மலர் சபா

புகார்க்காண்டம் – 05 இந்திரவிழவு ஊர் எடுத்த காதை

சூரியன் உதித்தல்

அலைகள் உடைய
கடல்நீரை ஆடையாகக் கொண்ட,
மலைகளை மார்புகளாகவும்
அம்மார்புகள் மீது தவழும்
முத்து வடங்களாக
மலைகளில் பாயும்
ஆறுகளையும் கொண்ட,
மேகம் அதனைக்
கூந்தலாகக் கொண்ட,
அகன்ற அல்குல் போன்ற
நிலமகளின் உடம்பினை
மறைத்து நின்ற
இருளென்னும் போர்வையைப்
பெரிய உதயகிரி
எனும் மலைமீதினில் உதித்த சூரியன்
விலக்கியே நின்றிட்டான்.

அக்கதிரவனின் விரிகதிர்கள்
புகார் நகரம் முழுதும் படிந்தது;
பொழுதும் புலர்ந்திட்டது.

(புகார்நகரம் மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம் என்ற இருபிரிவுகளாக இருந்தது; அதற்கு நடுவே நாள் அங்காடி இருந்தது. மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம் காட்சிகள் சிலப்பதிகாரத்தில் விவரிக்கப்படுகின்றன.)

மருவூர்ப் பாக்கம் – பகுதி-1

ஓடு இட்டு வேய்ந்திடாத மாடி வீடும்
பண்டக சாலையும்
மான்கண் போன்ற விசாலமான காற்றோட்டமிக்க
சாளரங்களையுடைய மாளிகைகளும் இருந்தன.

மேற்கொண்டு காட்சிகளைக்
காண இயலாதனவாய்க்
கண்டவர் தம் கண்களைத்
தம்பால் தடுத்து நிறுத்தவல்ல,
பயனுள்ள பொருட்கள் நிறைந்த
யவனர் இருப்பிடங்களும்
துறைமுகப் பகுதிகளில் இருந்தன.

பொருள் ஈட்டவென்று
கருங்கடலில் மரக்கலம் செலுத்தி,
தம்நாடு விட்டுப் புலம்பெயர்ந்து வந்த
பிற இடத்து மக்கள் யாவரும்
ஒரே இடத்தில் ஒரே தேசத்தாரைப் போலக்
கூடி வாழும் பகுதிகள் பலவும்
மருவூர்ப்பாக்கக் கடற்கரைப் பகுதிகளில் இருந்தன.

வண்ணக் குழம்பு சுண்ணப் பொடி
குளிர்விக்கும் சாந்துக்கலவைகள்
நறுமண மலர்கள்
அகில் போன்ற புகைத்தலுக்கான பொருட்கள்
சந்தனம் போன்ற வாசனைக்கான பொருட்கள்
இவையனைத்தும் விற்போர்
திரிகின்றனவாய் நகர வீதிகள் இருந்தன.

பட்டுநூல் எலிமயிர் பருத்தி இவற்றினால்
நுண்ணிய வேலைப்பாடுகள் அமைந்த
ஆடைகள் நெய்யும்
சாலியர் இருப்பிடங்களும் இருந்தன.

அளந்து மதிப்பிட இயலாவண்னம்
மாசறு பட்டு அகில் சந்தனம்
பவளம் முத்து நவமணிகள் பொன்
இன்னும் அளவற்ற பலவளங்களும்
அகன்ற வீதிகளில்
குவிந்தேதான் இருந்தன.

அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 1 – 20
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram10.html

படத்துக்கு நன்றி:
http://www.jewelinfo4u.com/Astro-gemology_.aspx

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *