ராமஸ்வாமி சம்பத்

“குமுதா, உன்னைத் தன் வாழ்க்கைத் துணையாக ஆக்கிக் கொள்ளும் விருப்பத்தோடு இங்கு ஒரு இளைஞன் வந்திருக்கிறான். அவன் பெயர் முல்லைத்தேவன். அவனோடு உரையாடி அவன் உனக்கு ஏற்றவனா என்பதனை ஆராய்ந்து உன் முடிவைத் தெரிவிப்பாயாக,” என்று மணிவண்ண நம்பி தன் மகளிடம் கூறினார்.

“அப்படியே அப்பா” என்று பதில் உரைத்த குமுதவல்லி ஒருமுறை முல்லைத்தேவனை ஓரப்பார்வையால் கண்டாள். பிறகு இருவரும் தோட்டத்திற்குச் சென்றனர்.

அப்பூந்தோட்டத்தில் அவர்கள் தனிமையில் ஒரு மரத்தடியில் நின்று கொண்டு உரையாட முயன்றனர். யார் முதலில் பேசுவது என்று அவர்களால் தீர்மானிக்க முடியவில்லை. ஆனால் அவர்கள் நான்கு கண்களும் ஊஞ்சலாடிய வண்ணம் இருந்தன.

அவனுக்கு இப்படிப்பட்ட அனுபவம் புதிது. என்ன பேசுவது என்று தெரியவில்லை. எப்படிக் குறிப்பறிவது என்றும் புரியவில்லை.

யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்” என்ற திருக்குறள் அவன் நினைவுக்கு வந்தது.

காலம் அவர்களுக்குச் சற்று நின்று விட்டது போல் தோன்றினாலும், ஞாயிறு தன் கடமை உணர்வோடு மலைவாயிலில் வீழ முற்பட்டான். இனியும் தாமதம் செய்யக்கூடாது என்ற முடிவுக்கு வந்த முல்லைத்தேவன், மெள்ளப் பேச ஆரம்பித்தான்.

“நானும் தங்களைக் குமுதா என்று அழைக்கலாமா?”

பெண்மைக்கு அணிகலனான நாணத்தால் அவள் பதிலேதும் கூறவில்லை. அவளது வலது கால் கட்டைவிரல் நிலத்தில் வட்டம் வரைந்த வண்ணம் இருந்தது.

“என் ஆசையைத் தங்கள் தந்தையாரிடம் கூறி விட்டேன். இனி தங்கள் விருப்பத்தை அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்.”

அதற்கு அத்தேன்மொழியாள் கூறிய பதில் அவனில் ஒரு உள்ளக் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. “குமுதா என்றே என்னை அழைக்கலாம். ஆனால் வயதில் சிறிய என்னை ‘தங்கள்’ என்று மரியாதை செய்ய வேண்டாம்” என்றாள்.

முல்லைத்தேவனுக்குக் கொஞ்சம் தெம்பு வந்தது. “அப்படியே குமுதா” என்றான்.

“ஐயா, என் தந்தையார் கூறியதுபோல் நான் சில கோட்பாடுகளைக் கொண்டுள்ளேன். என் கனவு நாயகனை ஒரு வைணவச் செம்மலாகவே கருதுகிறேன். என்னை மணம் புரிய விழையும் தாங்கள் இதற்கு ஒப்புவீர்களா? சிறுவயதிலிருந்தே திருமால் என் இஷ்டதெய்வம். ’மாலன்பர் அல்லாருக்கு வாழ்க்கைப்படேன்’ என்ற ஒரு மனப்பான்மை என் உள்ளத்தில் வேரூன்றி விட்டது. என்னால் அதனை மாற்றிக்கொள்ள இயலாது. உங்கள் உயர்நோக்கு உங்களை வைணவத்தைத் தழுவ வைத்தால் என்னைவிட பாக்கியசாலி வேறு எவரும் இருக்க முடியாது. ஏனெனில் உங்களைத் தாடாளன் கோவிலில் கண்டது முதல் என்மனம் அலைபாய்ந்து கொண்டிருக்கிறது. ஒன்று மட்டும் நிச்சயமாகக் கூற முடியும். ஒருவேளை தாங்கள் இதற்கு ஒப்பாவிட்டால் இந்தப் பேதை ஒரு மால் அடிமையாக இருப்பாளே தவிர இன்னொரு வாலிபனை ஏறெடுத்தும் பார்க்க மாட்டாள்.”

முல்லைத்தேவனுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி. குமுதாவும் தன்னைத் தாடாளன் கோவிலில் நோக்கியிருக்கிறாள் என்ற செய்தியும் அவளும் தன்னை விரும்புகிறாள் என்ற உண்மையும் அவனைக் கிறங்க வைத்தன. அவனை அறியாமல் ஏதோ ஒரு உத்வேகத்தில் அவள் வெண்டைப்பிஞ்சு விரல்களைப் பற்றினான். நாணத்தில் அவள் கன்னங்களில் செவ்வரி படர்ந்தாலும், அவள் அவன் கைகளினின்று தன்னை விடுவித்துக்கொள்ள முயலவில்லை.

“அந்நாளில் கலியனுக்கு (திருமங்கை மன்னனுக்கு) அக்குமுதவல்லி இட்ட கட்டளைபோல் நீயும் எனக்கு இந்த உத்திரவை இடுகிறாய் போலும். உன் விருப்பம்போல் உன்னைத் தழுவும்முன் வைணவத்தைத் தழுவுகிறேன். எனக்கு ஒரு அவகாசம் கொடு. என் சொந்த ஊருக்குச் சென்று என் தாய்மாமனிடம் இந்த விஷயத்தைக் கூறிவிட்டு வந்து உன்னை வைணவ முறைப்படி மணம் புரிந்து கொள்கிறேன். ஏனெனில் இளம் பருவத்திலேயே தாய்தந்தையரை இழந்து விட்ட எனக்கு எல்லாம் என் தாய்மாமன்தான்.”

“ஓருவேளை உங்கள் தாய்மாமன் ஒப்புக்கொள்ள மறுத்து விட்டால்…”

“முல்லைத்தேவனும் உன்போல் தனி மரமாகி வேறு எந்த நங்கையையும் நோக்க மாட்டான்.”

குமுதவல்லிக்கு வியப்பு மேலிட்டது. ’எவ்வளவு பரந்த மனப்பாங்கு இவர்க்கு! எனக்காக எல்லாவற்றையும் துறக்கச் சித்தமாக இருக்கிறாரே’ என்று பெருமிதம் அடைந்தாள்.

“ஒரு ஐயம். அதனை அகற்றுவீர்களா? ‘முல்லை’ என்பது பெண்களுக்கு உரிய பெயர் அல்லவா? தங்களுக்கு எப்படி…..”

“அதுவா? என்னை ஈன்ற அன்னைக்கு எனக்கு முன் பலமுறை கருத்தங்காமல் போய் விட்டதாம். குடந்தைநகர் அருகில் உள்ள திருக்கருகாவூர் என்ற தலத்தில் உறையும் கருகாத்த நாயகி அம்மனை வேண்டிக்கொண்டு அவள் அருளால் பிறந்த எனக்கு அத்தேவியின் நாயகனான முல்லைவன நாதரின் திருப்பெயர் அடிப்படையில் முல்லைத்தேவன் என நாமகரணம் செய்தனர்.”

“அப்படியா? இன்னொரு விஷயம். உங்களைப்போல் அன்னையைச் சிறு வயதிலேயே பறிகொடுத்து விட்ட எனக்கு தாய் தந்தை எல்லாம் என் திருத்தகப்பனாரே. ஆகையால் நம் திருமணத்திற்கு பிறகு அவரும் நம்மோடு இருக்க வேண்டும். இதற்கும் தங்கள் ஒப்புதலை வேண்டுகிறேன்.”

“அப்படியே ஆகட்டும்” என்ற முல்லைத்தேவன் இளநகையுடன் அவளிடம் கூறலுற்றான்: “உன் தந்தையாரிடம் என் வரையில் ஒரு கட்டாயமும் இருக்காது என்று சொன்னேன். ஆனால் நீ என்னைக் கட்டாயப்படுத்தி விட்டாய். ஒரு அழகிக்காக ஒரு ஆண்மகன் தழைந்து போவது உலகின் நியதி அல்லவா?”

தன்னை அழகியென்று அவன் வர்ணனை செய்தது அவள் செந்நுதலை மேலும் சிவக்க வைத்தது.

“போதும் உங்கள் பிதற்றல். பெண்களை இப்படிப் பேசி மயங்க வைப்பது ஆண்களுக்கு இயல்புதானே” என்று மொழிந்த குமுதாவை அப்படியே வாரி அணைக்க முற்பட்ட தன் மனத்தை முல்லைத்தேவன் கட்டுப்படுத்திக் கொண்டான்.

’முதலில் வைணவத்தைத் தழுவுவோம், பின்னர் பார்ப்போம்’ என்று சமாதானம் செய்துகொண்டான்.

இப்படி இருவரும் தங்களது ஒருமித்த மனப்போக்கினை உணர்ந்து கர்வம் கொண்டு, மணிவண்ண நம்பியிடம் தங்கள் முடிவினைக் கூறினர். அவர் இருவருக்கும் தன் ஆசிகளை நல்கினார். அதன்பின் அவர்களிடம் அவன் பிரியாவிடை பெற்றுக்கொண்டு திருமுல்லைவாயிலுக்கு விரைந்தான்.

முல்லைத்தேவன் மாமனான தாயுமானவர் ஒரு சிவநேயச் செல்வர். தினமும் திருப்பதியம் பாராயணம் செய்பவர். பிள்ளைப்பேறற்ற அவரும் மனைவி மட்டுவார்குழலியும் அவனைத் தங்கள் வாரிசு போலவே வளர்த்தனர்.

அரசச்சேவையில் நற்பெயரோடு விளங்கும் அவனுக்கு விரைவில் திருமணம் செய்யவேண்டும் என்ற எண்ணம் கொஞ்ச காலமாகவே அவர்களுக்கு இருந்து வந்தது. ஆனால் அடிக்கடி அலுவலில் வெகுவாக ஆழ்ந்துபோய் அவன் பிடி கொடுக்காமல் அந்தப் பேச்சினையே தவிர்த்து வந்தான். அவனை எவ்வாறு வழிக்குக் கொண்டு வருவது என்ற ஆலோசனையில் இருவரும் ஈடுபட்டிருந்தனர்.

இத்தருணத்தில் முல்லைத்தேவன் வந்து தன் விருப்பத்தை அவர்களிடம் கூறியபோது அவர்கள் மிக்க மகிழ்ச்சி கொண்டனர்.

“நீ மணம் புரிய விரும்புகிறாய் என்பதே எங்களுக்கு மட்டற்ற ஆநந்தத்தை அளிக்கிறது. குமுதவல்லி உனக்கு ஏற்ற வாழ்க்கைத்துணைவியாக இருப்பாள் என்று நீ நினைத்தால் அவள் கோரியபடியே செய். இந்நாள்வரை திருமாலை திரிபுராந்தகனில் கண்டாய். இனி நாரணனில் நாகாபரணனைக் காண விழைகிறாய். இரண்டும் ஒன்றான உருவமற்ற பெயரற்ற குணங்களற்ற பரம்பொருளின் வடிவங்கள்தானே,” என்றார் தாயுமானவர்.

தாய்மாமனின் ஒப்புதலும் அதனை ஒட்டிய அருமையான விளக்கமும் முல்லைத்தேவனைப் புளகாங்கிதம் அடையச்செய்தது. ‘இப்படிப்பட்ட சமத்துவக் கோட்பாடு எல்லோருக்கும் இருந்தால் சமயப்பிணக்கு என்ற ஒன்று ஏற்படுமா?’ என்று எண்ணியபடி அவன் மாமனையும் மாமியையும் வணங்கி விடைபெற்றுக்கொண்டு திருவரங்கத்திற்குப் புறப்பட்டான்.

(தொடரும்) 

படத்திற்கு நன்றி:http://mugilankavithaigal.blogspot.in/2010/04/blog-post_29.html

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “உறவேல் ஒழிக்க ஒழியாது (பகுதி-6)

  1.  //திருமாலை திரிபுராந்தகனில் கண்டாய். இனி நாரணனில் நாகாபரணனைக் காண விழைகிறாய். இரண்டும் ஒன்றான உருவமற்ற பெயரற்ற குணங்களற்ற பரம்பொருளின் வடிவங்கள்தானே,//

    இந்தப் பரந்த மனப்பாங்கு அனைவருக்கும் வரப் பிரார்த்திக்கிறேன். 

Leave a Reply to அண்ணாகண்ணன்

Your email address will not be published. Required fields are marked *