திவாகர்

குழந்தையும் பாடலும்,

பூப்பூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்காநீ
பள பளவெனப் போட்டிருப்பது யாரு கொடுத்த சொக்கா..

நான் பள்ளியில் படிக்கும்போது அடிக்கடி வானொலியில் வரும் இந்தப் பாட்டு இன்னமும் என் உள்ளத்தில் ரீங்காரமிட்டுக்கொண்டே இருக்கிறது. வாலி எழுதிய பாட்டென்று நினைக்கிறேன். பொதுவாக குழந்தைகளுக்கென பாட்டுகள் எழுத வேண்டுமென்றாலே சிரமமான காரியம்தான். மொழியும் சிதையக்கூடாது. பொருளும் மிக எளிதாக இருக்கவேண்டும், அதாவது குழந்தையின் கள்ளமிலா மனத்தில் அது அழகாக சீராக ஏறவேண்டும். பாடலாசிரியர் கூட ஏறக்குறைய குழந்தையாகவே மாறிவிட வேண்டும். மகாகவி பாரதி கூட பாப்பா பாட்டு எழுதும்போது அப்படிக் குழந்தையாகவே மாறிவிட்டாரோ என்னவோ.. பாரதியின் பாப்பா பாட்டு ஒரு விலை மதிக்க முடியாத மாணிக்கம். அவர் பாப்பா பாட்டுதான் எத்தனை இனிமை.. செவிக்குத் தேனாக வந்து விழுகிறது பாருங்கள்.

சின்னஞ்சிறு குருவி போலே நீ
திரிந்து பறந்து வா பாப்பா,
வன்னப் பறவைகளைக் கண்டு நீ
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா,
ஓடி விளையாடு பாப்பா – நீ
ஓய்ந்திருக்கலாகாது பாப்பா

மிக மிக எளிமையான வரிகள் ஏதோ சிறப்பாகக் கிடைத்த மலைத் தேனில் நன்றாக ஊற வைத்த பலாப் பழச் சுளையை ருசித்துச் சாப்பிட்டது போல ஒரு அனுபவத்தைக் கொடுக்கும் பாட்டு அது. ஒரு சின்னஞ் சிறிய மனதுக்காக எப்படி வெளிப்படுத்தினால் அது அழகாக புரிந்து கொள்ள முடியுமோ அப்படி எழுதப்பட்ட பாட்டுதான் அது. பிற்காலத்தில் அழ வள்ளியப்பா பாப்பா பாடல்களை மிக அருமையாக வடித்து குழந்தைகளின் நெஞ்சத்தைக் குளிர்வித்தார்.

வட்ட நிலா சுற்றிச்சுற்றி
வானில் ஒடுது
வா வென்றே நானழைத்தால்
வர மறுக்குது!
எட்டி எட்டிப் பார்த்தாலுமே
எட்டப் போகுது
ஏனென்று கேட்டால் அது
சிரித்து மழுப்புது”

குழந்தைகள் நம் நாட்டின் எதிர்காலச் செல்வங்கள். அவர்களுக்குப் புரியும் விதத்தில் நாம் எதையும் சொல்லும்போது அந்த பச்சை உள்ளத்தில் ‘பசக்’ கென ஒட்டிக்கொண்டு அப்படியே பதிந்துவிடும். வாழ்க்கை அனுபவத்தில் மிதந்து சென்று வயதாகி தள்ளாத நிலையிலும் அந்தக் குழந்தை உள்ளத்தில் பதிந்த நினைவுகள் மட்டும் அப்படியே இருக்கும்தான்.

ஆனால் இப்போதெல்லாம் காலம் போகிற வேகத்தைப் பார்த்தால் சற்றுக் கவலையாகத்தான் இருக்கிறது. பள்ளியிலே ஆங்கில ரைம்ஸ் பழகும் சிறார்கள் தமிழிலே பாடல் பழகுகிறார்களா என்றால் இன்னமும் கவலை அதிகமாகிறது. சிறுவர் சிறுமியருக்கான பாடல்கள் இப்போதெல்லாம் அதுவும் தமிழிலே மிக மிக அரிதாகி வருகின்றது. பழைய பாடல்கள் நிறையவே இருந்தாலும் புதிய பாடலாசிரியர் பாப்பா பாடல்களை எழுதுவது என்பது அரிதுதான் என நினைத்துக் கொண்டிருக்கும்போதுதான் வல்லமை செல்லம் பகுதியில் கவிநயாவின் பாப்பா பாடல் ஒன்று இந்த வாரம் வெளிவந்துள்ளது.

https://www.vallamai.com/chellam/songs/247

மழை மழை மழை மழை பாரு
மேகத்துல போயி ஓட்டை போட்டதாரு
சிலு சிலு சிலு சிலு காத்து பாரு!
காத்துக்குள்ள ஏசியை வெச்ச தாரு?
……………………………………..
……………………………………..
பூவுக்குள்ள தேனை வெச்சுப் பாத்ததாரு?
பூமிக்குள்ள மூச்சுக் காத்த வெச்சதாரு?
சிப்பிக்குள்ளே முத்தக் கொண்டு சேத்ததாரு?
சிந்திச்சாக்க பதில் உண்டு தேடிப் பாரு!

இதை அப்படியே ஒரு குழந்தையாக மனதில் படித்துப் பார்த்தேன். இனிமையாக இருந்தது. கடைசி நான்கு வரிகளில் ஒரு ஸ்பெஷல் எஃபக்ட் போல ஒரு ஆன்மீகச் சிந்தனையைக் கொடுத்திருப்பார். இந்த சிந்தனை குழந்தை வடிவில் இருக்கும்போது கேள்வியாகத்தான் இருக்கும். அனுபவங்கள் கை கொடுக்க காலம் செல்லச் செல்ல அந்த வார்த்தைகளின் உண்மை புரியும். ஆன்மீக சிந்தனையும் கூடவே பெருகும். இந்த இனிமையான பாட்டை எழுதி இங்குள்ளோரை எல்லாம் குழந்தைகளாக்கி கொஞ்ச விட்டு, சிந்தனையயும் தூண்டி விட்ட அவருக்கு இந்த வார வல்லமையாளர் விருது கொடுப்பதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி உண்டு.

அமெரிக்காவில் வசிக்கும் கவிநயா ஒரு நாட்டியமணி. கவிநயாவின் கவிதைகளை நான் நன்றாகவே அறிவேன். என்னுடைய புத்தகம் ஒன்றுக்காகக் கூட அவரின் மொழிபெயர்ப்புக் கவிதை வரிகளைப் பயன்படுத்தியுள்ளேன். (உன்னைத்தவிர உலகிலுள்ள உறவனைத்தும் பொய்யடி! உறவவற்றின் தளையறுக்க அறிந்தவள்நீ தானடி!)

இந்த செட்டிநாட்டு சிற்றரசி அன்னை பராசக்தியின் மீது அதீதமான அன்போடு பாடல்கள் எழுதுவார். அந்தப் பாடல்களில் கொஞ்சல்களும் கெஞ்சல்களும், அழுகையும் ஆனந்தமும், பெருமையும், போற்றுதலும் இருக்கும். உலகத்தையே ஆளும் உமையின் பக்தைக்கு தமிழன்னையும் அழகாகவே கை கொடுப்பது கூட சகஜம்தானே.. தமிழ் துள்ளி விளையாடும் பல பாடல்களைப் புனைந்தவர். அன்னையைப் போற்றும் கவிநயா அதே அழகில் குழந்தைகளையும் தாலாட்டி இருக்கிறார். இவர் மேலும் மேலும் பல பாடல்கள் புனைய வேண்டும். இவரது பாடல்களை குழந்தை முதல் தாத்தா வரை அனுபவித்துப் பாட வேண்டும் என்பதே என் ஆசை.

வல்லமை சார்பாக கவிநயாவுக்கு என் வாழ்த்துகளும் பாராட்டுதல்களும்.

பதிவாசிரியரைப் பற்றி

10 thoughts on “வல்லமையாளர்!

  1. இந்த அங்கீகாரம், இன்னும் சிறப்பான பல படைப்புகளை உருவாக்க உங்களுக்கு உத்வேகத்தை கொடுக்கும். வாழ்த்துக்கள் கவிநயா!

  2. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  3. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி, திரு. இளங்கோ, மற்றும் திரு. மனோகர்!

  4. கவிநயா, உங்க பதிவின் மூலம் செய்தி அறிந்தேன். மனமார்ந்த நல்வாழ்த்துகள். மேன்மேலும் வல்லமை பெருகவும் வாழ்த்துகள்.

  5. உண்மையிலேயே திறமையானவர்கள் பாராட்டப்படும் பொழுது அடையும் மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது.  வாழ்த்துக்கள், கவிநயா!
    திறம்பட எடுத்துச் சொன்ன திரு. திவாகருக்கு நன்றி.

  6. //கவிநயா, உங்க பதிவின் மூலம் செய்தி அறிந்தேன். மனமார்ந்த நல்வாழ்த்துகள். மேன்மேலும் வல்லமை பெருகவும் வாழ்த்துகள்.//

    மிக்க நன்றி கீதாம்மா!

  7. //உண்மையிலேயே திறமையானவர்கள் பாராட்டப்படும் பொழுது அடையும் மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது. வாழ்த்துக்கள், கவிநயா!
    திறம்பட எடுத்துச் சொன்ன திரு. திவாகருக்கு நன்றி.//

    ஜீவி ஐயா! உங்களை இங்கே பார்த்ததில் பல மடங்கு மகிழ்ச்சி எனக்குத்தான்! பாப்பா பாடல்கள் எழுத ஆரம்பத்திலிருந்தே ஊக்கம் தந்த உங்களுக்கு இங்கே நன்றி சொல்வது மிகப் பொருத்தம்தான். ஆசிகளுக்கு மிக்க நன்றி ஜீவி ஐயா.

    திவாகர் அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளை இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்.

  8. திறமைகளை வெளிச்சம் காட்டும் திவாகருக்கும் திறமையாளர்களுக்கும் பாராட்டினை தெரிவிப்பது கடமை அதிலும் கவிநயா எனக்கு நன்கு தெரிந்த அன்புச்சகோதரி கவிநயாவை வாழ்த்துவதில் பெருமை அடைகிறேன்!

  9. Miga sirappu paraattiavarukkum Paraattu perravarkkum.Thaguthiyanavarai nangu Paaraarriullergal.
    Natarajan

  10. இங்கேயும் வந்து வாழ்த்திய ஷைலஜா அக்காவின் அன்பிற்கும், திரு.நடராஜன் அவர்களுக்கும் நன்றிகள் பல!

Leave a Reply to கவிநயா

Your email address will not be published. Required fields are marked *