தமிழ் ஸ்டுடியோவின் இரண்டாவது சனிக்கிழமை நிகழ்வு

0

 
நிகழ்வு: அரிய திரைப்படம் திரையிடல்

படம்: சந்தியா ராகம் (இயக்கம்: பாலு மகேந்திரா)

சிறப்பு பங்கேற்பாளர்:பாலு மகேந்திரா

நாள்: 09-06-2012, சனிக்கிழமை

நேரம்: மாலை 6:30 மணிக்கு

இடம்: எம்.எம். திரையரங்கம் (M.M. Theater) (கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில், ராயல் பெண்கள் விடுதி என்கிற பெயர்பலகையே பெரிய அளவில் இருக்கும்).

வணக்கம் நண்பர்களே,

தமிழ் ஸ்டுடியோ இதுவரை இரண்டாவது சனிக்கிழமை தோறும் குறும்பட வட்டம் என்கிற நிகழ்வை தொடர்ந்து ஐம்பது மாதங்களாக நடத்தி வந்தது. ஐம்பது மாதமும், இரண்டாவது சனிக்கிழமை சென்னை எழும்பூரிலுள்ள ஜீவன ஜோதி அரங்கில் மாலை நான்கு மணிக்கு நிகழ்ச்சி தொடங்கிவிடும். குறும்பட பயிற்சி, குறும்படங்கள் திரையிடல், வெள்ளித்திரை இயக்குனர்களுடன், குறும்பட இயக்குனர்கள் கலந்துரையாடல் என மூன்று பிரிவுகள் நடைபெற்று வந்தன.
தமிழ் ஸ்டுடியோ தொடங்கும்போது தமிழ்நாட்டில் குறும்படங்கள் திரையிடல் தொடர்ச்சியாக நடைபெறவில்லை. அதுப் பற்றிய பெரிய விழிப்புணர்வு இல்லை. நிறைய குறும்படங்கள் வெளிவந்து கொண்டே இருந்தன. ஆனால் அவை திரையிடப்பட்டு கலந்துரையாடல் நடைபெறவில்லை. அந்த குறையைப் போக்கவே தமிழ் ஸ்டுடியோ இப்படி ஒரு தொடர் நிகழ்வை ஏற்பாடு செய்து அதற்கு குறும்பட வட்டம் என்று பெயரும் வைத்து மகிழ்ந்தது. ஆனால் தற்போது குறும்படங்களுக்காக அனைத்து தொலைக்காட்சிகளிலும் நேரம் ஒதுக்கப்பட்டுவிட்டது. குறும்படம் எடுக்க வரும் நண்பர்களே எப்படியும் கொஞ்சம் வசதியான நண்பர்களை பின்னணியில் வைத்துக் கொண்டு தாங்கள் எடுக்கும் திரைப்படங்களை ஒரு திரையரங்கில் திரையிட்டு அவர்களுக்குள்ளாகவே பாராட்டி மகிழ்கின்றனர். அவர்களுக்கு விமர்சனம் தேவைப்படுவதில்லை. இப்படியான சூழலில் குறும்பட வட்டத்திற்கான தேவை குறைந்துவிட்டது. ஆனால் அதற்கான தேவை இன்னமும் இருக்கிறது. எனவே இனி எல்லா மாதமும் இரண்டாவது சனிக்கிழமை குறும்பட வட்டத்திற்கு பதிலாக பொதுவாக தமிழ் ஸ்டுடியோவின் ஏதாவது ஒரு நிகழ்வு நடைபெறும். குறும்பட நிகழ்வு இரண்டு அல்லது மூன்று மாத இடைவெளியில் ஒரு முறை நடைபெறும்.
அதன்படி இந்த மாத இரண்டாவது சனிக்கிழமை பாலு மகேந்திரா அவர்கள் இயக்கத்தில் வெளிவந்த தமிழின் ஆக சிறந்த படங்களில் ஒன்றான “சந்தியா ராகம்” திரையிடப்படவிருக்கிறது. இப்படியான அரிய படங்களை இனி ஒவ்வொரு மாதமும் திரையிடலாம் என்று நினைக்கிறேன். ஆனால் இது போன்ற படங்களை தேடுவதில் நிறைய சிக்கல்கள் இருக்கிறது. பல சிக்கல்களையும் தாண்டி இது போன்ற படங்களை தமிழின் மாற்று திரைப்பட ஆர்வலர்களுக்காக திரையிடுவதில் தமிழ் ஸ்டுடியோ உறுதியாக இருக்கிறது. நல்ல திரைப்படங்களை தொடர்ச்சியாக பார்ப்பதன் மூலமும் நாம் நமது திரைப்பட ரசனையை வளர்த்துக் கொள்ள முடியும்.
நண்பர்களே இனி உங்களது இரண்டாவது சனிக்கிழமையை தமிழ் ஸ்டுடியோவிற்காக ஒதுக்கி வைத்து விடுங்கள். நல்ல திரைப்படங்கள் அல்லது மாற்று ஊடகம் சார்ந்த கருத்தரங்கம், குறும்பட திரையிடல், கலந்துரையாடல் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். வாருங்கள் சந்திப்போம்.

அருண் மோ. 9840698236

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *