ராமஸ்வாமி ஸம்பத்

ஒரு வழியாகப் புறச்சமயங்கள் நலிவுற்று அகச்சமயங்கள் மேலோங்கிய அவ்வேளையில் தமிழகத்திற்கு ஒரு சாபக்கேடு போல் சைவத்தையும் வைணவத்தையும் பின்பற்றுவோர் தங்களுக்குள் சண்டை போடத் துவங்கினர். ’சிவன் பெரிய தெய்வமா? நாரணன் பெரிய தெய்வமா?’ என்ற வாதப்ரதிவாதங்கள் ஆங்காங்கே நடைபெற்று வந்தன. முதலில் ஒரே குடும்பத்திலேயே வெவ்வேறு அகச்சமயங்களைப் பின்பற்றுபவர் இருந்தனர். பிரிவினை என்பது மனிதனின் இயல்பு போலும்! நாளடைவில் அவர்கள் தனித்தனிக் குலங்களாகப் பிரிந்து வாழத்தொடங்கினர். காளாமுகம், காபாலிகம், பாசுபதம் போன்ற வீரசைவப் பிரிவுகளும் தீவிர வைணவர்களும் ஒருவருக்கு ஒருவர் வாயடி செய்து அது கையடியாக முற்றிப் பகையை வளர்த்துக் கொண்டனர்.

கி.பி. எட்டாம் நூற்றாண்டில் காஞ்சி சிம்மாசனத்தில் அமர்ந்த பல்லவ மல்லன் என்கிற இரண்டாம் நந்திவர்மன் இப்படிச் சைவ வைணவப் பிணக்குப் பெருகி வருவதைக் கண்டு மனம் நொந்து, மாதவனுக்கும் மஹாதேவனுக்கும் பேதம் இல்லை என்பதை அனைவருக்கும் உணர்த்த தில்லை நடராஜர் கோவிலில் பாம்பணையில் பள்ளி கொண்டிருக்கும் கோவிந்தராஜரின் மூர்த்தத்தினைப் பிரதிஷ்டை செய்தான். (புராணக்கூற்றுப்படி, தில்லையில் ஆதிசிவனும் ஆதிபராசக்தியும் பங்குகொண்ட நாட்டியப் போட்டிக்கு நடுவராக ஆதிநாராயணன் இருந்ததாக ஐதிகம்). திருச்சித்திரக்கூடம் என குலசேகர, திருமங்கை ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட அந்தச் சன்னிதி நூற்றெட்டு வைணவ திவ்யதேசங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

’அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி’ என்பது பழமொழியானாலும், குடிமக்களின் மனநிலை கோலோச்சுபவனையும் தாக்கத்தானே செய்யும். இப்படிப் பிளவுபட்ட மக்களின் போக்கு அன்றைய வேந்தர்களையும் பாதித்ததில் வியப்பில்லை. முக்கியமாகச் சோழநாட்டில் அப்படி ஒரு நிலை பரவலாக இருந்தது. சோழ மன்னர்களின் ஆளுமையை ஏற்றுக்கொண்ட குறுநில மன்னர்கள்கூட சைவ வைணவ விரிசலினை மேலும் அதிகரிக்கச் செய்தனர். இது போதாதென்று வலங்கையர் இடங்கையர் [மன்னனுக்கு வலது கை, இடது கை போன்றவர்கள்] என்ற வேறுபாடும் துவேஷத்தை வளர்த்தது.

இடைக்காலச் சோழ வம்சத்தினை நிலை நாட்டிய விஜயாலயன், அவரைத் தொடர்ந்த பராந்தகன், ராஜாதித்தன், கண்டராதித்தன், சுந்தரன், மதுராந்தக உத்தமன், ராஜராஜன், ராஜேந்திரன் ஆகியோர் இரு அகச்சமயங்களையும் இரு விழிகளாகப் போற்றியதற்குச் சான்றுகள் அவர்கள் அக்கோயில்களுக்கு அளித்த மான்யங்களும் அவற்றினைப் பறை சாற்றும் மெய்க்கீர்த்திகளும் ஆகும்.

ஆனால் ராஜேந்திரனுக்குப்பின் வந்த கடைச்சோழவம்ச அரசர்கள் காலத்தில் இப்படி வெகுவாக விரிசல் கண்ட நிலை இன்னும் தீவிரமாகியது. ராஜேந்திரனின் வாரிசுகளான ராஜாதிராஜன், இரண்டாம் ராஜேந்திரன், ராஜமஹேந்திரன், வீரராஜேந்திரன் முதலியானோர் மிகவும் சொற்ப காலமே ஆட்சி செய்து போர்முனையிலோ அல்லது உடல்நலக் குறைவாலோ அகால மரணம் எய்தியதால், வீரராஜேந்திரனின் மகன் அதிராஜேந்திரன் அரியணை ஏறினான். அவனும் உடல்நலம் குன்றி மூன்று ஆண்டுகளிலேயே மாண்டுபோனான். அதிராஜேந்திரனுக்கு வாரிசு இல்லாத நிலையில், விஜயாலயன் பரம்பரை முற்றுப்பெற்று, சோழ நாட்டில் ஒரு பெருங்கலவரம் மூண்டது. கிழக்குத்தை ராஜாக்கள் என அழைக்கப்பட்ட குறுநில மன்னர்களும் மற்றும் வலங்கையர் இடங்கையர்களும் ஒரு பெரிய உள்நாட்டுப் போரில் ஈடுபட்டனர்.

இத்தருணத்தில்தான், பூலோக வைகுண்டம் எனப் புகழ் பெற்ற திருவரங்கத்தில் தண்டு கொண்டு வைணவச் சமயத்தினை மேம்படுத்தி வந்த பகவத் ராமானுஜர், இக்குறுநிலக் கிழார்களின் வைணவ வெறுப்பினைத் தாங்கவொண்ணாமல் ஹொய்சள (கன்னட) நாட்டிலிருக்கும் மேல்கோட்டைக்கு இடம் பெயர்ந்தார்.

இந்த உள்நாட்டு கலகத்தில் ஈடுபட்டோரின் கொட்டத்தினைத் தன் வல்லமையால் அடக்கினான் குலோத்துங்கன். (இவன் முதலாம் ராஜேந்திரனின் மகள் அம்மங்காதேவிக்கும் கீழைச்சாளுக்கிய வம்சத்தைச் சேர்ந்த வேங்கி அரசன் ராஜராஜநரேந்திரனுக்கும் பிறந்தவன்). அதன் பின் சோழ சாம்ராஜ்யச் சக்ரவர்த்தியாகப் பதவியேற்று ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் கோலோச்சி தன் நல்லாட்சியால் மக்களிடையே புகழ் பெற்றான். இவன் காலம் தொட்டுச் சோழ-சாளுக்கிய வம்சம் துளிர் விட்டது. ஆனால் குலோத்துங்கனின் இறுதிக்காலத்தில் மீண்டும் வாரிசு பற்றிய சிக்கல் ஏற்பட்டது. அவனுடைய நான்காவது மகனான விக்கிரமன் வேங்கி சாளுக்கிய நாட்டின் பரகேசரியாக இருந்தான். அவனையே குலோத்துங்கன் சோழ அரசனாக நியமித்தான்.

விக்ரமனுக்குப்பின் வந்த இரண்டாம் குலோத்துங்கன் என்கிற அநபாயன் சைவத்தில் மிக்க ஈடுபாடு கொண்டு, சோழப்பரம்பரை நெறியான சமத்துவக் கோட்பாட்டினை விட்டுச் சற்று விலகி வைணவத்தினை ஒரு மாற்றுக் குறைவாகக் கருதினான். இந்த அநபாய சோழன்தான் தில்லை கோவிந்தராஜர் மூல விக்ரஹத்தை கடலில் எறிந்து, பின் நடராஜர் ஆலயத்தை விரிவுபடுத்தியதாக ஓட்டகூத்தரின் காவியமான ‘குலோத்துங்கன் உலா’ தெரிவிக்கிறது. இதைத் தவிர திருக்கண்ணபுரம் செளரிராஜப் பெருமாள் கோவில் மதில்களையும் தகர்த்ததாக ஒரு வதந்தி பரவி அவன் ஒரு வைணவ வெறுப்பாளனாகச் சித்தரிக்கப்பட்டான். அநபாயனுக்குப் பின் வந்த இரண்டாம் ராஜராஜன் தன் தந்தைக்கு மாறாக வைணவத்தைப் பேணி வளர்த்தான். அவன் விட்டுச்சென்ற மெய்க்கீர்த்திகள் அவனை ”விழுந்த அரிசமயத்தை மீளவெடுத்த” சோழேந்திரச் சிங்கன் எனக் குறிப்பிடுகின்றன.

ஆனால் வைணவ நூல்களான ‘கோயில் ஒழுகு’ மற்றும் ‘திவ்யசூரிசரித்திரம்’ கோவிந்தராஜர் சிலையைக் கடலில் எறிந்த மன்னனின் இயற்பெயரைக் குறிப்பிடாமல் ‘அவ்யபதேஸ்யன்’ (பெயரை உச்சரிக்கவும் அருகதை அற்றவன்) என்றும் ‘கிருமி கண்டன்’ (கழுத்தில் பிளவை நோயுற்றவன்) என்றும் கூறுகின்றன. முனைவர் A. கிருஷ்ணமாச்சாரியார் ‘Ramanuja – a Reality Not a Myth’ என்கிற தன் ஆராய்ச்சி நூலில் தக்க ஆதாரங்களுடன் ‘கிருமிகண்டன்’ சோழ பரம்பரையைச் சேர்ந்தவன் அல்லன் என்று அறுதியிட்டு கூறுகிறார். உண்மையிலேயே அவன் சோழ வம்சாவளியைச் சேர்ந்தவனாக இருக்கும் பட்சத்தில் அம்மன்னனை அந்நூல்கள் அவ்வாறு கோடியிட்டுக் காட்டியிருக்கும். குலோத்துங்கனின் கடைசி ஆண்டுகளில் காணப்பட்ட குழப்பமான நிலையில், ஒரு சிற்றரசன் செய்த இந்த அட்டூழியம் சோழ மன்னர்களின்மீது ஒரு களங்கத்தினை ஏற்படுத்தியதாக விளக்குகிறார்.

அந்நிலையில், சில குறுநிலக்கிழார்கள் தாங்களும் சோழர்கள்தான் என்றும் மார் தட்டிக் கொண்டிருந்தனர். [“It is possible Kirumikanta Chola might be a subordinate king who rose to fame during civil war and died at the end (suffering from cancer of the neck). If Virarajendra and Adhirajendra were to be called Kirumikanta Chola, the hagiologists and commentators would have definitely indicated the king’s name.”] மேலும், அந்த ஆய்வாளர் முதலாம் குலோத்துங்கனைக் கிருமிகண்டன் என வர்ணிக்கப் படுவதையும் கண்டிக்கின்றார். அம்மன்னன் திருவரங்கத்துக் கோவிலுக்குக் கொடுத்த மான்யங்கள் அவ்வாலயத்தில் 83 சிலாசாசனங்கள் (கல்வெட்டுகள்) மூலம் பறைசாற்றப் பட்டுள்ளதை அவர் குறிப்பிடுகிறார்.

வைணவ அபிமான க்ஷேத்திரமான ராஜமன்னார்குடி ராஜகோபாலஸ்வாமி கோவில் குலோத்துங்கனால் புனரமைக்கப்பட்டதையும் கிருஷ்ணமாச்சாரியார் சுட்டிக்காட்டி, அம்மன்னன் வைணவத்தின்மீது கொண்ட பாசத்தினையும் அறுதியிட்டுக் கூறுகிறார். [இன்னுமொரு வரலாற்றுக் குறிப்புப்படி, குலோத்துங்கன் தான் அரியணை ஏறியதும் பகவத் ராமானுஜரை சந்தித்து ஆசி பெற்றதாக ஒரு தகவல் உள்ளது.] அநபாயனையும் அவர் கிருமிகண்டனாக ஒப்பவில்லை [“It may be that the Tamil poet (Ottakkoothar) in describing this act of his (renovating the Chidambaram temple), attributes to the king a deed of his predecessors”].

ஆக, கிருமிகண்டன் ஒரு சிற்றரசனே, சோழனல்லன் என்ற அம்முனைவரின் கருத்தினை நாமும் ஏற்றுக்கொண்டு மாலடியான் கதையினைத் தொடர்வோம்.

 

படத்திற்கு நன்றி: http://www.temples.kmbrothers.net/index.php/2011/12/chidambaram-sri-govindaraja-perumal-temple-information-and-guide

http://photos.templesonnet.com/dec-2010/sri-ramanujar-sri-perumbhudhur.shtml

http://indiatempletour.blogspot.in/2012/04/abhimana-kshetram-mannargudi-sri.html

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “உறவேல் ஒழிக்க ஒழியாது (பகுதி-4)

  1. கிருமி கண்ட சோழன் குறித்த தகவல்களுக்கு மிக்க நன்றி. இதைக் குறித்து சிறிதளவு அறிந்திருக்கிறேன். குறுநில மன்னனாய் இருக்கலாம் என்பதும் சரியாகவே தோன்றுகிறது. பகிர்வுக்கு நன்றி.

  2. அரிய தகவல்கள், எளிய நடை, தக்க சான்றுகள் ஆகியவற்றுடன் இருண்ட வரலாற்றுக்குள் பயணிக்க ஓர் ஒளிவிளக்காக இந்தத் தொடர் பயன்படுகிறது. 

    வல்லமையாளர் விருது பெற்ற ராமஸ்வாமி ஸம்பத் அவர்களுக்கு வாழ்த்துகள். இவரை அறிமுகப்படுத்திய திவாகர் அவர்களுக்கு நன்றிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *