மலர் சபா

புகார்க்காண்டம் – 4. அந்திமாலை சிறப்புச்செய் காதை

மாலைப்பொழுதின் வரவு

விரிகதிர்கள் பரப்பி
உலகம் முழுவதையும் ஆண்ட
ஒப்பற்ற தனி ஒற்றைச் சக்கரத்
தேரினையுடைய திண்மையாளன்
சூரியன் அவனைக் காண்கிலனே.

அழகிய அகன்ற வானத்தின்கண்
தம் கதிர்களை விரித்து
ஒளிதனைக் கூட்டும்
திங்கள் செல்வன் அந்நிலவு
எங்கேதான் போய் உள்ளானோ?

இவ்வாறெல்லாம்
தன் காதலனைப்பிரிந்த
நிலமடந்தை
அவனைத் தேடியே புலம்பினள்.

திசையாகிய தன் முகத்தில்
பசலையது படர,
செம்மலர்க்கண்கள் தான்
கண்ணீரது வார்த்திட,
உடல் முழுதும்
குளிர்ந்தே நடுங்கிட
கடல் அலையை
ஆடையாய் உடுத்திட்ட
நிலமடந்தையவளும்
தன் கணவனைக் காணாது
அல்லலுற்று நெஞ்சு கலங்கிடும்
இடுக்கண் மாலைப்பொழுது.

கடமையது தவறிடாது
தம் அரசுக்கு வரி செலுத்திடும்
நற்குடிமக்கள் வருந்தும்படி
உட்பகையுடன் நின்றிருந்து
உடனிருந்தே
பகைவர் தமக்குத்
தம் குடிகெடுக்க தாமே உதவி

வெற்றிகள் குவிக்கும்
தம் புவிமன்னன்
இல்லாத நேரத்து
நாட்டு நலம் அழியும்படி
வந்து நின்று தாக்கி
உட்பகைச் சதியால் வென்று
அங்கேயே தங்கிடும்
குறுநில மன்னன் போல்

வளமது கொழித்துச் செழிக்கும்
புகார்நகர் தன்னிலே
பகல் முடிந்து ஆரம்பமானது இருள்.

அந்த மாலைப்பொழுதில்
என்னவெல்லாம் நடந்தது?

தம் நெஞ்சில் நீங்காது தங்கியிருக்கும்
கணவரைப் பிரிந்த மகளிர்
சொல்ல முடியாத துயரமுற்றனர்.

தம் காதலர் அவருடன்
கூடியே களித்திட்ட மகளிர்
சொல்ல முடியாத இன்பமுற்றனர்.

வேய்ங் குழலது ஊதியே
ஆயர்களும்
முல்லைப்பண் இசைத்திட்டனர்.

அவருடன் சேர்ந்தே
இளைய வண்டுகள் தாமும்
முல்லைப்பூவின் இதழ்களில்
வாய் வைத்தே ஊதி
இசைச்சூழல் எழுப்பி நின்றன.

அறுகால் அதனைப்
பகைமையாய்க் கருதிட்ட
சிறுகால் அதுவும்
வண்டுகளைத் துரத்தி விட்டு
மலர்களின் வாசம்
முகர்ந்து சென்று
சுமந்து சென்று
வீதியெல்லாம் பரப்பியது.

(அறுகால் – வண்டு; சிறுகால் – தென்றல்)

ஒளி பொருந்திய அழகு வளையல்கள்
அணிந்திட்ட மகளிர் தாமும்
தத்தம் இல்லங்களில்
அழகான மணி விளக்குகளை
ஏற்றி வைத்தனர்.

வளமிக்க புகார்நகர் தன்னில்
இங்ஙனம் வந்துற்றது
மாலையதன் பொழுது.

அடிப்படையான சிலப்பதிகார வரிகள் இங்கே: 1- 20
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram9.html

படத்துக்கு நன்றி:
http://cloudninetalks.blogspot.in/2012/04/queen-of-hearts-part-4.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *