தாகூரின் கீதப் பாமாலை – 1

0

image

தாகூரின் கீதப் பாமாலை – 1

 

என் ஆத்மாவை நெருங்கியவள்

 

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

என் ஆத்மாவை நெருங்கிக் குறுக்கிட்டவள் யார்
வசந்த காலத் தென்றல் நறுமணப் புகைபோல் ?
மங்கை என்னைக் கடந்து செல்கையில்
மலர்கள் பூத்துக் குலுங்கும் நூற்றுக் கணக்கில் !

போவ தெங்கெனப் புகலாது அவள் போனாள்
பாவை இங்கு திரும்பி மீளவும் இல்லை.
கடக்கும் போது ஓரக்கண் ணோட்டம் விட்டாள்
ஏதோ தெரியாத ஒரு பாடலை முணுமுணுத்து
மனத்தில் இது திரையிட வனத்தில் அமர்ந்தேன் !

அலையடிப்பு போல் தள்ளப்பட்டு நிலத்தை அடைந்தாள்
தொலைந்து போனது நிலவு அந்த வானிலே !
புன்னகை யோடு அவள் உலவி வந்த பூமியில்
தன் புன்னகை தன்னை விட்டுச் சென்றாள் !
ஓரக் கண்ணில் என்னை அழைப்பதாய் எண்ணினேன்
எங்கே போனாள் ? எங்கு போய்த் தேடுவேன் ?
ஏகாந்தனாய் அமர்ந்தேன் அந்த வேதனை யோடு !

மதிமுக நோக்கில் கனவு மாயம் ஓவியம் ஆனது
என் ஆத்மா விலே எங்கோ பூமாலை வீசினாள் !
பூந்தோட்டம் போயவள் ஏதோ சொல்லிச் சென்றாள்
பூக்கள் நறுமணம் மறையும் மிடுக்கொடு அவளுடன்
இச்சை யெழும் நெஞ்சில், கண்கள் மூடும் களிப்பில்
எப்பாதை யில் போனாள் ? எங்கு போய் மறைந்தாள் ?

 

+++++++++++++++++++

பாட்டு : 192 தாகூர் தன் 22 வயதில் எழுதியது (செப்டம்பர் 1881)

+++++++++++++++++++

தாகூரின் கீதப் பாமாலை – 2
புண்பட்ட பெருமை
மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
 

வசந்த காலம் நழுவிச் சென்ற
அந்த நாட்களில்
எந்தப் பாட்டும் பாட வில்லை.
பகற் பொழுதுப் பூக்கள் உதிர்வுடன்
போகுல்* மரங்களின்
பூமி விரிந்த போது
பூக்கள் மலர்ச்சிக்கு இறுதிக் காலம்
வருவ தென்று ?

இந்த வசந்த காலத்தில்
மல்லிகை விழித்தெழ வில்லையா ?
தேன் அமுது உறிஞ்சித்
தேனீக்கள் ரீங்கார மோடுக்
கூட்டமாய்க் குலாவ வில்லையா ?
இம்முறைத் தென்றல் அடித்து
தூங்கிக் கிடக்கும்
பூங்காவின் பூக்களை
உசுப்பி விட வில்லையா ?
விடை பெறாமல் பிரிந்து சென்றது
வசந்த காலம்
தேய்பிறை போல் !

வசந்த காலத்தின் கடைசி இரவில்
வெறுங் கையொடு வந்தேன்
பூமாலை ஒன்றைக்
கோர்க்க வில்லை இம்முறை.
வேறென்ன அளிக்க முடியும்
நானுனக்கு ?
மௌனப் புல்லாங்குழல்
அழுவது போல் தெரிகிறது !
நழுவி மறையுது
கீழுதட்டுப் புன்னகை !
சுடரொளிக் கண்களில்
மிதக்குது
புண்பட்ட பெருமை !

+++++++++++++++

போகுல்*  Bokul / বকুল

Bokul in Bengal, (Mimusops elengi). Praised in traditional Indian medical system (Ayurveda) as analgesic, anti-

thirst, refrigerant, anti-inflammatory. Big, dense tree. Small star shaped white flowers with light, very pleasant

fragrance. Gather the flowers when they fall off the tree and they will remain fragrant for 3/4 days, before totally

drying out. Children sometimes like to chew the fruit for its tangy taste. The fruits support a very noisy cuckoo

population, who keep the area alive with their shrill calls dawn to dusk & in brightly moonlit nights of summer.
Calcutta, India, 20.6.2007

++++++++++++++++++++++
பாட்டு : 304 தாகூர் தன் 25 வயதில் எழுதியது (Spring 1887)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

Source

1.  Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan

2.  A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] February 24, 2012

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *