இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் …………. (11)

0

சக்தி சக்திதாசன்

முந்தைய மடலைப் படிக்க இங்கே சொடுக்கவும்.

அன்பினியவர்களே !

இனிய வணக்கங்கள்.

காலத்தின் ஓட்டம் கணக்கிட முடியாத கனவேகத்தில் ஓடுகின்றது. வாரம் ஒவ்வொன்றும் ஒருநாளைப் போல காற்றாகப் பறந்து போய் விடுகிறது. எம்மைச்சுற்றி நிகழும் நிகழ்வுகள், எம் மனதிலே பல அதிர்வுகளை உண்டாக்குகின்றன. அவற்றில் சில ஆனந்தமானவையாக, வேறு சில அதிசயமானவைகளாக, மற்றும் சில மனதை உருக்குபவையாக, அதிலும் சில ஆத்திரமூட்டுபவையாக, இன்னும் சில வேதனை அளிப்பவையாக பலவிதமான உணர்ச்சியலைகளை உள்ளத்தே தோற்றுவிக்கின்றன.

இங்கிலாந்துப் பிரதமருக்கு ஜாதகத்தில் ஏழரைச் சனி பிடித்து ஆட்டுகின்றதோ! என எண்ணும் வகையில் அவரது தலை மீண்டும் ஊடகத்தினில் உருட்டப்படுகின்றது.

அப்படி என்ன செய்து விட்டார் இப்போது ? அறிய ஆவலாயிருக்கிறது இல்லையா?

சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னால் “பக்கிங்கம்ஷயர் (Buckinghamshire)” எனும் இடத்திலுள்ள “கட்ஸ்டென்”(Cadsden) எனும் நகரில் உள்ள “ப்ளவ் இன்” (Plough Inn) எனும் பாரில் தனது மனைவி மூன்று பிள்ளைகளின் சகிதம், மற்றும் இரண்டு குடும் நண்பர்களின் குடும்பத்துடன் மதிய போசனத்திற்காக ஒரு ஞாயிற்றுக்கிழமை நம்ப பிரதமர் போயிருந்திருக்கிறார்.

அவர்கள் அங்கே பல கார்கள் இணைந்த ஒரு பவனியாகச் சென்றிருக்கிறார்கள். அப்போது அவரது மனைவி “சமந்தா” (Samantha) ஒரு காரிலும், பிரதமர் வேறு காரிலும் சென்றிருக்கிறார்கள். முடிவின் போது வீடு திரும்பும் போதும் அவர்கள் இருவரும் வெவ்வேறு கார்களில் தான் சென்றிருக்கிறார்கள்.

வீடு வந்ததும் தான் அவர்களுக்கு, தாம் தமது எட்டு வயதுப் பெண் குழந்தையான “நான்சி” (Nancy) ஐ, அந்த பாரிலேயே விட்டுவிட்டு வந்து விட்டது தெரிந்திருக்கிறது.

பிரதமர் திரும்பிச்சென்று தனது மகளை அழைத்து வந்துள்ளார். என்னடா இது?  இதைப் போய் இவன் பெரிய விடயமாகச் சொல்ல வந்து விட்டானே என்று எண்ணுவது புரிகிறது. விஷ்யம் என்னவென்றால் இரண்டு மாதங்கள் கழித்து இவ்விடயத்தை அப்போது அங்கிருந்த யாரோ ஒருவர் ஊடகத்துறைக்கு அவிழ்த்து விட்டிருக்கிறார்.

பிரதமரும் அவரது கட்சியும் மக்கள் மத்தியில் செல்வாக்கிழந்து இருக்கும் இந்நிலையில் “பனைமரத்திலிருந்து விழுந்து தவித்துக் கொண்டிருக்கும் ஒருவனை அவ்வழியால் சென்று கொண்டிருந்த மாடும் ஏறி மிதித்துச் சென்றது” போல ஊடகங்கள் இச்செய்தியை ஊதி, ஊதிப் பெரிதாக்கி விட்டார்கள்.

இதென்ன உலகத்தில் வேறு ஒரு பெற்றோருமே செய்யாத ஒரு செயலையா இவர் செய்து விட்டார்?

கேள்வி நியாயமானதுதான்.

ஆனால் இதைப் பெரிதாக்கியவர்கள் கேட்கும் கேள்வி. ஒரு சாதாரண மனிதன் இச்செயலைச் செய்திருந்தால் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் எமது நாட்டைக் கட்டிக் காக்கும் பொறுப்பான ஒரு செயலின் நாயகரான எமது பிரதமர் இத்தகைய ஒரு பொறுப்பற்ற செயலைச் செய்வதை ஏற்றுக் கொள்ள‌ முடியுமா? தனது சொந்த மகளையே பொறுப்பாக ஓரிடத்திற்கு அழைத்துச் சென்று திரும்பக் கூட்டிவர முடியாதவர் இந்நாட்டு மக்களை எப்படி பொறுப்பாக வழிநடத்துவார்? என்பனவே.

காயமடைந்து வீழ்ந்திருக்கும் சிங்கம் ஒன்று ஓடி வந்த மான் ஒன்று வேடன் ஒருவனின் அம்பினாலே தாக்கப்பட்டுத் தனக்கு முன்னால் விழுந்து விட்டால் பார்த்துக்கொண்டிருக்குமா? அது போலத்தான் தேர்தல் தோல்வி எனும் ஆறாத வடுவை நக்கிக்  கொண்டே படுத்திருந்த எதிர்க்கட்சியான லேபர் கட்சி தனக்கு முன்னே இடறி விழுந்த பிரதமரைக் கண்டதும் சும்மா விடுவார்களா? எகிறிக் குதிக்கத் தொடங்கி விட்டார்கள்.

இன்றைய காலகட்டத்திலே, இங்கிலாந்து பொருளாதாரச் சுழலுக்குள் சிக்கி மூழ்கி விடாமல் தத்தளித்துக் கொண்டே கரையை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது. கிறீஸ், ஸ்பெயின் போன்ற நாடுகளின் சிக்கல்களைத் தீர்த்தாலொழிய, ஜரோப்பிய ஒன்றியமும் அதன் பொதுநாணயமான யூரோவும் தப்புவது கடினம் எனும் நிலையில் அதைப்பற்றிய முக்கியமான விவாதங்களில் ஈடுபடுவதை விடுத்து எதற்குமே உபயோகமில்லாத “பிரதம‌ர் குழந்தையைத் தவறவிட்ட” வாதத்தில் ஈடுபடுவது பொறுப்பான செயலோ? என சில கோணங்களில் இருந்து அரசியல் அவதானிகளால் கேள்வி எழுப்பப் படாமல் இல்லை.

அதேசமயம் பிரதமரும் சாதாரண மனிதன் தானே! இத்தகைய ஒரு நிகழ்வின் மூலம் பிரதமர் சாதாரண மனிதர்களிலிருந்து வேறுபட்டவராக அவர்களது பிரச்னைகளைப் புரிந்து கொள்ள முடியாதவராக எண்ணப்பட்டதற்குப் புறம்பான வகையில் தானும், அவர்களோடு ஒருவர் என்று நிரூபித்திருக்கிறார் என்கிறார்கள் அவருக்குச் சார்பான அவரது கட்சிக்காரர்கள்.

ஒரு நாட்டின் பிரதமர், ஜனாதிபதி, எதிர்கட்சித் தலைவர்கள் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் இவர்களெல்லாம் யார்? சமுதாயத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து உருவானவர்கள் தானே! இத்தகையவர்களாக வருவார்கள் என அவர்கள் பிறப்பதற்கு முன்னாலேயே தீர்மானிக்கப்பட்டுப் பிறந்தவர்களா? இல்லையே!

பின் எப்படி அவர்களால் இழைக்கப்படும் மனிதனுக்கு இயல்பான சிறிய தவறுகள் அளவிற்கு மீறிய வகையில் மிகைப்படுத்தப்படுகின்றன?

நடந்த தவறுக்குக் காரணம் பிரதமர் தன் மகள், தன் மனைவி வரும் வண்டியில் வருகிறார் என்றும், அவரது மனைவி தன் மகள் தன் கணவர் வரும் வண்டியில் வருகிறார் என்று எண்ணியதனாலும், அவர்களது மகள் கடைசி நேரத்தில் கழிவறைக்குச் சென்றதாலுமே ஏற்பட்டது என்பதுவே பிரதமரினதும், அவர்களைச் சார்ந்தவர்களினதும் விளக்கம்.

பிரதமர் எங்கு சென்றாலும் பயங்கரவாத அமைப்புகளின் செயற்பாடு குறித்து அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் அதிக பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இத்தகைய ஒரு நிலையில் பிரதமரின் மகளை பாதுகாப்புத் துறையினர் எவ்வாறு தவற‌ விட்டார்கள்? தெய்வாதீனமாக அக்குழந்தை பயங்கரவாதிகள் கைகளில் சிக்கவில்லை என்று மக்களிடையே ஒரு விதமான பதட்டம் காணப்படுகிறது.

அரசியல் தலைவர்களின் வாழ்வில் நிகழும் அனைத்து நிகழ்வுகளும் அரசியல் லாபத்திற்காகப் பயன்படுத்தப்படுவது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. அதே சமயம் பிரதமர் போன்ற அதியுயர் பதவி வகிப்போரின் பாதுகாப்புக்கு பொறுப்பாக உள்ளவர்களின் அவதானமும் உயர்ந்ததாக இருக்க வேண்டும்.

எது எப்படி இருப்பினும் ஒரு சிறிய குழந்தை பிரதமரின் மகளான ஒரே காரணத்திற்காக அகப்படக்கூடாதவர்கள் கைகளில் அகப்படாமல் தப்பியதற்காக நாம் வணங்கும் அனைவருக்கும் பொதுவான அந்த இறைவனுக்கு நன்றியை சொல்லிக் கொள்வோம்.

மீண்டும் அடுத்த மடலில்

அன்புடன்

சக்தி சக்திதாசன்

லண்டன்

படங்கள் : நன்றி – பல்வேறு இணையத்தளங்கள்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *