நல்வாழ்த்து நான் சொல்லுவேன் (அத்தியாயம்-4)

0

ஸ்ரீஜா வெங்கடேஷ்

கல்யாணி ஒரு கம்ப்யூட்டர் செண்டரை வீட்டுப் பக்கத்திலேயே தேர்ந்தெடுத்து அதில் சேர்ந்தும் விட்டாள். அவளுக்குக் கம்ப்யூட்டர் பற்றி ஒன்றும் தெரியாது என்பதால் அடிப்படையிலிருந்து ஆரம்பித்துக் கற்றுக் கொடுக்கும் கோர்சில் சேர்ந்த்தாள். முதலில் அவளுக்குக் கூச்சமாய் இருந்தது. இத்தனை வயதுக்கப்புறம் போய்ப் படிக்கிறோமே என்று. ஆனால் செண்டரில் கற்பிக்கும் ஆசிரியர்களும் சரி மற்ற மாணவர்களும் சரி அவளைக் கேலி செய்யும் நோக்கத்தோடு பார்க்கவில்லை. அவளுக்குச் சொல்லிக் கொடுக்கும் இன்ஸ்ட்ரக்டர் ஒரு இளைஞன். அப்போதுதான் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு வந்திருந்தான்.

“மேடம், நீங்க கவலையே படாதீங்க. நீங்க என்னெல்லாம் கத்துக்க விரும்புறீங்களோ எல்லாத்தையும் நானே உங்களுக்குக் கத்துக் குடுக்கறேன். எதாவது கஷ்டமா இருந்தாச் சொல்லுங்க திருப்பிச் சொல்லித் தரேன். என்ன மேடம்?”

“அது இல்ல சார். இத்தனை வயசுக்கு மேல… எனக்கே ஒரு மாதிரி இருக்கு சார். என் மகன் வயசுதான் இருக்கும் உங்களுக்கு. நீங்கள்லாம் என்ன நினைப்பீங்களோன்னுதான் எனக்கு வெக்கமா இருக்கு”

“மேடம், யார் என்ன நினைக்கறதுக்கு இருக்கு? இந்த வயசிலயும் வீட்டுல நிம்மதியாத் தூங்கி ரெஸ்ட் எடுக்காம படிக்கணும்னு வந்துருக்கீங்க பாருங்க அதை நான் ரொம்ப அப்ரீஷியேட் பண்றேன் மேடம். இப்போ கம்ப்யூட்டர் கத்துக்கிட்டு நீங்க என்ன ஆகணும்னு நெனக்கிறீங்க? எதாவது வேலைக்குப் போகணுமா? இல்ல ஜஸ்ட் இ-மெயில் அனுப்ப மட்டும் தெரிஞ்சிக்கிட்டாப் போதுமா? நீங்க என்ன ஆசப்படறீங்க?

கல்யாணி சற்று யோசித்தாள். இந்தக் கேள்விக்கு அவள் தயாரில்லை. தன் ஆசை என்ன? ஏதோ ஒரு வேகத்தில் சேர்ந்தாச்சு. கத்துக்கிட்டு என்ன பண்ணப் போறோம்? என்று தனக்குத் தானே யோசித்தவளுக்கு ஐடியா தோன்றியது.

“சார். இப்போ கம்ப்யூட்டர் தெரிஞ்சிக்கிட்டு லேடீசெல்லாம் வீட்டுல இருந்தே சம்பாதிக்கறாங்களாமே. அது மாதிரி நானும் பண்ணணும். அதான் எனக்கு வேணும்.”

“அப்டியா? உங்களுக்கு டைப்பிங் தெரியுமா மேடம்?”

“நல்லாத் தெரியும் சார். ஹையர் பாஸ் பண்ணியிருக்கேன். ஆனா இப்போ டச் விட்டுப் போச்சு. ஏன் கேக்கறீங்க?”

“சொல்றேன். டச் விட்டுப் போயிருந்தாலும் கொஞ்சம் பழகினதும் திருப்பி ஞாபகம் வந்துடும் மேடம். நீங்க இண்டெர் நெட்ல பாத்து டைப் பண்ற ஜாப் ஒர்க்கைச் சொல்றீங்கன்னு நெனக்கிறேன். அது ஒண்ணும் பெரிய விஷயமில்ல மேடம். நீங்க இண்டெர் நெட் பத்தித் தெரிஞ்சிக்கிட்டீங்கன்னாப் போதும். அதும் உங்களுக்கு டைப்பிங் ஸ்பீடு வேற இருக்கும். அதனால நீங்க நிறையவே சம்பாதிக்கலாம்.”

கல்யாணிக்குச் சந்தோஷம் தாங்க முடியவில்லை. “வெறும் டைப்பிங்தான் செய்கிறார்களா? இண்டெர் நெட் மட்டும் கற்றுக் கொண்டு விட்டேன் மாதம் சுளையாகப் பணம் சம்பாதிக்கலாம். எவ்வளவு கிடைக்கும் உத்தேசமாக?” என்று நினைத்தவள்,

“ஏன் சார்? மாசம் எவ்ளோ கெடைக்கும்? குறைச்சே சொல்லுங்க பரவாயில்ல”

“அது நீங்க டைப் பண்ற ஸ்பீடைப் பொறுத்து இருக்கு மேடம். எப்டியும் மாசம் பத்தாயிரத்துக்குக் குறையாதுங்கறது என் எண்ணம்”

கல்யாணியின் மனம் ஊஞ்சலாடியது. மாசம் பத்தாயிர ரூவா. அடேயப்பா? வீட்டுக்கு எவ்ளோ உபயோகமா இருக்கும்? அவருக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கும், பட்டுப் புடவைச் சீட்டுக் கட்டலாம், நகைச் சீட்டுக் கட்டலாம்” எனப் பகல் கனவுகளில் மூழ்கினாள் கல்யாணி.

“என்ன மேடம், உக்காந்துக்கிட்டே தூங்குறீங்களா? கொஞ்சம் கவனமா நான் சொல்றதைக் கவனிங்க” என்று அவளை மண்ணுலகத்திற்கு இழுத்தார் இன்ஸ்ட்ரக்டர்.

வகுப்புகள் துவங்கி இரண்டு மாதங்களாகி விட்டன. வாரம் இரண்டு வகுப்புகள் என்பதால் வசதியாக இருந்தது. கல்யாணி வீட்டில் கம்ப்யூட்டர் இருந்ததே தவிர நெட் கனெக்க்ஷன் இல்லை. இவளுக்கு இண்டெர் நெட் பாடம் துவங்கி இரு வாரங்களே ஆகியிருந்தன. ஆனால் வகுப்பில் சொல்லித் தருவதை வீட்டில் வந்து செய்து பார்த்தால்தான் இன்னும் நன்றாக மனதில் பதியும் என்று நச்சரித்து வீட்டுக்கு இண்டர் நெட் கனெக்ஷன் வாங்கி விட்டாள்.

இது நிகிலுக்கும் சௌகரியமாக அமைந்தது. அவன் காலேஜ் லீவு நாட்களில் நெட்டே கதியென்று கிடந்தான்.

கல்யாணியின் கப்யூட்டர் அறிவு மட்டும் வளரவில்லை. கூடவே நட்பு வட்டமும் வளர்ந்தது. ஆபீசில் வேலை பார்த்து திறமையை வளர்த்துக் கொள்ள ஆபீஸ் மூலமாகவே அனுப்பப்பட்ட ஒரு பெண் தான் சுஜாதா. மிகவும் அல்ட்ரா மாடர்ன் ஆன பெண். அவளைப் ஃப்ரெண்டு பிடித்து வைத்துக் கொண்டால் பின்னால் உதவும் என்று கணக்குப் போட்டு அவளோடு நட்பு பூண்டாள். அவள் மூலமாகவே மேலும் சிலர் அறிமுகமாயினர். எல்லாரும் இளம் வயதினர் தான். கல்யாணியின் வயதை அவர்கள் பொருட்படுத்தவில்லை. அவர்களோடு பேசிப் பழகுவது இவளுக்கு உற்சாக டானிக்காக இருந்தது.

சுஜாதா,ப்ரீதா,வாணி என்று நீண்டு கொண்டே போனது பட்டியல். இந்தப் பட்டியலில் ஜெயா என்ற கல்யாணியின் வயதையொத்தப் பெண்மணியும் அடக்கம். அவளும் கல்யாணியைப் போல சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகக் கம்ப்யூட்டர் கிளாசில் சேர்ந்தவள்.

இப்போதெல்லாம் கல்யாணிக்கு நேரமே இருப்பதில்லை. எந்நேரமும் கம்ப்யூட்டர் முன் தவம் தான்.

“கல்யாணி! நான் ஆபீஸ்லர்ந்து வந்து அரை மணி நேரமாச்சு. எனக்கு ஒரு டீ குடுக்கக் கூட உன்னால முடியலியா?”

“சாரிங்க! பிரீதாவோட சேட் பண்ணிக்கிட்டு இருந்தேன். அவ காரக் குழம்பு செய்யறது எப்படீன்னு கேட்டா? அதைச் சொல்லிட்டு வர நேரமாயிடிச்சு. அவ்ளோ தான். உங்களுக்கு டீ தானே? ஒரு நொடியில கொண்டு வரேன். “

“வெறும் டீ மட்டும் தானா? ஸ்னாக்ஸ் எதுவும் இல்லியா? “

“இல்லீங்க! வேணும்னா சிப்ஸ் வாங்கிக்கோங்க!”

“சிப்ஸ் எனக்குப் பிடிக்காதுன்னு உனக்குத் தெரியும்ல? ஏன் இப்டிப் பண்றே? எனக்குப் பசிக்குது. மாவு வெச்சுருப்பியே தோசை சுட்டுக் குடு”.

“மாவு அரைக்கவேயில்ல. வேணும்னா நாட்டார் கடையிலருந்து வாங்கிட்டு வாங்க. தோசை ஊத்தித் தரேன்”

“பேஷ்! நானு பசியோட நாட்டார் கடைக்கிப் போயி மாவு வாங்கிட்டு வரணும். அப்புறம் நீ தோசை சுட்டுத் தருவே. வெரி குட்! அதுக்கு நாட்டார் கடையில தோசையாகவே விக்கிறாங்களான்னு பாரேன். உனக்கு இன்னும் ஈசியாப் போகும்”

“ஏன் நாட்டார்கடையில மாவு வாங்கினா என்ன தப்பு? எத்தனை பேர் வீட்டுல வாங்கறாங்க? தெரியுமா? நீங்க தான் என்னவோ ஏதோன்னு கத்தறீங்க.”

“நாட்டார் கடையில மாவு வாங்கறதைப் பத்தி நான் ஒண்ணும் சொல்லல்ல. அந்த மாவை நீ வாங்கி வெச்சுருந்தா என்ன? உடனே இப்போ தோசை சுட்டுருக்கலாமில்ல?”

“இவ்ளோதானா? சரி நானே போயி மாவு வாங்கிட்டு வரேன். போதுமா? அதுக்கு ஏன் இவ்ளோ பேச்சு? “

“ஆபீஸ்ல வேலை செஞ்சுட்டு ஒரு மனுஷன் டயர்டா வருவானேன்னு இல்ல. எப்டிப் பேசறா பாரு”

“ரொம்பப் பேசாதீங்க போய் வாங்கிட்டு வந்து தோசை ஊத்தித் தரேன்.”

மாவு வாங்க வெளியில் சென்றாள்.

“கல்யாணி சொல்றேன்னு கோவப் படாதே! நீ இப்போல்லாம் வீட்டை அவ்வளவா கவனிக்கறதில்லையோன்னு எனக்கு ஒரு டவுட். நீ யூஸ் பண்ற கம்ப்யூட்டர் தவிர மத்த எல்லாத்து மேலயும் தூசி இருக்கு.” தோசையைச் சாப்பிட்டுக் கொண்டே சொன்னான் சுந்தரம்.

கல்யாணிக்கு சுருக்கென்றது.

“ஏன் வீட்டை கவனிக்காம என்ன பண்றாங்களாம்? “

“இல்ல! ஒண்ணுமில்ல! சும்மாச் சொன்னேன்”

“சொல்ல வந்ததை முழுசாச் சொல்லுங்க”

“இல்ல! முன்னெல்லாம் வீடு பளிச்சுன்னு இருக்கும். ஆபீசுலர்ந்து வீடு வந்தா நீயே ஏதாவது ஸ்னாக்ஸ் செய்து வெச்சிருப்ப! மாவெல்லாம் வெளியில வாங்கவே மாட்ட! இப்போ எல்லாமே தலைகீழா இருக்கு அதான் கேட்டேன்”

“எல்லாமே தலை கீழுன்னா எப்படி? வீட்டுல உள்ள எல்லாரும் சேர்ந்து வீட்டை நல்லா வெச்சிக்கிட்டாத்தான் உண்டு. எனக்கும் வயசாகல்லியா? எப்பவும் வேலை செஞ்சுக்கிட்டே இருக்க முடியுமா? உங்களைப் பொறுத்தவரைக்கும் நான் வீட்டு வேலை செஞ்சு கிச்சனுக்குள்ளயே முடங்கிக் கெடக்கணும். அதானே? எனக்கும் மனசு இருக்கு. உங்களோட அடிமையா இனிமே என்னால இருக்க முடியாது. சுஜாதா சொல்றது சரிதான் இந்த ஆம்பிளைங்க எல்லாரும் தன் பொண்டாட்டியை அடிமையாத்தான் பாக்குறாங்க. நீங்களும் அப்படித்தான்”

“கல்யாணி சாதாரணமா ஏதோ ஒரு வார்த்தை சொன்னேன்னு அடிமை அது இதுன்னு ஏம்மா பேசறே? நீ ஏன் இந்த மாதிரி பேசறவங்க கூட ஃப்ரெண்ட்ஷிப் வெச்சுக்கற? அந்த மாதிரிப் பொண்ணுங்கள்லாம் தானும் வாழ மாட்டாங்க! பிறத்தியாரையும் வாழ விட மாட்டாங்க! இந்த வயசுக்கு மேல நீ ஏன் இந்தமாதிரி ஆட்கள் கூடப் பழகுற?

“என்ன? சும்மா அதையே சொல்லிட்டு இருக்கீங்க? எனக்கென்ன நல்லது கெட்டது தெரியாதா?அவங்க சொல்ற எல்லாத்தையும் அப்டியே கேட்டுடுவேனா? அந்த அளவுக்குக் கூடவா எனக்கு மூளையில்ல? உங்களுக்குப் பயம். எங்க நான் விவரம் தெரிஞ்சவளா ஆகி உங்களுக்குச் சமமா ஆகிடுவேனோன்னு தான் இப்ப்டிப் பேசறீங்க?”

“உண்மையிலேயே உனக்கு மூளை இல்லதான். இல்லேன்னா இப்டியெல்லாம் பேசுவியா? நீ என்ன வேணாப் பண்ணு! யார் கூட வேணாப் பழகு! வீட்டையும் என்னையும் மறந்துடாதே அவ்வளவு தான் மஹா ராணி!” என்று சமத்காரமாப் பேசினாலும் உள்ளூர அவனுக்குக் கவலை குடைந்தது. “ஏன் இப்டி நடந்துக்கறா? புதுசாக் கத்துக்கறாயில்ல? அதான். எல்லாம் போகப் போகச் சரியாயிடும்” என்று தன்னைத்தானே சமாதானப் படுத்திக் கொண்டான்.

அவன் கவலையை மேலும் கூட்டுவது போல ஒரு நிகழ்ச்சி நடந்தது. அது அம்மாவுக்கும் மகனுக்கும் இடையே.

வழக்கம் போல ஒரு வாரம் நிகிலின் நண்பர்கள் அவன் வீட்டிற்குக் கம்பைன் ஸ்டடி செய்ய வந்தார்கள். கல்யாணியும் சூடாக போண்டாவும், சட்னியும் தயார் செய்தாள். ஆனால் இம்முறை அவர்களைத் தனியே விடாமல் தானும் கூடவே உட்கார்ந்து கொண்டு உண்ணத் தொடங்கினாள். இது நிகிலுக்குப் புதுமையாக இருந்தாலும், சமாளித்துக் கொண்டு மற்றவர்களுக்குப் பரிமாற ஆரம்பித்தான். கல்யாணியும் விடாமல் நிகில் நண்பர்களான பாலா,கண்ணன்,சுரேஷ் இவர்களுடன் அரட்டை அடிக்க ஆரம்பித்து விட்டாள்.

“ஏன் பாலா? நீ தான் கிளாஸ்ல எப்பவுமே ஃபஸ்டாமே? நிகில் சொல்லியிருக்கான். ரொம்ப சந்தோஷம்ப்பா. நீ கப்யூட்டர்ல சேட்டிங்க் எல்லாம் பண்ணுவியா?” என்று தடாலடியாகக் கேட்கவும் விக்கித்துப் போனான் நிகில். அவன் மட்டுமா? நண்பர்களும் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்தனர்.

“ஊம்! சொல்லுப்பா! சேட்டிங்க் எல்லாம் பண்றதுண்டா? யார் கூட?”

“இல்ல! ஆண்ட்டி! நான் அதெல்லாம் பண்றதில்ல”

“என்னப்பா இப்படிச் சொல்லிட்ட? சேட்டிங் பண்றதால தப்பு ஒண்ணுமில்ல. நம்ம நட்பு வட்டம் விரிவடையும். ஃபேஸ் புக்குல யார் கூடப் பேசியிருக்கே?”

“சே! அதெல்லாம் சுத்த ஃப்ராடு ஆண்ட்டி. நடிகை த்ரிஷான்னு சொல்லிக்கிட்டு யாராவது 60 வயசுக் கெழவன் பதில் சொன்னாக்கூட நம்மால கண்டு பிடிக்க முடியாது”

“சேச்சே! நீ நெனக்கிறது தப்புப்பா. ஏன் எல்லாத்தையும் நெகடிவ்வாவே பாக்குற? உங்க நேரம் நல்லாயிருந்தா த்ரிஷாவே கூடப் பேசலாம் இல்ல?”

“அம்மா! இப்போ த்ரிஷா கூடப் பேசி என்ன ஆகப் போகுது? எங்களுக்கு புராஜக்ட் பண்ணணும். ஜி.ஆர்.ஈ எக்சாம் எழுதணும். அதுக்குண்டான வழியை நாங்க பாப்போமே தவிர இப்ப்டியெல்லாம் இல்ல.”

“நீ சும்மாயிருடா! உனக்கென்ன தெரியும்? எங்க இன்ஸ்டிட்யூட்ல எத்தனை பேரப் பாக்கறேன். எல்லாரும் உங்களை மாதிரி ஸ்டுடண்ட்ஸ்தான். ஆனா சேட்டிங்க்லருந்து டேட்டிங்க் வரை பண்றாங்க தெரியுமா?”

இன்னும் என்னென்னவோ கல்யாணி பேச ஆரம்பிக்க எரிச்சலானான் நிகில். பல்லைக் கடித்துப் பொறுத்துக் கொண்டிருந்தவன் நண்பர்கள் போனதும் அம்மாவைக் கிழிகிழி என்று கிழித்து விட்டான்.

“ஏம்மா இப்டிப் பண்றீங்க? உங்களுக்கு சென்சே இல்லியா?”

இந்தத் தாக்குதலுக்குக் காரணமாகத் தான் என்ன செய்து விட்டோம் என்றே புரியாமல் நின்றாள் கல்யாணி.

“என்ன முழிக்கறீங்க? என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட நீங்க பேசின பேச்சைத்தான் சொல்றேன். அவங்க உங்களைப் பத்தி என்ன நினைப்பாங்க? உங்களை விடுங்க! என்னைப் பத்தி என்ன நினைப்பாங்க? நீங்க பாட்டுக்கு என் முன்னாடியே டேட்டிங்க் சேட்டிங்க் அது இதுன்னு பேச ஆரம்பிக்கறீங்க? உங்களுக்குத் தெரிய வேணாம் யார் கிட்ட என்ன பேசறதுன்னு?”

“சும்மா நிறுத்துடா! நீங்க பேசாததை என்ன நான் பேசிட்டேன்? எனக்கும் உன் வயசுல ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க. அவங்க எல்லாரும் என்னை நீங்க ரொம்ப ஜாலியாப் பேசறீங்க ஆண்ட்டின்னு தான் சொல்லியிருக்காங்க. நீ தானே வருத்தப் பட்ட? எங்கம்மாவுக்கு கம்ப்யூட்டர் தெரியல அதனால நெறய விஷயங்கள ஷேர் பண்ண முடியல்லன்னு. அதான் நானா வந்து பேசினேன்.”

“ஐயோ அம்மா! நான் இந்த மாதிரி ஷேரிங்கைச் சொல்லல்ல! இதெல்லாம் சினிமால தான் பாஸிபிள். கொஞ்சங்கூட கூச்சமில்லாம என் ஃப்ரெண்ட்ஸுக்கு நடுவுல என்னென்ன பேசிட்டீங்க? அவங்க என்னைப் பாத்துச் சிரிக்கப் போறாங்க? காலேஜ்ல தலை காட்ட முடியாது. ஏம்மா? அப்படிச் செஞ்சீங்க?”

“இனிமே பேசலப்பா! உன் அருமையான ஃப்ரெண்ட்ஸ் கூட நான் ஒரு வார்த்தைப் பேசல. உங்கப்பனும் நீயும் ஒரே டைப்பு. உனக்கும் உன் ஃப்ரெண்ட்சுக்கும் டிஃபன் விதவிதமா செஞ்சு தரதுக்கு நான் வேணும். அதே நான் வந்து மாடர்னா பேசிட்டேன்னா உங்களுக்குப் பொறுக்காது. எல்லாம் என் தலையெழுத்து. நேத்துப் பொறந்த பய கிட்டயெல்லாம் பேச்சு வாங்கணும்னு இருக்கு. என் நேரம்!’

“நான் சொன்னதையே புரிஞ்சிக்காம. நீங்க பாட்டுக்கு பேசிக்கிட்டே போங்க! சீ! இந்த வீட்டுல மனுஷன் இருப்பானா? என்று சொல்லி விட்டுக் கோபமாக வெளியேறினான்.

அதன் பிறகு சுந்தரம் தலையிட்டுச் சமாதானம் செய்து வைத்தார். அதன் பிறகு எல்லாம் நார்மலாக இருந்தாலும் சுந்தரத்துக்கு ஏனோ பதட்டமாகவே இருந்தது. ஏதாவது பெரிய சண்டையாக வராமல் இருக்க வேண்டுமே என்று கடவுளை வேண்டிக் கோண்டார் அவர்.

 (தொடரும்)

படத்திற்கு நன்றி:http://www.masterfile.com/stock-photography/image/700-00796664/Woman-Sitting-at-Computer

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *