு புத்தக அலமாரி கொடுத்து குழந்தையை, அழகாகப் பராமரிக்கப் பயிற்சி தந்து பழக்கி விட்டால் குழந்தைகள், “ownership” உணர்வோடு, உற்சாகத்துடன் ஒரு விதப் பெருமையோடு தத்தமது பைண்டர்களை, புத்தகங்களை நிர்வகிப்பதை நம்மால் பார்த்துப் பெருமைப்பட முடியும். புத்தக அலமாரி ஏற்படுத்த, பண வசதி இல்லாதவர்கள் மற்றும் அலமாரி நிறுத்த வீட்டில் இட வசதி இல்லாதவர்கள் ஆகியோர், ஒரு கூடையிலேயே இந்த பைண்டர்களை அழகாக அடுக்கி வைத்துக் கொள்ளலாம்.

பைண்டர்கள் கூடுதலான பல வசதிகளைத் தருகின்றன, கால அட்டவணை, பென்சில், பேனா, கலர் மார்க்கர்கள், கால்குலேட்டர்கள் ஜியாமெட்ரி கருவிகள் அடையாள அட்டை, பள்ளி டைரி, போன்ற யாவற்றையும் பைண்டரிலேயே வைத்துக் கொள்ளலாம்.

சரி வீட்டுப்பாடத்திற்கான நோட்டுப் புத்தகங்களை எவ்வாறு சமாளிப்பது என்கிற கேள்வி உங்கள் மனதில் எழுகிறதல்லவா?

இதுவும் கூட மிகவும் எளிமையே!

இதோ கவனியுங்கள்.

ஆசிரியருக்கும் மாணவர்க்கும் இடையேயான வீட்டுப்பாடப் பரிவர்த்தனைக்கு இலேசான ஃபைல்போல்டர் போதும்.

வருட ஆரம்பத்தில் ஒவ்வொரு பாடத்திற்கும் ஒவ்வொரு ஃபைல்போல்டர் என, லேபல் ஒட்டி, பேர், வகுப்பு, பாடம், இத்யாதி விவரங்கள் எழுதி, அந்தந்த டீச்சரிடம் தலா ஒரு ஃபைல்போல்டர் அளித்து விட வேண்டும். இந்த ஃஃபைல்போல்டர் டீச்சரிடம் இருக்கும். அவர் ஒவ்வொரு வகுப்பிற்கும் இந்த ஃஃபைல்போல்டர்களைக் கொண்டு வர வேண்டும்.

மாணவர் ஒவ்வொருவரும், வீட்டுப்பாடத்துக்கென இலேசான ஒரு ஃபைல்போல்டரில், பாலிதீன் “ஷீட் ப்ரொடெக்டர்கள்” கொண்டு வீட்டுப் பாடம் கோரும் ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு பை தயார் செய்து லேபல் செய்து கொண்டு ஒவ்வொரு நாளும் அந்தந்த சப்ஜெக்டுக்கான வீட்டுப் பாடத்தை முடித்து அந்தந்த உறைப்பையில் போட்டு, பள்ளிக்குக் கொண்டு செல்ல வேண்டும்.

டீச்சரிடம் கொடுத்து வைத்திருக்கிற ஃபைல் போல்டரில் அதனைச் சேர்த்து விட்டால், அவர் அடுத்த நாள், தான் திருத்திய வீட்டுப் பாடத்துடன் ஃபைல் போல்டரை, வகுப்புக்குக் கொண்டு வர, மாணாக்கர் திருத்தி வந்ததை எடுத்துக் கொண்டு புதிய வீட்டுப் பாடத்தை, அந்த ஃபைல்போல்டரில், சமர்ப்பிப்பார். திருத்தப் பட்ட வீட்டுப் பாடத்தைத் தந்து வீட்டுப்பாட பைலில் அதற்குரிய உறைப்பையில் வைத்துக் கொள்வார். பரிவர்த்தனை இவ்வாறு தொடரும், ஆண்டு முழுவதும்.

மாணவர், ஒவ்வொரு முறை திருத்தப்பட்ட வீட்டுப்பாடத்தைப் பெறுகின்ற போதும், அன்று வீட்டுக்குச் சென்ற உடன், வீட்டில் உள்ள, அந்தந்தப் பாடத்துக்கான, பைண்டரில் உள்ள வீட்டுப்பாடப் பகுதியில் அன்று பெற்ற திருத்தப்பட்ட வீட்டுப்பாடத்தைச் சேர்த்து விடுவார்.

எத்தனைச் சுலபம் பாருங்கள்.

மாணாக்கர்களுக்கும், பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஏற்றதும், மிகவும் எளியதுமான இந்த வழிமுறை தரும் வசதிகளை, இம்முறையை அனுசரித்து அனுபவிப்பவர் மட்டுமே அறிய முடியும்.

மாதமொரு முறை “பைண்டர் செக்” என்கிற பெயரில் வீட்டில் உள்ள பைண்டரைச் சமர்ப்பிக்க வேண்டும் என்கிற கட்டாயம் ஏற்படுத்தி, மதிப்பெண் வழங்கும் முறைமையை ஆசிரியர்கள் ஏற்படுத்திக் கொண்டு விட்டால், குழந்தைகள் தங்கள் பைண்டர்களை எத்தனைச் சமர்த்தாக அழகு படுத்தி, ஒழுங்கு படுத்திப் பராமரிப்பார்கள் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? இவ்வகை ஏற்பாடு ஆசிரியர்களுக்கும் கூட, வேலைப் பளுவை வெகுவாகக் குறைக்கும். பெற்றோர்களுக்கும் கூட குழந்தைகளின் பள்ளிக்கூட உடைமைகளைப் பராமரிப்பதில் உள்ள சிக்கல்களும் சிரமங்களும் குறையும்.

குறுகிய அகலம், குறுகிய நீளம் எனச் சிறியதான பக்க அளவு கொண்ட தாட்களால் ஆன நோட்டுப் புத்தகங்களைப் போலல்லாமல் முழு அளவு (A4) பெரிய தாட்களைப் பயன்படுத்த முடிவதால் குழந்தைகளால், வசதியாகவே எழுத முடிகிறது. மேலும் குழந்தைகள் தங்களது படைப்பாற்றலைப் பல வகைகளில் வெளிப் படுத்தவும் இந்த பைண்டர்கள் உதவும். (எடுத்துக் காட்டாக வெளிப்புற அட்டை, உள் அட்டைகள், தடுப்பான்கள் ஆகியவற்றில், புதியன படைக்கலாம்!)

மழையில் நனையாதவாறு காக்க, பிடியுடன் கூடிய ஜிப் கொண்ட பிளாஸ்டிக் உறைக் கவசத்தையும் வாங்கி இந்த பைண்டர்களுக்குப் போட முடியும் எனபதால் இந்த ஏற்பாடு தரும் வசதிகள் ஏராளம் தாராளம் என்பேன்.

அறிவியல் ஆய்வக ரெகார்ட் நோட்டுப் புத்தகங்களையும், தாட்களில் எழுதி, வருட இறுதியில் பைண்டிங் செய்து கொள்ளும் முறைக்கு மாற்றிக் கொள்ளலாம்.

ஆரம்பக் கல்விக்கும் கூட, பைண்டர்கள் பொருந்தும், இன்று, ஸ்லேட்டுகளுக்குப் பதிலாக, எழுதக் கூடிய பாலிதீன் தாட்களிலேயே, ஸ்கெட்ச் பேனா வைத்து எழுதச் சொல்லி பாடங்களைக் கற்பிக்க முடியும்!!

மேலும் பேசுவோம்..

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *