சொர்க்கத்தில் ஒரு முள் (அத்தியாயம்-8)

0

ஸ்ரீஜா வெங்கடேஷ்

மாமி ஊரிலிருந்து வந்து விட்டாள் பணத்தோடு. வயல் விற்ற பணம் இரண்டரை லட்ச ரூபாய் இருந்தது. அதை அப்படியே பாங்கில் போட்டு வைத்தார்கள். பின்னால் அதிலிருந்து டாக்டருக்கு ஃபீஸ் கொடுத்துக் கொள்ளலாம் என்று திட்டமிட்டார்கள். டாக்டர் ஃபீசே ஒன்றரை லட்சம் ஆகி விட்டது. அது தவிர ரூம் வாடகை, மருந்துச் செலவு, நோயாளிக்கான சிறப்புச் சாப்பாடு என்று மேற்கொண்டு ஒன்றரை லட்சம் தேவைப் படும் போல இருந்தது. மீதிப் பணத்துக்கு என்ன செய்யலாம் என்று மாமியும் ப்ரியாவும் ஆலோசித்தார்கள்.

“மேற்கொண்டு ஒரு அம்பதாயிரம் வேண்டியிருக்கும் போலிருக்கே ப்ரியா? என்ன செய்யறது? ஒங்கண்ணாவைக் கேப்போமா? இல்லை உங்களுக்கு யாராவது ஒறவுக்காரா இருக்காளா? இப்போதைக்குக் கை மாத்தா வாங்கிண்டு இன்னும் பதினஞ்சு நாள்ள உங்கண்ணா வந்த ஒடனே குடுத்துவோம்னு சொல்லிக் கேக்கலாமா?” என்றாள் மாமி.

“சொந்தக்காரங்க நெறயப் பேர் இருக்காங்க மாமி. ஆனா ஆபத்துக்கு பணம் தந்து உதவுற மனசு யாருக்குமே கிடையாது. முன்னே ஒரு தரம், வீட்டுக்கு அட்வான்ஸ் குடுக்கும் போது அண்ணனுக்கு ஒரு பத்தாயிர ரூவா தேவப்பட்டுச்சி, எங்க சித்தப்பா ஒருத்தர், பம்மல்ல நல்ல நெலையில இருக்காருன்னு அண்ணன் அவர்ட்ட கேட்டுது. அவரு முகத்துல அடிச்ச மாதிரி பணம் தர முடியாதுன்னு சொல்லி இனிமே இந்தப் பக்கமே வரக்கூடாதுன்னு சொல்லிட்டாரு. அதுலர்ந்து அண்ணன் எந்த சொந்தக்காரங்க வீட்டுக்கும் போறது இல்லே. அண்ணனுக்கே அப்படி சொன்னவங்க நாம போய்க் கேட்டா குடுக்கவா போறாங்க?” என்று பெருமூச்செறிந்தாள் ப்ரியா.

“பின்னே என்னடி செய்யறது? பணம் வேண்டியிருக்கே?” என்றாள் மாமி கவலையோடு.

“மாமி இதுக்கு ஒரே ஒரு வழிதான் இருக்கு. அண்ணி, நித்திலா பேர்லயும், என் பேர்லயும் மாசாமாசம் கொஞ்சம் பணம் ஆர்.டி போட்டு வந்துது. அதை வேணா டெர்மினேட் பண்ணி பணம் எடுக்கலாம். எப்படியும் ஒரு அறுபதாயிரம் தேறும்னு நெனக்கிறேன். என்ன சொல்றீங்க?” என்றாள் ப்ரியா. குரலில் பணம் கிடைக்க வழி தெரிந்து விட்ட சந்தோஷம்.

“இருக்கற ஒரே சேமிப்பையுமா எடுக்கறது. அப்படி எடுத்தாலும் மங்கை கையெழுத்துப் போட்டாத்தானே எடுக்க முடியும்? அதுக்கு என்ன பண்ண?”

“ஆபரேஷனுக்கு எப்படியும் பணம் செலவாகும்னு அண்ணிக்குத் தெரியும் தானே? அந்தச் செலவை இந்தப் பணத்தை வெச்சு தான் ஒப்பேத்தினோம்னு அண்ணி கிட்ட சொல்லிடுவோம். அண்ணியும் மேற்கொண்டு கேள்வி கேக்காம இருப்பாங்க. இது ஒரு வழிதான் மாமி இருக்கு. ப்ளீஸ் சரின்னு சொல்லுங்க மாமி” என்ற ப்ரியாவுக்குத் தலையசைத்துச் சம்மதம் தெரிவித்தாள் மாமி. அதன் படியே பேங்கில் போய் விண்ணப்பப் படிவங்கள் வாங்கி வந்து மங்கையிடம் கையெழுத்து வாங்கி பணம் எடுத்து என்று ப்ரியா பம்பரமாகச் சுழன்றாள், என்றால் மாமி வீட்டையும், குழந்தைகளையும், மங்கையையும் ஒரே நேரத்தில் பார்த்துக் கொண்டு அஷ்டாவதானம் புரிந்தாள்.

ஆபரேஷன் குறிப்பிட்ட தினத்தில் நடந்தது. குழந்தைகள் இருவரையும் அன்று லீவு போடச் சொல்லி விட்டாள் மாமி. “அதுகள் மொகத்தப் பாத்தா மங்கைக்கு ஆபரேஷனைத் தாங்கிக்கற சக்தி வரும்” என்று காரணம் கூறினாள். இவர்கள் அனைவரும் வெளியில் அடிக்கின்ற மனத்தோடு காத்திருக்க ஆபரேஷன் கிட்டத்தட்ட 3 மணி நேரம் நடந்தது.

ஆபரேஷன் சக்சஸ். இதய ஆபரேஷன் என்பதால் குறந்தது இருபது நாட்கள் ஆஸ்பத்திரியிலேயே இருக்க வேண்டும் என்று டாக்டர் கூறிவிட்டார்.

மயக்கம் தெளிந்து நினைவு வந்தவுடன் குழந்தைகளைப் பார்த்து ஆனந்தக்கண்ணீர் வடித்தாள் மங்கை. டாக்டர் அதற்கே திட்டினார். “அம்மா! நடந்திருக்கறது இதய ஆபரேஷன். எந்த விதமான உணர்ச்சிக்கும் நீங்க இடம் கொடுக்கக் கூடாது” என்று கூறி அவளைப் படுக்க வைத்து விட்டு வெளியில் வந்து மாமியையும், ப்ரியாவையும் அழைத்தார். “அம்மா! இனிமே தான் நீங்க ரொம்ப ஜாக்கிரதையாப் பாத்துக்கணும், நான் முன்னாடியே சொன்னா மாதிரி அவங்களுக்கு எந்த விதமான அதிர்ச்சியும் கூடாது. ரொம்ப சந்தோஷமும் கூடாது, அதிகத் துக்கமும் கூடாது. ஒரு மூணு மாசத்துக்கு அப்படிப் பாத்துக்கிட்டீங்கன்னா அப்பறம் மெது மெதுவா அவங்க நார்மலுக்கு வந்துடுவாங்க. அதுனால கேர்ஃபுல்லா இருங்க , ஆப்ரேஷன் சக்சசா முடிஞ்சாக்கூட இனிமே நீங்க பாத்துக்கறதுல தான் அவங்க ஒடம்பு சீக்கிரம் குணமாகணும், இந்த மருந்துகளைத் தவறாம குடுங்க” என்று மருந்து எழுதிக் கொடுத்து விட்டுப் போய் விட்டார்.

அதன் படியே மாமியும் ப்ரியாவும் மிகவும் கவனமாகப் பார்த்துக் கொண்டார்கள். குழந்தைகளிடமும் விஷயத்தைச் சொல்லியிருந்ததால் அவர்களும் ரொம்பச் சத்தம் போடாமல் அதிராமல் பேசினார்கள். மங்கையின் உடல் நிலை வேகமாக முன்னேறியது. அவள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல மாமியும், ப்ரியாவும் திணறி விட்டார்கள். “பணத்துக்கு என்ன செய்தீர்கள்?” என்ற கேள்விதான் அவர்களைப் படாத பாடு படுத்தி விட்டது. பேங்கிலிருந்து பணம் எடுத்த விஷயம் சொன்னாலும், அதை விட ரொம்ப அதிகமாகச் செலவாயிருக்கும் போலயிருக்கே. மீதிப் பணத்துக்கு என்ன பண்ணீங்க?” என்று கேட்டுத் துளைத்தெடுத்து விட்டாள். மாமியும், ப்ரியாவும் பேசி வைத்தபடி சிவநேசனுக்கு விஷயம் தெரியும் என்றும், அவந்தான் பணம் அனுப்பினான் என்றும் பொய் சொல்லி விட்டனர். என்ன செய்ய? திருவள்ளுவரே புரை தீர்ந்த நன்மை பயக்கும் என்றால் பொய் சொல்லலாம் என்று கூறியிருக்கிறாரே என்று சமாதானம் செய்து கொண்டனர்.

இதனிடையில் சிவநேசனிடமிருந்து எந்தத்தகவலும் இல்லை. அவன் தான் கூறியபடி சீனா வந்து விட்டானா? அங்கு அவன் வேலை முடிந்ததா? எப்போது தாயகம் திரும்புவான் என்பது பற்றி எந்த விதமான விஷயமும் அவர்களுக்குத் தெரியவில்லை. மாமிக்கு அது வேறு கவலையாக இருந்தது. தன் கவலையைப் ப்ரியாவிடம் சொல்லி அவளையும் கலவரப் படுத்த வேண்டாம் என்று பேசாமல் இருந்து விட்டாள்.

மங்கைக்கு ஆபரேஷனாகி ஒரு வாரம் ஆகி விட்டது. எதிர்பார்த்ததை விட நல்ல முன்னேற்றம். ஆனால் மாமிக்குத்தான் மனது ஒரு நிலையில் இல்லை. ஏதோ ஒன்று நடக்கப் போவது போல் தோன்றிக் கொண்டேயிருந்தது. அதற்கேற்றாற்ப் போலப் ப்ரியாவும் தனக்கு விடாமல் வலது கண் துடிப்பதாகச் சொல்லிக் கொண்டிருந்தாள். மாமி வேறு எதுவும் செய்யத் தோன்றாமல் கடவுளைப் பிரார்த்தித்து வந்தாள். பின்னே வருவன எல்லாவற்றிற்கும் அவன் தானே பொறுப்பு?

அன்றைக்கு எழுந்ததில் இருந்தே எந்தச் சகுனமும் நன்றாக இல்லை. பால் திரிந்து போயிற்று. பல்லி வேறு கத்தியது. என்னவோ ஏதோ என்று பயந்து கொண்டிருந்தாள் மாமி. “கடவுளே மங்கைக்கு ஒண்ணுமாகாமே நீதான் காப்பாத்தணும்” என்று வேண்டிக் கொண்டு வேலைகளை இயந்தரமாகச் செய்தாள். குழந்தைகள் பள்ளிக்குக் கிளம்பிக் கொண்டிருந்தன. ப்ரியா லேட்டாகப் போனால் போதும் என்று மாமிக்கு உதவிக் கொண்டிருந்தாள்.

ஃபோன் அடித்தது. ப்ரியாதான் எடுத்தாள். “ஆமா! சிவநேசன் சார் வீடுதான். அவர் எனக்கு அண்ணன் தான்” என்று சொல்லும் குரல் கேட்டது. இனம் புரியாத பயம் நெஞ்சைக்கவ்வியது. ஃபோனில் பேசியவர்கள் வேறு யாராவது பெரியவர்கள் இருக்கிறார்களா என்று கேட்டார்கள் போலும். மாமி தான் இருப்பதாகவும், சிவநேசனின் மனைவி மங்கை ஆபரேஷனாகிப் படுத்திருப்பதாகவும் அதனால் என்ன விஷயம் என்றாலும் தன்னிடமே தெரிவிக்கலாம் என்றும் சொன்னாள் ப்ரியா.

அடுத்து அவள் கேட்டது செய்தியா! அப்பப்பா! ஃபோன் மூலமாக ஒரு அணுகுண்டே அல்லவா அந்தச் சிறிய குருவிக் குடும்பத்தில் விழுந்தது? சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட சிவநேசன் சென்ற விமானம், ஒரு அடர்ந்த காட்டுப் பகுதியில் தீப்பிடித்து விழுந்து விட்டது எனவும், அதில் பயணம் செய்த ஒருவருடைய உடலைக் கூட மீட்க முடியவில்லை என்றும் ஃபோனில் அவன் அலுவலகத்தில் இருந்து சொன்னார்கள். கேட்டவுடன் பயங்கரமான இருள் சூழ்ந்து கொண்டது ப்ரியாவை. “அண்ணன் போன ஃப்ளைட் ஆக்சிடெண்டா? அண்ணன் இப்போ உயிரோட இல்லையா?” என்ற கேள்விகள் அவளை ஆட்டுவித்தன. அவள் உடல் நடுங்கி கண்கள் செருகி விழுந்து விட்டாள். பாய்ந்து வந்த மாமி இன்னது என்று புரியாமல் பரிதவித்தாள். ப்ரியாவுக்கு மயக்கம் தெளிவிக்கும் முயற்சியில் இறங்கினாள்.

திக்பிரமை பிடித்தாற்போலிருந்த ப்ரியாவை நினைவுக்குக் கொண்டு வந்து விஷயத்தைக் கேட்பதற்குள் மாமி படாத பாடு பட்டாள். ஒருவாறு திக்கித் தடுமாறித் திணறி ஃபோனில் கேட்டதை மாமியிடம் சொன்னாள். ப்ரியா சொன்னதைக் கேட்டதும் நிலை தடுமாறிய மாமி சுவரைப் பிடித்துக் கொண்டு அப்படியே சாய்ந்து விட்டாள். “எம்பெருமானே! ஈஸ்வரா! இது என்னப்பா சோதனை” என்பதைத் தவிர அவள் வாயிலிருந்து எந்தச் சொல்லும் வரவில்லை.

குறிப்பு: குங்குமச்சிமிழ் இதழில் தொடராக வெளி வந்தது) 

(தொடரும்)

 

படத்திற்கு நன்றி:http://www.fotosearch.com/photos-images/hospital.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *