மோகன் குமார்

கேள்வி: பாலசுப்பிரமணியன், சென்னை 

நான் கவனித்த வரை தமிழ் நாட்டுக்கு தமிழ் நாட்டை சேர்ந்த யாரும் கவர்னர் ஆக வந்த மாதிரி தெரிய வில்லையே? நான் சொல்வது சரி தானா? இதற்கு என்ன காரணம் என்று சொல்ல முடியுமா? 

பதில்: 

நீங்கள் சொல்வது உண்மை தான். இந்திய அரசியலமைப்பில் ஒரு மாநிலத்துக்கு யார் கவர்னர் ஆக வரலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதில் கவர்னர் ஆக வருபவர் – 

இந்திய குடிமகனாய் இருக்க வேண்டும்,

35 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்,

MLA, MP, மத்திய, மாநில அமைச்சர் போன்ற பதவிகளில் இருக்க கூடாது. இருந்தால் அப்பதவியை ராஜினாமா செய்து விட வேண்டும்,

போன்ற அவசிய காரணிகளுடன் இன்னொரு முக்கிய காரணியும் உள்ளது . 

“சம்பந்தப்பட்ட கவர்னர் அந்த மாநிலத்தில் பிறந்தவராய் இருத்தல் கூடாது” 

நீங்கள் கேட்டதற்கு விடை கிடைத்து விட்டதா? ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா இப்படி வேறு மாநிலத்தில் பிறந்தவர்கள் தான் தமிழகத்தில் கவர்னர் ஆக முடியும். தமிழகத்தில் பிறந்தவர் இங்கு கவர்னர் ஆக முடியாது. 

பதிவாசிரியரைப் பற்றி

12 thoughts on “சட்டம் ஆலோசனைகள் (13)

  1. தமிழ்நாட்டு மைந்தரான முனைவர் சி.ரங்கராஜன் தமிழ் நாட்டு கவர்னராக செவ்வனே பணி புரிந்தார். திரு. மோஹன் குமார் ஷரத்துகளை குறிப்பிடவேண்டும். பொத்தாம்பொதுவாக சட்ட ஆலோசனைகள் வழங்கப்படுவதில்லை. நான் ஏற்கனவே ஒரு வினா எழுப்பியிருந்தேன். பதிலிக்குக் காத்திருக்கிறேன்.
    நன்றி, வணக்கம்,
    இன்னம்பூரான்

  2. திரு. C. ரங்கராஜன் 2001 முதல் 2002 வரை ஓராண்டு அடிஷனல் சார்ஜ் கவர்னர் ஆக தான் தமிழகத்துக்கு இருந்தார். அந்த நேரம் அவர் ஆந்திராவின் முழு நேர கவர்னர் . தமிழக கவர்னர் பதிவியில் காலியிடம் வந்ததால் தற்காலிகமாக அவரை பார்த்து கொள்ள சொல்லி கூறினர்.   இங்கு படித்து பாருங்கள் :

    http://en.wikipedia.org/wiki/C._Rangarajan

    என்னை கேட்டால், இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் அதே மாநிலத்தை சேர்ந்தவர் கவர்னராக இருக்க கூடாது என்று இருக்கும் போது அப்படி ஓராண்டுக்கு அவர் அடிஷனல் சார்ஜ் ஆக நியமித்ததே தவறு தான் ! இதை சுட்டி காட்டி யாரேனும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தால் நிச்சயம் அவரது அடிஷனல் சார்ஜ் நியமனத்தை தவறு என கோர்ட் சொல்லியிருக்கும்.

    //பொத்தாம்பொதுவாக சட்ட ஆலோசனைகள் வழங்கப்படுவதில்லை. //

    பொத்தாம் பொதுவாக நான் சட்ட ஆலோசனை வழங்கவில்லை என்பது உங்களுக்கு இப்போது புரியும் என நினைக்கிறேன். பொத்தாம் பொதுவாக குறைகள் சொல்லாமல் இருந்தால் நலம் !

    சட்ட ஆலோசனை என நாம் இங்கு செய்வது சேவை. இதற்கு நிறைய படிக்கவும், சில வழக்கறிஞர்களிடம் பேசியும் தான் பின் எழுதுகிறேன். இங்கு கேள்வி எழுப்புபவர்கள் அதே வழக்கறிஞர்களிடம் இதே கேள்வி கேட்டால் அவர்கள் அதற்கு நிச்சயம் சார்ஜ் செய்வார்கள்.(இந்த கேள்வி பொது கேள்வி. ஆனால்  தங்கள் பிரச்னையை குறிப்பிட்டு கேள்வி கேட்பவர்கள் பலர்)  

    இங்கு நாம் செய்வது இலவச சட்ட ஆலோசனை. அதற்காக பொத்தாம் பொதுவாக சொல்வதில்லை . அப்படி நான் சொல்வதாக நினைத்தால்   வல்லமையில் வேறு யார் மூலமாவது நீங்கள் இப்பகுதியை தொடரலாம் ! இந்த கமன்ட் வேறு யாரோ வெளியிட்டால் நான் வருந்தியிருக்க மாட்டேன். வல்லமை எடிட்டோரியல் குழுவில் உள்ள ஒருவரே, அவர் சரியாக செக் செய்யாமல் என்னை குறை சொல்வது வலிக்கிறது. 

  3. .திரு. C. ரங்கராஜன் 2001 முதல் 2002 வரை ஓராண்டு அடிஷனல் சார்ஜ் கவர்னர் ஆக இருந்தாலும் பொறுப்பு முழு பொறுப்பு. எனக்கு நேரடியாக இது தெரியும். சூப்ரீம் கோர்ட்டை பற்றி நீங்கள் கூறுவது யூகம். எதிர்மறை யூகமும் உங்கள் துறையில் சகஜமே. நான் குறை காணவில்லை. அதை சுட்டி விளக்கம் கேட்டேன். ஷரத்து எது என்று சொல்லாமல் சட்ட ஆலோசனை வழங்கப்படுவதில்லை, இலவசமாயினும். ஆறு வருடங்கள் நூற்றுக்கணக்கான மக்களுக்கு இலவச ஆலோசனை வழங்கிய அனுபவமும், அத்துறையில் முதுநிலை பட்டப்படிப்பில் உயர் நிலை விருதும் எனக்கு உண்டு. வல்லமை எடிட்டோரியல் குழுவுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை. அவர்கள் என்னை உதறி விட்டாலும் கவலை இல்லை.இலவச சட்ட ஆலோசனையை சற்றே தாழ்த்தி நீங்கள் கற்பிப்பது எனக்கு வருத்தம் அளிக்கிறது. ஒரு பெண்மணிக்கு பொத்தாம் பொதுவாக ஆலோசனை அளித்தீர்கள். நான் எழுப்பிய வினாவுக்கு பதில் இல்லை. வல்லமை ஆசிரியர் அதை உமக்கு அனுப்பியுள்ளார்.எனக்கு வல்லமையின் தரம் தான் முக்கியம்; உங்களின் அனாவசிய கோபம் அல்ல.நன்றி, வணக்கம்.இன்னம்பூரான்

  4. வல்லம்பூரான் ஐயா அவர்களே , நேரடியாக அந்தந்த மாநிலத்தில் பிறந்தவர் கவர்னர் ஆக இருக்க முடியாது என்பது விதி. அந்த விதியுடன் கூடிய இன்னும் சில விதிகளையும் (சிட்டிசன் ஆக இருக்க வேண்டும்; 45 வயது நிரம்பியிருக்க வேண்டும்) போன்றவை சொல்லி தான் பதில் சொன்னேன். ஷரத்து எண் மக்களுக்கு மிக அவசியம் அல்ல. அவர்களுக்கு தேவை சட்ட விதிகள் தான். ஹெல்மெட் போட்டு கொண்டு வண்டி ஓட்ட வேண்டும் என்பது சட்டம். அது எந்த சட்டத்தில் எந்த பிரிவில் சொல்லப்பட்டிருக்கிறது என்பது எத்தனை மக்களுக்கு தெரியும்?

    அடிஷனல் சார்ஜ் என்பது தற்காலிக ஏற்பாடு. அது முழு கவர்னர் பொறுப்பு கிடையாது. திரு C. ரெங்கராஜன் குறித்த விக்கிபீடியா பக்கத்தில் கூட அவர் ஆந்திராவின் கவர்னர் ஆக இருந்தார் என்பதை தான் முக்கியமாக கூறுகிறார்கள். கடைசியில் அவர் இரண்டு மாநிலங்களுக்கு அடிஷனல் சார்ஜ்/ ஆக்டிங் கவர்னர் ஆக இருந்தார் என்கிறார்கள்.

    நீங்கள் முதலில் சொல்லும் போது அவர் அடிஷனல் சார்ஜ் ஆக இருந்தார் என்றோ ஓராண்டு இருந்தார் என்றோ சொல்லவில்லை. ரெங்கராஜன் தமிழகத்துக்கு கவர்னராக இருந்தார்; அப்புறம் எப்படி நீங்கள் சொல்லலாம் என்றீர்கள். இப்போது வந்து அவர் அடிஷனல் சார்ஜ் என்பது எனக்கு முன்பே தெரியும் என்கிறீர்கள். தெரியும் என்றால் முதலிலே சொல்லலாமே? நான் சொன்னபின் சொல்வது ஏன்?
    எந்த மாநிலத்திலாவது அதே மாநிலத்தை சேர்ந்தவர் முழு நேர கவர்னர் ஆக இருந்திருந்தால் அப்போது நீங்கள் என்னை குறை சொன்னால் அது நியாயம். குறை சொல்ல வேண்டுமானால் எப்படியும், எதையும் சொல்லலாம். இப்போது கூட தேடி பார்த்து அப்படி எந்த மாநிலத்திலாவது அதே மாநிலத்தை சார்ந்தவர் முழு நேர கவர்னராக இருந்தனரா என சொல்லுங்கள்

    ஆறாண்டு இலவச சட்ட ஆலோசனை நீங்கள் கூறினீர்கள் என்றால், வல்லமை குழுவிலேயே இருக்கும் உங்களை ஏன் சட்ட ஆலோசனை சொல்ல பயன்படுத்தவில்லை? உங்கள் மீது உங்கள் குழுவுக்கு இருக்கும் (அவ)நம்பிக்கையை தான் இது காட்டுகிறது

    ஒரு பெண்ணுக்கு பொத்தாம் பொதுவாக பதில் சொன்னதாக சொல்கிறீர்கள் (உங்களுக்கு பொத்தாம் பொதுவாக என்பதை விட்டால் வேறு வார்த்தையே தெரியாதா? அடுத்த முறை வேறு வார்த்தை முயலுங்கள்)

    அந்த பெண் எனக்கு மெயில் மூலம் தொடர்பு கொண்டார் . அந்த பிரச்சனை எனக்கு நேரடியே வந்த பிரச்சனை. வல்லமை மூலம் வந்தது அல்ல. நீங்கள் அதனை வல்லமை குழுவுடன் கேட்டு தெரிந்து கொள்ளலாம். அவரை இரண்டு வழக்கறிஞரை சந்திக்க வைத்து பேசி, அவர்கள் பிரச்சனைக்கு என்ன செய்ய முடியுமோ செய்தோம். அதில் ஒரு பகுதி – ஒரு பத்திரிக்கையில் என்ன சொல்ல முடியுமோ அது மட்டுமே இங்கு சொல்லப்பட்டது .

    எல்லாவற்றையும் குறையாக பார்ப்பதும், குறையாக பேசுவதும் ஒரு மனநிலை. வயதானால் நானும் கூட அப்படி ஆகக்கூடும் !பாவம் நீங்கள் என்ன செய்வீர்கள்?

  5. 1. உங்கள் மீது உங்கள் குழுவுக்கு இருக்கும் (அவ)நம்பிக்கையை தான் இது காட்டுகிறது.~ இதற்கு ஆசிரியர் தான் பதில் சொல்லவேண்டும்.2.(உங்களுக்கு பொத்தாம் பொதுவாக என்பதை விட்டால் வேறு வார்த்தையே தெரியாதா? அடுத்த முறை வேறு வார்த்தை முயலுங்கள்)~’ சட்டத்திற்கு ஒவ்வாத’ஒரு பத்திரிக்கையில் என்ன சொல்ல முடியுமோ அது மட்டுமே இங்கு சொல்லப்பட்டது .~ அப்படியா? அது சட்டத்துக்கு உகந்த பதில் அல்ல.4.எல்லாவற்றையும் குறையாக பார்ப்பதும், குறையாக பேசுவதும் ஒரு மனநிலை. வயதானால் நானும் கூட அப்படி ஆகக்கூடும் !~ அல்ல. இப்போதே, உமக்கு அப்படி ஆகிவிட்டதாக தோற்றம்! எனக்கு பிரச்னை வராது.உமக்கு புத்தி சொல்ல நான் யாரு? கருணையுடன் என்னை மன்னித்து அருளவும். எனக்கு ஜோலி இருக்கிறது. உம்முடம் இனி அளவளாவ நேரமில்லை.நன்றி, வணக்கம்.இன்னம்பூரான்

  6. திரு. இன்னம்பூரான், வழக்கறிஞர் திரு. மோகன்குமார் ஆகிய இருவர் மீதும் வல்லமைக்கு மதிப்பும் நம்பிக்கையும் உண்டு. திரு. இன்னம்பூரானின் சட்ட ஆலோசனைகளும், திரு. மோகன்குமாரின் சட்ட ஆலோசனைகளும் வெவ்வேறு களங்களில் பங்களிக்கக் கூடியவை. இவை இரண்டையும் இணைத்துக் குழப்பிக் கொள்ளுதல் தேவையற்றது என்பதே நம் கருத்து. திரு. இன்னம்பூரான், தமது திரண்ட அனுபவத்தினைப் பல்வேறு கட்டுரைகளாகவும் மறுமொழிகளாகவும் வெளியிட்டு வருவதும் பயனுள்ள வகையில் அமைகிறது. அதே சமயம் திரு. மோகன்குமார், தமது தொழில்சார் / கல்விசார் அனுபவங்களைக் கட்டுரைகளாகவும் கேள்விகளுக்கான பதில்களாகவும் அளித்து வருவ்தும் வரவேற்கத்தக்கது. இருவருமே நமக்கு முக்கியமானவர்கள் என்பதில் ஐயமில்லை. மாற்றுக் கருத்துகள், விவாதங்களுக்கு வலுச் சேர்க்கக் கூடியவை என்றாலும் அவை தனி நபர்களைக் காயப்படுத்துவதாக அமைந்துவிடக் கூடாது என்பதே நம் விருப்பம். அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆளுநராக நியமிக்கப்படுதல் இல்லை. ஆனால், அதற்கு விதிவிலக்கு உண்டு என்பது இந்த உரையாடலிலிருந்து தெளிவாகிறது உணர்ச்சிவசப்பட்டுக் கருத்துப் பரிமாறுவதைத் தவிர்க்குமாறு வேண்டுகிறோம். கருத்து / மாற்றுக் கருத்து என்ற புள்ளியை விட்டு விலகாமல் இருத்தல் நலம். இது, கருத்து விவாதம் என்ற நிலையிலிருந்து தனி நபர்களுக்கு இடையிலான பூசலாக மாறுவதை வல்லமை விரும்பவில்லை. ஒருவருக்கொருவர் மதிப்பும் அன்பும் பேணுவது அனைவருக்கும் நல்லது. தங்களின் புரிதலுக்கு நன்றி நண்பர்களே.

  7. ஆசிரியருக்கு நன்றி பல. ‘…ஒருவருக்கொருவர் மதிப்பும் அன்பும் பேணுவது அனைவருக்கும் நல்லது…’என்பதில் என்னுடைய அணுகுமுறையை வல்லமை சில வருடங்களாக அறியும். ஒரு சிறிய தெளிவு சொல்ல அனுமதியுங்கள். ஆலோசனை வழங்குவது பெரிய பொறுப்பு. சட்ட ஆலோசனை ஒரு படி மேல். எனக்கு அனுபவம் இலவச ஆலோசனையை, நம்பகத்தன்மையுடன், அன்றைய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டதாக, ஷரத்துக்களை முன்னிறுத்தி, பிரத்யேகத்தை பாதிக்காமல், கட்சிக்கார் முழுதும் புரிந்து கொண்டேன் என்று சொல்லும் வரை, வழங்குவது தான். ஒரு பெண்மணிக்கு வழங்கிய ஆலோசனை மீது, கவலையுடன் யான் எழுப்பிய வினாவுக்கு பதிலும், கவர்னர் பற்றிய அரசியல் சாஸன ஷரத்தையும், மதிப்புக்குரிய நண்பர் திரு மோஹன்குமார் அவர்கள் இது வரை தர மறுப்பதின் காரணம் தெரியவில்லை. அந்த பெண்மணி எழுப்பிய பிரச்னை ஆணாதிக்கம் பற்றியது. திரு மோஹன்குமார், அது எழுந்த இடம் வேறு என்கிறார். விடையோ முழுதும் சரியாக படவில்லை. வல்லமை படிக்கும் பெண்களில் சிலர் அந்த ஆலோசனி படி நடந்தால், பெண்ணியத்துக்கே நஷ்டம் வர வாய்ப்பு உண்டு.   அந்த நிலைமை எனக்கு வல்லமை இதழ் ஆலோசனைக்குழு உறுப்பினர் என்ற வகையிலும், மனித நேயம் விரும்பி என்ற வகையிலும், மிகுந்த கவலை தருகிறது. நம் இதழுக்கு நல்ல பெயர் வேண்டும். திரு மோஹன்குமார் உகந்த வகையில் பதில் அளிக்கட்டும். எனக்கு தெரிந்ததை நான் பகிர்ந்து கொள்கிறேன். எனக்கு தனிப்பட்ட முறையில் யார் மீதும் எனக்குக் காட்டம் இல்லை. தவறுகளை, தயங்காமல் சுட்டிக்காட்டுவேன். இந்த விஷயம் பற்றி வாசகர்களின் கருத்தும் முக்கியம்.நன்றி, வணக்கம்,இன்னம்பூரான்06 08 2012

  8. நான் வழக்கறிஞனல்லன். இருந்தபோதும் கவர்னர் நியமனம் சம்பந்தமான இந்த விவாதத்தை கூர்ந்து நோக்கி வருபவன். இன்று இணையத்தை உதவிக்கு அழைத்ததில், நான் அறிந்த செய்திகள்.

    1. கவர்னர் பதவிக்கு நியமிக்கப்பட வயது 35 க்கு மேல் இருக்க வேண்டும்.( 45 அல்ல)
    2. மேலும், அந்த மாநிலத்தை சேராதவராக இருக்க வேண்டும் என்று அரசியலமைப்பு சட்டம் வலியுறுத்துவதாகத் தெரியவில்லை. மாறாக, 1987-88ல் அளிக்கப்பட்ட சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் பரிந்துரையாகத் தரப்பட்டுள்ளது. மீண்டும் 2001ல் அரசியலமைப்பு செயல்படும் விதத்தை மறுபரிசீலனை செய்யும் கமிஷன்(அதே சர்க்காரியா தலைமையில்) அளித்த அறிக்கையிலும் இதே கருத்து(Annexure-I 4.16.01 (ii)) வலியுறுத்தப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.

    இந்த விளக்கங்கள் கீழ்க்கண்ட சுட்டியிலிருந்து எடுக்கப்பட்டவை.
    http://lawmin.nic.in/ncrwc/finalreport/v2b2-4.htm

    விவாதங்கள் தொடரலாம், தெளிவு பிறக்க..

  9. இளங்கோ: நீங்கள் கூறும் இரண்டு விஷயங்களும் சரியே.

    கவர்னர் ஆக நியமிக்கப்படுபவர் அந்த மாநிலத்தை சேர்ந்தவர் ஆக இருக்க கூடாது என்பது சர்க்காரிய கமிஷன் பரிந்துரை தான். ஆயினும் அது கவர்னர் நியமனத்தில் எப்போதும் பின்பற்றப்படுகிறது.

    சொல்லப்போனால் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் என் பெண் பாட புத்தகத்தில் கவர்னருக்கான தகுதிகள் மற்றும் Disqualifications என்று சொல்லும்போது, வயது, இன்ன பிற விஷயங்களோடு அந்த மாநிலத்தை சார்ந்தவர் ஆக அவர் இருக்க கூடாது என்பதையும் சேர்த்தே குறிப்பிட்டுள்ளனர். சர்க்காரியா கமிஷன் பரிந்துரைக்கு பின் தற்காலிக ஆக்டிங் கவர்னர் ஆக சில மாதங்களுக்கு யாரும் இருந்திருக்கிறார்களே ஒழிய (அதுவும் மிக மிக அரிது) முழு நேர கவர்னர் ஆக அதே மாநிலத்தை சேர்ந்தவர் இருப்பது இல்லை

    வல்லமை எடிடர்: தயவு செய்து பதிலில் உள்ள வயதை 35 என்று மாற்றவும். வயதில் ஏற்பட்ட தவறுக்கு வருந்துகிறேன்

  10. திரு. இளங்கோவுக்கு நன்றி. அவர் சொன்ன படி எழுதப்பட்டிருந்தால், சூடான விவாதம் எழுந்திருக்காது. ஒரு நுட்பத்தை விளக்குகிறேன். தற்காலிக அதிகப்படி பொறுப்பில், மிகவும் முக்கியமான விஷயங்களில் தீர்மானம் எடுப்பதில்லை. திரு. ரங்கராஜன் ஒரு வருடம் சென்னை கவர்னர், இவ்வகையில். அவரது நியமன பத்திரத்தில் முழு பொறுப்பு தான் அளிக்கப்பட்டு இருந்தது என நினைவு. அவர் தமிழ்நாட்டு கவர்னராக இருந்த போது அவரை சந்தித்துள்ளேன். அவர் முழுப்பொறுப்பும் தான் வகித்து வந்தார். எது எப்படி இருந்தாலும், அது அரசியல் சாஸனத்தை மீறவில்லை. சுப்ரீம் கோர்ட்டுக்கு போக சான்ஸே இல்லை. இது நிற்க. கணவனின் கடனுக்கு எந்த அளவு மனைவி கட்டுப்படுகிறாள் என்ற முக்கியமான கேள்விக்கு, திரு. மோஹன் குமாரின் பதில் தேவை. இது வாழ்வாதார பிரச்னை. இன்னம்பூரான் 

  11. தமிழக அரசின் இணையத்தளத்தில் குறித்துள்ளபடி திரு. ரங்கராஜன், 03-07-2001 முதல் 17-01-2002 அன்று வரை ஆறு மாதங்களும் சில நாள்களும்  தமிழக ஆளுநராக இருந்திருக்கிறார் (http://www.assembly.tn.gov.in/archive/list/governors1946.htm). இதே காலக்கட்டத்தில்  (24-11-1997 to 03-01-2003) அவர் ஆந்திரத்தின் ஆளுநராகவும் இருந்திருக்கிறார் (http://governor.ap.nic.in/governor/exgovernors.html). 

    Under the rules, a governor has to take prior sanction of the President before leaving his state. Both the President and the Prime Minister are to be informed when a governor intends to be absent from the state except when it does not involve a night away. Applications for such sanctions are to be made by letter or telegram addressed by the governor’s secretary to the President’s secretary. – Audit report heat on governor trips – AG questions Konwar journeys
      (http://www.telegraphindia.com/1120714/jsp/bihar/story_15727899.jsp#.UCEgy03iY3g).

    இதில் பீகார் ஆளுநர், தம் மாநிலத்தை விட்டு, அதிக காலம் வேறு மாநிலத்தில் இருந்தமைக்காகத் தணிக்கைத் துறையால் குற்றம் சாற்றப் பெற்றுள்ளார்.

    ஒரே நபர், இரு மாநிலங்களுக்கு ஆளுநராக இருக்கையில் அவரால் ஒரே நேரத்தில் இரு மாநிலங்களிலும் இருக்க இயலாது. எனவே, ரங்கராஜன், தமிழக ஆளுநராக இருந்த காலம், கூடுதல் பொறுப்பாகவே இருக்க வேண்டும்.

    ஆளுநர் நியமனத்தை முன்னிட்டு, ‘சம்பந்தப்பட்ட கவர்னர் அந்த மாநிலத்தில் பிறந்தவராய் இருத்தல் கூடாது’ என இந்திய அரசியலமைப்பு எதுவும் குறிப்பிடவில்லை. எனவே, சர்க்காரியா குழுவின் பரிந்துரைக்கு அமைய, அது ஒரு நெறிமுறையாகப் பின்பற்றப்படுகிறது எனத் திருத்துவது இன்னும் பொருத்தமாக இருக்கும். 

    இன்னம்பூரான் அவர்கள், வேறு இடுகை தொடர்பான கேள்வியை (கணவனின் கடனுக்கு எந்த அளவு மனைவி கட்டுப்படுகிறாள்?) இங்கே எழுப்புகிறார். அதனை அதே இடுகையில்  கேட்பது, இன்னும் பொருத்தமாக இருக்கும்.

  12. இன்னம்பூரான் அவர்கள், வேறு இடுகை தொடர்பான கேள்வியை (கணவனின் கடனுக்கு எந்த அளவு மனைவி கட்டுப்படுகிறாள்?) இங்கே எழுப்புகிறார். அதனை அதே இடுகையில்  கேட்பது, இன்னும் பொருத்தமாக இருக்கும்.

    ~ அங்கு கேட்டேன், ஐயா. ஆசிரியரும் அதை திரு.மோஹன் குமாரின் கவனத்திற்கு எடுத்து சென்றார்.. ஒரே காலகட்டத்தில் இரு பொறுப்புகள் வகிப்பது பற்றி யான் கூறிய நுட்பத்தை நோக்கவும். சர்க்காரியா கூறிய பரிந்துரையை, மத்திய அரசு ஒரு நெறிமுறையாக எடுத்துக்கொள்ளவில்லை. மத்திய அரசு அந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்டதாகக்க்கூட, ஆவணம் ஒன்றும் எனக்கு உடனே கிடைக்கவில்லை. நீங்கள், யாஹூவின் திறனை பயன்படுத்தி, அது பற்றி செய்தி அளிக்கவும்.
    இன்னம்பூரான்

Leave a Reply to இன்னம்பூரான்

Your email address will not be published. Required fields are marked *