தீக்கொழுந்தில் பனித்துளி (அத்தியாயம்-7)

1

முகில் தினகரன்

மறுநாளைக்கு மறுநாள்.

இரவு.

கோயமுத்தூருக்குப் பண விஷயமாக ஒரு நண்பரைப் பார்க்கப் போவதாக வீட்டில் சொல்லிக் கொண்டு அந்த இப்ராஹிமுடன் பெங்களுர் வண்டியேறினான் சுந்தர்.

வீட்டை விட்டுக் கிளம்பும் போது ஏனோ அவனையுமறியாமல்அவன் கண் கலங்கி விட,

“அட.. என்னப்பா.. போகும் போதே கண் கலங்கறே?.. . வேணும்னா இன்னிக்கு இருந்துட்டு நாளைக்குக் காத்தால கிளம்பேன்!.. இங்க இருக்குற கோயமுத்தூர்தானே?.. ” அம்மா பாசத்துடன் சொன்னாள்.

“இல்லம்மா.. அவர் கிட்ட இன்னிக்கு வர்றதாச் சொல்லிட்டேன்!”

“அப்படின்னா சரிப்பா.. பார்த்துப் போயிட்டு வா!” அம்மா தன் குச்சிக் கைகளால் அவன் தலையை வருடி விட்டாள். சுந்தருக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது.

பஸ்ஸில் ஏதோ கன்னடப் படம் ஓடிக் கொண்டிருந்தது. இவன் சுரத்தேயில்லாமல் உட்கார்ந்திருந்தான். மனம் படத்துடன் ஒட்டாமல் எங்கெங்கோ பறந்து கொண்டிருந்தது.

“என்ன தம்பி.. இன்னும் உன் சந்தேகம் தீரலையா?” பக்கத்து இருக்கையிலிருந்து இப்ராஹிம் கேட்டான்.

“சேச்சே!.. அதெல்லாம் ஒண்ணுமில்லை.. கல்யாணம் பத்தின கவலைதான்!”

“அட ஏன் தம்பி இன்னும் அதையே நெனச்சுக் கவலைப்பட்டுட்டு.. அதான் பெரிய தொகை ஏற்பாடு பண்ணித் தர்றேன்னு சொல்லிட்டேனில்ல?.. அப்புறமென்ன ஜமாய்ச்சிட வேண்டியதுதானே?”

வலுக்கட்டாயமாகப் புன்னகைத்து வைத்தான் சுந்தர்.

பேருந்தின் தாலாட்டலில் தூங்கிய அரைகுறைத் தூக்கத்தில் ‘கசகச‘வென்று சம்மந்தா சம்மந்தமில்லாத கனவுகள். பள்ளிப் பாடத்தில் வரைந்த கிட்னியின் படம்.. கல்யாணக் கோலத்தில் தேவி.. அழுகையுடன் அம்மா!.. டாடா காட்டும் மைதிலி!

விடியலில் அவர்களைப் பெங்களுரில் இறக்கி விட்டு விட்டுப் பறந்தது பேருந்து.

சிட்டியை விட்டுத் தள்ளியிருந்தது அந்தப் பெரிய ஆஸ்பத்திரியில் மறுநாள் மாலையே சுந்தருக்கு ஆபரேஷன் நடந்தேறியது.

தன் உடலிலிருந்து ஒரு அதி முக்கிய அவயம் கழற்றப்பட்ட உணர்வு சிறிதுமில்லாமல் படு சாதாரணமாகவே இருந்தான் சுந்தர். வயிற்றின் ஓரப் பகுதியில் தையல் போடப் பட்டிருந்த இடத்தில் மட்டும் அவ்வப்போது ‘சுருக்.. சுருக்‘கென்று வலித்தது.

மூன்றாம் நாள் அவனைக் காண வந்த இப்ராஹிம் “தம்பி.. நீ ரொம்ப அதிர்ஷ்டசாலிப்பா.. ஒரு பெரிய பணக்கார வீட்டுப் பையனுக்குத்தான் உன் கிட்னி போய்ச் சேர்ந்திருக்கு!.. நான் சொன்னது மாதிரியே ஒரு லட்சம் கிடைச்சிருக்கு!”

“ஒரு லட்சமா?” சுந்தரின் கண்கள் ஆச்சரியத்தில் அகல விரிந்தன. “ஹூம்.. இந்த ஜென்மம் பூராவும் உழைச்சாலும்.. என்னால இந்தத் தொகைய எட்டிப் பிடிக்க முடியுமா?”

“தம்பி.. அதுல மருந்து மாத்திரை செலவு.. என்னோட கமிஷன்.. எல்லாம் போக.. அறுபது ரூபாய்.. உன் பங்காய் வரும்!”

சுந்தரின் முகம் ஒரு விநாடியில் ‘சப்‘பென்று போனது. ஆனாலும் தன் நிலைமைக்கு அந்த அறுபதும் இன்று ஒரு லட்சம்தான்.. என்றெண்ணித் தன்னைத் தானே ஆறுதல் படுத்திக் கொண்டான்.

பெங்களுரிலிருந்து ஆறாம் நாள் கிளம்பி, ஏழாம் நாள் ஊர் வந்து சேர்ந்தனர்.

அவன் கொண்டு வந்திருந்த தொகை அவன் அம்மா முகத்திலும்.. தேவியின் முகத்திலும்.. டன் கணக்கில் சந்தோஷத்தைக் கொண்டு வந்து அப்பியது.

அது நாள் வரையில் சைக்கிளில் போய்க் கொண்டிருந்த கல்யாண வேலைகள் எக்ஸ்பிரஸ் மெயிலில் சென்றன.

மண்டபம் புக்கிங்.. சமையல்காரர்; ஏற்பாடு.. பத்திரிக்கை அச்சடிப்பு.. ஜவுளி.. நகைகள்.. அழைப்பு.. என எல்லாம் போர்க்கால நடவடிக்கையாய்ப் போய்க் கொண்டிருந்த, அதே நேரம், சுந்தரின் வயிற்றிலிருந்த தையல் பகுதி இன்னும் சரியாகக் காயம் ஆறாததால் அவ்வப்போது அவனுக்கு வலியைக் கொடுத்துக் கொண்டேயிருந்தது. அந்தக் காயம் பிறர் கண்ணுக்குப் பட்டு விடாதபடி படு ஜாக்கிரதையாகவே இருந்தான் சுந்தர்.

ஆனாலும் பல நாள் திருடன் ஒரு நாள் சிறையில்தானே?

 

படத்திற்கு நன்றி: http://www.usatoday.com/news/world/2008-01-30-india-kidneys_N.htm

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “தீக்கொழுந்தில் பனித்துளி (அத்தியாயம்-7)

  1. முகில்! தவறாக நினைக்கவேண்டாம். நான் கிட்னி கொடுத்தவன். யதார்த்தம் தெரியும். தனிமடலில் தொடர்பு கொண்டால், விளக்குகிறேன், உமக்கு தேவை என்று பட்டால்.அன்புடன், இன்னம்பூரான்

Leave a Reply to இன்னம்பூரான்

Your email address will not be published. Required fields are marked *