நல்வாழ்த்து நான் சொல்லுவேன் (அத்தியாயம்-8)

0

ஸ்ரீஜா வெங்கடேஷ்

ஆபீசில் சுந்தரம் பரபரவென இயங்கிக் கொண்டிருந்தான். வேலுமணியும்,கணேசனும் வழக்கம் போல அரட்டையடித்துக் கொண்டிருந்தார்கள். ஆடிட்டிங் நெருங்குவதால் பார்க்க வேண்டிய ஃபைல்கள் குவிந்து கிடந்தன. அதோடு சரியாக மாதத் தவணை கட்டாதவர்களுடைய விவரங்கள் அடங்கிய ஃபைல் ஒன்றும் தயார் செய்யச் சொல்லி மேலிடத்திலிருந்து உத்தரவு வந்திருந்தது. அது ஒரு ரகசியமான உத்தரவு. ஆனால் அதை எப்படியோ வேலுமணி மோப்பம் பிடித்து விட்டான்.

“டேய் கணேசா! தெரியுமா? நமக்கு ஆப்பு வெக்கத்தான் சார் இவ்ளோ சின்சியரா வேலை செய்யறாரு.”

“என்ன சொல்றே நீ வேலு?”

“நாம லோன் குடுத்து இது வரை திருப்பிக் கட்டாம நிலுவையில இருக்கற லோன் விவரங்களைத்தான் சார் நோண்டி நோண்டி எடுத்துக்கிட்டு இருக்காரு. இல்ல சார்?”

“ஏன் அனாவசியமா என்னை வம்புக்கு இழுக்கறீங்க? நான் பாட்டுக்கு வேலை செஞ்சுக்கிட்டு இருக்கேன்.”

“நீங்க பாட்டுக்கு எங்க வேலையில தலையிடாம வேலை செஞ்சாப்பரவாயில்லையே? ஏன் எங்க வயத்துல அடிக்கறீங்க?”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல”

“சார்! மூடி மறைக்காதீங்க! எங்களுக்கு மேலிடத்திலியும் ஆட்கள் இருக்கு. நீங்க எது சம்பந்தமான ஃபைல தயார் பண்ணிக்கிட்டு இருக்கீங்கன்னு எனக்கு நல்லாத் தெரியும். நாங்க லோன் குடுத்த ஆட்களோட வெவரங்களைத்தானே எடுக்கறீங்க?”

“உங்களுக்கு எப்டி விஷயம் தெரியுதுன்னு தான் எனக்குப் புரிய மாட்டேங்குது. நேத்து காலையில தான் மேனேஜர் என்னைக் கூப்பிட்டு சொன்னாரு. அதுக்குள்ள உங்களுக்கு விஷயம் எப்டித் தெரிய வந்தது?”

“சார்! நீங்க ரொம்ப அப்பாவி சார்! வேலையில கெட்டிக்காரரா இருந்தா மட்டும் போறாது. மத்த விஷயங்களையும் தெரிஞ்சு வெச்சிக்கணும்”

சுந்தரம் கண்டு கொள்ளாமல் வேலையில் ஆழ்ந்தான். அன்று காலை கல்யாணி டிஃபன் என்ற பெயரில் வெறும் பிரட்தான் கொடுத்தாள். சரியாகச் சாப்பிடாததாலும், ஆபீஸ் டென்ஷனாலும் சரியான தலைவலி அவனுக்கு. கர்சீப்பால் தலையை இறுகக் கட்டிக் கொண்டு வேலை செய்து கொண்டிருந்தான். கண்ணெல்லாம் ஒரே எரிச்சல் வேறு. அவனைப் பார்த்து கணேசனுக்கே பாவமாக இருந்தது.

“ஏன் சார் கர்சீப்பைக் கட்டிக்கிட்டு அப்டியாவது வேலை செய்யணுமா? உங்களுக்கென்ன அதுக்காக லட்ச ரூபா தூக்கிக் குடுத்துடப் போறாங்களா? தலைவலின்னா இன்னிக்குப் பேசாம லீவு போட்டுருக்கலாம் இல்ல?”

“எப்படி கணேசன் சார் லீவு போட முடியும்? ஆடிட்டிங் இருக்கே?”

“அட போங்க சார்! உங்களைப் பாத்தா எனக்குச் சிரிப்புத்தான் வருது, இவ்ளோ கஷ்டப்பட்டு வேலை செய்யற உங்களுக்கு என்ன கிரீடமா குடுக்கப் போறாங்க?”

“எனக்கு கிரீடமோ,பணமோ முக்கியமில்ல கணேசன். என் மனசாட்சிக்கு விரோதமில்லாம வாங்குற சம்பளத்துக்கு நேர்மையா உழைக்கறேன் நான் அவ்ளதான்.”

“அப்டீன்னா நாங்கள்லாம் ஒழுங்கா வேலை செய்யல்லைன்னு சொல்ல வரீங்களா?”

“நான் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லல்ல!”

“அவர் கூட வாக்கு வாதம் பண்ணாத வேலு. அவரே தலைவலில அவஸ்தைப் பட்டுக்கிட்டு இருக்கார். சார் நீங்க ஒரு நிமிஷம் அப்டியே ரிலாக்ஸ் பண்ணி உக்காருங்க! நான் போயி டீ வாங்கிட்டு வரேன். வழக்கமா வர டீ இன்னும் ஒரு மணி நேரம் கழிச்சுத்தான் வரும்.”

இருவரும் வெளியே வர கணேசனை பிலுபிலுவென்று பிடித்துக் கொண்டான் வேலுமணி.

“என்ன கணேசா? கட்சி மாறிட்டியா? அந்த ஆளைப் பாத்து ரொம்பத்தான் உருகறே?”

“சே! நல்ல மனுஷர்டா”

“அந்த நல்ல மனுஷர்தான் நமக்கெதிரா ஆதாரம் சேகரிச்சுக்கிட்டு இருக்கார். அந்த ஃபைல் மட்டும் மேலிடத்துக்குப் போச்சு? நாம காலி! அவ்ளோ தான்.”

“அதுக்குத்தாண்டா நான் அவர்ட்ட நெருங்கிப் பழகறேன். ரொம்ப நல்லவன் மாதிரிப் பேசி அந்த ஃபைலை அவர்ட்டருந்து எப்படியாவது வாங்கிட்டோம்னா நாம எதாவது பண்ணி என்கொயரியைச் சமாளிச்சிடலாம். கைக்காசைப் போட்டாவது பணத்தைக் கட்டிட்டோம்னா ஆடிட்டிங் முடிஞ்சப்பறம் பாத்துக்கலாம். எப்படியாவது நம்ம வேலையைக் காப்பாத்திடலாம். இப்போ டீ வாங்கிக் குடுக்கற சாக்குல நைசாப் பேசி அந்த ஃபைலைக் கேட்டுப் பாப்பபோம். அவரு அதுக்கு என்ன வெல கேட்டாலும் குடுத்துடுவோம். என்ன சொல்ற?

“சூப்பர் ஐடியா இது. எனக்கே தோணல்லியே? அப்டி அவரு குடுக்க மாட்டேன்னு சொன்னார்னா அவரை அங்க எங்கியாவது அனுப்பிட்டு ஃபைலை அடிச்சுடுவோம். என்ன?”

“சரி அப்டியே செய்வோம்”

டீ வாங்கிக் கொண்டு வந்தவர்களை நன்றியுடன் பார்த்தான் சுந்தரம். அவன் தலைவலிக்குச் சூடான அந்த டீ இதமாக இருந்தது. ஒரு மாத்திரையையும் உரித்துப் போட்டுக் கொண்டான். இப்போது சற்றுத் தெம்பு வந்தது.

“ரொம்ப தேங்க்ஸ் கணேசன்”

“நமக்குள்ள எதுக்கு சார் தேங்க்ஸெல்லாம்? என்ன இருந்தாலும் நாமெல்லாம் ஒரே ஆபீசுல வேலை செய்யறவங்க”

“இவ்ளோ நல்லவங்களா இருக்கீங்களே சார்? ஆனா ஏன் இந்த மாதிரி தப்பு பண்ணீங்க?”

அதைக் கேட்டவுடன் ஒரு நாடகத்துக்குத் தன்னைத் தயார் படுத்திக் கொள்வது போல கணேசனும்,வேலுமணியும் தொண்டையைக் கனைத்துக் கொண்டார்கள். நீ சொல்கிறாயா அல்லது நான் சொல்லட்டுமா என்பது போல கண்களாலேயே பேசிக் கொண்டு இறுதியில் கணேசன் பேசினான்.

“சார்! நாங்க ரெண்டு பேருமே தூரத்துச் சொந்தக்காரங்க. எங்க ரெண்டு பேருக்குமே ரொம்பப் பெரிய குடும்பம். தங்கச்சிங்களைக் கல்யாணம் பண்ணிக் குடுக்க வேண்டிய பொறுப்பும், தம்பிங்களைப் படிக்க வெக்க வேண்டிய பொறுப்பும் எங்க தலையில. என் ஒருத்தன் சம்பளத்தை நம்பி ஆறு பேரு. இதுல கல்யாணத்த வேற பண்ணி வெச்சுட்டாங்க. வந்தவ ஆசப்படறதைக் கூட வாங்கிக் குடுக்க முடியாத நெலம. என்ன செய்ய முடியும்? அதான் நாங்க கை நீட்டிட்டோம்! இப்போ சொல்லுங்க சார் நாங்க செஞ்சது தப்பா?”

“ஏதோ சினிமால வரா மாதிரிப் பேசறீங்க சார். என்னதான் பணக் கஷ்டம் இருந்தாலும் கவர்மெண்ட் காசுல இருந்து ஒரு பைசா தொடக் கூடாது. நம்ம தேவைகளைச் சுருக்கிக்கிட்டு, மத்தவங்களையும் கொஞ்சம் உழைக்கச் சொல்லி வேற ஏதாவது தொழில் பண்ணி நம்ம பண வரவைப் பெருக்கிக்கணுமே தவிர ஏழை மக்களோட வரிப்பணத்தை எடுக்கக் கூடாது சார். நீங்க என்ன சொன்னாலும் நீங்க செஞ்சது தப்பு தான் சார்”.

“கரெக்டு சார்! எங்களுக்கு உங்களை மாதிரி அட்வைஸ் பண்ண ஆளில்ல. அதான் நாங்க தப்புப் பண்ணிட்டோம் சார். இனிமே பண்ண மாட்டோம் சார். எங்களை தயவு செஞ்சுக் காப்பாத்துங்க சார்”.

“எங்கிட்ட ஏன் ரெண்டு பேரும் மன்னிப்புக் கேக்கறீங்க?

“இப்ப உங்க கிட்ட தான் சார் மன்னிப்புக் கேக்கணும். உங்களால தான் எங்களைக் காப்பாத்த முடியும்!”

“என்ன சொல்றீங்க? நான் உங்களைக் காப்பாத்தறதாவது?”

“ஆமா சார்! நீங்க தயார் பண்ணிட்டு இருக்கீங்கல்ல ஃபைல் அதை எங்க கிட்டக் குடுத்தா நாங்க தகுந்த நடவடிக்கை எடுத்துப்போம் சார். உதாரணமா கைக்காசை போட்டாவது ஒரு சில பேர் கடனைக் கட்டிடுவோம். அதுனால அந்த ஃபைலை மேனேஜர்ட்ட குடுக்க வேணாம்னு சொல்லல்ல! ஒரு வாரம் கழிச்சு குடுங்க. அதுக்குள்ள நாங்க எங்க பணத்தைப் பொரட்டிடுவோம்!”

“அடடா! என்னடா! எப்பவும் எங்கிட்ட எலியும் பூனையுமா இருக்கறவங்க தேடி வந்து பேசுறீங்களேன்னு நெனச்சேன். ஆடு நனயிதேன்னு ஓநாய் அழுத காரணம் இப்பல்ல புரியுது. மேனேஜர் உங்க கிட்ட எந்த ஒரு ஃபைலும் போகக் கூடாதுன்னு ஸ்டிரிக்டா சொல்லிட்டாரு. கூடிய சீக்கிரமே உங்க மேல கமிஷன் வெப்பாங்க. நீங்க சொன்னா மாதிரி நான் செஞ்சேன்னா, என்னையும் உங்க லிஸ்டுல சேத்துடுவாங்க. அதெல்லாம் நடக்கவே நடக்காது”

“சார்! பிளீஸ் கொஞ்சம் மனசு வைங்க சார்”

“எங்கிட்ட ஏன் சார் கெஞ்சுறீங்க? எங்கிட்ட சொன்னதை மேனேஜர்ட்ட சொல்லி தப்புப் பண்ணிட்டோம் இனி பண்ண மாட்டோம்னு சொல்லலாம்ல?

“அதெல்லாம் நடக்காத சமாசாரம் சார்! நீங்க எங்களுக்கு ஹெல்ப் பண்ணுவீங்களா மாட்டீங்களா? நீங்க என்ன கேக்கறீங்களோ நாங்க தரத் தயாரா இருக்கோம்.”

“ஒஹோ! எனக்கே லஞ்சம் குடுக்கப் பாக்கறீங்களா? நீங்க என்ன சொன்னாலும் நடக்காது. அந்த ஃபைல் இன்னிக்குள்ள மேனேஜர் கைக்குப் போயிடும்! ஆமா!”

“சார்! யோசிச்சுத்தான் சொல்றீங்களா? எங்களைப் பகைச்சுக்கிட்டா விளைவுகள் விபரீதமா இருக்கும் தெரியுமா?”

“”என்ன? மெரட்டறீங்களா? இதுக்கெல்லாம் பயப்படறவன் நான் இல்ல! உங்க மிரட்டல்களையெல்லாம் வேற எங்கியாவது வெச்சுக்குங்க. “

அப்போது ஆபீஸ் பியூன் வந்து சுந்தரத்தை மேனேஜர் அழைப்பதாகக் கூறினான். சுந்தரம் அவசரஅவசரமாகச் செல்ல வேலுமணியும்,கணேசனும் ஒருவரையொருவர் பார்த்துக் கண்ணடித்துக் கொண்டனர்.

“டேய் வேலு! இது தான் சரியான சமயம். அந்தாள் உள்ள போயிருக்கான். நாம அந்த ஃபைலை எடுத்துடுவோம்” என்றான் கணேசன். இருவரும் பரபரப்பாகத் தேடினர். மேஜை மேல், டிராயருள், சுந்தரத்துடைய பை, என்று எல்லாப் பக்கமும் தேடியும் எங்கும் கிடைக்கவில்லை. இருவரும் மனம் தளராமல் பீரோவில் எல்லாம் குடைந்து பார்த்தனர். என்னென்னவோ ஃபைல்கள் இருந்தனவே தவிர அவர்கள் தேடிய ஃபைலைக் காணவில்லை. அவர்கள் மும்முரமாகத் தேடிக் கொண்டிருக்கும் போது சுந்தரம் ஓசைப் படாமல் அவர்கள் பின்னால் வந்து நின்று கொண்டு

“என்ன நீங்க தேடறது கிடைக்கலியா?” என்றான் மெதுவான குரலில்.

இருவரும் அசடு வழிந்தபடி எழுந்து நின்றனர்.

“நீங்க தேடறது இங்க இல்ல. நான் அதை மேனேஜர் ரூமில தான் வெச்சுருக்கேன். அது தான் எல்லாருக்கும் நல்லது. நான் போகும் போது அதையும் சேர்த்து எடுத்துட்டுப் போயிட்டேன். அதை நீங்க கவனிக்கல்ல! ஒரு நிமிஷம் நீங்க திருந்தி நல்லவனாயிட்டீங்களோன்னு நெனச்சேன். ஆனா நீங்க திருந்தவே மாட்டீங்க. “

“என்ன சார் ரொம்பப் பேசிக்கிட்டே போறீங்க? நாங்க என்ன யாரும் செய்யாத தப்பையா செஞ்சோம்? எல்லாம் ஊர்ல உலகத்துல உள்ளது தான்.”

“நீங்க செஞ்ச எல்லா தில்லு முல்லும் வெளிய வந்தாச்சு. நீங்க வெறும லஞ்சம் வாங்கிக்கிட்டு லோன் குடுத்துருக்கீங்கன்னு தான் நான் நினைச்சேன். ஆனா இல்லவே இல்லாத ஆட்களை உருவாக்கி போலி டாக்குமெண்ட்ஸ் ரெடி பண்ணி லோன் குடுக்கறா மாதிரி குடுத்து மொத்தப் பணத்தையும் சுருட்டியிருக்கீங்க! சே! நீங்கள்ளாம் மனுஷங்களா? “

“ஆமா சார்! நாங்க அப்டித்தான் செஞ்சோம்! உங்களால எங்களை என்ன சார் பண்ண முடியும்?”

“பண்றதையும் பண்ணிட்டு எவ்ளோ திமிராப் பேசறீங்க? உங்களுக்கு ஏன் இந்தப் புத்தி? மரியாதையா எடுத்த பணத்தை எல்லாம் கட்டிடுங்க! கணக்குப் போட்டுப் பாத்தா தொகை 30 லட்சத்தை நெருங்குது. பண்ண தப்பை ஒத்துக்கிட்டு அப்ரூவர் ஆகிடறது பெட்டர்.”

“உங்களை யாரும் அட்வைஸ் கேக்ககல! என்ன நடவடிக்கை எடுப்பீங்களோ எடுத்துக்கோங்க! ஆனா சார்! உங்களை நாங்க வெறுமே விட்டுடுவோம்னு மட்டும் நெனக்காதீங்க! நாங்க பாம்புங்க மாதிரி. எங்க கூட நட்பா இருந்தா ஒண்ணும் செய்ய மாட்டோம். எங்களை பகைச்சுக்கிட்டீங்க உங்களை அழிக்காம விட மாட்டோம்!”

“என் இருவது வருஷ சர்வீசுல உங்களை மாதிரி நெறய பேரைப் பாத்துருக்கேன். மேனேஜர் என்னை அவர் ரூமுக்குள்ளயே உக்காந்து ஃபைலை ரெடி பண்ணச் சொல்லிட்டாரு. எனக்கு வேலை இருக்கு நான் போறேன்”

மேனேஜர் அறையை நோக்கிப் போன சுந்தரம் மட்டும் திரும்பிப் பார்த்திருப்பானானால் ஒருகால் பயந்து போயிருக்கக் கூடும். வேலுமணி பயங்கரமாகக் கண்களை உருட்டு விழித்து நாக்கை நீட்டி கைகளால் வெட்டி விடுவது போலக் காண்பித்தான்.

“டேய்! வேலு! இப்டியெல்லாம் பண்ணாதடா! அதுக்கு வேற தனியா மாட்டிப்போம்!”

“எல்லாம் இந்த சுந்தரம் பயலால வந்தது. சே! அந்த ஃபைலை நம்மக் கிட்ட குடுத்திருந்தா நாம தப்பிச்சிருக்கலாம்”

“இப்போ என்னடா செய்யப் போறோம்? எனக்கு பயம்மா இருக்குடா?”

“சே! பயப்படாதடா! என்ன ஆகும்? வேலை போகும் அவ்ளோதானே? இருக்கற பணத்தை வெச்சு ஏதாவது தொழில் செஞ்சு பொழச்சிக்கலாம்டா”

“வீட்டுல என்ன பதில் சொல்லன்னு தான் எனக்குத் தெரியல! ஏன் வேலையை விட்டுத் தூக்கிட்டாங்கன்னு கேப்பாங்களேடா! அவங்களுக்கு என்ன சொல்ல?”

“நீ ஏன் வேலையை விட்டுத் தூக்கிட்டாங்கன்னு சொல்ற? வியாபாரம் பண்றதுக்காக வேலையை விட்டுட்டேன்னு சொல்லு! நம்புவாங்க!”

“என்ன இருந்தாலும் அரசாங்க உத்தியோகம் மாதிரி வருமா? அதைப் போயி ஏன் விட்டீங்கன்னு தொளச்சு எடுப்பா எம் பொண்டாட்டி! படிச்சவளாச்சே! “

“அப்ப உண்மையச் சொல்லு! கையில, காதுலன்னு தங்கத்துல வாங்கிப் போடும் போது கேள்வி கேக்கலையே? என்னடா நம்ம புருஷன் சாதாரண கவர்மெண்ட் வேலை தானே பாக்கறான், அவன் கிட்ட ஏது இவ்ளோ காசுன்னு யாரும் கேக்கலையே? சந்தோஷத்தை எஞ்சாய் பண்ணாங்கல்லியா? சங்கடத்தையும் பகிர்ந்துக்கச் சொல்லு! வீட்டுக்குத்தானே செலவழிச்சோம். அப்பல்லாம் வாயை மூடிக்கிட்டு தானே இருந்தாங்க? இப்போ மட்டும் என்ன?”

“டேய் நீ சொல்றது நியாயம் தான். ஆனா இதை அவங்க கிட்ட சொல்ல முடியுமா? நானா கேட்டேன்? நீயா தானே வாங்கித் தந்தேம்பாங்க! நீ அதையெல்லாம் விடு. ஏதோ வியாபாரம் பண்ணலாம்னு சொன்னியே என்ன செய்யலாம்? அதப் பத்தி யோசிப்போம்.”

“அதெல்லாம் அப்புறம். இப்போ என் முத வேலை சுந்தரத்தைப் பழி வாங்கறது தான்.”

“என்ன செய்யப் போற? சினிமால வரா மாதிரி பெரிய அரிவாளோட அவனைத் தொரத்தப் போறியா?”

“சீ போடா! அறிவு கெட்டவனே? நான் ஏண்டா அரிவாளைத் தூக்கணும்? என் மூளையை யூஸ் பண்ணி அவனை அழிப்பேன்.”

“என்ன சொல்றே? கொஞ்சம் விவரமாத்தான் சொல்லேன்.”

“சொல்றேன்! சுந்தரத்துக்கு தான் ரொம்ப நேர்மையானவன் யாராலையும் தன்னை ஒண்ணும் செய்ய முடியாதுங்கற திமிரு ரொம்ப ஜாஸ்தியில்லையா?”

“ஆமா! அதுக்கென்ன?”

“அந்த எண்ணத்தைத் தான் நான் அழிக்கப் போறேன், அதாவது அவன் நேர்மையானவன் இல்லன்னு எல்லாரும் சொல்லணும். அந்த மாதிரி பண்ணப் போறேன்”

“அதைத்தான் எப்டிப் பண்ணப் போறே?”

“சொல்றேன்! இதோ இந்தப் பேப்பரும்,பேனாவும் தான் ஆயுதம்”

“புரியலியே?”

“நானு நம்ம மேலிடத்துக்கு மொட்டை லெட்டர் போடப் போறேன். இந்த மாதிரி இந்த ஆபீசுல இவங்க மட்டுமில்ல சுந்தரமும் ஊழல் பெருச்சாளி தான் அப்டீன்னு. ஒரே ஒரு லெட்டர் போட்டா அவங்களுக்குச் சந்தேகம் வராது. அதனால் வேற வேற கையெழுத்துல பல மொட்டை லெட்டர் தட்டி விடுவோம். நாம ஊழல் பண்ணது நிஜம். அது மாதிரி இதுவும் ஏன் உண்மையா இருக்கக் கூடாதுன்னு அவங்க யோசிப்பாங்க. அதனால் அவன் மேலயும் விசாரணை நடக்கும். அவன் பேரு கெடும். அவன் நிம்மதி இல்லாமத் தவிப்பான். அது போதும் எனக்கு”

“அந்த மேனேஜர்ப்பய சுந்தரத்துக்கு பயங்கர சப்போர்ட்டாச்சே! அவன் நம்புவானா?”

“அவனையும் நம்ப வெக்கணும். அதுக்குத்தான் அவன் இந்தப் பக்கம் வரும் போதெல்லாம் நான் சுந்தரத்தோட தன்மையா பேசிக்கிட்டு இருக்கா மாதிரி நடிப்பேன். இந்த லெட்டர் போய்ச் சேர்ந்ததும் அவன் என்ன நெனப்பான்? இதுல இருக்கறது உண்மை தான் போல! நாம தான் எத்தனையோ தடவை இவங்க எல்லாரும் ஒண்ணு கூடிப் பேசினதைப் பாத்துருக்கோமே அப்டீன்னு தான் நெனப்பான். எப்டி என் யோசனை?”

“சும்மாச் சொல்லக் கூடாது. பயங்கர கிரிமினல் பிரெயின் உனக்கு! நானும் ஒரு லெட்டர் எழுதறேன். நல்ல டீடெய்லா எழுதுவோம் அப்பத்தான் நம்புவாங்க!”

இவர்கள் இப்படித் தனக்கு எதிராக ஒரு பயங்கரமான சதி செய்வதைஎதுவும் அறியாத சுந்தரம் மேனேஜர் ரூமில் மாங்கு மாங்கென்று அவர் கேட்ட ஃபைலைத் தயார் செய்து கொண்டிருந்தான்.

(தொடரும்)

 

படத்திற்கு நன்றி:http://thechart.blogs.cnn.com/2012/08/09/stressed-out-men-find-heavier-women-attractive

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *