பேருந்து நடத்துநர் வாழ்வில் 1 நாள் – நேர்காணல்

1

 

மோகன் குமார்

அண்மையில் சென்னை மாநகர பேருந்தில் பயணிக்கும் சந்தர்ப்பம் அமைந்தது. மதிய நேரம் என்பதால் அதிக கூட்டமில்லை. அமர்ந்து விட்டேன். அருகில் இருந்த 45 – 50 வயது மதிக்கத்தக்க நபர் இயல்பாய் உரையாட ஆரம்பித்தார். பேச ஆரம்பித்ததும் தான் தெரிந்தது. அவர் ஒரு கண்டக்டர் என்று!

சென்னை பேருந்துகள் பற்றியும் டிரைவர் கண்டக்டர் வாழ்க்கை பற்றியும் என் சந்தேங்கள் பலவும் கேட்டு விட்டேன். கேட்கும்போது பதிவெழுத நினைக்கவே இல்லை. ஆனால் இறங்கிய பின் யோசித்தால் பஸ் வாழ்க்கை பற்றி அவர் நிறையவே சொன்னது புரிந்தது

இதோ உங்களுக்காக ஒரு பிரத்யேக சென்னை கண்டக்டர் பேட்டி:

கண்டக்டருங்க ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் வேலை பாக்கணும்? எத்தனை ஷிப்ட் இருக்கு?

ஒவ்வொரு கண்டக்டருக்கும் எட்டு மணி நேரம் டியூட்டி. முதல் ஷிப்ட் காலை நாலு மணிக்கு ஆரம்பிக்கும். நான் போகும் தாம்பரம் டு டீ. நகர் ரூட்டை வச்சு சொல்றேன். இந்த ரூட்டில் முதல் பஸ் தாம்பரத்தில் நான்கு மணிக்கு கிளம்பும். நாலு மணிக்கு வண்டியில் ஏறும் கண்டக்டர், டிரைவர் மதியம் 12 வரை வேலை செய்துட்டு இறங்கிடுவாங்க. இதே ரூட்டில் அடுத்த பஸ் நாலரைக்கு கிளம்பும். இதில் ஏறும் பஸ் ஊழியர்கள் மதியம் 12.30-க்கு இறங்குவாங்க. இப்படி வரிசையா கண்டக்டர்-டிரைவர் அடுத்தடுத்த அரை மணி கேப்பில் அடுத்தடுத்த வண்டிக்கு வருவாங்க. கடைசி ஷிப்ட் மாலை நான்கு மணிக்குத் துவங்கும். இதில் ஏறுவோர் இரவு 12 மணி வரை வேலை செய்வாங்க. இரவு 12 முதல் காலை 4 வரை சென்னையில் பஸ் ஓடாது
இப்படி ஆறு நாள் டியூட்டி பார்த்தா ஒரு நாள் Off. பிரிட்டிஷ் காலத்தில் கொண்டு வந்த பழக்கம் இது. இன்னிக்கு வரை தொடருது

மதுரையில் மட்டும் இரவு நேர பஸ் எல்லாம் இருக்கே அது எப்படி ?

மதுரையில் ஒரு பஸ்ஸில் டிரைவர் கண்டக்டர் காலை ஆறு மணிக்கு ஏறினா மறு நாள் காலை நான்கு மணிக்கு தான் இறங்குவார்கள். இவர்களுக்கு அடுத்த நாள் ரெஸ்ட். ஒரு நாள் விட்டு ஒரு நாள் வண்டி ஓட்டுவாங்க

உங்க ஷிப்ட் நாலரைக்கு ஆரம்பம்னா ரொம்ப சீக்கிரம் எழணும் இல்லை. தினம் இப்படி எழ கஷ்டமா இல்லையா?

பழகிடுச்சுங்க. பொதுவா எல்லா வாரமும் ஒரே ஷிப்ட் இருக்காது. ஒரு வாரம் காலை டு எனில் அடுத்த வாரம் மதியம் டு என இருக்கும். ஆனால் மதியம் இதே பஸ்ஸில் வரும் கண்டக்டர் ஒரு விவசாயி. அவர் காலையில் வயல் வேலை பார்ப்பார். அவருக்கு மதிய ஷிப்ட் தான் தோது. அதனால் தினம் நான் காலை ஷிப்ட்டும் அவர் மதியம் டு இரவு ஷிப்ட்டும் செய்றோம். எங்களுக்கு இது ஒரு அண்டர் ஸ்டாண்டிங் காலை 3 மணிக்கெல்லாம் நான் எழுந்திருக்கணும். நைட்டு ஏ. சி போட்டுட்டு தூங்கிடுவேன். பசங்க நைட்டு கண்ணு முழிச்சு படிச்சுட்டு லேட்டா தான் படுப்பாங்க.

அலாரம் வச்சி மூணு மணிக்கு எழுந்திருப்பேன். சீக்கிரமா பல் விளக்கிட்டு, குளிச்சுட்டு கிளம்பிடுவேன். அதுக்குள் என் மனைவி எழுந்து ரெண்டு தோசை ஊற்றி கொடுப்பார். நைட்டே சட்னி பண்ணி வச்சிடுவார். சில நேரம் தோசை அல்லது இட்லி கூட நைட் ஊற்றி வச்சிடுவார். அதையும், குடிக்க சுடு தண்ணியும் எடுத்துட்டு மூணரைக்கு வீட்டை விட்டு கிளம்பிடுவேன். நான் இருப்பது பெருங்களத்தூரில். வீட்டிலிருந்து மெயின் ரோடு வரை காலையில் ஓடி வருவேன். அது ஒரு எக்சர்சைஸ் மாதிரி. மெயின் ரோடில் பஸ் பிடிச்சி தாம்பரம் வந்து எங்க ஸ்டாண்ட் வருவேன். ஆயிடுச்சு சார். இப்படியே 20 வருஷம் ஓடிப் போச்சு

உங்களுக்கு கலக்க்ஷன் வச்சு கமிஷன் உண்டா?

பஸ் டிக்கெட் விலை ஏறும் வரை எங்களுக்கு 2 % கமிஷன். டிக்கெட் விலை ஏறினா எங்க கமிஷனை கொஞ்சம் குறைச்சுடுவாங்க. முன்னாடி மூவாயிரம் தினம் வசூலாகும். அதில் 2 % கமிஷன் அப்படின்னா அறுபது ரூபாய் வரும். இப்போ தினம் ஐயாயிரம் கலக்சன் ஆகும். அதில் 1.90% கமிஷன். அதாவது 90 ரூபா. டிரைவர் கண்டக்டர் இதை பிரிச்சு எடுத்துக்கணும். டீ சாப்பாடு இதுக்கு ஆகும் செலவு போக ஆளுக்கு 25 ரூபா தான் தினம் நிக்கும்

இந்த கமிஷன் கிடைப்பதே எம். ஜி. ஆர் காலத்தில் இருத்த ஈரோடு முத்துசாமி அப்படிங்கற மந்திரியால் தான். அவர் போக்கு வரத்து துறை அமைச்சரா இருந்தப்ப தான் எங்களுக்கு கமிஷன் கொண்டுவரணும் என பேசி வாங்கித் தந்தார். நல்ல மனுஷன் சார். இப்போ தி.மு.க வுக்கு மாறிட்டார். இந்த தேர்தலில் நின்னு தோத்துட்டார்.

சாப்பாட்டுக்கு செலவுன்னு சொல்றீங்க. உங்களுக்கு தான் பஸ் நிற்கும் இடங்களில் சாப்பாடு கிடைக்குமே?

அதெல்லாம் வெளியூர் போகும் பஸ்ஸில் தான் நடக்கும். கோயம்பேடு டு பாண்டிச்சேரி ஒரு பஸ் போகுதுன்னு வைங்க. அந்த பஸ் ECR ரோடு வழியா போகும். அங்கு ஒரு கடையில் சாப்பிடுவாங்க. பஸ்ஸில் வந்த ஜனம் சொல்லும் ” பாருங்கையா இந்த டிரைவர் கண்டக்டருக்கு ஓசியில் சாப்பாடு கிடைக்குது”ன்னு. உண்மையில் அந்த சாப்பாடு நல்லா இருக்காது அத்தோட டிரைவரும் கண்டக்டரும் கம்மியா தான் சாப்பிடுவாங்க.

உங்க பசங்க என்ன செய்றாங்க?

பொண்ணு +2 படிக்குது.1000 மார்க் வாங்கும்னு நினைக்கிறேன். பையன் எட்டாவது படிக்கிறான். நாங்க யாதவா சார். எங்க ஜனங்களில் பெரும்பாலும் ஆடு மாடு மேய்ச்சவங்க தான். எங்களை போய் BC -யில் வச்சிருக்காங்க. MBC -யில் சேர்க்கணும்னு இன்னைக்கு உண்ணாவிரதம் நடந்தது. அதில் நானும் கலந்து கிட்டு தான் இப்போ திரும்ப வர்றேன். லல்லு பிரசாத் யாதவ், முலாயம் சிங் யாதவ், சரத் யாதவ் எல்லாரும் எங்க கம்மியூநிட்டி தான். அவங்க நினைச்சா, போராடினா எங்களை MBC -யில் சேர்க்க வாய்ப்பிருக்கு இதற்குள் நான் இறங்கும் இடம் வந்து விட, அவரிடம் சொல்லிக் கொண்டு விடை பெற்றேன்.

அக்கறையுடன் விசாரித்ததில், மனம் விட்டு பேசியதில் மிக மகிழ்ச்சியாக என் கைகளைப் பிடித்துக் கொண்டு குலுக்கினார் அவர். ஒவ்வொரு மனிதருக்குள்ளும் தான் எத்தனை எத்தனை விஷயங்கள் புதைந்து கிடக்கிறது!

படத்திற்கு நன்றி :

http://aeva-dhara.blogspot.in/2010/06/ticket-less-travel.html

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “பேருந்து நடத்துநர் வாழ்வில் 1 நாள் – நேர்காணல்

  1. நல்லதொரு சந்திப்பு. அவரை நீங்கள் சந்த்தித்து உரையாடியது புதுமையாகவும் தேவையானதும் கூட.
    எந்திர மனிதர்களாக் அவர்களைக் கருதுவதே வழக்கமான காலம்.
    நன்றி மோகன்குமார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *