வாஷிங்மெஷின்- வாங்க, உபயோகிக்க சில டிப்ஸ்

0

வ்வொருவரும் திருமணம் முடிந்ததும் முதலில் டிவி வாங்குவார்கள். சிலர் பிரிட்ஜ் வாங்குவார்கள். நண்பர் அய்யாசாமி திருமணத்துக்கு பின் முதலில் வாங்கியது என்ன தெரியுமா ? வாஷிங் மெஷின் தான் !

இது ஏன் என அவரிடம் கேட்டபோது ” எல்லா வேலைகளை விட துணி துவைக்க ரொம்ப சிரமம் ஆயிருக்கு; அதிலும் இந்த புடவையை துவைக்குறது இருக்கு பாருங்க அது ரொம்ப கஷ்டம் ” என்றார்.

நன்கு விசாரித்து ஐ.எப்.பி (IFB) வாஷிங் மெஷின் வாங்கினார் அய்யாசாமி. அதன் பின் பிரிட்ஜ், டிவி போன்றவை வாங்கினாலும் அவருக்கு மிக பிடித்தது ஐ.எப்.பி வாஷிங் மெஷின் தான் !

இது பற்றி பலரிடமும் இப்படி சொல்வார்:” 15 ,000 போட்டு ஐ.எப்.பி வாஷிங் மெஷின் வாங்கினோம். சும்மா சொல்ல கூடாது. என்னமா உழைக்குது தெரியுமா? பதிமூணு வருஷம் ஒரு சின்ன ஃபால்ட் கூட வந்தது கிடையாதுங்க. ஒவ்வொரு தடவை வீடு மாறும்போதும் பிளம்பரை கூட்டி பைப் கனக்ஷன் குடுப்பதோட சரி. சில நேரம் வெளியில் உள்ள பைப் எலி கடிச்சோ ரொம்ப வருஷம் ஆனதாலோ லேசா உடையும். அப்ப மட்டும் பிளம்பரை வச்சு பைப் மாத்துவோம். அதுவும் வெளியில் தான். மெஷினில் கை வச்சதே இல்லை. நம்மோட கஷ்டம் புரிஞ்ச ஜீவன்னா அது வாஷிங் மெஷின் தான். என்னோட பெஸ்ட் Friend களில் முக்கியமான ஆள் இது !”

இப்படியெல்லாம் அய்யாசாமியால் கொண்டாடப்பட்ட அவரது IFB வாஷிங் மெஷின் சமீபத்தில் திடீர் மரணம் அடைந்தது !

ஒரு நாள் வாஷிங் மெஷின் திடீரென வேலை செய்யலை. அய்யாசாமிக்கு கையும் ஓடலை ; காலும் ஓடலை. ஒவ்வொரு மெக்கானிக்கா கூட்டி வந்து காண்பித்தார். ” இப்ப தாங்க முதல் தடவை ரிப்பேர் ஆகுது. இது வரை ரிப்பேர் ஆனதே இல்லை”

அனைவரும் சொல்லி வைத்த மாதிரி ” இதை ரிப்பேர் செய்வது வேஸ்ட். பேசாம புதுசு வாங்கிடுங்க” என்றனர்.

“இந்த மெஷினை பொறுத்தவரை நீங்க தான் டாக்டர். எப்படியாவது காப்பாத்துங்க” என கெஞ்சி பார்த்தார். யாரும் நம்பிக்கை தரலை.

கனத்த மனதுடன் அடுத்த இரு நாளில் புது வாஷிங் மெஷின் வாங்கிட்டார் அய்யாசாமி (இன்னும் நாலு நாள் ஆனா, யார் சாமி துணி துவைக்கிறது?).

இந்த முறை IFB வாங்கலை. அதன் விலை 25 ஆயிரத்தை தாண்டி விட்டதால், Whirlpool-ல் சிக்கனமாய் ஒரு வாஷிங் மெஷின் 10,000-க்கு வாங்கி விட்டார்.    

**************

அய்யாசாமி தன் வீட்டில் முழுசாய் பொறுப்பு எடுத்து செய்கிற வேலை ஒன்று உண்டென்றால் “வாஷிங்” வேலை தான் ! அவர் தான் வாஷிங் செய்கிறார்னு புரளியை கிளப்பிடாதீங்க ! வாஷிங் மெஷினில் துணி போடுவது,  பின் காய வைப்பது, எடுப்பது, மடித்து அந்தந்த இடங்களில் வைப்பது, அயனுக்கு தருவது, அதனை வாங்குவது இத்தகைய வேலைகள் அவர் தான் செய்வார்.

மழை காலத்தில் துணிகளை மாடியில் போட்டு விட்டு ஆபிஸ் போன பின், மழை வந்தால் டென்ஷன் ஆகி மனைவிக்கு போன் செய்வார் ” மழை பெய்யுது “

” பெய்யட்டும். நல்லது தானே?” என்பார் Mrs. அய்யாசாமி தன் அலுவலகத்தில் அமர்ந்தவாறு.

“இல்லை ……..மொட்டை மாடியில் துணி காய போட்டேன்”

” அப்படியா? காய போட்டீங்களா ? ” என சிரித்து விட்டு ” எனக்கு அந்த கவலையே இல்லை. அது உங்க டிபார்ட்மென்ட் !”

************

நிற்க. புதிதாய் வாஷிங் மெஷின் வாங்குவோருக்கு அனுபவசாலி அய்யாசாமி தரும் டிப்ஸ் இதோ :

நிச்சயம் Fully ஆட்டோமேடிக் வாஷிங் மெஷின் வாங்குங்க. Semi ஆட்டோமேடிக் எனில் நிறைய வேலை வைக்கும். நாம் துவைக்கிற வேலையில் பாதி இதில் செய்ய வேண்டியிருக்கும்

இந்த பதிவில் சொன்னது போல் வாஷிங் மெஷின் பெரும்பாலும் அதிக வருஷம் உழைக்கும். மற்ற வீட்டு உபயோக பொருட்கள் போல் வாஷிங் மெஷின் அதிகம் பழுது ஆகாது. நல்ல Life-ம் வரும். ஓரளவு நல்ல கம்பனி மெஷின் வாங்குங்க

 அநேகமாக வாஷிங் மெஷின் பழுது ஆகாது என்பதால், இதற்கு என எந்த AMC-ம் எடுக்க தேவையில்லை. எப்போதேனும் சிறு பிரச்னை எனில் காசு தந்து சரி செய்து கொள்ளலாம்.

துணிகள் நிறைய போட்டு stuff பண்ணாதீங்க. அதே நேரம் பாதி காலியாவும் ஓட்டாதீங்க. சின்ன குடும்பம் எனில் வாரம் இரண்டு அல்லது மூன்று முறை போட்டாலே போதும்

துணிகள் போடும் போது பெருசு ஒன்றும் சின்னது ஒன்றுமா மாத்தி மாத்தி போடணும்.

வாஷிங் மெஷினுக்கு என்று குறிப்பிட்ட சோப்பு பவுடர் இருக்கும் அதை மட்டும் தான் போடணும், எல்லா சோப்பு பவுடரும் போட கூடாது; போட்டால் மெஷின் பிரச்சனை ஆகிடும். எந்த சோப்பு பவுடர் போடணும் என்பதை மெஷின் விற்கும் அதே கம்பனியில் சொல்வார்கள். (உதாரணமாய் IFB-க்கு Surf Excelmatic சோப்பு பவுடர் மட்டும் தான் போடணும்)

வாஷிங் மெஷினில் துணிகள் துவைத்து எடுத்தபின் உள்ளே சின்ன துணி ஏதும் கிடக்குதா என பாருங்கள். சில நேரம் கீழே சில துணி கிடந்து அடுத்து நாம் வாஷிங் மெஷின் போடும்வரை மெஷின் நாத்தம் அடிச்சிடும்.

Fully ஆட்டோமேடிக் மெஷின் என்பதால் துணிகள் ஓரளவு காய்ந்து விடும். எனவே துணிகளை அதிக நேரம் வெய்யிலில் போடாதீர்கள். அப்படி போட்டா துணி ரொம்ப  வெளுத்துடும். நல்லா வெயில் அடிக்கும் போது மொட்டை மாடியில் துணியை போட்டால் இரண்டு மணி நேரத்தில் எடுத்துடலாம். இது தான் கணக்கு ! மழை காலத்தில் வெய்யில் அதிகம் இல்லாம துணி காய நேரம் ஆகலாம்.

மொட்டை மாடியில் துணிகளை போடும் போதும், எடுக்கும் போதும் அக்கம் பக்கத்து மாடியில் உள்ள மாமிகளை பார்க்காதீர்கள். அது உங்கள் இல்லறத்துக்கு நல்லது !

Happy Washing Folks !!

 

புகைபடத்துக்கு நன்றி:

http://us.123rf.com/400wm/400/400/ljupco/ljupco1110/ljupco111000084/10920868-full-length-portrait-of-a-smiling-male-holding-a-laundry-and-a-washing-machine-basket-isolated-on-wh.jpg

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *