இந்த வார வல்லமையாளர்: (ஜூலை 30, 2012 – ஆகஸ்ட், 05, 2012)

திவாகர்

எல்லாம் மனம் படுத்தும் பாடுதான். சில சமயம் யாருக்கு எது பிடிக்கும் என்று கணிக்கவே முடியாது. எதையாவதொன்றைக் காண்பித்து இதுதான் அழகு என்றும் முடிவு செய்யவும் முடியாது. குறிப்பிட்ட இன்னொன்றைக் காண்பித்து இதுவும் அழகுதான் என்று சொன்னால், மனசு கொஞ்சம் அடம்பிடிக்கலாம். ஆனால் யோசித்துப் பார்த்தால், அட, ஆமாம், அதை விட இது அழகாகத்தான் இருக்கிறது.. என்று மனம் முடிவு சொல்ல ஆரம்பிக்கும். மனசு ரொம்ப பொல்லாதது கூட. எதிலும் திருப்தி அடையாது. இறைவன் ஏன் மனிதர்களுக்கு மட்டும் இப்படி அலைபாயும் மனதைப் படைத்தானோ என்று அதே மனதுதான் படைத்தவனையும் சாடும்.

மலர்ந்து விரிந்து இளஞ்சிவப்பு வண்ணத்துடன் பளிச்சென இருக்கும் ரோஜா அழகா அல்லது வெள்ளை வெளேரென கண்ணைப் பறித்து சுற்றிலும் மணத்தை அள்ளி வீசும் மல்லிகை அழகா என்று எப்படி ஒரு ரசனையுள்ள மனிதனால் முடிவெடுக்கமுடியும்? இரண்டுமே ஒவ்வொரு வகையில் அழகுதானே.. ஆனால் இந்த மனம் இருக்கிறதே.. குரங்கு புத்தி படைத்தது அல்லவா.. பளபளவென இருக்கும் ரோஜாதான் அழகு என ஆரம்பித்து சடக்கென அதைப் பறிக்கும்போது உள்ளேயிருக்கும் ஒரு மெல்லிய கூர்முனை கையில் பட்டு வதைபடுவது போன்ற உணர்ச்சி ஆரம்பிக்கும்.. அவ்வளவுதான், சடாலென ரோஜா இதழ்களைப் பிய்த்துப் போட்டு விடும், மல்லிகையை முகர்ந்து பார்த்துக் கொண்டே இருக்கும். பிறகு மல்லிகைதான் அழகு.. என்று முடிவு கட்டி விடும். பிறகு ஏன் ரோஜா அழகில்லை என்று காரணம் கற்பிக்க ஆரம்பிக்கும். அது அழகாகவே இல்லை என்று ஆராய ஆராய ஆயிரம் காரணங்கள் கிடைக்க ஆரம்பித்து விடும். முதல் காரணமாக ரோஜாவின் உள்ளே மறைந்திருக்கும் முள்ளைக் காண்பிக்கும்.. (அடப்பாவி மனுஷா!, முதலில் தொடும்போதே மென்மையான உணர்ச்சியோடு தொட்டிருந்து அந்த முள்ளும் குத்தாமல் போனால் இத்தனை யோசிப்பாயா).. ஆனால் பாருங்கள்.. இந்த மனதுக்குப் பிடித்தது பிடித்ததுதான்.. பிடிக்காதது பிடிக்காததுதான்.

 
இப்படித்தான் ஒரு சிலருக்கு ஒரு சில மனிதரைப் பார்த்தாலே பிடிக்காது.. ஏன் எப்படி என்று காரணம் கேட்டால் அவர் முழிப்பார். அவர் மனது சொல்லிவிட்டது.. இவர் பிடிக்கவில்லை, அவ்வளவுதான்.. நாம் எத்தனை பிரயத்தனம் செய்தாலும் அவரை மாற்றமுடியாது – அவரே திருந்தி வந்தால் தவிர. ஒரு சிலருக்கு ஒரு சின்ன விஷயம் பிடித்துப் போய் அது மிகப் பெரிய விஷயத்தில் முடித்து விடுவர். ’நீங்க ரெண்டே பேருதானே, எதுக்கப்பா இவ்வளவோ பெரிய வீட்டை வாங்கிட்டே, வாஸ்து விஷயமெல்லாம் பார்த்தியா’ என்று கேட்டால் போதும், அவர் சொல்வார், ‘என்னவோப்பா.. உள்ளே நுழைஞ்சேன், தண்ணி டேப்பைத் தொறந்தேன்.. அப்படியே ஆறு மாதிரி தண்ணீ கொட்டிச்சு, மனசு நிறைஞ்சு போச்சு.. வாங்கிட்டேன். அவருக்கு மனசு சொல்லிவிட்டது.. மனசு நிறைந்து விட்டது. மனசுதான் காரணமாகிவிட்டது.. அத்னால் அந்த வீட்டில் எத்தனை குறைகள் யார் சொன்னாலும் அதை நிவர்த்திக்கவாவது அல்லது குறைகளே பெரிதில்லை என்பது போலத்தான் மனசு சிந்திக்கச் செய்யும். இந்த வீட்டில் இன்னும் என்னென்ன நன்மைகள் இருக்கு என்று ‘பாஸிடிவ்’ ஆக பார்க்கச் சொல்லும். எல்லாம் மனசு செய்யற கோளாறுதான். ’ஏண்டா, சுவீட்டெல்லாம் நல்லா கொட்டிண்டு கடைசீல அந்தப் பொண்ணு வேணாம்னு சொல்லிட்டியே’.. பொண்ணு நல்லாத்தானே இருக்கா’ எனக் கேட்டால் போதும்.. ‘பொண்ணு நல்லாதான் இருக்கா.. ஆனா அவளோட கால் கட்டை விரல் கொஞ்சம் நீளம் கம்மியாக இருக்குடா.. அதனால சட்டுனு புடிக்காம போயிடுச்சு..’ என்பான்.. அடப்பாவி, இதெல்லாம் ஒரு தப்பாடா.. இது இறைவன் படைப்பு இல்லையா என்று கேட்டால் அவனிடமிருந்து பதில் கிடைக்காது.. அவன் மனசுக்குப் பிடிக்கவில்லை.. அவள் கால் கட்டை விரல் மற்ற விரல்களை விட நீளம் சிறிதாக இருப்பதெல்லாம் ஒரு குறையா? இவன் மன்தில்தான் குறை.. எல்லாம் மனக் கோளாறுதான்..

இப்படித்தான் ஒரு கவிதை பாருங்களேன். இந்த மனசு செய்த கோளாறைப் பற்றி

நறுக்கான என் மீசையைப்பார்த்து மோகித்தே,
நாடி எனைத் திருமணம் செய்து கொண்டாள் என்னவள்.
மகிழ்ந்திருக்கும் பொழுதுகளில் அதற்கு செல்ல கவனிப்புகள் உண்டு.
மோதல்களின் போது, வலிக்க வலிக்க   இழுத்து, கூடவே
முரட்டு ராட்சசா என்ற பட்டமும் தருவாள் அவள்.
மகன் பிறந்த பின், மௌசு கூடிப்போனது என் மீசைக்கு! .
முகத்தோடு வைத்து கொஞ்சுகையில், பிஞ்சது நெளிகையில்,
மெல்லவே வந்து விலக்கி விட்டு, பெருமிதமாய்ச் சிரிப்பாள்.

பேசத் தெரிந்தபின், மகனுக்கு கதையெல்லாம் சொல்லி,
முத்தத்தைப் பெற எத்தனிக்கும் பல சமயங்களில்,
” மீசை குத்துது, வேணாம்பா”   என்ற மகன் சொன்னதால்,
மெல்லவே  முறிந்தது மீசை மேல் வைத்த ஆசை.
அழகு நிலையத்தில் அமர்ந்திருக்கும் போது,
ஓர் சந்தேகம். மீசையின்றி முகம் மாறுவதை மழலை
மனது எப்படி ஏற்கும்? அழுவானோ? புறந்தள்ளுவானோ?
கூடவே   மோதியது அடி மனதிலிருந்து-
ஓர் நிழற்காட்சி இதே போல் அப்பா அமர்ந்திருந்த
அந்த நாளும், அவர் அனுபவித்த இனம் புரியா வலியும்

அடக் கடவுளே, கடைசியில் அந்த மீசை பறிபோன சோகத்தை வர்ணிக்கும்போது நம் மனசும் கொஞ்சம் வலிக்கிறது அல்லவா.. அதுதான் மனம் செய்யும் வேடிக்கை.. எதற்காக மீசையை வளர்த்து, அந்தப் பெண் அதை மோகித்து, பிள்ளை பெற்று… அந்தப் பிள்ளை மூலம் மீசையை இழக்கச் செய்து,, அதனால் எப்போதோ மேலே போய்விட்ட அப்பாவை நினைக்க வைத்து.. பொல்லாத மனதே.. உன்னை என்ன செய்தால் தகும்.. எல்லாம் அந்த மீசையினால் வந்த வினை என்று தப்பித்துக் கொள்வாயோ….
 

நன்றாக யோசிக்க ஒரு நல்ல சந்தர்ப்பத்தைத் தன் கவிதை மூலம் கொடுத்த பாகம் பிரியாள் அவர்களை இந்த வார வல்லமையாளராக வல்லமை குழுவினர் சார்பாக தேர்வு செய்யப்படுகிறார். அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். பாகம்பிரியாள் என்ற பெயரே இனிக்கிறது. இறைவனின் இதயபாகத்தைப் பிரித்து தனது பக்கம் வைத்துக் கொண்டு இந்த பிரபஞ்சத்தையே ஆட்டி வைக்கும் அன்னையின் பெயரல்லவா.. இனிக்கத்தான் செய்யும்.

 

இந்த வாரத்திலிருந்து எனக்கென பிரத்தியேகமான ஒரு கடைசி பாரா வைத்துக்கொள்ளலாம் என நினைக்கிறேன். (இப்படி அடாவடித்தனம் செய்வதற்கு ஆசிரியர் என்ன சொல்வாரோ!) இது எனக்கு மிகவும் பிடித்த விஷயத்தைச் சுட்டிக் காட்டப் பயன்படுத்தலாம் என்ற நினைப்பு.

இந்த வாரக் க்டைசி பாராவில் வருபவர் திரு சக்தி சக்திதாசன் அவர்கள். இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞன் கண்ணதாசனின் சிறப்பினைப் போற்றியிருக்கிறார். அதுவும் பாமரர்களை தன் கவிதையால் சிறப்பிக்கச் செய்த வரிகளைப் படிக்கும்போது இதுபோல இன்னொரு கவிஞன் இன்னும் எத்தனை யுகம் கழித்து வருவானோ என்று தோன்றுகிறது. படித்தவர் முதல் பாமரன் வரை போற்றும் ஒரே கவிஞன் கண்ணதாசன் மட்டுமே என்பதில் யாருக்கேனும் எள்ளளவேனும் அனுமானம் உள்ளதோ.. இந்த வாரத்தில் வல்லமையில் கவிரயரசரைக் கொண்டு வந்ததற்காக சக்தி சக்திதாசன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி உரித்தாகுக.

 

.

பதிவாசிரியரைப் பற்றி

7 thoughts on “வல்லமையாளர்

  1. உரிய விருதைத் தட்டிச்சென்ற பாகம் பிரியாளுக்கு என் வாழ்த்துக்கள்; கண்ணதாசனின் தாசனான சக்தி தசனுக்கும் தான்.
    இன்னம்பூரான்

  2. கவிதை என்பது மனதின் நுண்ணிய வெளிப்பாடு. அந்த கவிதை பிரசுரம் ஆகி, அந்த வரிகளை படிக்கும் பொழுது மிகுந்த மகிழ்ச்சி. அதற்கு உரிய பாராட்டும் பரிசும் , கிடைத்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி. வாரத்தின் முதல் நாளே அப்படி மகிழும் வாய்ப்பைத் தந்த மரியாதைக்குரிய எழுத்தாளர் திரு. திவாகர் அவர்களுக்கு மிக்க நன்றி. மேலும் பாகம் பிரியாள் என்ற பெயரே இனிக்கிறது என்றும் எழுதியுள்ளார். இனி ஒவ்வொரு கவிதை எழுதும் போதும் நிறைய இனிப்பு சாப்பிட்ட நிறைவு நெஞ்சில் தங்கிவிடும்! மீண்டும் திரு திவாகர் அவர்களுக்கு நன்றி.

  3. தட்டிச் சென்ற விருதிற்கு உரிய பாராட்டை அள்ளித்தந்த திரு. இன்னம்பூரான் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி

  4. முதல் பாராட்டு 
    பாசக் கவிதைக்கு..
    மீண்டும் பாராட்டு,
    படைப்பாளி 
    வல்லமையாளரானமைக்கு…!
           -செண்பக ஜெகதீசன்…

  5. வல்லமை கூகிள் குரூப் மூலம் பாராட்டு மழையினை அள்ளிப்பொழிந்த திரு அண்ணா கண்ணன், திரு திவாகர், திரு இன்னம்பூரான், திரு இளங்கோ, திரு தமிழ்த் தேனி, திரு செண்பக ஜெகதீசன்,திரு துரை ந.உ அவர்களுக்கும், திருமதி சாந்தி மாரியப்பன், , திருமதி பவழ சங்கரி, திருமதி உமா மோகன் அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி.

  6. ஆம்! பாகம்பிரியாள் என்ற பெயர் எனக்கும் ரொம்ப பிடித்தது 🙂 வல்லமையாளரானமைக்கு வாழ்த்துகள்! திவாகர் ஜிக்கும், சக்தி அவர்களுக்கும், வாழ்த்துகளும் வணக்கங்களும்.

  7. வல்லமையாளர் பாகம் பிரியாளுக்கு எனது பாராட்டுக்கள்.                                                                                                                                                                                                                                  திரு திவாகர் அவர்கள் இந்த வாரம் முதல் கடைசி பத்தியில் தனக்குப் பிடித்த விஷயத்தைச் சுட்டிக் காட்ட முனைந்திருப்பது வல்லமை விருது வழங்கும் செயலுக்கு  மேலும் ஒரு சிறப்பு. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *