கட்டுரைகள்ஜோதிடம்வார ராசி பலன்

வார ராசி பலன் 12.08.2012 முதல் 18.08.2012 வரை

காயத்ரி பாலசுப்ரமணியன்

மேஷம்: இந்த வாரம் மாணவர்கள் புதிய விஷயங்களை அறிந்து கொள்ளும் துடிப்புடன் செயலாற்றுவார்கள். பெண்கள் பிறர் கூறும் குறைகளைப் பெரிது படுத்த வேண்டாம். பெற்றோர்கள் பிள்ளைகளின் சிறிய உபாதைகளை அலட்சியப்படுத்தாமல் தகுந்த மருந்துகளைத் தருவதன் மூலம் அவர்களின் ஆரோக்கியம் நலிவடையாமல் பார்த்துக் கொள்ளலாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் வெளியில் காட்டும் பரிவு, இல்லத்திலும் இருக்குமாறு பார்த்துக் கொண்டால், இல்லத்தில் அமைதி எப்போதும் நிலவும். வியாபாரிகள் சரக்குகளின் தட்டுப்பாடு இல்லாதவாறு, நல்ல முறையில் திட்டமிட்டால், வாடிக்கையாளர்களின் வரவு எப்போதும் போலவே இருக்கும்..

ரிஷபம்: இந்த வாரம் வியாபாரிகள் சரக்குகளுக்குரிய பாதுகாப்பைத் தக்க நேரத்தில் அளித்தால், நஷ்டத்தைத் தவிர்க்கலாம். உங்களை ஆட்கொள்ளும் காரணமற்ற சோர்வுகளை நீக்க, பெண்கள் எளிமையான உடற்பயிற்சி செய்து வாருங்கள். கலைஞர்கள் முக்கியமான காரியங்களில், தீவிர சிந்தனை மற்றும் திட்டத்தோடும் செயல்படுவது அவசியம். முதியவர்கள் அறிவுரைகளை இங்கிதமாகச் சொன்னால், குடும்ப உறவுகளின் இனிமை கெடாமல் இருக்கும். மாணவர்கள் இரவலாய்ப் பெற்ற விலை உயர்ந்த பொருளைப் பயன்படுத்துவதில் கவனமாக இருந்தால், வீண் செலவுகளையும், வேண்டாத மன உளைச்சலையும் தவிர்த்து விடலாம்.

மிதுனம்:குடும்பத்தில் நடக்கும் சந்தோஷமான நிகழ்ச்சிகளால் கலகலப்பும் உற்சாகமும் கூடும். மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லி வந்தால், எந்த வம்பும் அருகே வராது. ஆரோக்கியம் வியாபாரிகளின் பரபரப்புக்கு ஈடுகொடுக்கும் விதமாக அமைவதால், புதிய ஒப்பந்தங்களுக்காக அதிகம் உழைப்பார்கள். பணியில் இருப்பவர்கள் நண்பர்களிடம் உரிமை எடுத்துக் கொள்வதிலும் வரையறை இருப்பது நல்லது. கலைஞர்கள் புறம் கூறுபவர்களின் பேச்சிற்குச் செவி சாய்க்காமல் இருப்பது அவசியம். பொறுப்பில் உள்ளவர்கள் விவாதங்களில், சர்ச்சைக்கு இடம் தராதவாறு பேசுவது புத்திசாலித் தனம்.

கடகம்:. மாணவர்கள் படோடபத்தைத் தவிர்த்து எளிமையாய் இருந்தால், அனைவரும் உங்கள் பக்கமே! பணியில் இருப்பவர்கள் மேலதிகாரிகளுடன் கருத்துப் பரிமாற்றம் செய்கையில் இதமாகவே நடந்து கொண்டால், உங்கள் கருத்துக்கு மதிப்பிருக்கும். பொது வாழ்வில் உள்ளவர்கள் சந்தேகத்துக்கு இடமளிக்காத வகையில் உங்கள் செயல்பாட்டைச் செம்மையாக்கிக் கொள்வது நல்லது. வியாபாரிகள் எழுத்துப் பூர்வமாகவே ஒப்பந்தங்களை முடிப்பதில் கவனமாக இருந்தால், அதிக லாபம் பெறலாம். சில நேரம், பெண்கள் பிள்ளைகளின் விஷயத்தில் முடிவெடுக்க இயலாமல் குழப்பமான நிலை இருக்கும். எனவே பொறுமை காப்பது அவசியம்.

சிம்மம்: இந்த வாரம் தொழில் வகையில் ஏற்படும் மாற்றங்கள், சுய தொழில் புரிபவர்களின் உயர்வான நிலைக்கு அடித்தளமாக அமையும். இதனை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டால், அதிக லாபம் பெறலாம். முதியவர்கள் ஆரோக்கியத்திலும் சற்றுக் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். பிள்ளைகளோடு மகிழ்ச்சியாக நேரம் செலவு செய்யலாம். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் உள்ள ஏற்ற இறக்கங்களை உணர்ந்து செயல்படுவது அவசியம். பெண்களின் புத்திசாலித்தனத்தால், சேமிப்பும், வாழ்க்கை வசதியும் அதிகரிக்கும். கலைஞர்கள் பணிவாக நடந்து கொண்டால், மூத்தோரின் ஆசியும், ஆதரவும் தக்க சமயத்தில் கிடைக்கும்

கன்னி: பெண்கள் அன்றாட வரவு செலவுக் கணக்குகளை எழுதி வாருங்கள். வீண் செலவுகளைக் கண்டு பிடிப்பதோடு அவற்றைக் குறைக்கவும் முடியும். மாணவர்கள் பேச்சில் உள்ள கட்டுப்பாட்டை உணவிலும் கடைப்பிடித்தால், எந்தத் தொந்தரவும் இன்றிப் படிப்பில் கவனம் செலுத்த முடியும். பொது வாழ்வில் உள்ளவர்கள் தங்கள் செல்வாக்கை நல்ல விதத்தில் பயன் படுத்திக் கொள்வது புத்திசாலித் தனமாகும். எளிதில் முடியக் கூடிய சொத்து விவகாரங்கள், இந்த வாரம் சற்றே இழுத்தடிக்கக் கூடும். வியாபாரிகள் சரக்குகளுக்குரிய பணத்தைப் பட்டுவாடா செய்யும் முன்பு, நிறுவனத்தின் நம்பகத்தன்மையை உறுதி செய்து கொண்டால் உங்களின் நாணயம் குறையாது.

துலாம்: கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களை ஒத்துக் கொள்ளும் முன் அதில் உள்ள சாராம்சத்தை அறிந்து கொள்வது அவசியம். மாணவர்கள் பேச்சு வார்த்தைகளில் கவனமாய் இருந்தால் நினைத்த காரியம் கை கூடும். பண விஷயங்களில், நண்பர்களை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். நீங்கள் போட்டிருந்த கடன் மனுக்கள் மூலம் கிடைக்கும் பணம் சற்றே தாமதத்திற்குப் பின் கிடைக்கலாம். எனவே அதற்கேற்றவாறு திட்டமிட்டுக் கொள்ளுங்கள். இந்த வாரம் பணியில் இருப்பவர்கள் உடனிருப்பவர்களின் செய்கையால், சங்கடமான சூழலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உறவுகள் தரும் ஆதரவு மனதுக்கு இதமாய் இருப்பதால், மன இறுக்கம் குறையும்.

விருச்சிகம்: பணியில் இருப்பவர்கள் அவ்வப்போது சில சுணக்கங்களை எதிர் கொண்டாலும் உங்கள் மன உறுதியால், அனைத்தையும் கச்சிதமாக முடித்து விடுவீர்கள். மாணவர்கள் படிப்பில் இருந்த மந்தகதி மாறுவதால், புதிய உற்சாகத்துடன் வலம் வருவார்கள். பெண்கள் இனிமையாகப் பேசி பணம் கறப்பவர்களை, இனங்கண்டு ஒதுக்கி விட்டால், செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கலைஞர்கள் சூழலுக்குத் தக்கவாறு முடிவெடுப்பதன் மூலம் பல பிரச்னைகளை முளையிலேயே கிள்ளி விடலாம். பொது வாழ்வில் உள்ளவர்கள் தங்கள் கருத்துக்களைக் கோர்வையாகச் சொல்லுவது மூலம் பல சலுகைகளைப் பெறுவதோடு, தங்களுக்கு வேண்டிய ஆதரவையும் தக்க வைத்துக் கொள்வது சாத்தியமாகும்.

தனுசு: பணவரவு அதிகரிப்பதால், இந்த வாரம் பல செயல்கள் கிடுகிடுவென்று நடந்தேறும். பெண்கள் பிள்ளைகளுடன் விரும்பிய இடங்களுக்குச் சென்று மகிழ்வீர்கள். மாணவர்கள் நண்பர்களிடையே பணம் கைமாற்றாகக் கொடுப்பதை நாசுக்காகத் தவிர்த்து விடுங்கள். நட்பு கெடாமல் இருக்கும். பெண்கள் தெளிவான சிந்தனையுடன் செயலாற்றினால் தடுமாற வேண்டியிருக்காது. கலைஞர்கள் பிறரிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளாமல் அளவாகப் பழகுதல் அவசியம். பணியில் உள்ளவர்கள் வேலை செய்யும் இடங்களில் மனதில் பட்டதைச் சொல்லுவதை விட, மற்றவர்க்குத் தேவையான செய்திகளை மட்டும் பரிமாறிக் கொள்வது நல்லது.

மகரம்: மாணவர்கள் பகல் கனவைக் காண்பதை விட, உங்கள் உழைப்பை நம்புவது நல்லது. பெண்கள் நிறைவு என்பது பொருளில் இல்லை, மனதில்தான் உள்ளது என்பதை உணர்ந்தால், வாழ்க்கை அமைதியாகச் செல்லும். சில சமயம் பிள்ளைகளின் போக்கு புரிந்து கொள்ள முடியாமல் இருந்தாலும், பெற்றோர்கள் கனிவாக நடந்து கொண்டால், அவர்களின் அன்பைச் சம்பாதித்துக் கொள்ளலாம். கலைஞர்கள் பேச்சில் நிதானமும், சமயோசிதமும் இருந்தால், எதனையும் சாதிக்க முடியும் என்பதை உணர்ந்து செயல்படுங்கள். பொது வாழ்வில் உள்ளவர்கள் உங்களின் பிடிவாதத்தைச் சற்றுக் குறைத்துக் கொண்டால், வெற்றி உங்கள் அருகில் நிற்கும்.

கும்பம்: குடும்பத்தில் சில குழப்பங்கள் உருவாகும் சூழல் இருப்பதால், பெண்கள் தகுந்த ஆலோசனையுடன் செயல்பட்டு வருவது புத்திசாலித்தனம். விருந்து, விசேஷம் ஆகியவற்றிற்கு மகிழ்வுடன் பணம் செலவழியும். தொழிலதிபர்கள் வழக்கு தொடர்பான விஷயங்களில், நேரடியாகக் கவனம் செலுத்துவது அவசியம். எதிர்பாராமல் மேற் கொள்ளும் பயணங்களால் முதியவர்களின் ஆரோக்கியத்தில் சற்றே நலிவு உண்டாகலாம். மறதி, குழப்பம், ஆகியவை எட்டிப் பார்க்கும் வாய்ப்பிருப்பதால், வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமான ஆவணங்களைப் பத்திரமாக வைப்பது நல்லது. மேலும் அறிமுகமில்லாத நபர்களிடம் சரக்குப் பரிமாற்றம் செய்வதில் எச்சரிக்கையாய் செயல்படவும்.

மீனம்: பெண்கள் நினைத்த காரியத்தில், விரும்பத்தகாத மாற்றங்கள் உருவானாலும், பொறுமையாய் இருந்தால், விரும்பிய காரியத்தைச் சாதித்துக் கொள்ளலாம். பணியில் உள்ளவர்கள் சோர்வு, சோம்பலின்றி செயல்பட்டு வந்தால், பணிகள் தேங்காது. மாணவர்கள் அவசர கதியில் உணவு உண்ணும் பழக்கத்தை மாற்றிக் கொண்டால், தேக நலன் சீராக இருக்கும். புதுமையான எண்ணங்களுக்குத் தகுந்த நேரத்தில், பங்கு தாரர்கள் பச்சைக் கொடி காட்டும் சூழல் இருப்பதால், வியாபாரம் முன்னைக் காட்டிலும் சுறுசுறுப்பாக நடக்கும். இந்த வாரம், சுப காரிய விஷயங்களில் இருந்த சிக்கல்கள் விலகி நல்ல முன்னேற்றம் காணலாம்.

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க