இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (18)

0
சக்தி சக்திதாசன்
 

இனிய வாசக நெஞ்சங்களுக்கு அன்பு வணக்கங்கள்,

இதோ வருகிறது, இதோ வருகிறது என்று எத்தனையோ ஆத‌ரவு, எதிர்ப்புக் கருத்துகளுக்கு மத்தியில் வந்திறங்கி விட்டது ஒலிம்பிக் பந்தயங்கள்.  இந்த ஒலிம்பிக் பந்தயங்கள் இங்கிலாந்து நாட்டிற்கு கொண்டு வரப் போகும் நன்மை, தீமைகளைப் பற்றி ஆளுக்கு ஆள் கருத்துப் பரிமாற்றம் செய்து விளாசித் தள்ளி விட்டார்கள் போங்கள்.

22 மில்லியன் பவுண்ட்ஸ் செலவில் “சிலம் டோஹ் மில்லியினர் ” ( Slum Dog Millionaire) தயாரிப்பாளர் “டானி பொயில்” (Danny Boyle) அவர்கள் தயாரித்த ஒலிம்பிக் ஆரம்ப நாள் தொடக்க விழா என்னவாகுமோ ?  ஏதாகுமோ ? என்று பல்வேறு தரப்பட்ட கருத்துகள் பல்வேறு முனைகளில் இருந்து கிளம்பியிருந்தது.

ஏழு வருட உழைப்பு இந்த ஒலிம்பிக் போட்டிகளை ஒழுங்கமைப்பதில் செலவிடப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி இதற்கான சாதாரண மக்களின் வரிப்பணத்திலிருந்து அரசாங்கம் செலவழித்திருந்தது ஏராளம். இவையனைத்துக்கும் பெறுமதி வாய்ந்த ஒரு வெற்றிகரமான விழாவாக இவ்வொலிம்பிக் போட்டிகள் அமையுமா? இல்லையா? எனும் கேள்விக்கணைகள் மிக வேகமாகத் தொடுக்கப்பட்டன‌. 

“சொன்னேன் பார்த்தாயா?”  என்று சொல்வதற்கு என்று சிலபேர் காத்திருப்பார்களே! அவர்களோ, ஆவலுடன் இவ்வொலிம்பிக் போட்டிகள் பலவிதமான பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டுமென எதிர்பார்த்தார்கள்.

ஒலிம்பிக் பந்தயத்தில் ஈடுபடும் போட்டியாளர்களும், மற்றும் இப்போட்டியில் பங்கு பெற வந்திருக்கும் முக்கியமான அங்கத்தவர்களும் ஒலிம்பிக் மைதானத்தை அடைய தாமதம் ஏற்படக்கூடாது என்பதற்காக மத்திய லண்டன் பகுதியில் இருந்து இவ்வொலிம்பிக் மைதானம் அமைந்துள்ள இடத்திற்கு சாலையில் உள்ள ஒரு பகுதியை ஒலிம்பிக் சம்பந்தப்பட்ட வாகனங்கள் மட்டுமே பிரயாணிக்கலாம் என்று விதித்தார்கள்.

போச்சுதடா !

டாக்ஸி சாரதிகள் தொடக்கம் சாதாரண பிரயாணிகள் வரை அனைவரும் முனக ஆரம்பித்து விட்டார்கள். அசையவில்லை போங்கள், அரசாங்கமும், லண்டன் மேயரும், லண்டன் ஓலிம்பிக் குழுவினரும்!

ஜீலை 25ம் திகதி மாலை 9 மணியளவில் ஆரம்பித்தது ஒலிம்பிக் போட்டி ஆரம்ப விழா. இதுவரை நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளிலிருந்தும் இவ்வாரம்ப விழா வேறுபட்டிருந்தது. இங்கிலாந்து நாட்டு மக்களில் பெரும்பான்மையோரை , மிகவும் உணர்ச்சி வசப்படச் செய்திருந்தது. இங்கிலாந்தின் சரித்திர வரலாறு அப்படியே ஒரு குறும்படம் போன்ற  வகையில்  காட்டப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் விவசாயத்தில் தங்கியிருந்து பின்னர் தொழிற்சாலைப் புரட்சியின் மூலம் வளர்ச்சியடைந்து பெண்கள் வாக்குரிமை பெற்றதும், வேற்று நாட்டினத்தவரின் குடிவரவு என் அனைத்தும் அழகாய் சித்தரிக்கப்பட்டிருந்தது.

அவ்வாலைகளின் வார்ப்பாய் ஐந்து வளையங்கள் உருவாக்கப்பட்டு ஒலிம்பிக் சின்னமாக ஒன்றாகக் கோர்க்கப்பட்டது மிகவும் மனதைக் கவரும் வகையில் அமைந்திருந்தது. அத்தோடு ஒலிம்பிக் சுவாலை ஏற்றப்பட்ட விதம் மிகவும் பிரமாதமாக அமைந்திருந்தது.

இத்தகைய பரபரப்புகளுக்கிடையே ஆரம்பிக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டி நடைபெறும் பகுதியை ஒரு நோட்டம் பார்க்கலாம் என நானும் எனது மனைவியும் எண்ணினோம்.

விளைவு !

26ம் திகதி காலை எமது பேருந்துப் பயணம் ஆரம்பமாகியது. நாம் வாழும் கென்லி பகுதியில் இருந்து ஒரு பேருந்தைப் பிடித்துக் குறைடன் வந்து சேர்ந்தோம் . அங்கு சிறிது நேரம் கழித்த பின்னர் லூஷியம் எனும் பகுதி நோக்கி ஒரு பேருந்தைப் பிடித்து மேல் தட்டில் ஏறி முன் வரிசையில் உட்கார்ந்து கொண்டோம்.

பல வருடங்களாக நாம் காரிலேயே எமது பயணங்களை மேற்கொள்வதினால் பேருந்தில் உட்கார்ந்ததும் நாம் ஏதோ சிறு பிள்ளைகள் அழகிய காட்ச்சிகளைக் காண்பது  போல ஒரு உற்சாகம்.

அடிக்கடி பயணம் செய்யும் தெருக்கள் ஏதோ புது இடம் போலக் காட்சியளித்தது. லூஷியத்தை நெருங்கும் போது மதியம் 12 மணி ஆகியது. மனைவி பசிக்கிறதே என்று தொடங்கவும் ஒரு உணவு விடுதி கண்களில் தட்டுப்பட்டது. இந்திய, இலங்கை உணவகம். அருமையான சைவ புபே வகையிலான சாப்பாடு. ஒரு வெட்டு வெட்டி விட்டு லூஷியத்தை வந்தடைந்தோம்.

பின்பு என்ன? அங்கிருந்து மற்றொரு பேருந்து ஒலிம்பிக் கிராமம் என அழைக்கப்படும் ஸ்ராட்போர்டு எனும் இடத்திற்கு  எம்மை அழைத்துச் சென்றது. அப்பேருந்தில் ஒலிம்பிக் மைதானத்தில் பணிபுரியும் ஓரிருவர் அவர்களுக்குரிய ஒலிம்பிக் உடையுடன் ஏறினார்கள். அவர்களில் ஒருவர் எமக்கு முன்னால் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்தார். சுமார் 25 வயதிருக்கும். ஆப்பிரிக்க இனத்தவர்.

அனைவருடனும் சகஜமாக உடனடியாகப் பேசும் வழக்கமுடைய என் மனைவி அவரை நெருங்கி “இப்பேருந்து எம்மை ஒலிம்பிக் மைதானத்திர்கு அருகில் கொண்டு செல்லுமா? ” என்று கேட்டார்.

கொஞ்சம் அசந்து போன அவர் “தெரியவில்லை நானும் இப்போதுதான் முதல் தடவையாகப் போகிறேன்” என்றார். என் மனைவி என்னைப் பார்க்க , நான் பேருந்தின் கூரையைப் பார்த்தேன்.

ஒருவாரு நீண்ட பயணத்தின் பின்னர் ஒலிம்பிக் கிராமத்தில் வந்திறங்கினோம்.

ஜே ! ஜே ! என்றிருந்தது. ஒரே கூட்டம். வெளிநாட்டுக்காரர் ஏராளம். வழி நெடுக போலிசார் கடமையிலீடுபட்டிருந்தனர். ஆனால் அவர்கள் அனைவருடனும் மிகவும் சினேகபூர்வமான முறையில் நடந்தனர். ஒலிம்பிக் மைதானத்தை நோக்கி நடந்து கொண்டிருந்த எம்மை “நீங்க தமிழா ?” எனும் ஈழத்தமிழ் ஒலி சடன் பிரேக் போட்டு நிறுத்தியது. திரும்பிப் பார்த்தோம். ஒரு 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் ஒரு 30 வயது வாலிபருடன் கையில் புத்தகங்களுடன் நின்றிருந்தார்.

ஈழத்தில் கால் போன போக்கிலே, மனம் போக்கிலே வாழ்ந்து கொண்டிருந்த தன்னை இயேசுநாதரின் கருணை எப்படி மாற்றியது ரஎன்று விளக்கி எம் கையிலும் கர்த்தரின் சிறப்பைப் பகரும் சில புத்தகங்களைத் திணித்தார். அவருக்கு நன்றி சொல்லி விட்டு ஒலிம்பிக் மைதானத்தை நோக்கி நடந்தோம்.

திருவிழா போலக் கூட்டம் நடந்து கொண்டிருந்த படியால் பல நிர்வாகிகள் அனைவரையும் வழிநடத்திக் கொண்டிருந்தார்கள். பலவிதமான பெரிய வியாபார நிறுவனங்கள் தமது வியாபாரத்தளங்களை நிர்மாணித்திருந்தன. ஒருவாறு ஒலிம்பிக் மைதான வாயிலை அடைந்தோம்.

அங்கே நின்றிருந்தவர் “டிக்கெட் எங்கேப்பா” என்று கேட்டதும் “ஓ அது வேறயா?” என்று கேட்டு விட்டு ஷாப்பிங் சென்டர் பக்கம் திரும்பினோம். “வெஸ்ட்பீல்டு” (Westfield) எனும் பெரிய ஒரு சூப்பர் மார்க்கெட் அங்கு பெரிய அளவில் நிர்மாணிக்கப்பட்டிருந்தது.

உள்ளே ஏராளமான பிரபல்யமான கடைகள் இயங்கிக் கொண்டிருந்தன. பொருளாதார நெருக்கடி என்று சொல்கிறார்களே எப்படி இத்தனை பேர் இங்கே ஷாப்பிங் ? நானும் என் மனைவியும் வியந்தோம் … ஓ பெரும்பான்மையோர் உல்லாசப் பய்ணிகள் அல்லவா? வெளிநாடுகளில் இருந்து ஒலிம்பிக் போட்டிக்காக வந்தவர்களோ …..

சரி ஒரு மில்க் ஷேக் சாப்பிடுவோம் என்று மக்டொனால்ட் கடைக்கு வந்தால் …….. அப்பப்பா ! பிரபல்யமான அனைத்து உணவுக் கடைகளும் ஒருங்கே அமைந்த இடத்தில் ஒரு 500 பேர் உட்கார இருக்கைகள் போட்டும் கூட எம் இருவருக்கும் இருக்க இடம் கிடைக்கவில்லை….. அப்புறம் என்ன நின்றபடியே மில்க்ஷேக்கை உறிஞ்சினோம் .

இவ்வடி ஒருவாறாக எமது சிறு சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு திரும்ப பேருந்து நிலையத்தை நோக்கி நடந்து கொண்டிருக்கையில் லண்டன் போக்குவரத்துத் திணைக்களத்தைச் சேர்ந்த ஆலோசகர்கள் சிலர் நின்றிருந்தனர். அவர்களிடம் சென்று பேருந்துக் கட்டணங்களைப்  பற்றிக் கேட்ட போது ஒருவர் மாறி ஒருவர் வித்தியாசமான பதிலைத் தர போச்சுடா , தேவையில்லாத வம்பு என மெதுவாக நழுவி விட்டோம்.

பேருந்துக்கு காத்திருக்கும் போது எமக்கருகில் இரு போலிஸ் உத்தியோகத்தர்கள் நின்ரிருந்தனர். எமக்கு நேர் எதிரே புற்தரையில் ஒரு பெண் மல்லாந்து படுத்திருந்தார். அவர் தூங்குகிறாரோ அன்றி இறந்து விட்டாரோ என்று நாம் சந்தேகித்துக் கொண்டிருக்கும் போது அச்சந்தேகம் போலீஸ் உத்தியோகத்தருக்கும் வந்தது போலும். அவர்கள் அவர் அருகே சென்று தட்டி எழுப்பிப் பார்த்தார்கள், சிரமப்பட்டு எழுந்த அந்தப் பெண்ணோ “சும்மா போங்கப்பா ! தூங்க விட மாட்டீங்களா?” என்று திரும்பிப் படுக்கவும் சிரித்தவாறே போலிசார் திரும்பினர். அதற்குப் பினனால் அப்பேண் வேறு போலிசாரினால் இரண்டு மூன்று முறை தட்டிப்பார்க்கப்பட்டார் ……..

பேருந்தில் ஏறி உட்கார்ந்த எமது பயணம் இரவு சுமார் எட்டு மணியளவில் நிறைவு பெற்றது.

நான் இக்கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் போது ஒலிம்பிக் போட்டியின் 5 வது நாள். இங்கிலாந்து இன்றுதான் முதன்முறையாக இரண்டு தங்கப் பதக்கங்களைப் பெற்றது. இதுவரை சுமார் 6 பதக்கங்களைப் பெற்றுள்ளது. முன்னனியில் இருக்கும் அமெரிக்காவும், சைனாவும் பதக்கங்களில் 20 ஜத் தாண்டி விட்டன.

என்ன நாம் இவ்வளவு செலவு செய்து ஒலிம்பிக் போட்டிகளை நடத்துகிறோம் சே! போயும், போயும் 6 பதக்கங்கள் தானா இதுவரை கிடைத்தது என்று ஒரு சாராரும், சும்மா போங்கப்பா எத்தனை பதக்கங்கள் வாங்குகிறோம் என்பது பெரிதல்ல, அனைத்து உலகநாடுகளும் வேற்றுமைகளை மற்ந்து பங்கு பெறும் இச்சினேகபூர்வமான போட்டிகள் எமது நாட்டில் நடைபெறுகிறது என்பதுதான் முக்கியம் என ஒரு சாராரும்….. இவை ஒன்றையுமே காதில் வாங்காமல் தாமுண்டு தம் வேலையுண்டு என்று ஒரு சாராரும் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒலிம்பிக் போட்டிகளின் சின்னம் ஐந்து வளையங்கள் ஒன்றோடொன்று இணைந்திருக்கும். அதன் அர்த்தம் உலகின் ஐந்து கண்டங்களையும் வேறுபாடுகளைக் களைந்து இணைக்கும் ஒரு நிகழ்வு என்பதாகும்.

இன்றைய உலகிலே ஒரு பக்கம் போர்கள் மூண்ட வண்ணம் இருக்கின்றது. இன்னொரு பக்கம் பசி பட்டினியால் மக்கள் மடிந்து கொண்டிருக்கிறார்கள். வேறு பக்கம் இயற்கை அனர்த்தங்கள் உலகை அழித்துக் கொண்டிருக்கின்றன. இத்தகைய நிகழ்வுகளாவது எம்மை மனிதர்கள் என்று எமக்கு நினைவு படுத்தட்டும். நிறம், மொழி, மதம் எனும் பேதங்களைக் கடந்து நாம் மனிதர்களாகக் கைகோர்த்து நிற்போம். அதுவே அமைதியான ஒரு அகிலத்திற்கு வழிவகுக்கும் என்பதை நினைவில் கொண்டு இத்தகைய சர்வதேச இணைப்பு நிகழ்வுகளின் வெற்றிக்கு ஆத்ரவளிக்க உறுதி பூணுவோம்.

அடுத்த மடலில் சந்திக்கும் வரை
அன்புடன்
சக்தி சக்திதாசன்
லண்டன்

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *