சென்ற வார வல்லமையாளர் விருது!
(ஜூலை 09, 2012 ~ ஜூலை 15, 2012)

இன்னம்பூரான்
16 07 2012

படைப்பாற்றல் என்ற சொல்லைக் காணும்போது எனக்கு சில ஐயங்கள் எழும். எந்த ஆற்றல் ‘…பனிவார் உண்கணும் பசந்த தோளும்…’(‘பிரிவாற்றாமையால் அழுது நீர் உகுக்கின்ற மையுண்ட கண்களும் பசலை தோய்ந்த தோளும்..’: அகநானூறு 359) என்று பாங்கி தலைமகளிடம் சொல்லத்தொடங்கியதாக மாமூலனாரை எழுத வைத்தது?
எந்த ஆற்றல் “கண்டு அறியாதன கண்ணில் காணா
நீல மாக்கடல் நெட்டிடை அன்றியும்
காலை ஞாயிறு கதிர் விரித்து முளைப்ப”

என்று சீத்தலை சாத்தனாரை மணிமேகலையில் எழுத வைத்தது?

மேலும் சொல்லப்போனால், எந்த ஆற்றல் வந்து முனைவர் ராஜத்தை அதற்கு ‘இதுவரை தான் பார்த்து அறியாதவற்றைப் பார்க்கிறாள். பெரிதாய் விரிந்து கிடக்கிற நீலக் கடல் முழுவதும் தன் கதிர்களை விரித்துக் கொண்டு கதிரவன் முளைக்கிறான்.’ என்று, யாவரும் புரிந்து கொள்கிறமாதிரி, சுருக்கமான பொருள் தர வைத்தது?

எந்த ஆற்றல், அவரை, ஆய்வின் உச்சகட்டமாக ‘மரம்பயில் கூகையை கோட்டான் என்றலும்’ என்ற தொல்காப்பியரின் மரபியல்- 68 ஐ எடுத்துக்காட்டாகக் கூறி, ‘கோட்டான்’ என்ற சொல் சங்க இலக்கியத்தில் காணாவிடினும், இன்றும் அது வழக்கில் இருப்பதைச் சுட்டி, வியக்கவைக்கிறது? (வையை 2: பக்கம் 28)

எந்த ஆற்றல் கலாநிதி க.கைலாசபதி அவர்களை நந்தனின் கதை வளர்ந்த விதத்தை ஒப்பியல் செய்ய வகை வகுத்தது? எந்த ஆற்றல் தி.ஜானகிராமனை மென்மையான உணர்வுகளை ‘மோகமுள்ளாக’ நம் மனதில் தைக்க வைத்தது? இதையெல்லாம் பிறகு பார்க்கலாம். மஹாகவி பாரதியாரின் பன்முக ஆற்றல் தான் என்ன? படித்துக் கரைத்து மேதாவியாக ஆன பிறகு தான் அமரகாவியங்கள் படைத்தாரா, கவியரசர் கண்ணதாசன்? அல்லது முற்றும் படித்துணர்ந்ததின் பயனாகத்தான் ‘சுஜாதா’ என்ற ரங்கராஜனால் ‘ஒருமாதிரியான’ இலக்கியங்கள் படைக்க முடிந்ததா?

அன்றாடம் நூலகங்கள் செல்லும் எனக்கு. அந்த வழக்கம் இதற்கெல்லாம் விடை தேட உதவும் என்பதும், சுய ஆற்றலை வளர்க்கும் என்பதும், அனுபவம் அளித்த படிப்பினை. இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும், ஆண்ட்ரூ கார்னீகி போன்ற கொடை வள்ளல்களும், அரசும், தாராளமாக செலவழித்து, மக்கள் மன்றங்களாக, நூலகங்களை அமைப்பதைக் காண்கிறோம். பல நிகழ்வுகள், பட்டி மன்றங்கள், ஆலோசனை மையங்கள், கல்வி மையங்கள், அவற்றின் உள்ளே கிளை மையங்களாக பணி புரிகின்றன. செவி சாய்ப்போர் இருந்தால், எனக்கு அங்கு தமிழ் பாடமெடுக்க, இடம் தருவார்கள். கேட்ட நூலை தருவித்துத் தருகிறார்கள். நான் சென்னையிலிருந்த போது, கன்னிமரா நூலகத்தில், இந்த அரசியல் தலைவன் கேட்பார், அந்த புண்ணாக்குக் கேட்பார்கள் என்று நொண்டிச்சாக்குக் கூறி, நல்ல/புதிய நூல்களை, அதிகார இறுமாப்புடன், ஒளித்து வைப்பதைக் கண்டு வருந்தினேன். வரிப்பணத்தில் நடக்கும் ( அல்ல; ஊர்ந்து வரும்) மத்திய நூலகம் பேட்டை எல்லை வகுத்து, விரட்டுகிறது. பள்ளிக்கு கணினி தானம் செய்தால், அதை ‘கட்டிய பொண்டாட்டியை போல்’ அணைத்து வைத்துக்கொள்கிறார், தலைமை ஆசிரியர்! பூட்டு வேறே! அவமானம். நூலகம் இருந்தால் மட்டும் போதாது. அவை கனிவுடன் நூல்களை இரவல் கொடுக்கவேண்டும்; வெறும் கிட்டங்கிகளாகவோ, குப்பைக்கூடையாகவோ இருக்கலாகாது .

‘நல்ல எழுத்தாளர்கள் எழுதிய நூல்களுக்கு இன்றும் பற்றாக்குறை இருப்பதாக’ இந்த வார வல்லமை இதழில் ‘நல்வாழ்க்கை வாழ ‘வழிகாட்டிகள்’ என்ற நீண்ட தொடர் கட்டுரையின் 13வது தொடரில், நண்பர் பெருவை பார்த்தசாரதி சொல்லியிருப்பதை, இந்தப் பின்னணியிலும் பார்க்கவேண்டும். பாகனேரி என்ற ஊரில் இருந்த ஒரு வள்ளலின் நூலகத்தின் புத்தகங்கள் குப்பையில் கிடந்தன. ஏதோ மிஞ்சியதை அரசு சென்னைக்குக் கொண்டு வந்ததாம். மறைமலை அடிகளின் நூலகத்தில் வேறெங்கும் காணக்கிடைக்கா அரிய நூல்கள். ஆனால், அங்கும், இங்கும் சிதறியபடி. இப்போது அரசு நூலகத்தில், மிஞ்சியதை பார்க்கலாம். நல்ல வேளை. ரோஜா முத்தையா அவர்களின் பொக்கிஷ நூலகத்தை ஷிகாகோ பல்கலைக்கழகம், சென்னையில் ஆய்வு மையமாக்கியது. நன்கு பாதுகாக்கப்பட்டாலும், உ.வே.சா. நூலகம் பெரும்பாலோர்க்கு எட்டாக்கனி. எமது புதுக்கோட்டையில், நண்பர் ‘ஞானாலயா‘ கிருஷ்ணமூர்த்தியும் அவரது மனைவி டொரதியும் அரும்பாடு பட்டு நூல்களை சேகரம் செய்கிறார்கள். விருத்தாசலத்திலும் அப்படியே. படிப்பதையும், எழுதுவதையும் பற்றி. பெருவையாரின் வியாசத்தின் தொடராக, விவரமாக எழுத விருப்பம். அவர் எழுதுவதோ, அருமையான தொடர். தெளிவான கருத்துக்கள், மென்மையாக தட்டி எழுப்பும் விழிப்புணர்ச்சியையும், ஆர்வத்தையும் தூண்டும் சொற்கலவைகள், அடக்கமான வெளிப்பாடு, சங்கிலித்தொடரமைப்பு, பகிர்ந்துகொள்ளும் தன்மை, எனக்குப் பிடித்த வரலாற்று அணுகுமுறை. அவரே தொடரட்டும். அவர் நூலக வல்லுனர் சீர்காழி ரங்கநாதன் அவர்களை பற்றி எழுதியது, எனக்குத் திருப்தி. அவரைப் பற்றி நான் எழுதிய ‘அன்றொரு நாள்’ கட்டுரையை ஆர்வத்துடன், பி.கு.இல் இணைத்துள்ளேன். இந்த வார வல்லமையாளர் விருதை, ‘நல்வாழ்க்கை வாழ ‘வழிகாட்டிகள்’ என்ற நீண்ட தொடர் கட்டுரையின் 13வது தொடரை எழுதிய நண்பர் பெருவை பார்த்தசாரதிக்கு அளிப்பதில் எனக்கு பேரானந்தம்.

சற்றே பொறும். ஒரு விசேஷ பிரகடனம். இன்னம்பூரான் விருது என்று ஒன்றை வல்லமையின் சார்பில், ஒரு கூடுதல் வாழ்த்தாக, தாரை தம்பட்டத்துடன் பிரஸ்தாபிக்க, எனக்கு ஒரு சலுகை உண்டு என நினைக்கிறேன். அப்படி இல்லை எனில், அதை உரிமையாக எடுத்துக்கொள்கிறேன். பின்ன என்ன சார்? வல்லமை குழுவினர் வருங்காலத்தில் எளிதில் வழங்கமுடியாத விருதை, ‘காற்றுள்ள போதே தூற்றிக்கொள்‘ என்ற மரபுக்கிணங்க…! சற்றே பொறும்.
விழுந்து புரண்டு ‘திவாகரின்’ சுடரால் தகிக்கப்பட்டாலும், இன்னல் காணாத பக்தன், உள்ளத்தில் உறையும் நற்றாயாகிய தேவியை வணங்குதலை,

…உள்ளத்தினுள்ளே உறுதியாய் நீஇருக்க
பள்ளத்தில் விழுந்தாலும் பாதைமாறிப்போனாலும்
சுள்ளெனச்சுடும் தீயேதோன்றித் தகித்தாலும்
எள்ளத்தனை இன்னலும் எனக்கில்லையம்மா..’

என்று மெட்டமைத்து, செட்டாக கட்டியமைத்து ‘உள்ளத்தில் வந்த உமை‘ என்ற கவிதையை மனமுருக எழுதியவரும், ‘தென்னாட்டு சிவனே‘ என்று, அவளது பிராணநாதனை அன்று ‘எம்டனில்’ விளித்தவருமான, அருமை நண்பர் திவாகர் அவர்களை, ஸ்வயம்வரத்து புஷ்பமாலையை போல், இந்த இன்னம்பூரான் – வல்லமை சிறப்பு விருது அலங்கரிக்கிறது.

அடுத்தப்படியாக! என்னடா இது? இடத்தைக் கொடுத்தால், மடத்தைப் பிடுங்கறான் என்றா பார்க்கிறீர்கள்? ஒரு பின்னூட்டத்தைப் பற்றி. அப்றம் ஓட்டம் தான். சமாராதனையில் (அறுசுவை விருந்து), மூக்குப்பிடிக்க சாப்பிட்டாச்சு. பந்தி விசாரணை பண்ணச்சே, ‘மல்லிப்பூ சாதம், உண்டை விண்டாத சாம்பார், நாக்கை சுண்டி இழுக்கும் சேப்பங்கிழங்கு ரோஸ்ட், திகட்டும் தினைப்பாயசம்’ என்றெல்லாம் விருந்து கீர்த்தி பாடி விட்டு, ‘ஓய்! ரசவாங்கிலெ உப்புப்போட மறந்துட்டீர்’, ‘தயிர் புளித்து விட்டது’ என மெல்ல கண்டிக்கவும் வேண்டாமோ? அப்படி அமைந்திருக்கிறது, பேராசிரியர் பெஞ்சமின் லெபோவின் ‘கம்பனின் காவியம்” ;இன்றும் என்றும் காலத்தை வென்று வாழும்! ஏன்? என்ற தலைப்பில் வல்லமை இதழில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரை. (இது,பாரிஸ் நகரத்தில் நடந்த தமிழிலக்கிய உலக மாநாட்டில் ‘காப்பியங்கள் ‘ அமர்வில் அவர் ஆற்றிய தலைமை உரையின் மீள்பதிவு.) அவர் ஏன் கு.அழகிரிசாமியின் ‘கவிச்சக்கரவர்த்தி’ என்ற நாடகத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்று, காரைக்குடி சா.கணேசனாரின் கம்பர் திருவிழாவை கண்டு களித்த எனக்கு புரியவில்லை. நீதிபதி எம்.எம்.இஸ்மைல் அவர்களையும் மறந்து விட்டார். ‘இங்கே குறிப்பிட்ட எதுவும் வரலாறு எனக் கொள்வதற்கில்லை.’ & ‘ஆனால், இக்கதைகள் கம்பனுக்கு அவன் காலத்திலே இருந்த எதிர்ப்புகளைச் சுட்டிக்காட்டுகின்றன, பட்டியல் இடுகின்றன.’ என்ற ஒன்றுடன் ஒன்று ஒத்துப்போகாத வாக்கியங்களும் புரியவில்லை.

அது ஒரு புறமிருக்க, வன்பாக்கம் விஜயராகவனின் அருமையான பின்னூட்டம் சிந்தனையை கிளறுகிறது. உண்மை நிலையை விளக்குகிறது. மேற்படி கட்டுரையின் மையமான கருத்தின் ஒவ்வாமையை முன் வைக்கிறது. ஆக மொத்தம், இது வரை நான் பார்த்த பின்னூட்டங்களில், மிகவும் தரமுயர்ந்தப் பின்னூட்டமாக அமைந்துள்ளது. இதை வல்லமைக்கு வந்துள்ள நல்வரவாக வாழ்த்துகிறேன்.பேராசிரியர் பெஞ்சமின் லெபோவை, இதற்கு உரிய பதில் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இன்னம்பூரான்

16 07 2012

பின் குறிப்பு: (1)

“அன்றொரு நாள்: ஸெப்டம்பர் 27 பகுதி 2 எஸ்.ஆர்.ரங்கநாதன்:

இங்கு (போர்ட்ஸ்மத்: இங்கிலாந்து) நூலகம் இடம் மாறிய போது, என் தன்னார்வப்பணியை ஏற்றுக்கொண்ட போது, புத்தகங்களுக்கு குறியிடுகிறோமே, அது தெரியுமா என்று கேட்டார்கள். எனக்கு எஸ்.ஆர்.ரங்கநாதன் முறை தெரியும் என்றேன். சரி. நல்வரவு என்று சொல்லிவிட்டார்கள்.

சின்ன ஊர். வெளி நாடு. இவருடைய பெயர் எனக்கு பாஸ்போர்ட். யார் இவர்? அதான் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் புகட்டிய சீர்காழியில் வசித்த ராமாம்ருதத்தின் திருமகன். ஸெப்டம்பர் 27, 1972 ல் 80 வயதில் மறைந்த இந்த சான்றோன், தப்புத்தவறித்தான் நூலக அமைப்புத்துறைக்கு வந்தார். 1923ல் மதராஸ் பல்கலைக்கழகம் இவரை 900 விண்ணப்பங்களிலிருந்து பொறுக்கி நூலகப் பொறுப்பாளராக அமர்த்தியது. லண்டனில் பயிற்சி. ஒரு பொம்மைக்கடையில் மெக்கானோ செட் ஒன்றை பார்த்து புதியதொரு நூலக குறியீட்டு அமைத்து தூள் கிளப்பி விட்டார். கணினி உலகில் tag என்கிறோமே. அதன் முன்னோடி அவர். நூலக நிர்வாகத்தின் ஐந்து விதிகள் & புதிய இரு தரப்பு குறியீடு, இவருடைய சாதனைகள். இந்தியாவில், சென்னை, டில்லி, கொல்கொத்தா வாசம். பல நூலக முன்னேற்றங்கள் செய்தார். ஆவண சேகரம்/பராமரிப்பு/பாதுகாப்பு பற்றி ஆய்வுகளில் இயங்கி வந்தார். இங்கிலாந்து நூலகங்களை பற்றி, இவருடைய கருத்து: ‘ஒவ்வொரு நூலகமும் அந்த அந்த இடத்து சமூக மையமாக விளங்குகிறது. எல்லாரையும் சமமாக நடத்துகிறது. இந்தியாவில் நடப்பது போல் இல்லாமல் சமூகத்தின் எல்லா படிநிலை மாந்தர்களுக்கும் உதவுகிறது. ஆனால், ஒவ்வொரு நூலகமும் தனிவழியே நடப்பதால், பயன் குறைகிறது.’ நான் தற்காலம் காண்பது: சென்னையில் கோட்டூர் புரம் நூலகத்தை நான் பார்க்கவில்லை. மற்றவை எல்லாம் வாசகர்களை துச்சமாகக் கருதுகின்றன. நல்ல நூல்களை எல்லாம் கன்னிமரா நூலகத்தில் இரவல் தருவதில்லை. சென்னை சேப்பாக்கத்து பல்கலைக்கழக நூலகத்தில் சில வருடங்கள் முன்னால் கண்டு நடுங்கிப்போய்விட்டேன். எல்லாம் குழப்பம். இங்கிலாந்தில் எல்லா நூலகங்களும் இணைந்து செயல்படுகின்றன. நாம் ஏதாவது கேட்டு விட்டால், விழுந்தடித்துத்தேடி தருகிறார்கள். அதை விடுங்கள். 19 52 ~53 களில் சென்னையில் பிரிட்டீஷ் கவுன்சில் நூலகம் திறந்தார்கள். நான் ஐஏஎஸ் பரிக்ஷைக்கு ஊருக்கு 40-50 புத்தகங்கள் எடுத்துச்செல்லவேண்டும் எனக்கேட்டதற்கு, அவர்களே 48 புத்தகங்கள் பொறுக்கிக் கொடுத்தார்கள். அந்த உதவியினால்தான் நான் வெற்றி பெற்றேன் என்று சொன்னால், மிகையாகாது. இத்தனைக்கும், அமைப்பு தான் பிரிட்டீஷ். உதவியவர்கள் இந்தியர்கள். நினைத்தால் முடியும் தம்பி.

இன்னம்பூரான்
27 09 2011

http://news.cci.fsu.edu/wp-content/uploads/2009/11/Ranganathan_stamp.jpg

உசாத்துணை:

http://garfield.library.upenn.edu/essays/v7p037y1984.pdf
http://history.slis.fsu.edu/1958/10/stamp-of-dr-s-r-ranganathan/

பி.கு. (2)

திரு.லெபோ அவர்களின் கட்டுரைக்கு வந்த பின்னூட்டங்கள் என்னை வியப்பில் ஆழ்த்தின.
1. இனிமேல், பொழுது புலர்ந்தவுடன் பிரசுரிக்க, ஆசிரியரின் கையில் ஏற்கனவே சேர்ந்து விட்ட பதிவு ஒன்றில், பேராசிரியர் லெபோ, விஜயராகவனுக்கு விளக்கமான பதில் அளிக்கவேண்டும் என கேட்டிருக்கிறேன். அதை ஏற்கனவே படித்த மாதிரி, அவர் பதில் அளித்திருப்பது, வியப்பே.

2. பேராசிரியர் ம.ரா.பொ.குருசாமி அவர்கள் நம் மரியாதைக்கு உரியவர். மு.வ. அவர்களின் முதற்சீடர்களில் ஒருவர். திரு.வி.க. அவர்களின் வாழ்க்கைச்சரிதையை, சாஹித்ய அகாதமி சார்பில் எழுதியவர். நான் அவருடன் பேசியபோதே, முதியவர். அவர் மறைந்ததாக, நான் செய்தி பார்க்கவில்லை. அவருக்கு பிரதிநிதியாக, தேவ் அவர்களுக்கு நான் பின்னூட்ட – பதில் அளிக்க நேர்ந்தது வியப்பை தருகிறது.

 

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “வல்லமையாளர் விருது!

  1. ‘வல்லமையாளர் வார விருதை’ எனக்கு வழங்கிய மதிப்பிற்குரிய இன்னம்பூரான் அய்யா அவர்களுக்கு எனது உளமார்ந்த மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டு, அய்யாவின் அனுமதியுடன் எனது விருப்பத்தைக் கொஞ்சம் விரிவாகச் சொல்ல விரும்புகிறேன்.

    மதிப்பிற்குறிய திவாகர் அவர்கள் ஒவ்வொரு வாரமும் எழுத்தாளர்களின் திறமையான படைப்புகளுக்கு, தனது விளக்கத்தோடு கூடிய இந்த விருதை அளித்து வந்தார். ஒரு நான்கு வார காலத்திற்கு இந்தப் பொறுப்பை இன்னம்பூரான் அய்யா அவர்கள் பொறுப்புடன் ஏற்றுக்கொண்டு, அதை திறம்படச் செய்து வருகிறார். அவர் இந்தப் பொறுப்பை எடுத்துக் கொண்டபிறகு, ‘விருது பெற்றவரின் சுருக்கமான பதில் பின்னூட்டமாக இடம் பெறுதல் சிலாக்கியம்’ என்று சொல்லியிருந்தார். சுருக்கமாக சொல்லமுடியாமல் விரிவுரையாக இருப்பதால், தயை கூர்ந்து மன்னிக்கவும்.
    மூன்றாம் ஆண்டில் வல்லமை மின் இதழ், அடியெடுத்து வைத்தபோது, வல்லமை நிறுவனர் ‘திரு அண்ணாகண்ணன்’ அவர்கள் “மூன்றாம் ஆண்டில் வல்லமை மின் இதழ்” என்ற தனது உரையில் பின்வருமாறு………
    “திருமதி ‘பவளசங்கரி திருநாவுக்கரசு’, நிர்வாக ஆசிரியராகப் பொறுப்பு ஏற்றதிலிருந்து வல்லமை புதிய துடிப்புடன் எழுச்சி பெற்று வருகிறது” என்பதை பெருமையுடன் குறிப்பிட்டிருந்தார். ஆசிரியர் பவளாவும், அமைதிச்சாரலும் தங்களை இந்தப் பணிக்காக அர்ப்பணித்தார்கள் எனில் மிகையன்று. இவர்களின் ஊக்கமும் ஆக்கமும் உற்சாகமும் இல்லையேல், வல்லமை இந்த அளவுக்கு வளர்ந்திருக்காது. இவர்களுக்கு எமது தலைவணக்கம்” என்று குறிப்பிட்டிருந்ததை இங்கே நினைவு கூற விரும்புகிறேன்.
    இந்த இடத்தில் இதை ஏன்?…….குறிப்பிடுகிறேன் என்றால், இந்த விருதை, அனுபவம் வாய்ந்தவர், எழுத்தாளர் திரு இன்னம்பூரான் அய்யா அவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்டு, விருதைப் பெறுவதற்கு என்னைத் தகுதியுடைவர் ஆக்கிய பெருமைகுரியவர் திருமதி பவள சங்கரி அவர்கள்தான் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். ஒவ்வொரு தொடரையும் நான் எழுதி அனுப்பிய பிறகு, ஆசிரியர் பவளா அவர்கள், அதைப் பிரசுரித்த பிறகு, “தொடர்ந்து எழுதுங்கள்” என்ற அவரது ஒரே ஒரு வார்த்தைதான், விருது வாங்கும் அளவுக்கு என்னை உயர்த்தியது. ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், வல்லமையில் அங்கம் வகிக்கும் ஒருவரைக் கூட எனக்கு நேரடியாகத் தெரியாது. என்னுடைய படைப்புகள் மூலம் என்னை வல்லமைக்கு அறிமுகப் படுத்தியவர் தற்போது பெங்களூருவில் வேலைபார்த்து வரும் மதிப்பிற்குறிய திரு ‘ப்ரேம்’ என்பவர். இவர் வல்லமை இதழின் வாசகர் மற்றும் வல்லமை நிறுவனர் ‘திரு அண்ணாகண்ணனுக்கு’ நண்பர்.
    தற்பொழுது மின் இதழாக இருக்கின்ற ‘வல்லமை’ இனி வரும் காலங்களில், ஒரு ‘தலைசிறந்த தமிழ்ப் பத்திரிகை’ என்ற பெயரில் வெளிவந்து தமிழர்களின் உள்ளத்துக்குள் புகுந்து புகழை எட்ட வேண்டும் என்பதே என்னுடைய மிகப் பெரிய ஆசை. இதற்கு என்னுடைய எழுத்துக்களின் (படைப்புகள்) மூலம் முழுமையான ஒத்துழைப்பை அளிப்பேன் என்று உறுதி அளிக்கிறேன். வல்லமைக்காக நிறைய எழுத வேண்டும் என்று நினைத்தாலும், ‘வேலைப் பளு’ என்பது கிடைக்கும் நேரத்தையெல்லாம் எடுத்துக் கொண்டு விடுகிறது. இதனால்தான் ‘வல்லமை கருத்தாடல் களத்தில்’ முழுவதுமாக என்னை ஈடுபடுத்திக் கொண்டு வல்லமையாளர்களோடு உரையாட முடியவில்லை என்பதை வருத்தமுடன் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
    நன்றியுடன்
    பெருவை பார்த்தசாரதி

  2. யார் விருது வாங்குகிறார்கள் என்று அறியும் ஆர்வத்தை விட, இ ஐயாவின் கட்டுரையைப் (அது கட்டுரையா? இல்லையில்லை.. கிட்டத்தட்ட ஒரு சொற்பொழிவு) படிக்கின்ற ஆர்வமே அதிகமாக இருக்கிறது. நன்றி இ ஐயா, நீங்கள் அளிக்கும் இந்த விருந்துக்கு..

  3. Your thirst, willingness, contribution and dedication brought this award to you Parthasarathi Sir. Keep it up! Congrats! Continue your Writing ………

  4. ஜெய் ஸ்ரீமன் நாராயணா. அடியேனின் பள்ளித்தோழன் பெருவை சாரதிக்கு விருது கிடைத்தது அடியேனுக்கே கிடைத்தது போல ஒரு சந்தோஷம் . பெருகவாழ்ந்தான் பட்டாபிராமருக்கு பட்டாபிஷேகம் செய்தது போல். 

    சாரதியின் திருதகப்பனார் மிக அருமையாக எழுதக்கூடியவர். அவருக்கு ஒரு விருது 1972 என நினைக்கிறேன் அடியேன் தந்தையாரால் வழங்கப்பட்டது . அவரின் அருமை புத்திரனுக்கு விருது கிடைத்ததில் வியப்பே இல்லை.

    மீன் குஞ்சுக்கு நீந்த கற்றுக் கொடுக்க வேனுமா என்ன.

    மீண்டும் அடியேனின் அளவிலா மகிழ்சியை பகிர்ந்து கொள்கிறேன்.

    (அய்யா இன்னம்பூரான் அவர்களே, அடியேன் தங்கை மாமனார் (Late) இன்னம்பூர் சேஷாத்ரி அய்யங்கார் -ரிடையர்டு டவுன் ஹைஸ்கூல் ஹெட்மாஸ்டர் , தாங்கள் அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். )

  5. திரு.ரவி சாரங்கனுக்கு வாழ்த்துக்கள். உங்கள் தந்தையை பற்றியும், பெருக வாழ்ந்தானையும் பற்றியும் எழுதுங்கள்.
    திரு.சேசாத்ரி ஐயங்காருடன் பரிச்சயம் இருந்தது.

Leave a Reply to பெருவை பார்த்தசாரதி

Your email address will not be published. Required fields are marked *