அவ்வை மகள்

உலக முன்னோடி இருப்பினும் பின்னாடி

பள்ளிக் கூடத்தில் குழந்தைகளுக்கு இருக்கிற உணவு எனும் பிரச்சனையின் தீவிரத்தைக் கண்டோம். கல்வி பெற வரும் குழந்தைகளுக்கு உணவு வழங்க வேண்டிய கடமை பள்ளிகளுக்கு உண்டு என்பதை உலக நாடுகள் என்றோ உணர்ந்தன எனலாம். 1800களின் பிற்பாதியிலேயே. பள்ளிகளில் மாணவர்களுக்கு உணவு வழங்கப்படுவது பல கண்டங்களைச் சேர்ந்த பல நாடுகளில் பழக்கத்தில் இருந்ததை நாமறிகிறோம். இப்பழக்கம், இன்றும் என்றும் என்றென்றும் தொடருமாறு அந்நாடுகள் கட்டாயச் சட்டமாக்கி ஒரு நிலைத்த ஏற்பாட்டைச் செய்திருக்கின்றன!

இவ்வகையில் நாம் ஒன்றும் சளைத்தவர்கள் அல்லர் என்பது குறிப்பிடத் தக்கது. 1920லேயே சென்னை மாநகரத்தில், கார்ப்பரேஷன் பள்ளிகளில் சமைக்கப்பட்ட உணவு வழங்கப்பட்டு வந்ததைப் பதிவுகள் காட்டுகின்றன. ஆக, அரசுத் தரப்பில் பள்ளிகளில் குழந்தைகளுக்குச் சாப்பிடத் தகுதியான தரமான உணவு வழங்கப்பட்ட முதல் மாநிலம் எனும் தன்னேரில்லாப் பெருமை கொண்டது தமிழகம். அரசுப் பள்ளிகளில் மட்டுமா? தனியார்ப் பள்ளிகளும் கூடத்தான்!

அன்று இருந்த தனியார்ப் பள்ளிகளும் கூட பள்ளியில் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கியதோடு – வசதியில்லாத குழந்தைகள் தங்கிப் படிக்குமாறு மூன்று வேளை உணவும், தங்குமிடம் மற்றும் இன்ன பிற அடிப்படை வசதிகள் செய்து தந்ததையும் நாமறிகிறோம். சொல்லப் போனால், 1923ல் மதுரை சௌராஷ்டிரா பள்ளியில் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்ட பாங்கைக் கண்டு வியந்த அந்த நொடியில் தான் காமராசர் எம் மாநிலத்தில் இது போன்று எல்லாக் குழந்தைகளும் உணவு பெற வேண்டும் என்று உளமார எண்ணினார். இவ்வகையில் தொடர்ந்த அவரது சிந்தனை, 1960கள் வாக்கில் பள்ளி மதிய உணவுத் திட்டம் தமிழகத்தில் சிறப்பான முறையில் பரவலாக்கப்பட்டது.

தொடர்ந்த நாட்களில் மதிய உணவுத் திட்டம் அரசியலில் ஒரு முக்கியக் கவர்ச்சிப் பொருள் ஆனது. எம்ஜியார் இத்திட்டத்தை ஒரு அரசியல் மறு மலர்ச்சியாக வலுப்படுத்தினார் . தொடர்ந்து 1995ல் தேசிய மதிய உணவுத் திட்டம் அமுலானது. இதனை ஒட்டித் தொடர்ந்த கால கட்டத்தில், 1989ல் தமிழகத்தில் இன்னொரு அரசியல் கவர்ச்சியாக, ஆளுக்கொரு முட்டை நாளுக்கொரு முட்டை என்பதாகப் புரதப் புரட்சி – தொடர்ந்தது மதிய உணவு. நன்று. இன்று முட்டை உண்ணாதவர்களுக்கு வாழைப்பழம் தரும் ஏற்பாடும் உள்ளது. இதுவும் நன்று.

இவ்வாறு, மாநில வானிலையில், பல ஏற்ற இறக்கங்களுக்கு இடையிலேயும், விடப்படாமல் தமிழகத்தில் தொடரப்படும் மதிய உணவுத் திட்டம், வெகுவாகப் பாராட்டப் படவேண்டிய திட்டமாகும். இத்திட்டத்தில், ஊழல், திருட்டு, தரத்தில் குறைபாடு, சுகாதாரக் குறைவான நடைமுறைகள், குடிநீர் வழங்காமை அல்லது குடிநீர் பாதுகாப்பின்மை ஆகிய பல புகார்கள் இருப்பினும், ஒட்டு மொத்தமாகப் பார்க்கிற போது இந்தத் திட்டம், சற்றேறக் குறையப் பரவாயில்லை எனும்படியாகத் தான் போகிறது எனலாம்.

சொல்லப் போனால், அமெரிக்கப் பள்ளிகளில் உணவு வழங்கும் முறையில் கூடுதல் கவனம் செலுத்தப் பட்டது காமரராஜரின் மாடலைக் கண்ட பிறகுதான் என இங்குள்ள பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கூறுவதைக் காண்கிறோம். இவர்களின் கூற்றுக்கு ஆதாரமான தரவுகளை நான் தேடிய போது ஏதும் கிடைக்கவில்லை என்றாலும் – பல கல்வித் துறை அதிகாரிகள் இங்கு காமராஜரை நினைவு கூரும் போது, இது உண்மை என நம்பலாம்.

அமெரிக்காவைப் பொறுத்தவரை, 1800களிலேயே பள்ளிகளில் உணவு வழங்கும் முறை இருந்து வந்தது என்றாலும் அது சேவை அமைப்புக்களின் செயலாகவே இருந்து வந்தது. 1904 ல் ஹண்டர் எழுதிய “ஏழ்மை” எனும் புத்தகம் அமரிக்கக் கல்வி முறையில் ஒரு புதிய அத்தியாயம் எனலாம். உலகின் தலைமை எனும் மிதர்ப்பில் இருந்த ஒரு நாடு ஏழ்மை எனும் பிணியைப் பற்றிச் சிந்திக்குமாறு செய்த இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்கப் புத்தகம் அமரிக்க அதிபர்கள் மனதிலே நிலை பெற்றது. கருப்பினத் தலைவர்கள் தங்கள் இனக் குழந்தைகளின் முன்னேற்றம் கல்வியில் உள்ளது என்பதை உணர்ந்தவர்களாக இந்த இனம் மாட்டிக் கொண்டுள்ள ஏழ்மைச் சூழல் விடுபட அவர்களுக்குக் கல்வியும் உணவும் ஒருங்கே தேவை என்பதை உணர்கின்றனர். அவர்களது முயற்சியின் பயனாய் 1946ல் அமெரிக்காவில் தேசிய – பள்ளி உணவு சட்டமாக்கப்பட்டு நாடு முழுவதும் கட்டாயமாக்கப் படுகிறது.

இதனைத் தொடர்ந்து 1953 – 1961 காலகட்டத்தில் ஐசன்ஹோவர் அமரிக்காவின் 33ஆவது அதிபராகிறார். அப்போது அவர் அமெரிக்க தேசிய – பள்ளி உணவுச் சட்டத்தை வலுவாக்கிப் பரவலாக்க விழைகிறார். 1959 ஐசன்ஹோவர் இந்தியா வருகிறார். அவரது இந்திய விஜயத்தின் போது, சத்தியமூர்த்தி உள்ளிட்ட சில தமிழ்ப் பெரியவர்களைத் தொடர்பு கொண்டதாக அறிகிறோம். அப்போது, தமிழகப் பள்ளிகளில் வழங்கப்பட்ட மதிய உணவு முறையில் அவர் வெகு ஆர்வம் காட்டியதோடு – பல தகவல்களைத் திரட்டிச் சென்றதாகவும் அறிகிறோம்.

அமெரிக்கா திரும்பிய வேகத்தில், மடமடவென்று அமெரிக்க தேசியப் பள்ளி உணவுத் திட்டத்தை வெகு ஸ்திரமாய் வேரூன்றிய பெருமை அவரையே சாரும் என்றால் அந்த உத்வேகம் தந்த பெருமை தமிழகத்தையே சாரும்.

அமெரிக்காவில் பள்ளி உணவுத் திட்டம் ஸ்திரமான அதே காலகட்டத்தில்தான் தமிழகத்திலும் பள்ளி உணவுத் திட்டம் ஸ்திரமானது – பரவலானது என்பது குறிப்பிடத்தக்கது.

2001 ல் புகழ்பெற்ற வழக்கான சிவில் உரிமைகளுக்கான மக்கள் ஐக்கிய அமைப்பு இந்திய அரசுக்கு எதிராகத் தொடுத்த வழக்கில் (“People’s Union for Civil Liberties vs Union of India and Others, Writ Petition (Civil) No 196 of 2001”.) உச்ச நீதி மன்றம் கீழ்க்காணும் தீர்ப்பை வழங்கியது:

“மதிய உணவுத் திட்டத்தை அமுல் படுத்தி, ஆரம்பப் பள்ளிகளில், குறைந்த பட்சம் 3oo கலோரிகள் ஆற்றல் தருவதானதும் குறைந்த பட்சம் 8லிருந்து 12 கிராம் அளவு புரதம் இருப்பதுமான மதிய உணவை அரசு மற்றும் அரசு சார் பள்ளிகளில், ஆண்டொன்றுக்குக் குறைந்த பட்சம் 200 நாட்கள் வழங்க வேண்டும்.” (“implement the Mid-Day Meal Scheme by providing every child in every government and government assisted primary school with a prepared mid-day meal with a minimum content of 300 calories and 8-12 grams of protein each day of school for a minimum of 200 days.”)

இங்கு நாம் காண வேண்டிய முக்கிய விஷயங்கள் என்னவென்றால் நாட்டின் சட்ட வாக்கு மற்றும் சட்ட அமுல் வலிமை. அமரிக்காவில் தேசியப் பள்ளி உணவுத் திட்டம் எல்லாப் பள்ளிகளுக்கும் கட்டாயமாக்கப் படும்போது இங்கு இந்திய தேசியப் பள்ளி உணவுத் திட்டத்தில் அரசுப் பள்ளிகள் அதுவும் ஆரம்பப் பள்ளிகள் மட்டுமே சேர்க்கப் படுகின்றன. தனியார்ப் பள்ளிகளும், உயர் நிலைப் பள்ளிகளும் இதில் லாவகமாகத் தப்பிக்க விடுகின்றன என்பதே.

அது மட்டுமல்ல; தேசியச் சட்டம் என்று வந்து விட்டால் அதனை மாநிலங்கள் மதித்து அமுல் படுத்த வேண்டும். தேசியப் பள்ளி உணவுத் திட்டத்தை அமுல் படுத்தாத மாநிலம் எதுவும் அமெரிக்காவில் இல்லை. தன்னாட்சி என்ற பெயரில் எந்த ஒரு தனியார்ப் பள்ளியும் இந்தச் சட்டத்தைப் புறக்கணிக்க முடியாது.

ஆனால் நம் நிலையோ வேறானது. நாம் நமது சட்டத்தில் தனியார்ப் பள்ளிகளைக் கழற்றி விட்டு விட்டோம். கல்வியில் தனியாரை நுழைய விட்டு விட்டு, அவர்களை உணவு வழங்கும் பொறுப்பேற்காமல் தப்பிக்க விட்டிருக்கிறோம்.

அது மட்டுமல்ல. பல மாநிலங்களில், அரசுப் பள்ளிகளில் கூட முழு வீச்சான அளவில் தேசியப் பள்ளி உணவுத் திட்டம் தழுவப்படவில்லை. கீழ்க்காணும் படத்தைப் பாருங்கள். எத்தனை மாநிலங்கள் நமது தேசியப் பள்ளி உணவுத் திட்டத்தில் உண்மையில் ஆர்வம் காட்டுகின்றன என்று. (படத்திற்கு நன்றி: www.righttofoodindia.org).

ஒரு தேசத்தில் மாநிலங்களின் நிலைமை இவ்வாறு என்றால், நீங்களே பார்த்துக் கொள்ளலாம் நான் பொறுப்பில் எங்கு இருக்கிறோம் என்று.

1995ன் தேசிய மதிய உணவுத் திட்டம் மற்றும் 2001ன் உச்சநீதி மன்றத் தீர்ப்பு ஆகியவற்றைச் சிரத்தையாக எடுத்துக் கொள்ளாமலும், உதாசீனப் படுத்தியும் நடந்து கொள்ளுகிற மாநிலங்கள் உள்ள இந்தியாவில், ஒரு மாநிலம் அந்த நாள் முதல் இந்த நாள் வரை எதுவரினும் விடமாட்டேன் – எவர் வரினும் விடமாட்டேன் எனப் படிப்படியாய் வளர்ந்து வந்திருப்பது சிறப்பு.

தேசியப் பள்ளி உணவுத் திட்டம் முழுமையான அமுலில் இருக்கும் மாநிலங்களான கர்நாடகம், தமிழகம், குஜராத், இவற்றுள் கர்நாடகமும், குஜராத்தும். கர்நாடகமும் குஜராத்தும் தமிழகத்தை விடப் பல்லாற்றானும் சிறப்பாக, தேசியப் பள்ளி உணவுத் திட்டத்தைச் செவ்வனே செயல்படுத்தி வருகின்றன.

இஸ்கான் இயக்கமும், அட்சய பாத்திர திட்டமும் கர்நாடக வெற்றிக்குப் பின்னணி என்றால், குஜராத்தின் ஆலய தர்மங்கள் இம்மாநில தேசியப் பள்ளி உணவுத் திட்டத்தின் வெற்றி இரகசியம்.

தேசியப் பள்ளி உணவுத் திட்டத்தில் உலகுக்கே முன்னோடியான தமிழகம் மற்ற இரு மாநிலங்களுக்குச் சற்றும் சளைக்காத வகையில் திறம்பட இயங்க முடியும்.

கர்நாடகம் மற்றும் குஜராத்தில் தேசியப் பள்ளி உணவுத் திட்டம் அரசியல் புகாத – அரசியல்வாதிகள் தன் சாதனை என்று புளுகாத ஒரு திட்டமாக இருக்கிற காரணத்தாலும் ஆன்மீக ஒழுங்கு நிறைந்த நல்லற நிறுவனங்கள் அங்கு கடைமை உணர்வோடு இயங்குவதாலும் வெற்றி விழுக்காடு உயர்வான நிலையில் உள்ளது.

இத்தகையதொரு ஒழுங்கு இப்போது தமிழக அரசுப் பள்ளிகளில் இயங்கி வருகிற தேசியப் பள்ளி உணவுத் திட்டத்தின் செயல்பாட்டில் வர வேண்டும் என்பது நம் அவா. அது மட்டுமல்ல, ஏகப்பட்ட எண்ணிக்கையில் வளர்ந்து நிற்கிற தனியார்ப் பள்ளிகளையும் தேசியப் பள்ளி உணவுத் திட்டத்தில் பங்கேற்று பொறுப்பேற்று செயல்பட வேண்டும் என்பதும் அவசியம்.

(மேலும் பேசுவோம் )

படத்திற்கு நன்றி: http://www.frontlineonnet.com/fl2016/stories/20030815002208500.htm

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “செரியாத கல்வியின் சுமை-22

  1. ” 1959 ஐசன்ஹோவர் இந்தியா வருகிறார். அவரது இந்திய விஜயத்தின் போது, சத்தியமூர்த்தி உள்ளிட்ட சில தமிழ்ப் பெரியவர்களைத் தொடர்பு கொண்டதாக அறிகிறோம். அப்போது, தமிழகப் பள்ளிகளில் வழங்கப்பட்ட மதிய உணவு முறையில் அவர் வெகு ஆர்வம் காட்டியதோடு – பல தகவல்களைத் திரட்டிச் சென்றதாகவும் அறிகிறோம்”  இது குறித்து மேலும் அறிய விருப்பம். தர இயலுமா?

  2. தங்கள் வினாவிற்கு நன்றி.
    இங்கு நான் தந்திருக்கும் தகவல், முற்றிலும் இங்கு, கல்விப் பணியிலிருந்து  ஓய்வு பெற்ற இரு கல்வியாளர்களின் வாய் மொழி.  1960களில் அவர்கள் அமெரிக்க தேசிய பள்ளி உணவு திட்டத்தில் நேரடியாய் ஈடுபட்டவர்கள் என்பதால் எனக்குக் கிடைத்த இவர்களது வாய்மொழியைப் பதிவு செய்திருக்கிறேன். சத்யாமூர்த்தி என்ற சொல்லை இப்போது தனது  தொண்ணூறுகளில் இருக்கிற திருமதி லில்லி புயூஸ் கூறினார்.  
    பொதுவாக, காமராஜ் எனும் பெயர் இங்கு இன்று வயதில் மூத்த  அந்நாளைய அமெரிக்கப் பள்ளிக் கல்வியாளர்களுக்கு நன்றாகவே தெரிகிறது.  லில்லி புயூஸ் கூறுவது எந்த சத்யமூர்த்தி என்று தெரியவில்லை. 
    ஆனால் ஐசன்ஹோவர் இந்தியாவிலிருந்து திரும்பிய பிறகு, பள்ளிக் கல்வியில் – குறிப்பாக உணவு வழங்கும் முறையில் பல புது அணுகுமுறைகள் மேற்கொள்ளப் பட்டதாகவே பல அந்நாளைய கல்வியாளர்கள் கூறுகிறார்கள்.
    ஐசன்ஹோவர் இந்தியாவிலிருந்து திரும்பிய பிறகு பள்ளிக் கல்வி அதிகாரிகளுக்கு – தலைமை ஆசிரியர்களுக்கு பம்பரச் சுழற்சி தானாம்!
    அப்போது மாநாடுகள், பயிலரங்குகள், சிறப்புக் கூட்டங்கள் எனப் பல வகைகளில் கல்வி அதிகாரிகளுக்கு நடந்த வலிமையான பயிற்சிகளில் பள்ளியில் மாணவர்களுக்கு அளிக்கப் படவேண்டிய உணவு மட்டுமே முக்கியக் கருப்பொருளாக அமைந்தது என்கிறார்கள்.
    “பள்ளியில் உணவு” பற்றிய ஒரு மாநாட்டில் ஒரு கல்வி அமைச்சக அதிகாரியின்  உரையில்  (presentation) இந்தியாவில் – மதராசில் – நடக்கும் மதிய உணவு திட்டம் பற்றியும் – இதற்காக வித்திட்டவர்கள் – முயன்றவர்கள் –  அங்கு வழங்கப்படும் சமைத்த உணவின், ஊட்டச்சத்தின் நிறைவு ஆகியன பற்றி  படக் காட்சியாகக் காட்டப்பட்டது என முதியவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் நெல்சன் கூறினார். இதில், காமராஜ், காஞ்சி எஸ் எஸ் கேவி பள்ளி, தீனபந்து, சத்யாமூர்த்தி, காந்தி கிராமம், போன்ற வார்த்தைகள் பிரயோகிக்கப்பட்டதும் அவர் நினைவில் இருப்பதாகக் கூறினார்.
    நெல்சன் அவர்களின் கூற்றுப் படி  1950 களில் அமெரிக்காவில், பள்ளியில் மாணவர்களுக்கு உணவு தருவதில் ஏகப்பட்ட குழப்பங்கள் இருந்தனவாம்.  என்ன உணவு தருவது எப்படித் தருவது எனபதில் தொடங்கி மேலமட்ட நிர்வாகக் குளறுபடிகள், புகார்கள் ஆகிய பல பிரச்சினைகள்  எழுந்தனவாம். பெரும்பாலான பள்ளிகளில் குழந்தைகள் உணவு உண்ணவே இடமில்லையாம். கல்வி மாவட்டம் (school district) ஒன்றில் ஒரு இடத்திலிருந்து உணவு அனைத்துப் பள்ளிகளுக்கும் வண்டிகளில் எடுத்துச் செல்லப்பட்டு விநியோகிக்கப்பட்டதாம்!
    “லில்லி புயூஸ்  கூறுகிறார்:  “1950 களில் பள்ளிகளில் உணவகம் இல்லை. தேசிய மதிய உணவு சட்டத்தை மதிக்கவேண்டி –காலி  இடங்களில் மடக்கு மேஜைகள் – மடக்கு நாற்காலிகள் போட்டு உணவு உண்ண வசதி ஏற்படுத்தினார்கள்!” . (“Schools were not built with cafeterias or lunch rooms.  Some large spaces served as temporary dining.”)
    இதனைச் செய்யவும்  இடம் இல்லாத பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மாவட்ட மையத்திலிருந்து வரும் உணவை ஏற்க மறுத்ததோடு, மாணவர்களே தாம் உணவைக் கொண்டு வந்தாலும் அவர்கள் உணவு உண்ணக்கூடாது என்று கட்டளையிட்டனராம்.
    நெல்சன் தொடர்ந்தார்: 
    “அப்படியே மாவட்ட மையத்திலிருந்து, உணவு வந்து அவ்வுணவு அமெரிக்கப் பள்ளிகளில் வழங்கப்பட்டது என்றாலும் அவ்வாறு வழங்கப்பட உணவைக் குழந்தைகள உண்ணவே இல்லை! அதன் தரம், பதம், சூடு ஆகியனவற்றின் நிலைமை அப்படி!! சமைக்காத உணவுகளே அதிகம்! இதுவும் ஒரு காரணம்!”  
    இந்நிலையில் தான் ஐசன்ஹோவரின் இந்திய விஜயம் தேதியானது என்றவாறு ஐசன்ஹோவரின் இந்திய விஜயத்திற்குப் பிறகு, அமெரிக்காவில் நடந்த பள்ளி உணவு மாநாட்டை மீண்டும் நினைவு கூறும் லில்லி வாயிலாக நான் அறிந்தது:
    Cooked food – cooked food!  என்று அந்தப் பேச்சாளர் வாயாரக் கூவினாராம்! அரங்கத்தில் கைத்தட்டல் அடங்க வெகு நேரமானதாம்!!  
    “அவர் இந்தியாவில் – மதராஸ் மாநிலத்தில், சமைக்கப்பட்ட உணவு, சுடச் சுட, குழந்தைகளுக்குப் பரிமாறப் பட்டு –பரிமாறப் பட்ட உணவு முன்னே இருக்க – கண்மூடிப் பிரார்த்த்தனை  செய்து விட்டு – பிரார்த்தனைக்குப் பிறகு குழந்தைகள் உணவை ஆர்வமாய் உண்ட அந்த முக மலர்ச்சியை அப்படக் காட்சியில் அந்த அதிகாரி காட்டினார். அந்த காட்சி இன்னமும் என் கண்ணில் நிற்கிறது!”
    ஐசன்ஹோவரின் இந்திய விஜயத்திற்குப் பிறகு, நடந்த பொதுக் கருத்து வோட்டுப் பதிவில்  பள்ளிகளில் குழந்தைகளுக்கு “சமைத்த உணவுக்கே” மக்கள் அனைவரும் வாக்களித்தனராம்.  
    ஐசன்ஹோவரின் இந்திய விஜயத்திற்குப் பிறகு, அமெரிக்காவில் வெளியிடப்பட்ட ஆணையை, பெரியவர் நெல்சன் காட்டினார்:  
    “Each recipe had to use USDA commodities, contribute to Type A lunch requirements of a protein-rich food, vegetables, and milk, combine well with other menu items and be simple and economical to prepare.”
    இதில் Type A lunch முதல் தர உணவு.  ஒரு குழந்தைக்கான (சராசரியாக 10-12 வயது) ஒரு நாளைக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்களின் அளவில் மூன்றில் ஒரு பங்கிலிருந்து அரைபங்கு வரை குறைந்த பட்ச ஊட்டச்சத்து இருக்கவேண்டிய உணவு.
    அமெரிக்க அரசு வெளியிட்ட இந்த ஆணையின் வாசகம் கூர்ந்து கவனிக்கத் தக்கது. “எளிமையான முறையிலும் – பொருளாதாரச் சிக்கனத்தோடும், தயாரிக்கக் கூடியதான உணவு”   
    “இந்தியாவில் தான் நேரில் பார்த்த  விஷயங்கள் – –மற்றும் திரட்டிய தகவல்கள் ஆகியவற்றின்  அடிப்படையிலே ஐசன்ஹோவர், பள்ளி உணவு விஷயத்தில் நேரடியாகவே ஈடுபட்டு – பல புதிய மாற்றங்களை ஏற்படுத்தினார்!” என லில்லி – நெல்சன் ஆகியோரின் வாய்மொழி கூறுகிறது!
    இந்தியாவிற்கு வருகை புரிந்த முதல் அமெரிக்க அதிபர் ஐசன்ஹோவர் 1959 டிசம்பர் 9  லிருந்து 13 வரை இந்தியாவில் இருந்திருக்கிறார் என்பதும்  அமரிக்க மக்களிடையே பிரபலமானவர் இவர் என்பதும் உண்மை என்பதால் – லில்லி மற்றும் நெல்சன் ஆகிய கல்வியாளர்கள் கூற்றுப் படி  ஐசன்ஹோவர் கூட்டிச் சென்ற உயர்நிலைக் குழுவில் உயர்மட்டக் கல்வி அதிகாரிகளும் இடம் பெற்றிருந்தனர் என்பதால் –  ஐசன்ஹோவர், தனது இந்தியப் பயணத்தின் போது தன் நாட்டின் முக்கியப் பிரச்சனையாய்க் கொதித்துக் கொண்டிருந்த பள்ளி உணவுப் பிரச்சனைக்கு இங்கே- தமிழகத்தில்  நல்லதொரு மாடலைக் கண்டிருக்கிறார் என்று கொள்ள முடிகிறது. அந்நாளில், பள்ளியில் மாணவர்களுக்கு உணவு வழங்கி போஷித்த – போதித்த ஒரே மாநிலம் நமது மாநிலம் மட்டுமே!
    “வயிற்றுக்குச் சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்!
    பயிற்றுப் பலகல்வி தனது இந்தப் பாரை உயர்த்திடவேண்டும்!”

    என்ற மாண்பு கொண்டவர்களாயிருந்தவர்கள்  நாமே!  
    ஐசன்ஹோவர் தமிழகத்துக்கு வரவில்லை எனினும் சர்வபள்ளி மற்றும் ஐயங்கார் – நேரு – ஆகியோரின் மூலம் தமிழகப் பெரியவர்களை நேரடியாகவோ, அல்லது உயர்நிலைக் குழு மூலமோ நேரிலோ அல்லது கடிதம் மூலமாகவோ தொடர்பு கொண்டிருக்கக் கூடும்.  அமெரிக்க அதிபரைக் காண நம் பெரியவர்கள் தில்லிக்கும் சென்றிருக்கலாம்.
    நான் கட்டுரையில் சொல்லியுள்ளது போல: 
    “சொல்லப் போனால், அமெரிக்கப் பள்ளிகளில் உணவு வழங்கும் முறையில் கூடுதல் கவனம் செலுத்தப் பட்டது காமரராஜரின் மாடலைக் கண்ட பிறகுதான் என இங்குள்ள பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கூறுவதைக் காண்கிறோம். இவர்களின் கூற்றுக்கு ஆதாரமான தரவுகளை  நான் தேடிய போது ஏதும் கிடைக்கவில்லை என்றாலும் – பல கல்வித் துறை அதிகாரிகள் இங்கு காமராஜரை நினைவு கூறும் போது, இது உண்மை என நம்பலாம்.”   
     எது எப்படியாயினும்: “முதல் தரமான உணவை நம் குழந்தைகளுக்கு வழங்கிய பெருமை நமக்கு இருந்தது என்பதை மறவாதீர்கள்! 

  3. தகவல் அறிந்து கொள்ளும் ஆர்வத்துடனேயே இந்த கேள்வியைக் கேட்டேன். என்னுடைய வினாவிற்கு, இவ்வளவு விரிவான பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி. 

  4. மிக அற்புதமான, இதுவரை நான் அரியாத தகவல், பெருமையாயிருக்கிறது- மிக்க நன்றி அவ்வை மகள் அவர்களே… கேட்ட இளங்கோ அவர்களுக்கும் நன்றி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *