இன்னம்பூரான்

நான் இந்த இழையை ஒரு பாடாக தணித்து அணைத்து விட்டேன், யாருக்கும் விழிப்புணர்ச்சி ஏற்பட்டதாக அறிகுறிகள் இல்லாததால். ஆனால், தற்குறிகள் நாடாளத்தொடங்கினால், இறைவன் கூட ஓடி ஒளிவான். இன்றைய தணிக்கைத் தகவல் நம்மை தடுமாற வைக்கிறது. சில அரசியலார் தகிடுதத்தம் செய்வதும், சில உயர் அதிகாரிகள் மட்டமான தகாத செயல்களில் ஈடுபடுவதும் அன்றாட செய்தி. விஞ்ஞானிகளும் அஞ்ஞானிகளாக மாறி, ஆடிட்டர் ஜெனெரல் சொன்ன மாதிரி, ‘அரசு சேமிப்பை தனியார் சொத்தாக மாற்றி இருப்பதை’ அறிவோம். போதாக்குறைக்கு, வசிஷ்டருக்கு எள்ளுத்தாத்தா போல் தன்னை சுகபிரும்மமாக காட்டிக்கொள்கிறார், மஹாகனம் பொருந்திய திருவாளர் ஜி.மாதவ மேனோன். அவர் ஒரு திரிமூர்த்தி. ஸ்பேஸ் துறைத்தலைவர். ஸ்பேஸ் கமிஷன் தலைவர். இஸ்ரோவுக்கும் தலைவர். நல்ல வேளை எல்லாம் மாஜி. தனக்குத்தானே, இங்கிருந்து அங்கே, அங்கிருந்து இங்கே மடலாடி, இந்திய அரசின் மேலாண்மைக்கு குந்தகம் விளைவித்த கதை கேளும்.

எம்.ஜி.சந்திரசேகர், டி.வேணுகோபால் என்ற இரு மாஜி ‘விஞ்ஞானிகள்’ ஆரம்பித்த ‘தேவாஸ்’ என்ற பேய்கம்பெனிக்கு முறையற்றவகையில் நிதி கொட்டி கொடுக்க, அரசு பணமும், பொது நலமும் சூறையாடப்பட்டன. அப்படி செய்யும்போது, சம்பந்தப்பட்ட இலாக்காக்களிடமிருந்து முக்கியமான தகவல்கள்/தீர்வுகள்/ விளைவுகள் எல்லாவற்றையும் இருட்டடிப்பு செய்தார். இந்திய அரசியல் சாஸனத்தின் ஷரத்துக்கள் படி அரசின் மேலாண்மை அமைச்சரவைக்கு மட்டுமே. இது எழுத்து மூலம் உள்ள அரசாணை. அதையெல்லாம் உதறிவிட்டு, அரசு நடாத்த வேண்டிய விதிகள், வழிமுறைகள், கோட்பாடுகள், நடைமுறைகள் எல்லாவற்றையும் தானே ஜீரணம் செய்து கொண்டார். இந்த தாந்தோன்றித்தனமான இழிச்செயலால் பாதிக்கப்பட்டவை ராணுவம், தொலைத்தொடர்பு, அரசின் மேலாண்மை.

இந்த தேவாஸ்ஸுக்கு தாரைவார்த்துக் கொடுக்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வசதிகளை தந்திரமாக மறைத்து விட்டார். 269 கோடி ரூபாய் மதிப்புள்ள சேவைக்கு 147 கோடி என்று மதிப்பீடு செய்து, தன்னுடைய கண்ட்ரோலுக்குள் வைத்துக்கொண்டார். என்னே ராஜ விசுவாசம்! அத்துடன் நின்றால், நாட்டுப்பற்று உள்ளவர் என்று நீங்களும் நானும் நினைத்து விட்டால்? அதனால் ‘ஃபோர்ஜ் ஆலோசகர்கள்’ என்ற அமெரிக்கக் கம்பெனிக்கு அதீத சலுகைகள்.

3ஜி ஏலத்தில் கிடைத்தது: 67,719 கோடி ரூபாய். ப்ராட்பேண்ட் ஏலம் 38,543 கோடி ரூபாய். அந்த வகையில் பார்த்தால் ஸ்பேஸ் கமிஷன் மோசடியில் இழந்தது பல்லாயிரம் கோடி ரூபாய்கள். இந்தியாவை ஒழித்துக்கட்டி, மக்களை பட்டினி போட்டு, நம் தன்மானத்தை செருப்படியில் மிதிக்க வேறு வினை வேண்டாம்.

அடடா! ஒரு தலைமையில் குட்டையை குழப்பி, இன்னொரு தலைமையில் மட்டையில் மறைத்து, மூன்றாவது தலைமையில் ‘சத்யமேவ ஜயதே’ என்பதை அசட்டை செய்தார். பேச்செல்லாம் ஆ.ராசா ஸ்டைல்!அந்த சந்தேகத்துக்குட்பட்ட உள்கை கம்பெனி, விஞ்ஞானிகளுக்குப் பொன்காசு கொடுத்தார்கள். அது லஞ்சமில்லையாம்!

சுருங்கச்சொல்லின், மெத்தப்படித்த மண்ணாங்கட்டிகள் அரசியல் சாசனத்துக்கு சமாதி கட்டினர். ஆனால், அரசு தண்டனை என்ன? அவர் இனி அரசு செலவில் ஊர் சுற்ற தடை. ஒரு ஸுப்பர் பாரதரத்னா கொடுத்திருக்கலாமோ!

இதெல்லாம் ஆடிட்டர் ஜெனெரல் முன்னாலேயே ஏன் சொல்ல வில்லை என்று கேட்பீர்கள். அவர் சொன்னதை இந்த மேதாவிகள் உதறி விட்டனர். ஆவணங்களை லேசில் கொடுக்கவில்லை. அது போகட்டும். அமைச்சரவை ஏன் இதையெல்லாம் நிறுத்தவில்லை என்று கேட்கிறீர்கள். நானும் அது தான் கேட்கிறேன்.

 படத்திற்கு நன்றி:

http://www.expertbusinessadvice.com/images/content/Manage-your-business-money-like-a-pro.jpg

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “தணிக்கைத்துறையின் தணியா வேகம்

  1. ஆணித்தரமான இந்தப் பொய்யாமொழி அழுத்தமான பாதிப்பை ஒவ்வொரு மெய்ஞானியின் சிந்தையிலும் ஏற்படுத்துவது உறுதி.

    விழிப்புணர்வு என்பதனை நீங்கள் எந்த அளபெடையைக் கொண்டு பேசுகிறீர்கள் என்பது விளங்கவில்லை
    கட்டுரைக்கு வரும் பின்னூட்டம் விழிப்புணர்வு ஏற்பட்டதன் அடையாளம் என்றோ,வராத பின்னூட்டம் விழிப்புணர்வற்ற தன்மையின் அறிகுறி என்றோ ஆகாது.

    பின்னூட்டம் தருவதிலே நிறையவே நடைமுறைப் பிரச்சனைகள் உள்ளன

    இது நிற்க.

    நமது விஞ்ஞானிகளின் பாரம்பரியம் வித்தியாசமானது.
    செப்பிடு வித்தை என்று அத்தனைப் பொருத்தமான தலைப்பிட்டு எத்தனைப் பூடகமாக – எத்தனைக் காட்டமாகச் சொல்லமுடியுமோ – அத்தனை வலிமையாக நறுக்கென்று தலையில் குட்டியது போல் சொல்லியிருக்கிறீர்கள்.

    இந்த தைரியமும் சாதுரியமும் எத்தனைப் பேருக்கு வருமோ!

    சுதந்திர இந்தியாவின் ஒரு முழுப் புத்துணர்ச்சிப் பணியாக ஒரு தேசத்தில் எழும்பிய 42 ஆய்வுக்கூடங்கள் (37 பிரதான ஆய்வகங்கள்; மற்றவை பிராந்திய மையங்கள் ). உலகில் வேறு எங்கும் இல்லாத ஒரு மாபெரும் புரட்சி இது. ஒவ்வொரு ஆய்வகமும் ஒவ்வொரு துறையில் நிபுணத்துவம்.

    இவையாவும் ஒழுங்காகச் செயல்பட்டிருக்குமேயானால், உலகின் அனைத்துத் துறைகளுக்கான அனைத்து நோபல் பரிசுகளும் நம் நாட்டுக்கே வந்திருக்கும்.

    ஆனால் ஐயகோ! இங்கே நடந்து வந்தன – நடந்து வருவன ஆகியனவெல்லாம் வேறு!

    அன்று அறிவியல் படித்தவர்களை எல்லாம் விஞ்ஞானிகள் ஆக்க முந்துணர்வு கொண்டு, வீடுதேடிச் சென்று, வேலைக்குக் கூட்டிக்கொண்டு வந்து வைத்தார்களாம்! வெறும் BSc போதும் என்று அன்றைய முடிவு!

    விளைவு முதல் படையில், BSc  விலங்கியல் படித்தவர் வேதியியல் விஞ்ஞானியாக ரிடையர் ஆனதோடு சரி!

    நான்காண்டுக்கொரு முறை பதவி உயர்வு – ஆண்டாண்டுதோறும் சம்பள உயர்வு என்ற வகையில் ஒரு மகத்தான பொற்காலத்தை மிகவும் சௌகரியமாக வாழ்ந்து அனுபவித்து, அவ்வப்போது அறிவியல் என்ற பெயரில் எதையோ செய்துவிட்டு போனவர்கள் தோற்றுவித்தது அறிவியலில் அரசியலும், பணவியலும் தான்.

    உண்மையிலேயே அறிவியலுக்காகப் பாடுபட்டவர்களின் எண்ணிக்கை மிக்கக் குறைவு. அதில் உண்மையானவர்களில் பலர் வெளிச்சத்திற்கு வரவே இல்லை!!

    “வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபு ” என்பதாகவே இங்கு அறிவியல் அரங்கேற்றம்!

    நம் விஞ்ஞானிகளில் பெரும்பாலோர் தன வணிகர்களாக இருப்பதும், பங்குச்சந்தையில் கொடிகட்டி பறப்பதும், வீட்டுத்தொகுப்புகள் கட்டி வாடகைக்கு விடுவதும் – பயிர் நிலங்களை – மானாவாரியாக வாங்கிப் போட்டு – பிளாட்போட்டு விற்பதும் – எனப் பல விதமான “அறிவு இயல்” முழுநேரப் பணிகள் வைத்திருப்பவர்களே!

    எங்கேயாவது யாரவது ஒரு பயனுள்ள சிறு தொழிநுட்பத்தை எதேச்சையாகக் கண்டுபிடித்திருந்தாலும், அதனையும் இவர்களே, சொந்தத் தொழிற் பணியாக மாற்றிக்கொண்டிருப்பார்கள். அந்தப் பினாமி செப்பிடு வித்தை ஒரு பிரத்தியேகச் சிறப்புக் காப்பியம்!

    கல்லையும் மண்ணையும், காசாக்கும் இந்த இராசவாதிகளின் செப்படிவித்தையைச் சொல்லி மாளாது!!

    வருடாந்திர ஆடிட்டிங் வரும்போது நடக்கும் செப்பிடுவித்தைகளைப் பொருத்தமாய் விவரிப்பது கடினம்.

    தணிக்கை செய்ய வரும் அதிகாரிகளும் இவ்வழிப்போக்கில் விலக்கல்ல என்பது கண்கூடு!

    தொய்வடையாதீர்கள் – தொடர்ந்து எழுதுங்கள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *