அதிகாலைப்பல்லவன்-கவிதைப்புதினம்-11

0

பிச்சினிக்காடு இளங்கோ      

கோடம்பாக்கம்நிறுத்தம்-11
 
இல்லத்தில்
உள்ளங்கள்
கொந்தளித்து அடங்கியதைக்
குறிப்பால் உணர்த்தினேன்

அடங்கியப் புயலாய்
ஆனதையும் தெரிவித்தேன்

கடிதத்தில்
தவறில்லை

கடிதம்
வந்ததுதான் தவறு

எழுத்துக்கள்
எதையும்
தவறாகச் சொல்லவில்லை

எழுத்துக்கள்
எதுவும்
தவறாகவும் இல்லை

கடிதம் எழுதியது
பெண்ணல்லவா
செல்லமும் வெல்லமும்
கலந்ததல்லவா?

பெண்களே படித்தால்
பொறுக்கமுடியுமா?

பிள்ளைகளும் படித்துவிட்டதால்
நெருப்பின்றி எரிய
வாய்ப்பல்லவா?

இனி
வீட்டில் சந்தேகம்
எரியுமல்லவா?

நல்லதோ கெட்டதோ
இனி
எதிலும் ஐயம்
எழுமல்லவா?

எப்படிப்பார்த்தாலும்
இப்படியொரு கடிதம்
வருவது
நல்லதில்லையே

எழுத்தில் சொல்லி
எடுத்தும் சொல்லி
விளையாட்டு
வினையாக மாறுவதை
விளக்கினேன்

வீட்டுக்கே வருகிறேன்
என்று எழுதியது
வெள்ளை மனத்தைத்தானே
காட்டுகிறது

விபரீத எண்ணம்
எதுவும் இருந்தால்
வெளிப்படையாக
எழுதமுடியுமா?

நியாயம்தான்

வெளிப்படையாகவே
எழுதி எழுதி
வெள்ளம்
எங்கே அடித்துச்செல்லுமோ

நல்ல உள்ளம்தான்
வெள்ளை உள்ளம்தான்
என்ன செய்வது?

எப்போது தீப்பிடிக்கும்
என்பது தெரியாதே

ஒருமுறை பற்றிவிட்டால்
தீயணைக்கும் நிலையமே
வந்தும் பயனில்லை

தீவிபத்துத்தானே
கடந்தகால வரலாறாய்
வாழ்கிறது!

எச்சரிக்கையாய்
இருப்பதுதானே
என்றைக்கும் நல்லது
இருவருக்கும் நல்லது

சீதை
கோட்டைத் தாண்டியதால்தானே
நாட்டையும்
காட்டையும் இழந்து
காட்டில்
வேட்டைக்கு ஆளானான்

எல்லாமாக இருந்த
இராமன்
சீதையை இழந்தான்

வல்லமையின்
வடிவமான இராவணனோ
சீதையில் இழந்தான்

ஓர் எல்லைக்குள்
இல்லையெனில்
எது எல்லை? என்பது
இல்லை என்றாகிவிடும்

ஆகவே
இனி
ஓர்
எல்லைக்குள் இருக்க
முடிவெடுத்தேன்

இருக்கச் சொல்லியும்
மடல் வரைந்தேன்

மடல் புறாக்கள்
சமாதானமின்றிப்
பறந்து வந்தன
பறந்து சென்றன

இப்படியாக
இழந்த நாட்களில் ஒருநாள்
‘வியர்வைத்தாவரங்கள்’
நூலில் பிடித்த
கவிதையை எழுதி
எனக்குப் பிடித்த
ரசிகையானதை
இன்னும் ரசிக்கிறேன்

விசிறியை வெறுத்தால்
காற்றின் தழுவல்
கைகூடுமா?

ரசிக்கவும்
வாசிக்கவும்
ருசியோடு கழிந்தபொழுது
நிரந்தரமாய் இல்லை

அடுத்துவந்த நாட்களில்
ஒருநாள்
‘நான்
சென்னை செல்கிறேன்
பாட்டியின் வீடு
அங்குதான் உள்ளது

விடுமுறையை
அங்குதான் செலவழிக்கப்போகிறேன்
மீண்டும் திரும்ப
மாதங்கள் ஆகும்

எனவே
ஒரு
நிபந்தனை’
என்று மடல்வந்தது

என்ன நிபந்தனை?
எதற்கு நிபந்தனை?
ஏன் நிபந்தனை?
என்று கேட்டு
மடல் எழுதினேன்

நன்றி.
http://www.beautyplane.com/photo/beautiful-indian-woman-15089.html 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *