திவாகர்

(மே 13 – 20, 2012)

சங்கீதக் கச்சேரிகள் என்றால் இயற்கையாகவே எனக்கு ஒரு பயம் உண்டு. இன்றைய காலத்தில் நடக்கும் கச்சேரிகளில் பாடல் பாடுவதென்றால், அப்பாடலில் உள்ள பொருள் நமக்கு சரிவரப்பதியும் அளவுக்கு நமது பிரபல பாடகர்கள் பாடுவதில்லை என்பது பலநாள் குறை கூட உண்டு. அது எந்த மொழியாக இருந்தாலும் அந்தப் பாடல் வரிகளைக் கீறிக்கொண்டு பாடும்போதும் சற்று மனம் வருத்தப்படும். ஒருவேளை இவர்களையெல்லாம் பார்த்துதானோ நம் ஏ.ஆர். ரகுமான் கூட இசைக்கு மொழியோ, பாடல் வரிகளோ தேவையில்லை, சப்தம் மட்டுமே போதுமானது என்று முடிவு கட்டியிருக்கலாம் என்றும் நினைப்பதுண்டு… மொழியின் இனிமையையும் எளிமையையும் ஏன் இந்த இசை கொண்டுவருவதில்லை.. இனி எதிர்காலத்து இசை எந்த அளவுக்கு மொழியை சின்னாபின்னப் படுத்தும் என்றெல்லாம் விசனமும் வருவதுண்டு.

ஆனால் நமது தமிழ் மொழி போல ஒரு மொழி வருமோ.. அதிலும் தமிழில் உள்ள எளிமையையும் இனிமையையும், வளமையையும் வேறெந்த மொழியால் தரமுடியும், பாடல் பாடுவதற்கேற்ற மொழி தமிழ்தான் என்று பல்லாண்டுகளாகவே நமக்குச் சொல்லிக் கொடுத்து வரும் முன்னோர் பலர் உண்டு. நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்டு, இனிமையாகப் பாடப்பட்ட ஒரு பாடலை (ஸாம்பிள்) இங்கு தருகிறேன்..

 

உனை நம்பினேன் அய்யா

 

ராகம்: கீரவாணி
தாளம்: ஆதி

பல்லவி
உனை நம்பினேன் அய்யா (நான்)

அனுபல்லவி
நாகம் புனை சம்போ நடராஜா புலியூர் வாழ் ஈசா (உனை)

சரணம் 1
இருவர் தம் இசைகொண்ட காதா தித்தி என நின்று நடம்செய்யும் இங்கித பொற்பாதா
திருநாவலூரன் விடு தூதா தில்லை சிவகாமி ஒரு பாகா சிதம்பர நாதா (உனை)

சரணம் 2
மழுவினைத் தரிக்கின்ற கையா கொன்றை மலர் மாலை புனைகின்ற வடிசுடர் மெய்யா
எழு புவி துதிக்கின்ற துய்யா அன்பர் இடமாய் இருந்தின்பம் உடனாளும் அய்யா

சரணம் 3
நெடியமால் அயன்தேடிக் காணாதெங்கும் நிறைந்தவா எலும்பெல்லாம் அணிந்திடும் பூணா
அடியவர் தொழுந் தமிழ்ப்பாணா தில்லையம்பதி நடராஜா அம்பலவாணா (உனை)

முத்துத்தாண்டவர் எனும் தெய்வப்புலவர்தாம் இயற்றியது இது. அவர்தாம் முதன்முதலில் நாம் இப்போதெல்லாம் பாடும் பாடலுக்கு சுவை சேர்க்கும் பல்லவி, அனுபல்லவி, சரணம் எனும் முறையை முதன்முதலில் கொண்டுவந்தவர் (எனக்குத் தெரிந்து). அந்தத் தமிழை மறுமுறைப் படித்துப் பாருங்களேன்.. மிக எளிமை.. பொருள் காண அகராதியைத் தேடவேண்டாம். கீரவாணி ராகத்தில் இந்தப் பாட்டைப் பாடினாலோ, கேட்டாலோ பக்திப் பரவசம் மிகுந்து கண்ணீர் வரும் பாடல் இது. ஆனால் இவரைப் பற்றி தமிழர்களாகிய நமக்கே அதிகம் தெரியாது என்பது உண்மை. இவரது பாடல்கள் கூட நம் இசைக் கலைஞர்கள் அதிகம் பாடுவதில்லை (ஓரிருவர் தவிர) எல்லோருக்குமே கர்நாடக சங்கீதப் பாடல், கீர்த்தனை என்றால் தியாகய்யாவின் தெலுங்குப் பாடல்கள்தான் என்று பல ஆண்டுகளாகவே கங்கணம் கட்டிக்கொண்டுவிட்ட காலம் இது. முத்து தாண்டவர் பாடல்கள் பாடினால்தான், அல்லது பாடிக்கேட்டாலோ அதிசயம் என்ற நிலைகூட ஏற்பட்டுவிட்ட காலகட்டம் இது. இனி இவரை யாரும் சீண்டுவாரில்லை என்று கூட நினைப்பதுண்டு. எளிய தமிழுக்கு மறு வாழ்வு தேவையோ என்று வெறுத்துப் போனதுமுண்டு.

முத்துத்தாண்டவர் சாதாரணமான கவிஞரோ, பாடலாசிரியரோ அல்ல என்பதை அவரது வரலாறு சொல்லும். சாதாரணமானோர் நம்பமுடியாத பல அதிசயங்களை நிகழ்த்திக்காட்டிய மகான். தில்லையையே நினைத்து நினைத்து, ஆடலழகனையேப் பாடிப் பாடி, அவன் சந்நிதியிலேயே அவன் பாதம் சேர்ந்த மிகச் சில மகான்களில் முத்துதாண்டவரும் ஒருவர். அவர் பாடல்கள் அனைத்தும் பாமரத் தமிழ், எளிய தமிழ், இனிமையான தமிழ், வளம் செறிந்த தமிழ், பக்திமயமான தமிழ்.

ஆனால் அதிசயத்திலும் அதிசயமாக வல்லமையில் இந்த வாரம் நம் ஷைலஜா அவர்கள் முத்துத்தாண்டவர் பற்றிய வரலாற்றை ஒரு கட்டுரையாக வடித்துத் தந்துள்ளார்.

https://www.vallamai.com/literature/articles/20584/

இந்த திருவரங்கத்து நாயகி, எல்லோரும் இப்படிப்பட்ட எளிமையான தமிழை அறியவேண்டும் என்று இப்படி ஒரு அழகான பதிவை இந்த வாரம் வெளியிட்டிருப்பதும் முத்துத்தாண்டவர் பாடல்களை எல்லோரும் மறந்துவிட்ட நிலையில் அந்த மகானின் சரித்திரத்தை வெளி உலகுக்கு எடுத்துக் காண்பித்திருப்பதும் மிக மகிழ்ச்சியான செய்தியாகப்பட்டது. அந்த ஒரு மகிழ்ச்சியைக் கொடுத்ததற்காகவே அவருக்கு வல்லமை சார்பாக ’சென்ற வார வல்லமையாளர் விருது’ கொடுத்து கௌரவிக்க விழைகின்றேன். இவர் ஒரு பன்முகநாயகி. நாவலாசிரியை, சிறுகதை எழுத்தாளர், இணைய உலகில் வெகுவாக அறியப்பட்டவர். வல்லமையாளர், பழகுதற்கு இனியவர் எந்த விஷயத்தையும் எங்கும் எடுத்துச் செல்லும் சக்தி படைத்தவர். ’வல்லமை’யின் சார்பாக ஷைலஜாவுக்குக் கொடுக்கப்படும் இந்த வல்லமையாளர் விருது கொடுக்க இப்படி ஒரு அவகாசம் கொடுத்ததற்கு நன்றி சொல்லும் அதே வேளையில் இப்படிப்பட்டவர்கள் இன்னமும் அதிகமாக முன்வந்து எளிய தமிழின் புகழைப் பரப்பவேண்டும். என்று இந்த சந்தர்ப்பத்தில் தாழ்மையான விண்ணப்பத்தையும் முன் வைக்கின்றேன்.

பதிவாசிரியரைப் பற்றி

22 thoughts on “வல்லமையாளர் விருது!

  1. இவரைப் பற்றி இங்கே கூறப்படாமல் விடுபட்டது ஒன்று உள்ளது. அது அவருடைய நகைச்சுவை உணர்வு. நம்முடைய குழும இழைகளில், அவருடைய கருத்துமிக்க, நகைச்சுவை இழையோடும் பதில்களை நான் மிகவும் ரசிப்பவன்.
    வாழ்த்துக்கள், த்ங்கள் பணி தொடர, இன்னும் பல உயரிய விருதுகள் வெல்ல !

  2. நல்ல தேர்வு. ஒரே நேரத்தில் முத்துத் தாண்டவரையும் ஷைலஜாவையும் பெருமைப்படுத்தியுள்ளீர்கள்.

    ஷைலஜா, முத்தமிழ் வித்தகி. இயல், இசை, நாடகம் மூன்றிலும் பயிற்சியும் ஆற்றலும் உள்ளவர்.

    சிஃபியில் நான் வெளியிட்ட இவரது தொட்டிச் செடி என்ற கவிதை எனக்கு மிகவும் பிடித்தமானது. அதனை இங்கே வாசிக்கலாம் – http://jaldi.walletwatch.com/entertainment/movies/hollywood/fullstory.php?id=14781797

    ஷைலஜா, மேலும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துகள்.

  3. பன்முக நாயகி ஷைலஜா அவர்களின் முத்துத் தாண்டவர் சரித்திரத்தை இந்த அறிவிப்பிற்குப் பின்தான் வாசித்தேன்.
    முதலில் வாசிக்காமல் விட்டு விட்டதற்காய் வருந்தினேன்.
    எங்கோ ஓரிருவர்தான் இது போன்ற பழைமைப் பொக்கிஸங்களை பாதுகாக்கிறார்கள்.
    நன்றி கூறி வாழ்த்துவோம் அவர்களை.

    முகில் தினகரன். 98941 25211

  4. இசைத் தமிழ்ப் பாக்களி(ல்)ன்
    இசை இசைபடப் பாடிய  
    இசைவேந்தனவன்
    இசைக்காடுதல் ஈசன்
    இசைவான செயல் 
    இசைவானவனின்
    இசை மேன்மைகளை
    இசைபாடிய மாதே! திவாகர
    இசைவே வென்றாய்
    இசை கொண்டாய்! எமக்கு
    இசையே என வந்த இச்சேதி
    இசைவே! இதன் இசைப் பொருத்தம்!!
    இசைவாய் மேலும் பல இசைப்பாய்!!
    இசைக்கிறேன் நல் வாழ்த்து!!!

  5. திவாகர் அவர்களுக்கு முதலில் மனம் நிறைந்த நன்றி. எழுதுவதை வாசித்து விமர்சனம் செய்வதும் ஒரு கலை.அதைத்திறம்படச்செய்வதில் வல்லவர் திவாகர். அவர் கூறியபடி தமிழின் மேன்மையை பரப்பிய அறிஞர் பெருமக்களைப்பற்றி எழுதும் ஆர்வம் உள்ளதால் தொடரமுடியும் என்ற நம்பிக்கையை இந்த விருது எனக்கு உறுதியாக்குகிறது

  6. இளங்கோவின் மடல் நகைசுவையை நான் தொடரலாம் என்ற நம்பிக்கையை வலுப்படுத்துகிறது: நன்றி இளங்கோ(வயதானாலும் நீங்க ‘இளம்’கோ தானா?:)))

  7. அண்ணா கண்ணன்தான் என்னை முதலில் சிஃபிதளத்தில் குரல்பதிவில் அகில உலகிலும்(கொஞ்சம் ஓவர்தான்:) என் புகழைபரவச்செய்த வள்ளல்! முத்தமிழ் வித்தகி அது இது என்று சொல்வதிலிருந்தே அவர் வள்ளல் குணம் பளீச்சென தெரியுமே! ஆனாலும் வாழ்த்தும் அவருக்கு நான் நன்றி சொல்லாமல்போனால் கருடபுராணத்தில் அதுக்கு தண்டனை உண்டாம்::) நன்றி அண்ணா கண்ணன்!!

  8. நன்றி முகில்தினகரன்.. பழைய பொக்கிஷங்கள் நம்மிடம் நிறைய உள்ளன அண்மையில் ஹம்பிக்குப்போனேன் அடடா வரலாற்றுபொக்கிஷம் அது விரைவில் அந்த சிதைந்த நகரம் பற்றிய கட்டுரையை எழுதிவிடுகிறேன்!

  9. அவ்வைமகள் அவர்களே அன்றொருநாள் தொலைக்காட்சியில் உங்கள் பேட்டியைப்பார்த்தபோதே அயர்ந்தேன்! இன்று தங்கள் கவிமொழியால் இசைவான வாழ்த்து பெறும் பேறு பெற்றேன்.நன்றி மிக.

  10. அன்புடையீர்

    சிதைந்த நகரம் (ஹம்பி) பற்றிய எங்கள் கட்டுரைக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    முகில் தினகரன்.

  11. ஷைலஜா மேடம்,
    எனக்கு என்ன வயதாகி விட்டது? சின்ன வயது(!) தானே? இளம் கோ என்று அழைத்தால் தப்பென்ன? வயதான் பின்னர் எப்படி அழைப்பதென்று இன்னும் ஒரு 20 வருடம் கழித்து கவலை கொள்ளலாம், பிழைத்துக் கிடந்தால்!

  12. இளங்கோ சுமமா கிட்டிங்..கோச்சிக்காதீங்க! இப்படித்தான் எங்கப்பா தன் ஊரு புதுப்பாளையம்னு வயசு 80பக்கம் வந்தும் சொல்லிட்டு இருக்காரு நான் கேட்பேன் ஏன்ப்பா இப்போ அது பழையபாளையம் இல்லையான்னு!!:)

  13. முகில்; தினகரன் சிதைந்த நகரமான ஹம்பி பற்றிய பதிவு சிக்கிரமா எழுதப்பாக்கறேன் ஆவலுடன் கேட்பதற்கு நன்றி.

  14. அட உங்ககிட்ட கோச்சுக்கிறதா? கிட்டத்தட்ட, 30 வருஷமா சீர்காழி வழியா போய் வந்துகிட்டிருக்கேன். சங்கீதத்தைப் பத்திதான் எதுவும் தெரியலைன்னா, இவரைப் போன்ற மேதைகளைப் பற்றியும் தெரியாமல் இருந்த எனக்கு, உங்க மூலமாதான் முத்து தாண்டவரைப் பத்தி தெரிஞ்சுகிட்டேன். அதுவும், அந்த கட்டுரையை வல்லமையில் வலையேற்றும் வேலையை பவளா என்னிடம் கொடுத்தார்கள் .(சொல்லியாச்சுப்பா ஒரு வழியா). அந்த படைப்புக்கு உங்களுக்கு வல்லமை விருது கிடைத்ததில் எனக்கு தனிப்பட்ட மகிழ்ச்சி..

  15. தியாகராஜருக்கும் தமிழ்நாட்டுக்குமான இசை சரித்திரமும் அற்புதமானது இளங்கோ.. எல்லாருக்கும் தெரிந்திருக்கும் என்பதால் அதை எழுத தயக்கம்.. நன்றி என்படைப்பை நீங்க வலையேற்றியதில் அதான் விருது கிடைத்ததோ?!

  16. நான் என் வீட்டில் சாம்பாருக்கு வெங்காயம் அரிந்துக் கொடுத்துவிட்டு, இன்றைக்கு சாம்பார் மணக்க நான்தான் காரணம் என்று மார் தட்டிக் கொள்வேன்.. அது போலத்தான் நீங்கள் சொல்வதும்.. இன்னிக்கு நான்தான் சிக்கினேனா? அது போகட்டும், நீங்கள் தியாகராசரின் இசை சரித்திரத்தை எழுதுங்கள்.. தயக்கம் தேவையில்லை..

  17. யான் மிகுந்த தாமதத்திற்கு பின்னால் வந்தேனோ? வேறு இழையில் ஷைலஜாவுக்கு வாழ்த்துக்கூறியதாக, ஞாபகம்.
    அப்பாடா! ஸெக்யூரிட்டி ஒருபாடாக தளர்த்தப்பட்டதோ?

  18. இன்னம்பூரான் wrote on 27 May, 2012, 19:54
    யான் மிகுந்த தாமதத்திற்கு பின்னால் வந்தேனோ? வேறு இழையில் ஷைலஜாவுக்கு வாழ்த்துக்கூறியதாக, ஞாபகம்.
    அப்பாடா! ஸெக்யூரிட்டி ஒருபாடாக..? //

    வாங்க இ சார்.. தாமதமானா என்ன நீங்க வருவதே மகிழ்ச்சியானதுதான்.வாழ்த்துக்கு மிக்க நன்றி… செக்யூரிடி இன்னமும் இங்க இருக்கே.. வாய்ப்பாடு கேட்டு நம்மை குழந்தைகளாக்கிக்கொண்டிருக்கிறது:)(அதுவும் ஒருவகையில் எனக்குப்பிடித்துள்ளது என்றாலும்::))

  19. மறவன்புலவு க. சச்சிதானந்தன் wrote on 29 May, 2012, 6:58
    வாழ்த்துகள், தங்கள் பங்களிப்பும் படைப்பளிப்பும் பல்லாண்டுகள் தொடர்க. //

    மிக்க நன்றி ஸார். தங்கள் வாழ்த்தினைபெறும் பேறினைப்பெற்றேன் என்பதே மகிழ்ச்சியாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *