திரைகடலோடியும் அனுபவம் தேடு (பகுதி-13)

1

விஜயகுமார்

லண்டன்

முதல் முறை லண்டனுக்குப் பஸ்ஸில் பயணம் – சாதாரண பஸ் இல்லை, ஏர்பஸ் A380! நிஜமாகவே அது பிரம்மாண்டம் தான்! சிறு வயதில் இருந்தே டபுள் டெக்கர் பஸ் என்றால் தனி மோகம்தான். ரோட்டில் அதைப் பார்த்து விட்டாலே ஒரு பெருமிதம்! ஒரு முறை திருசெந்தூர் சென்றபோது ரோட்டில் உருண்டு பெரண்டு அழுது அப்பாவிடம் உதை வாங்கி அடம் பிடித்து வாங்கிய மரத்தால் ஆன டபுள் டெக்கர் பஸ் பொம்மை ப்ளாஷ்பேக்கில் வர – விமானத்தில் ஏறும் போது மேலே செல்லும் படிக்கட்டைப் பார்த்து விட்டு அங்கே போய்ப் பார்க்க ஆசை. எனினும் இந்த முறை அலுவலகப் பயணம் இல்லாததால் பிசினஸ் கிளாஸ் இல்லை! ஒரு இன்ஸ்டிடீயுட் கான்பரன்ஸ் – எகானமி கிளாஸ்தான்!! கொட்டகைத் தியேட்டரில் தரை டிக்கெட் மாதிரி கீழ்த்தளம்தான்! அரை நாள் எப்படி ஓடியது என்று தெரியவே இல்லை, ஹீத்ரோ வந்து விட்டது.

இறங்கியதும் நல்ல குளிர். சென்னையில் இருப்பவர்களுக்கு ஊட்டி குளிரோ கொடைக்கானல் குளிரோ அல்ல. அதுக்கே அங்கே நேபால்வாசிகள் விற்கும் ஜாக்கெட்/வின்ட் சீட்டர் / மங்கி கேப் / கைக்கு க்ளவுஸ் – நைட் ரஜாய், கம்பளி, ஹீட்டர் (போதாக் குறைக்கு நம்மில் சிலர் “உல்” ஸ்வட்டர் வேற) என்று அனைத்தையும் வாங்கிப் போட்டுக் கொள்ளும் நமக்கு லண்டன் குளிருக்கு தெர்மல் வியர், கோட் என்று போட்டும் வெட வெடப்பு அடங்கவில்லை.

மீண்டும் இமிக்ரேஷன் கவுன்ட்டர் – ஆனால் மீனம்பாக்கத்தில் இருப்பதை விடப் பெரிய Q . குளிருக்குக் கோட் காலரை மேலே தூக்கி விட்டுக்கொண்டு, கைகளைக் கோட் பாக்கட்டில் விட்டு விறைப்பாக ஒரு மணி நின்றாகி விட்டது. ஆனால் நின்ற அலுப்பே தெரியவில்லை. சுற்றி அப்படி ஒரு அழகிகளின் பவனி. எப்படித்தான் இந்த குளிரில் இப்படி மினி மைக்ரோ என்று போட்டுக்கொண்டு அலைகிறார்களோ. காலுக்கு மட்டும் பெரிய பூட்ஸ் அதுவும் முட்டி வரை உல்லன் லைனிங் கொண்ட காலணிகளை அணிகிறார்கள். அதற்கு நல்ல முழு பான்ட் போட்டுக்கலாமே? நமக்கு இதைப் பற்றியெல்லாம் என்ன தெரியும்! ஏது லேட்டஸ்ட் பேஷன் என்று. எதற்கும் ஒரு குடுப்பனை வேண்டும். இப்படி அரைகுறை ஆடை போட்டுக்கொள்ளவும் உடல் வாகு வேண்டுமே! இவர்கள் இப்படி அணிவதும் அழகாகவே உள்ளது.

இப்படிப் பாம்பு போல வளைந்து வளைந்து திருப்பதி தர்மதரிசனம் Qபோல நிற்க அவர்கள் அப்படி என்னதான் கேள்வி கேட்கிறார்களோ! விட்டால் TTD இஷ்டைலில் டாக் கட்டி விடுவார்களோ என்னமோ. அருகில் சென்றவுடன்தான் அவர்களின் பாடு புரிந்தது. நம்மவர்கள் பலர் அங்கே ஒரு வரி கூட ஆங்கிலம் எழுதவோ படிக்கவோ தெரியாமல் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குத் திக்கு முக்கு ஆடுவதைக் கண்டு வருத்தமாக இருந்தது. பலரை மேலும் விசாரிக்கத் தடுத்து நிறுத்தி, விவரம் கேட்பதில் அவர்கள் நேரம் போனது. ஒரு வழியாக என் டர்ன் வந்தது. நான்கே கேள்விகள்தான் – எங்கிருந்து வருகிறாய், எதற்கு வருகிறாய், எங்கே தங்குகிறாய், எத்தனை நாள். சற்று வினோதமாகத்தான் இருந்தது. இவை அனைத்தையும் ஏற்கனவே விசா எடுக்க கடந்த ஐந்து வருடப் பயண விவரம் துவங்கி ஒரு வருட வங்கிக் கணக்கு என்று தாத்தா பாட்டி பர்த் சர்டிபிகேட் மட்டும்தான் கொடுக்க மிச்சம்!! வேறு இடமாக இருந்தால் நக்கலாகப் பதில் சொல்லி இருக்கலாம், இங்கே வாலை சுற்றி அடக்கிக் கொண்டு பொறுமையாகப் பதில் சொன்னேன். இரண்டே நிமிடம்தான். வேளை முடிந்தது.

வெளியில் வந்து உலகப் புகழ் பெற்ற லண்டன் காப் ஒன்றை எடுத்தேன். ஓட்டுனர் நல்ல உயரம் – ஜேம்ஸ் பான்ட் பட வில்லனைப் போலவே இருந்தார். பேச்சுக் கொடுத்துப் பார்க்கையில் அவர் ஈஸ்ட் ஐரோப்பியன் என்றும் பெலாருஸ் என்ற நாட்டைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. அவருக்கு இந்தியா பற்றி நன்றாகத் தெரிந்திருந்தது. IT? என்று கேட்டார். இல்லை என்றவுடன் அவருக்கே சற்று அதிர்ச்சி. கப்பல் வணிகம் என்றதும் அவருக்கு அதைப் பற்றி தெரிந்ததும் நமக்குப் பெலாருஸ் பற்றித் தெரிந்ததும் ஒரே அளவு என்று புரிந்தது. ஒலிம்பிக்ஸ் நடக்க இன்னும் ஒரு வருட காலம் இருந்தாலும் ஏற்கனவே பணிகள் பல இடங்களில் நடந்து கொண்டு இருந்தன. மேலும் பல இடங்களில் வித்தியாசமாக ரோடு நல்ல நீல நிறத்தில் இருந்தது. அதைப் பற்றிக் கேட்ட போது அவை சைக்கிள் லேன் என்றார்!! அடடே, நம்ம ஊரில் ரோடு என்ற பெயரில் இருக்கும் பாதையில் எது யாருடைய சக்கரம் என்றே தெரியாமல் இருக்கும் நெரிசலில் என்றாவது இப்படியும் ஒரு நிலைமை வருமோ என்று நினைக்கையில் திடீரென யாரோ ஒருவர் எதிரில் சரியாக சைகை செய்யாமல் லேன் மாறி விட்டார். உடனே நமது பான்ட் வில்லன் தனக்கு தெரிந்த அனைத்துக் கெட்ட வார்த்தைகளையும் சைகைகளையும் உயோகித்து விட்டார். பிறகு சற்றுச் சாவதானம் ஆகி விட்டு உங்க ஊரில் எப்படி என்று கேட்டார்? “நீ எல்லாம் எங்க ஊரில் கார் ஓட்டுவதை, இல்லை இல்லை.. ரோட்டில் நடப்பதை ஒரு பக்கத்தில் இருந்து பார்த்தாலே பரலோகம் போய் விடுவாய்” என்று சொல்ல வாய் வந்தாலும், தாய் நாட்டுப் பற்றில் – அப்படி ஒன்றும் இல்லை, நன்றாகவே இருக்கும் என்று மென்று முழுங்கினேன்.

ஒரு வழியாக ஹோட்டல் வந்து அடைந்தேன். லண்டன் பிரிட்ஜ் ஹோட்டல். நான்கு நட்சத்திர ஹோட்டல் என்றாலும் மிகவும் சிறிய ஹோட்டல் தான். லண்டனின் மிக நடுவான பகுதியில் அமைந்திருந்தது. அருகிலேயே டியுப் – அதாங்க சுரங்க இரயில் ஸ்டேஷன்! புகழ் பெற்ற அந்த இரயில் நெட்வொர்க் இல்லை என்றால் இன்று லண்டன் நகரமே ஸ்தம்பித்து இருக்கும். சென்னை முழுவதையும் இன்று ஆட்டிப் படைக்கும் மெட்ரோ ரயில் விரைவில் வர இருக்க – இந்த லண்டன் டியுப் எப்போது அமைக்கப்பட்டது தெரியுமா? 1863! படிப்படியாகப் பெரிது படுத்தப்பட்டு இன்று 270 ஸ்டேஷன் கொண்ட இந்தப் பிரம்மாண்ட நெட்வொர்க் தான் லண்டனின் உயிர் நாடி.

அவ்வளவு பழமையான ஒன்று இன்னும் வேலை செய்கிறதா என்ற ஆவலுடன் பார்க்கச் சென்றேன். முதலில் அடையாளமே தெரியவில்லை. வாசலில் இருட்டாகவே இல்லை! எல்லாக் கோடியிலும் – ஏன் நடைபாதைகளிலும் பல்ப் உடையாமல் அப்படியே இருந்தது, டிக்கெட் வாங்கும் இடம் முதல் அமரும் நாற்காலிகள் வரை எங்குமே பான் பராக் / வெற்றிலை துப்பிய கறை இல்லை! அது எப்படி ரயில் ஸ்டேஷன் என்று நமக்கு அடையாளம் தெரியும்? நம்ம ஊரில் பாருங்க பனி துவங்கும் முன்னரே பறக்கும் ரயில் ஸ்டேஷன்களில் இந்தச் சில பல அடையாள சின்னங்களை வைத்து விடுவோமே!!.

தமாஷ் போதும். எவ்வளவு கூட்டம், எவ்வளவு ரயில்கள், எத்தனை லைன்கள்- கருப்பு, மஞ்சள், சிவப்பு என்று பதினோரு லைன்!! சில இடங்களில் இன்றும் அந்தப் பழைய சுரங்கப் பாதை தெரிகிறது – ஹாரிபாட்டர் படம் பார்ப்பது போலவே இருக்கிறது.

லண்டனில் ஒரு இடத்தில தான் எனக்குக் கஷ்டம் ஏற்பட்டது. அருங்காட்சியகம் செல்ல வழி கேட்ட போது – பஸ் கண்டக்டர் முதல், சாலையில் இருந்த காவல் அதிகாரி வரை -ரயில்வே கைட் உட்பட – யாருக்குமே அவை எங்கு இருக்கின்றன என்று சரியாகத் தெரியவில்லை – பிறகுதான் ஏன் என்று புரிந்தது. அத்தனை அருங்காட்சியகங்கள் உள்ளன லண்டனில். பொதுவாக அங்கே செல்லும் நம்மவர்கள் – லண்டன் பாலம், கோட்டை, லண்டன் eye, வாக்ஸ் museum, trafalgarsquare , பிகாடில்லி circus என்று குறிப்பிட்ட தௌரிச்ட் அட்டவணையில் இருக்கும் இடங்களுக்கு மட்டுமே சென்று புகைப்படம் எடுத்து வருவதால் பலருக்கு மற்ற இடங்கள் பற்றித் தெரியவில்லை. சோழர் காலச் செப்புத்திருமேனிகள் பார்க்க வழி கேட்ட ஒரே ஆளாக நான்தான் இருந்திருக்க வேண்டும். அதனால் முதலில் வழி தெரியாமல் Museum ofLondon சென்றடைந்தேன் – அங்கே லண்டன் பற்றிய புராதன குறிப்புகள் மட்டுமே இருந்தது. பிறகு ஒரு வழியாக பிரிட்டிஷ் Museum செல்ல சரியான வழி கேட்டுக்கொண்டு கிளம்பும் முன்னர் நண்பர் ஒருவர் மூலம் ஒரு இங்கிலீஷ் வில்லோ கிரிக்கெட் மட்டை ( இங்கிலாந்தில் அந்த இங்கிலீஷ் வில்லோ மட்டை வாங்க வேண்டும் என்று வெகு நாள்களாக ஆசை!) வாங்கி வைக்கச் சொல்லி இருந்தேன். அதையும் வாங்கி முதுகில் மாட்டிக்கொண்டு சென்றேன்.

உள்ளே நுழையும் போதே செக்யூரிட்டி மேலும் கீழும் பார்த்தான். எவ்வளவு பெரிய அருங்காட்சியகம். நேராக இந்தியா செக்ஷன் சென்றேன். ஆஹா, என்ன ஒரு கலக்ஷன்! அருமையான ஆலிங்கன மூர்த்தி செப்புத்திருமேனியைப் பார்த்து சுற்றிச் சுற்றி வந்தேன். விதம் விதமாகப் படம் பிடித்தேன். அப்போது அருகில் காவலாளி ஒருவர் வந்து வந்து நிற்பதைக் கண்டு என்ன என்று கேட்ட போது – அவர் தன் அறைக்குக் கூட்டிச் சென்று விசாரித்தார்? இது என்னோட ஹாபி என்றும் இப்படிதான் அவற்றைச் சுற்றிப் பார்த்து ரசிக்க வேண்டும் என்று சொன்னேன். அதற்கு அவர் ‘அதெல்லாம் சரி நீ எதற்காக மேலே இருக்கும் கண்ணாடி மீது கை வைக்கிறாய் – ஒவ்வொரு முறை நீ கை வைக்கும் போது சைலென்ட் அலாரம் அடிக்கும்’ என்றார். பிறகு ‘அது என்ன முதுகில்’ என்றார்? “அதுவா? கிரிக்கெட் மட்டை’ என்றேன். அதற்கு அவர் ‘என்னுடைய இருபது வருட சர்வீசில் பல பேர் பல வினோதப் பொருட்களை அருங்காட்சியகத்துக்குக் கொண்டு வருவதைப் பார்த்துள்ளேன் – எல்லாவற்றையும் பார்த்து விட்டேன் என்று நினைக்கும்போது நீ வந்துள்ளாய்’ என்று சொல்லி ரிலீஸ் பண்ணி விட்டார்…

அடுத்து V &A- விக்டோரியா அண்ட் ஆல்பர்ட் அருங்காட்சியகம்.

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “திரைகடலோடியும் அனுபவம் தேடு (பகுதி-13)

  1. ‘இப்படி அரைகுறை ஆடை போட்டுக்கொள்ளவும் உடல் வாகு வேண்டுமே! இவர்கள் இப்படி அணிவதும் அழகாகவே உள்ளது.’ ~ ஆமாம்.
    விஜய் குமார் நல்ல அப்செர்வர். நான் விக்டோரியா & ஆல்பெர்ட் ம்யூசியம் போன கதை அப்றம்.
    இன்னம்பூரான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *