திவாகர்

(இந்தக் கட்டுரையைப் படிக்குமுன் முதலிலேயே என்னுடைய ஒரு சில வார்த்தைகளையும் படித்து விடுங்கள். இந்த வல்லமையாளர் தேர்வு என்பது ஒரு கோணத்திலிருந்துப் பார்க்கையில் சிறியவனாகிய எனக்கு அப்படித் தேர்ந்தெடுக்கும் தகுதி ஏதேனும் உண்டா என்று அவ்வப்போது யோசிக்க வைக்கிறதுதான். இப்படியெல்லாம் எடை போட எந்த நிலையில் நான் ஒசத்தி என்றும் கேட்டுக்கொண்டேதான் ஒவ்வொரு வாரமும் எழுதுகிறேன். அந்தக் கேள்வியானது எனக்கு ஒரு எச்சரிக்கையும் கூடவே கொடுப்பதனால் கூடுமானவரை ஒரு மூன்றாம் மனிதனின் (adjective type) பார்வையில்தான் தேர்வுக்கான கட்டுரைகளைப் படிக்கிறேன். தேர்ந்தெடுக்கிறேன். தேர்ந்தெடுத்தபிறகு ஆசிரியருக்கும், ஆரம்பித்து வைத்தவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டு, அவர்கள் வழி மொழிந்தபிறகுதான் வெளியிடப்படுகிறது)

வல்லமையாளர் – இந்த வாரம் – (21-05-2012 – 27-05-2012)

நினைவாற்றலின் வல்லமை

நல்ல புத்தகங்களைப் படிப்பது என்பது இந்தக் காலத்தில் மிகக்குறைந்து வருகிறதா அல்லது நம் நினைவாற்றலை சரியாக இன்னமும் வளர்த்துக் கொள்ளவில்லையா என்ற பிரமையைக் கொடுத்து விட்டது இந்த வார வல்லமையாளரின் பதிவு. இந்த ஞாபகசக்தி என்பது வாழ்க்கையில் ஒருவனுக்கு நன்றாக அமைந்துவிட்டால் அவனால் வாழ்க்கையில் எந்தக் கட்டத்திலும் எளிதாக சமாளிக்கமுடியும். இது ஒரு வரம்தான். நல்ல நினைவாற்றல் நம்மை ஒவ்வொரு இக்கட்டிலும் காப்பாற்றுகிறது.

நானும் ஒரு காலத்தில் ஏராளமான கதைகள். கட்டுரைகள் என மாங்கு மாங்கு எனப் படித்துக்கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது.. ஒரு சில எழுத்தாளர்களின் எழுத்துக்களை கணக்கில்லாமல் படித்து மகிழ்ந்ததும் உண்டு. ஆனால் நிறைய மறந்து விட்டதையும், நினைவில் உள்ள புத்தகங்கள் விகிதாசரத்தில் மிக மிகக் குறைவே என்பதையும் ஒப்புக் கொள்கிறேன். நல்ல எழுத்துக்களை படிப்பது நம் அறிவை விஸ்தரிக்கின்றது, மனதில் நிலைகொண்டு காலத்தோடு அழியாமல் நம்மை எப்போதும் நினைக்கவைத்துக்கொண்டே இருப்பது மட்டுமல்லாமல் நம்மை பகுத்தறியும் நிலைக்கும் அப்படியே கொண்டு செல்கிறது. கடந்த இரு நூற்றாண்டுகளாகப் பார்க்கையில் நல்ல புத்தகங்களின் படைப்பு வரிசையில் என்னதான் தமிழ் எழுத்தாளர்கள் பலர் இருந்தாலும் பரந்த பார்வையாக பார்க்கும்போது நம்மை விட பிற தேசங்களில் அதுவும் ஆங்கிலத்தில் ஏராளமாக இருப்பது தெரிய வரும். ஆங்கிலம் இன்று உலகம் முழுதும் பேசும் மொழியாக மாறிவிட்ட நிலையில் இப்படி ஆயிரக்கணக்கில் புத்தகங்கள் உலகெங்கிலுமிருந்தும் இந்த பாஷையில் வருவது கூட சாத்தியம்தான்.

பாருங்கள், தான் முதன் முதலில் படித்த ஆங்கிலப் புத்தகத்திலிருந்து வரிசைப்படுத்துகிறார் இவர். நல்ல புத்தகங்கள் நாம் படிக்கும்போது நான் மேலே குறிப்பிட்ட நினைவாற்றல் எனும் சக்தியை மிக அதிகமாக வளர்க்கிறது என்பதற்கு ஒரு உதாரணம் கொடுக்கிறார். அவர் எழுத்திலேயே படிப்போமே’

அந்த காலத்தில் அதாவது ஐம்பதுகளின் முன் பாதியில் பிரபலமாகியிருந்த Pearl S. Buck – கின் Good Earth. கொண்டு வந்து கொடுத்தார். எனக்கு அது மிகவும் பிடித்திருந்தது. வாங் லங் என்னும் ஒரு சாதாரண எளிய விவசாயி படும் இன்னல் நிறைந்த வாழ்க்கையைச் சித்தரித்தது. அதில் இரண்டு காட்சிகள் எனக்கு இன்னமும் நன்கு நினைவில் இருக்கின்றன. ஒன்று சைனாவில் அவ்வப்போது வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு நிகழும். பயிர் விளைந்த நிலங்கள் எல்லாம் பாழாகும். அவை தூரத்திலிருந்து வரும்போதே ஏதோ தூரத்தில் வானம் முழுதும் கருத்த மேகங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது போலும் அவை பயங்கரமாக வேகத்தோடு நம்மை நோக்கி வருவது போலும் இருக்கும். வாங் லங்கும் சீன விவசாயிகளும் அதை அழிக்க, படும் போராட்டத்தை மிக விரிவாக எழுதியிருப்பார் பக். அவர் சைனாவிலேயே தன் வாழ்நாளில் பெரும் பகுதியைக் கழித்தவர். சீன மொழி அறிந்தவர். ஒரு பழைய சீன classic, All Men are Brothers – ஐக்கூட ஆங்கிலத்தில்மொழி பெயர்த்திருக்கிறார் என்று நினைவு. That was Wang Lang’s birthday என்று ஆரம்பிக்கும் அந்த நாவல் கடைசியில் வாங் லங் மரணப் படுக்கையில் தன் மக்கள் சூழக் கிடக்கும் காட்சி. தன் கடைசி விருப்பமாக, ”நிலத்தை விற்றுவிடாதே, கிராமத்தை விட்டுப் போய்விடாதே” என்று தன் பிள்ளைகளைக் கெஞ்சுவான். அவர்களும் சரி என்று சொல்லிக்கொண்டே ப்ரஸ்பரம் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகை புரிந்து கொண்டார்கள்,” என்று நாவல் முடியும். எனக்கு மிகவும் பிடித்திருந்தாலும் பின்னர், நோபல் பரிசு சரியான ஆட்களுக்குப் போய்ச் சேர்வதில்லை என்பதற்கு பேர்ல் எஸ் பக்கிற்கு அப்பரிசு கிடைத்தது ஒரு உதாரணம் என்று உலவிய அபிப்ராயங்களைப் பின்னர் படித்தேன். அது எப்படி இருந்தாலும், அப்போது அவரது இன்னொரு நாவல், Pavillion of Women கிடைத்தது என்று பாதி கொண்டு வந்து கொடுத்தார். சீன தாசிகள் சமூகத்தைப் பற்றியது.

(முழுவதும் படிக்க https://www.vallamai.com/paragraphs/20915/ )

இந்த நினைவாற்றல் என்பது ஒரு மனிதனுக்கு மிக அதிகமான, அத்தியாவசியமான தேவை. கடைக்காலம் முழுதும் அவன் நிம்மதியாக வாழ இந்த நினைவாற்றல் ஒரு அரிய மருந்து. சில பெரியவர்களைப் பார்த்து இந்தக் கால இளசுகள் சில கேலியாகக் கூட பேசும். ’ஆஹா, ஆரம்பிச்சுட்டார்யா அந்தக் காலக் கதையை’ என்று எள்ளல் பேசும். ஆனால் உண்மையில் பெரியவர்களின் நல்ல நினைவாற்றல் அந்த இளசுகளுக்கு ஒரு பாடம் என்பதை இவர்கள் அந்த இளைய வயதில் அறியவில்லை என்றுதான் சொல்வேன். இவர்களும் பெரியவர்கள் ஆகும்போது தற்கால நல்ல நிகழ்ச்சிகளை வருங்காலத்தோருக்குச் சொல்லும் நிலை ஏற்படும் என்பதை அவர்கள் நினைத்துப் பார்ப்பது இல்லை.. நல்ல அனுபவங்கள் நல்ல பாடத்தைத் தருகின்றன. அந்த வகையில் நினைவாற்றலின் மகிமையை எடுத்துக் கூற இந்த பதிப்பு இந்த வாரம் வல்லமையில் வெளியிடப்பட்டபோது ’ஆஹா’ என்று மகிழ்ந்து போனேன் என்று சொல்லவேண்டும். நினைவாற்றலின் சக்தியை நமக்கு எடுத்துக் காட்டிய இவரை இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்க வகையும் செய்தது என்பதையும் சொல்லவும் வேண்டுமா?.

எனக்கு இவர் எழுத்துக்கள் பிடிக்கும். அதுவும் இவர் விமர்சன எழுத்துக்கள் மிகவும் அதிகமாகப் பிடிக்கும். காரணம் இவர் எழுத்தில் விளையாடும் அந்த நக்கலும் கிண்டலும்தான். (ஒரு காலத்தில் விஜயவாடாவில் இருக்கும்போது அந்த நக்கல் கிண்டல்கள் சொரூபமாகவே நான் இருந்ததால் இப்படி பிடித்துப் போயிருக்கலாமோ என்னவோ) அதே சமயத்தில் இவரால் விமரிசிக்கப்படுபவர்கள் யார் எவர், எத்தனை பெரிய இடம் என்றும் பார்க்கமாட்டார். பெரிய மனுஷனா இருந்தா எனக்கென்ன, தப்பு தப்புதான் என்பார் இந்த நவீன நக்கீரர். அதிலும் திராவிட மாயை இந்தத் தமிழகத்தை இத்தனை ஆண்டுகளாக மயக்கத்திலேயே மக்களை வைத்திருப்பதில் உள்ள உண்மையை அதிகம் உணர்ந்தவர் என்பதால் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் அந்த மாயையை உடைக்க முயல்பவர். இந்த விஷயத்தில் இவரது அயரா முயற்சி எனக்கு மிகவும் பிடித்தமானது கூட. ஒரு விஷயம் தீங்கு எனத் தெரியும்போது, அந்த தீங்கு வளரும்போது எதிர்கால சமூகத்துக்கு நல்லதல்ல என்பதும் தெரியும்போது அதை வேடிக்கை பார்க்கக் கூடாது. முடிந்தவரை நமது எதிர்ப்பையாவதுக் காட்டிவிட வேண்டும் என்பது வேறொரு குழுமத்தில் நான் இவரிடம் கற்றுக் கொண்ட பாடம்.

இவர் இவர் என நான் குறிப்பிடுவது வேறு யாரும் அல்ல.. எழுத்தாளரும், பெரியவருமான திரு வெங்கட் சாமிநாதன் அவர்களைத்தான் நான் இங்கு குறிப்பிடுவது. இந்த பெரியவரை இந்த சிறியேன் வல்லமையாளராகத் தேர்ந்தெடுப்பது எனக்குப் பெருமைதான். அவரால் குட்டுப்பட்டவர் அதிகம்பேர் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படிக் குட்டுப்பட விரும்பும் நபர்களில் அடியேனும் ஒருவனாக இருக்க ஆசைதான்.. காலம் கனிந்து வரட்டும்!!

இந்த அரிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு திரு வெ. சா அவர்கள் பல்லாண்டு இனிதே வாழ்ந்து இன்னமும் அரிய விமர்சனக் கட்டுரைகளோடு, இப்படிப்பட்ட நினைவாற்றல் அள்ளித் தரும் எழுத்துக்களையும் படைக்கவேண்டி அருள் புரிய இறைவனை இறைஞ்சுகிறேன்.

திவாகர்

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “வல்லமையாளர்!

  1. மிக நல்ல தேர்வு. வெங்கட் சாமிநாதன், 70 வயதுக்கு மேல் கணினியில் தட்டக் கற்றுக்கொண்டு, இன்றைய இணைய உலகிலும் துடிப்பாக இயங்கி வருகிறார். இலக்கிய விமர்சகர்கள் பலர், அரசியல், சமூகக் களங்களில் மவுனமாக இருப்பது போல் அல்லாமல், பல்வேறு துறைகளிலும் இவர் தமக்குச் சரியெனத் தோன்றுவதை, அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் துணிந்து சொல்லி வருகிறார்.

    இலக்கிய உலகில் இருண்மை என்ற பெயரில் வெளியான பல படைப்புகளைப் பலரும் பாராட்டிய நிலையில், அவை தமக்குப் புரியவில்லை என வெளிப்படையாக எழுதியவர் வெ.சா. ஆடையில்லாமல் பவனி வந்த நிர்வாண அரசனின் ஆடையை ஊரார் புகழ, ‘அய்யே அம்மணம்’ எனப் போட்டு உடைத்த சிறுவனோடு இவரை ஒப்பிடலாம்.

    இவரை விமர்சகர் என்ற எல்லையில் மட்டும் நிறுத்திவிட முடியாது என்பதை இவர் ஆக்கங்கள் பலவற்றைப் படித்து வெளியிட்ட போது உணர்ந்தேன். சம்பவங்களை நேரில் பார்ப்பது போல் விவரிக்கும் படைப்பாற்றலும் இவருக்கு உண்டு. செழுமையான அனுபவங்கள் பதிவாக வேண்டும் என்ற காரணத்தால், இவரின் வாழ்க்கை வரலாற்றை எழுதுமாறு கேட்டுக்கொண்டேன். தமிழ் சிஃபியில் தொடங்கிய நினைவுச் சுவடுகள், சென்னை ஆன்லைனிலும் பிறகு இப்போது வல்லமையிலும் தொடர்வதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.

    வல்லமையாளர் வெ.சா. அவர்களுக்கு வாழ்த்துகள்.

  2. வெ சா அவர்களது கட்டுரைகளில் தமிழ் சினிமா பற்றிய இவரது
    விமர்சனம் என்னை மிகவும் கவர்வது; நாம் சொல்ல நினைப்பதைச் சுவைபட விளக்குவார்; இவரது பங்களிப்பு என்றென்றும்
    தொடர வேண்டும்

    தேவ்

Leave a Reply to dev

Your email address will not be published. Required fields are marked *