முகில் தினகரன்

காலையில் கண் விழிக்கும் போதே சந்தோஷமாய் இருந்தது எனக்கு. இன்று ஏழாம் தேதி….முதல் சம்பளத்தை வாங்கப் போகிறேன்.

‘ஈவினிங் ஆபீஸிலிருந்து புறப்பட்டு நேரா அந்த ‘அகிலா ஷூ மார்ட்’ க்குப் போறோம்…கண்ணாடிக் கூண்டுக்குள் உட்கார்ந்திருக்கற அந்த மெரூன் நிற ஷூவை என்ன விலையானாலும் சரி…வாங்கறோம்’ மனதிற்குள் தீர்மானித்துக் கொண்டே அவசர அவசரமாய்க் கிளம்பினேன்.

பின்னே?…எத்தனை வருடத்திய கனவு அது!…வேலையில்லாப் பட்டதாரியாய்த் திரிந்த காலத்தில் தினமும் அந்த ஷூ கடை முன் சென்று, அந்த மெரூன் நிற ஷூவை ஏக்கம் வடிய நான் பார்த்துக் கொண்டே நிற்பதை, இப்போது நினைத்தாலும் கனத்துப் போகும் என் மனது. என்றாவது ஒரு நாள் அதை வாங்கியே தீர வேண்டும்..அதுவே வாழ்வின் ஒரே லட்சியம் என்கிற வெறியோடுதான் வேலை தேடி அலைந்தேன்…திரிந்தேன்.

இன்று….நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்து முதல் சம்பளம் வாங்கப் போகின்றேன்…என் லட்சியமும் நிறைவேறப் போகின்றது.

 

மாலை. அகிலா ஷூ மார்ட்.

கௌண்டரில் பணம் செலுத்திவிட்டு என் கனவு ஷூ அடங்கிய வழவழப்பான அந்தப் பெட்டியை ஒரு பூனைக்குட்டியைத் தூக்குவது போல் தூக்கிக் கொண்டு வெளியேறும் போது பெருமிதமாயிருந்தது எனக்கு. ஆனாலும் மனம் ஏனோ முழு திருப்தியை எட்டாதது போலவே இருந்தது.

தெருவில் இறங்கியவுடன், வெளியே ஒல்லியாய்…ஒடுங்கிய தாடிக் கன்னத்தோடு…இடுங்கிய குழிக் கண்களோடு நின்று கொண்டிருந்த அவனைக் கூர்ந்து கவனித்தேன். அவனது பார்வை எங்கோ நிலைக் குத்தி நிற்க, அந்த இடத்திற்கு என் பார்வையைச் செலுத்தியதும் அதிர்ச்சி வாங்கினேன். அந்த தாடி இளைஞனின் பார்வை கண்ணாடிக் கூண்டுக்குள் பளபளப்பாய் அமர்ந்திருந்த இன்னொரு ஜோடி ஷூ மீது உட்கார்ந்திருந்தது.. டன் கணக்கில் ஏக்கம் வடியும் பரிதாபப் பார்வை.

அதைப் பார்த்ததும் அழுகையே வந்து விடும் போலிருந்தது எனக்கு. ‘இவன் கண்களில் தெரியும் ஏக்கத்தின் வலி எனக்குத் தெரியும்….எனக்கு மட்டும்தான் தெரியும்…இவன்….இவன்…நான்!…ஆம்…நேற்றைய நான்!…ஒரு காலத்தில் இதே போல் இங்கு வந்து நின்று ஏக்கப் பார்வை பார்த்துக் கொண்டிருக்கும் போது நான் நினைத்திருக்கிறேன்…’யாராவது ஒரு மகராசன் வந்து அந்த ஷூவை வாங்கி எனக்குப் பரிசாகக் கொடுத்து என்னை ஆச்சரியத்தில் ஆழ்;த்த மாட்டானா? என்று!…ஏன்..நான் இப்போது அந்த மகராசன் ஆகக் கூடாது?…’

அந்த இளைஞனை நெருங்கி அவன் தோளைத் தொட்டேன். திடுக்கிட்டுத் திரும்பியவன் என்னை விநோதமாகப் பார்க்க,

அந்த வழவழப்பான பெட்டியை நீட்டினேன்.

முகத்தில் கேள்விக்குறியுடன் அவன் தயங்க, புன்னகையை வீசினேன்.

அவசரமாய் வாங்கிப் பிரித்தவனின் கண்களில் விரிந்த ஆலமர சந்தோஷத்தை ரசித்தேன். நெகிழ்ந்த மனதோடு..’வெச்சுக்க…உனக்கு என் அன்பு பரிசு’ என்றேன்.

அவன் தழுதழுத்த குரலில்…ஏதோ சொல்ல முயல, திரும்பி நடந்தேன்.

இப்போதுதான் மனம் முழு திருப்தியை எட்டிப் பிடித்தது போல தோன்றியது.

(முற்றும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *