தீக்கொழுந்தில் பனித்துளி (அத்தியாயம்-4)

0

முகில் தினகரன்

அவசரப் பணத்தேவைக்கென்று ஒருவன் தன் சொத்தான சொத்தை விற்பனைக்குக் கொண்டு செல்லும் போது, அவனது அந்தச் சூழ்நிலையைத் தமக்குச் சாதகமாகப் பயன் படுத்திக் கொள்ளும் விதமாய் அந்தச் சொத்தை அடி மாட்டு விலையில் தட்டிச் செல்ல ஒரு கூட்டமே காத்திருக்கும். இது உலக நியதி.

ஆம்!… அந்தக் கூட்டம்தான் சுந்தரின் தறிகளையும் அடிமாட்டு விலையில் அபகரித்துக் கொண்டது.

இதில் மாபெரும் சோகம் என்னவென்றால், அவனது பிரியத்திற்குரிய பழைய தறியை முதலில் வாங்கவே மறுத்த அந்தக் கூட்டம், அவன் கெஞ்சிய கெஞ்சலைப் பார்த்து விட்டு, அரை மனதுடன் ஒரு இலவச இணைப்பாய் எடுத்துக் கொண்டு போனது.

அதைப் பிரியும் போது அவன் உள்மனம் கதறிய கதறல் அவனுக்கு மட்டுமே தெரியும். ‘ச்சே!…ஒரு உயிரற்ற பொருளின் பிரிவைக் கூட ஏன் என்னால தாங்க முடியாமல் போகுது?… என் மனசு அவ்வளவு வீக்கா?…” யோசித்ததில் அவனுக்குள் அவனைப் பற்றியே ஒரு சுய பச்சாதாபம்தான் ஏற்பட்டது.

தறிகள் எல்லாம் போன பின், அந்தத் தறிக் கூடம் அவன் கண்களுக்கு ஒரு மயானம் போல்தான் தெரிந்தது. கண்கணை மூடிக் கொண்டு வேதனையை விழுங்க முயற்சித்தான். மூடிய கண்களுக்குள், அவன் அப்பா..அவருக்கே உரிய லாவகத்தோடு தறியை ஓட்டும் காட்சி மங்கலாகத் தெரிய, தலையை வேகமாகச் சிலுப்பி அந்தக் காட்சியைச் சட்டென அழித்தான். ‘அப்பா நீங்க மட்டும் உயிரோட இருந்திருந்தா இந்தக் கூடம் இப்படி வெற்றிடமாப் போயிருக்குமா?.. போகத்தான் விட்டுடுவீங்களா?.. நான் கையாலாகாதவனாய்ப் போயிட்டேன்ப்பா!” அவனையுமறியாமல் கண்கள் கண்ணீரைக் கொட்டின.

தறிக் கூடத்தின் வாசலில் யாரோ வரும் நிழலாட, அவசரமாய்க் கண்களைத் துடைத்துக் கொண்டு பார்த்தான்.

கக்கத்தில் மஞ்சள் பையை இடுக்கிக் கொண்டு தரகர்.

‘வாங்க தரகரய்யா… பாத்தீங்களா?… எப்படி ‘ஓஹோ”ன்னு இருந்த இந்தக் கூடம் இப்ப ‘ஹோ”ன்னு இருக்கறதை!” வேதனையுடன் சொன்னான்.

‘விடுங்க தம்பி… வாழ்க்கைல மேடு பள்ளம் சகஜம்தானே?… நீங்க என்ன அநாவசியத்துக்கா தறிகளை வித்தீங்க?.. தங்கச்சி கல்யாணத்துக்காகத் தானே வித்தீங்க?… அப்புறமென்ன?”

‘நீங்க வந்த விஷயம்?” அவர் பேச்சைத் துண்டிக்கும் விதமாய் இடையில் புகுந்து கேட்டான் சுந்தா;.

‘மாப்பிள்ளை வீட்டுக்காரங்க ரெண்டு மூணு தடவை கேட்டுட்டாங்க!… நானும் தறிகளை வித்தாச்சு… அவங்களும் ரெடியாயிட்டாங்கன்னு சொல்லி வெச்சிருக்கேன்!… நீங்க வந்தா நாளைக்கே அவங்க வீட்டுக்குப் போயி நாள் குறிச்சிட்டு வந்துடலாம்!… அவங்களுக்குன்னு குடும்ப ஜோசியன் இருக்கானாம்!… என்ன சொல்லறீங்க?”

பாதிக் கிணறு தாண்டி விட்டு, மீதிக் கிணறைத் தாண்டுவோமா?… இல்லை உள்ளார விழுந்திடுவோமா? என்ற சந்தேகத்தில் உழன்று கொண்டிருந்த சுந்தருக்கு என்ன பதில் சொல்லுவதென்றே தெரியவில்லை.

அவன் தயக்கத்தைப் புரிந்து கொண்ட தரகர், ‘தம்பி… நீ எதுக்குத் தயங்கறேன்னு புரியுது… ‘மீதிப் பணத்துக்கு இன்னும் எந்த ஏற்பாடும் பண்ணலையே… இந்த நெலமைல நாள் எப்படிக் குறிக்கறது?… கடைசி நேரத்துல எதுனா விவகாரமாய்டுமோ?ன்னு பயப்படறே… அதானே?”

‘ஆமாம் தரகரய்யா… தறி வித்த காசு பாதிக்குத்தான் ஆகும்!… மீதிக்கு என்ன பண்றதுன்னு தெரியாத நிலைமைல… எப்படி நாள் குறிச்சு… மத்த ஏற்பாடுகளைச் செய்யறது?” சுரத்தேயில்லாமல் பேசினான்.

‘அட நாம என்ன அடுத்த வாரமேவா கல்யாணத் தேதி குறிக்கப் போறோம்?… இது ஆனி மாசம்!… எப்படியும் ஆடி முடிஞ்சு… ஆவணியிலோ… இல்லை புரட்டாசி கழிஞ்சு ஐப்பசியிலோதான் குறிக்கப் போறோம்!. அதனால நிறையவே டைமிருக்கு தம்பி… ஏதாவதொரு ஏற்பாடு பண்ணிடலாம்!”

தரகருக்கென்ன… வெறும் வார்த்தைகள்தான் சுலபமாய்ச் சொல்லி விட்டார், செய்யப் போறது அவனல்லவா?.. திரும்பத் திரும்ப யோசித்தான். பேசாமல் இந்த இடத்தைத் தட்டிக் கழித்து விடலாம்தான். ஆனா தேவி வேற மாப்பிள்ளைய ரொம்பப் பிடிச்சிருக்குன்னு ரெண்டு மூணு தடவை என்கிட்டவே சொல்லிட்டா… எப்படித் தட்டிக் கழிக்க முடியும்?” குழப்பத்திலாழ்ந்தான்.

‘தம்பி… நீ இப்படி யோசிச்சுட்டே இருந்தின்னா காரியம் நடக்காது தம்பி!…”என்று சற்றுக் காட்டமாப் பேசிய தரகர், ‘சரி… நான் போய் உன் அம்மாகிட்டப் பேசிக்கறேன்!” என்று சொல்லியவாறே நகர்ந்தார்.

‘அய்யா… நில்லுங்க!… நாளைக்கு நான் வர்றேன்… போய் நாள் குறிச்சிட்டு வந்திடலாம்!”

தான் எந்தத் தைரியத்தில் அப்படிச் சொன்னோம் என்பது அவனுக்கே புரியவில்லை.

மறுநாள்,

தரகருடன் அவர்கள் வீட்டிற்கு ஒரு எந்திரம் போல் சென்று, அவர்கள் சொன்னதற்கெல்லாம் பிரமை பிடித்தவன் போல் தலையாட்டி வைத்தான்.

நெற்றி நிறையப் பட்டையும், கழுத்து நிறையக் கொட்டையும் போட்டிருந்த அந்த ஜோதிடர், ‘ஐப்பசி வரைக்கும் இழுத்துண்டு போகணுமா?… ஆவணில ஜோரான முகூர்த்தங்கள் எக்கச்சக்கமா இருக்கோல்லியோ?… அதுல ஏதாவதொண்ணைக் குறிச்சுண்டுடலாமே?”

அவருக்கெப்படித் தெரியும் இங்கத்த நிலைமை?

பகீரென்றது சுந்தருக்கு. ‘அய்யோ… ஆவணின்னா இன்னும் ஒன்றரை மாதந்தானே இருக்கு… கடவுளே!”

‘ஜோசியரய்யா… இந்த வீட்டுல எல்லா சுபகாரியங்களுக்கும் நீங்கதான் தேதி குறிச்சுட்டிருக்கீங்க!.. இதுக்கும் ஒரு தேதியச் சொல்லிடுங்க!. நீங்க சொல்ற தேதில மறு பேச்சில்லாம நாங்க கல்யாணத்தை வெச்சுக்கறோம்!” மாப்பிள்ளைப் பையனின் தாயார் சொல்ல,

தொந்தியும், மார்பும் குலுங்க ‘கெக்கே…கெக்கே” என்று சிரித்து விட்டு, ராகம் பாடியபடியே பஞ்சாங்கத்தை மேய்ந்தவர், ‘வர்ற ஆவணி மாசம்… பத்தாம் நாள்… நெறைஞ்ச சுப முகூர்த்த நாள்… அன்னிக்கே வெச்சிடுவோம்!”

அவர்கள் தாங்களாகவே முடிவு செய்து கொண்டு, சுந்தரிடம் தகவலாய்ச் சொல்ல, வேறு வழியில்லாமல் அதற்கும் தலையாட்டி விட்டு அங்கிருந்து கிளம்பினான்.

(தொடரும்)

 

படத்திற்கு நன்றி:

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *