விசாலம்

நான் தில்லியில் ஆசிரியராக இருந்த காலம் அது. மாணவ மாணவிகளை ஹரியானாவில் இருக்கும் “சோனா’ என்ற வென்னீர் ஊற்றுக்குப் பிக்னிக் அழைத்துப் போயிருந்தோம், உயர் நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் பலர் இதில் இருந்தனர், இதில் அருண் மகாஜன் என்ற பையன் இவ்வளவு நாளாகத் தான் வருவதாக இல்லை என்று கூறிக் கொண்டிருந்தவன் திடீரென்று தான் பிக்னிக் கிளம்பும் நேரம் ஓடி வந்து தன் பெயரையும் சேர்க்கச் சொன்னான். இதில் ஏதோ விஷயம் இருக்கிறது என நினைத்து அதைக்கண்டுபிடிக்க முனைந்து அதில் வெற்றியும் கண்டேன்.

அதான் இள வயதில் புரியாமல் வரும் ஒரு காதல். பத்தாவது வகுப்பில் படித்து வந்த கிரண் வாஸ்தவ் என்ற பெண்ணின் மேல் காதல். ஒரு அர்த்தமில்லாத காதல். அதில் காமம்தான் ஓங்கியிருந்தது எனலாம். அந்தப்பையனின் நண்பர்களிடம் இது பற்றிக் கேட்டேன். அவர்களும் இது உண்மை எனத் தெரிவித்து “மேடம், கிரணுக்கு இது பிடிக்கவில்லை என்றாலும் இவன்தான் அவளுக்குத் தொல்லை கொடுத்து வருகிறான்” என்றனர்.

சரி, அவனிடம் பக்குவமாக இது பற்றிச் சொல்லலாம் என நினைத்துச் சுற்றுலாவுக்குக் கிளம்பி விட்டோம். சோனாவும் வந்தது. மாணவர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த கிரிக்கெட் மட்டையை எடுத்தபடி ஓடினர். சிலர் கூட்டம் கூட்டமாகக் குரூப் அமைத்தபடி தங்களுக்குப் பிடித்த “அந்தாக்ஷரி’ விளையாடினர்.

நான் அந்த நேரம் கிரண் எங்கு இருக்கிறாள் என தேடினேன். அவள் கிடைக்கவில்லை. அருண் மகாஜனும் அங்கு இல்லை. ஓ முருகா, எதேனும் பிரச்சனையைக் கொடுத்து விடாதே என வேண்டியபடியே ஆசிரியர்கள் குழுவில் அமர தூரத்தில் கண்கள் கசிந்தபடி கிரண் வந்தாள். நான் அவளிடம் ஓடிப்போய் “என்ன கிரண் எங்கு போயிருந்தாய்?. என்னிடம் உன் பிரச்சனையைச் சொல்லு, நான் நிச்சயம் தீர்த்து வைக்கிறேன்” என்று ஆறுதலாக அவளது தலையைக் கோதி விட்டேன். அவள் அழுகை அதிகமானது.

பின் தன்னைச்சுதாரித்தபடி “மேடம், இந்த அருண் மகாஜன் எனக்கு ரொம்பத் தொல்லை கொடுக்கிறான். அவன் என்னைக்காதலிக்கிறானாம். ‘நான் இதுக்கெல்லாம் வரலை. என்னை விட்டுடு’ என்றாலும் கேட்பதில்லை. இன்று பட்டென்று பதில் சொல்லி விட்டு வந்து விட்டேன். அதற்கு அவன் “நீயில்லை என்றால் நான் இல்லை. தற்கொலை செய்து கொள்வேன்” என்கிறான். எனக்கு அவனைப்பிடிக்கவில்லை மேடம்”.

“சரி நான் அவனிடம் பேசுகிறேன் நீ கவலைப்படாதே” என்று நான் மேலுக்கு அவளைச் சமாதானம் செய்தேனே தவிர, உள்ளூர நல்லபடியாகத் திரும்பவும் ஸ்கூல் போக வேண்டுமே என்ற கவலை இருந்தது.

நல்ல வேளையாக மாலை 5 மணியாகி விட்டது, எல்லோரும் திரும்ப வீடு போகும் வேளை வந்து விட்டது. எல்லோரையும் ஒன்று சேர்த்து எண்ணி பஸ்ஸில் அனுப்ப வேண்டும் ,

அந்த நேரத்தில் தான் அருண் காணாதது மனது “பக்” என்றது. அவனைத்தேட இரு மாணவர்களை அனுப்பினேன். அவர்களும் ஐந்து நிமிடங்களில் என்னிடம் ஓடி வந்து, “மேடம் ஒரு மரத்தடியில் தேவதாஸ் போல் அருண் அமர்ந்திருக்கிறான். அவன் கையில் பிளேடால் ‘கிரண்’ என்ற பெயரை வெட்டிக்கொண்டு இரத்தம் கொட்டுகிறது’ ஓடினோம் நாங்கள் அவனைத்தேடி. முதலுதவிப் பெட்டியுடன்..

நல்ல வேளையாக நாடி அருகில் வெட்டிக் கொள்ளவில்லை அந்தக்காதல் பைத்தியக்காரன். ஏதோ பேரை மட்டும் தான் ரொம்பப் பெரிய ஹீரோ என்ற நினைப்பில் வெட்டிக்கொண்டிருக்கிறான். ஏதோ படத்தில் ஹீரோ காதலியைத் தன் வசப்படுத்த இது போல் செய்து கொண்டானாம். எப்படி இருக்கு கதை! நல்ல வேளை, அவன் 12-வது வகுப்பானதால் பரீட்சை முடிந்து பள்ளியை விட்டுப்போய் விட்டான்.

இன்று அவன் நல்ல பிசினஸ் செய்தபடி, தன் மனைவி, குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருக்கிறான். அந்தப் பழைய காதலை நினைவு படுத்த சிரிக்கிறான், அது ஏதோ பருவக்கோளாறு என்று.

இதைப் பற்றி யோசித்துப் பார்க்கையில் சில விஷயங்கள் எனக்குப் புலப்பட்டன.

தற்காலத்தில் பல இளம் வயது ஆண்கள் பெண்கள் மரணத்தைத் தனக்குத்தானே தேடிக்கொள்கின்றனர். பத்திரிக்கையைத் திறந்தால் ஏதாவது ஒரு இரண்டு நிகழ்வுகளாவது நம் கண்களில் விழுகின்றன, இதன் காரணம் என்னவாக இருக்கும் கொஞ்சம் சிந்தித்தேன், கூட்டுக்குடும்பம் குறைந்ததின் காரணமாக இருக்குமோ?

கூட்டுக்குடும்பத்தில் பெரியப்பா குடும்பம், சித்தப்பா குடும்பம், அவரது குழந்தைகள், அத்தைகள், வீட்டுத்தலைவராக தாத்தா, பாட்டி என்று பலர் இருந்தனர். இதனால் விட்டுக்கொடுக்கும் தன்மை, சகித்துப்போகும் குணம் வளர்கிறது. ஒருவர் மனம் கலங்க, மற்றொருவர் அவருக்கு ஆறுதல் கூற, இதயச்சுமை குறைந்து விடுகிறது, தியாக மனப்பான்மையும் தானாக வருகிறது. எல்லோரும் பகிர்ந்து உண்ணும் பழக்கமும், ஒருவர்க்கொருவர் உதவி செய்யும் குணமும் வருகிறது. பாசம், அன்பு, பெருகுவதைப் பார்க்கிறோம். பெரியவர்கள் கண்டிப்புடன் பாசமும் காட்ட வளரும் சிறுவர்கள் புடம் போட்ட தங்கமாக நல்ல பண்புடன் குடிமகன் ஆகிறார்கள். மாணவர்கள் காலேஜிலிருந்து வீடு வந்தால் அவர்களை வரவேற்க பெரியவர்கள் இருப்பார்கள். அவர்கள் பசிக்கு உணவும் மிகப்பாசத்துடன் அளிக்க அவன் மனம் நிரம்புகிறது.

பள்ளியில் நடந்ததை அவர்கள் ஆர்வத்துடன் விளக்க மாமி, அத்தை, அம்மா என்ற பலர் அவைகளைச் செவி கொடுத்துக் கேட்க அவர்களுக்கும் மனதில் உற்சாகம் பிறக்கிறது. ஒரே வயதில் பெரியப்பா பிள்ளை,சித்தப்பா பிள்ளை என்றும் இருக்க வாய்ப்பு இருப்பதால் மனம் விட்டுப்பேசப் பல சந்தர்ப்பங்கள் கிடைக்கின்றன.

இப்போது இருக்கும் சூழ்நிலை, கணவன், மனைவி இருவரும் உத்தியோகம் போகும் சூழ்நிலை. இதில் ஈகோ பிரச்சனை வேறு, அவர்கள் வேலையில் நன்கு சம்பாதிக்கின்றனர், ஆனால் அவர்கள் குழந்தைகள் சிறு வயதிலிருந்தே தனித்து விடப்படுகின்றனர். அவர்கள் தனிமையை உணராமல் இருக்க, பெற்றோர்கள் அவர்கள் கேட்டதை எல்லாம் வாங்கிக்கொடுக்கின்றனர், இது தவறு, இது சரி, என்று சொல்லிக்கொடுக்க ஒருவரும் இருப்பதில்லை.

அந்த மகனுக்கும் எது கேட்டாலும் கிடைத்து விடுவதால் அதை அடைந்தே தீர வேண்டும் என்ற அசுர ஆசையும், அதில் தோல்வி ஏற்பட்டால் தாங்கிக்கொள்ள முடியாத நிலையும் ஏற்படுகின்றன. மனம் விட்டுச்சொல்ல ஒருவரும் இல்லாமல் உள்ளேயே புழுங்குகிறான். இதனால் மனஅழுத்தம் டிப்ரஷன் உண்டாகிறது. ஏமாற்றம் அவனைக் குடி, போதை மருந்து என்ற கெட்டப்பழக்கத்தில் தள்ளுகிறது.

கடைசியில் அவன் எடுக்கும் முடிவு தற்கொலை, இந்த வருடம் அதிகம் பேர் தூக்குப்போட்டுக் கொண்டதிலும் விஷ மருந்து குடித்துச் சாவை வரவழைத்துக் கொண்டதையும் NCRB national crime records bureau ரிப்போர்ட் கொடுத்திருக்கிறார்கள், அதன்படி ஒரு மணிக்கு 14 பேர் தற்கொலை. 2007ல் 1,22,637 தற்கொலைக் கேஸ்கள், அதில் பெண்கள் 43,322, தமிழ்நாட்டில் 13,811 கேஸ்கள், மற்ற எல்லா மாகாணங்களும் சேர்ந்து 57.9%, உத்தர் பிரதேஷில்தான் மிகக்குறைவு, தில்லி மிக அதிகம்.

இதன் காரணங்கள் காதலில் தோல்வி, பெண்களால் அல்லது ஆண்களால் ஏமாற்றம், உடலில் தீராத வியாதிகள், வறுமை, கடன், வரதட்சிணைக் கொடுமை, படிப்பில் தோல்வி, ஆபீஸில் உயர்வு தடுப்பு.

இதைத் தடுக்க வழிகள் என்ன?

மனம் திறந்து பேச வேண்டும்,

அளவோடு ஆசை இருக்க வேண்டும்,

What என்று பதறாமல் SO WHAT? என்று நினைக்கப் பழகும் நிலை வர வேண்டும்,

நிறைய தியானம் செய்ய வேண்டும்.

திருமதி கிரண்பேதி அவர்கள் தில்லியில் திஹார் ஜெயிலில் பொறுப்பேற்று நடத்திய போது, கைதிகளுக்குத் தியான வகுப்பு அமைத்துக் கொடுத்தார். ஸ்ரீ மஹேஷ் யோகி அவர்களும் அங்கு தியான வகுப்பு எடுத்தார். நான் அங்கு சென்று பார்த்திருக்கிறேன், என்னால் முடியும் என்ற நம்பிக்கையை வளர்த்தல், அன்பால் எதையும் சாதிக்க முடியும் என்ற கொள்கை, எதையும் தாங்கும் இதயம், இவைகள் போன்றவைகளை வாழ்க்கையில் எற்றுக்கொண்டால் “மரணமே வா” என்ற அழைப்பு நின்று விடும்.

 

கிரண் பேடி படத்திற்கு நன்றி: http://www.kiranbedifilm.com/key-subject-kiran-bedi.php

தியானப்படத்துக்கு நன்றி: http://www.buddhachannel.tv/portail/spip.php?article5095

குறிப்புப் படத்துக்கு நன்றி: http://sujenman.wordpress.com/2010/09/10/world-suicide-prevention-day/

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “மரணத்தை அழைப்பது ஏன்?

  1. தங்கள் கட்டுரையின் கடைசிப் பத்தியில் திருமதி கிரண்பேடி பற்றிய குறிப்பு ஒன்றைப் படிக்கும் போது, எனது சிந்தனையில் தோன்றியதையும் நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.                                                         ‘மரணமே வா’ என்ற நினைப்பு நின்று விடவேண்டும், அதே சமயத்தில் ‘மரணமே போ’ என்று கட்டளையிடவும் மனம் துணிவு பெற வேண்டுமானால், இந்திய சுதந்திரத்துக்காக போராடி, அந்தமான் செல்லுலார் சிறையில் 10 ஆண்டுகள் ஆங்கிலேயரால் கொடுமைப் படுத்தப் பட்டு, அவர் சிறையில் வாடும்போது சக கைதிகளுக்கு எப்படி வழிகாட்டினார் என்பதையும், மரணத்துக்கு அஞ்சாத வீரத்தை மற்ற கைதிகளுக்கு எவ்வாறு உண்டு பண்ணினார் என்பதையும் தெரிந்து கொள்ளவேண்டுமெனில், சுதந்திரப் போராட்டத் “தியாகி வீர் சவர்க்கார்” அவர்களின் வரலாற்றைப் படித்துத் தெரிந்துகொள்ளலாம்.                                        நான் அந்தமானுக்குச் சென்றபோது, சிறை வளாகத்துக்குள்ளேயே சவர்க்கார் பற்றிய வரலாற்றை ஒலி, ஒளி மூலம் மக்களுக்கு அரசாங்கமே எடுத்துச் சொல்கிறது. அந்தமான் விமான நிலையம் கூட அவர் பெயரிலேயே அழைக்கப் படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *